இறுக்கம் தளர்ந்தால் போதும்.....

8 மார்ச் 2013 - பெங்களூர், இந்தியா

கே: ஒருவர் குருவுடன் இருந்து ஆன்மீகப் பாதையில் செல்லும்போது, சடங்குகளைச் செய்வதும் அதில் கலந்து கொள்வதும் அவசியமா?

குருதேவ்: குரு தத்துவத்தில் உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை. ஆனால், உங்களுக்கு ஏதாவது சடங்குகள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் செய்யலாம், பரவாயில்லை. குருதத்துவதில் நம்பிக்கையில்லாமல் எந்த சடங்குகள் செய்தாலும் அது பலனளிப்பதில்லை. குருவின் இருப்பில்லாமல் செய்யப்படும் எந்த தந்திரங்களுக்கோ அல்லது மந்திரங்களுக்கோ பயனில்லை. மற்றும் நீங்கள் உங்களை முழுமையாக குருவிடம் சமர்பித்து விட்டால், இது போன்ற சடங்கு முறைகளுக்கு மிகச் சிறிய தேவையே உள்ளது.

இதற்கு, இந்த சடங்கு முறைகளை மிகச் சரியாக செய்து தருபவரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் இந்த சடங்குகளில் நீங்கள் ஈடுபட்டாக வேண்டும்வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ. நீங்கள் அதிகம் செய்ய வேண்டியதில்லை. கொஞ்சம் பூஜை செய்யுங்கள், வீட்டில் பூஜை அறையில் அவ்வப்போது விளக்கேற்றுங்கள். சில நேரம் அமைதியாய் அமர்ந்து தியானம் செய்யுங்கள். சாதகங்களில் ஆகச் சிறந்தது தியானம். அன்பு, தியானம் மற்றும் எல்லாவற்றையும் சமர்பித்த ஒரு மனப்பாங்கு இவை இருந்தால் மற்ற அனைத்தும் உங்களிடம் பின்னால் வரும். சில சமயம், உங்கள் வீட்டு கதவுகளை தோரணங்கள் (தீய சக்திகளை விரட்ட கட்டப்படும் புனிதப் பொருட்கள்) கட்டி அலங்கரிக்கலாம்.அது தான் தோரணத்தின் முக்கியத்துவம். கதவே இல்லையென்றால் தோரணம் கட்டுவதின் பயன் என்ன?

கே: குருதேவ், படைப்பு மற்றும் மாயை, பிறப்பு இறப்பு சுழற்சி இவற்றின் நோக்கம் என்ன?

குருதேவ்: நீங்கள் கிரிக்கெட் விளையாடுவீர்களா? ஏன் அதை விளையாடுகிறீர்கள்? 
காரணமேயில்லாமல் கிரிக்கெட் மட்டையை வைத்துக் கொண்டு ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் ஏன் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்? ஏன் பல மணி நேரத்தை வீணாக்க வேண்டும்? பந்தை மைதானத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு வீசுவது ஏன்? இதைச் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? (விடை: குருதேவ், அது ஒரு பொழுது போக்கு)

ஆம்! உங்களுக்கு எப்படி கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் வைத்துக் கொண்டு விளையாடுவது பொழுதுபோக்கோ அப்படியே இந்த முழு படைப்பும் கூட இறைவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதனால்தான் இந்த முழு படைப்பும் மற்ற எல்லாமும் இறைவனின் லீலை எனப்படுகிறது. (இறைவனின் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு)

கே: குருதேவ், இந்த லீலை எவ்வளவு நீளம் தொடரும்?

குருதேவ்: இப்போது அதைச் சொல்வது கடினம். எப்போது தொடங்கியது எப்போது முடியும் என்று உறுதியாக யாருக்கும் தெரியாது. நீங்கள் அந்த லீலையின் ஒரு பகுதியாக இருக்கும் வரை அதை நீங்கள் மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். ஒரு பிரச்சினையில் சிக்கும்போதுதான்,‘இது எப்போது முடியும்?’ என்கிறோம். ஆனந்தமாய் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, ‘இந்த மகிழ்ச்சி எப்போது முடியும்?’ என்று கேட்பதேயில்லை. நாம் அதைச் செய்கிறோமா? இல்லை. எனவே, வாழ்கை எப்போது சுமையாக கட்டி போட்டிருப்பது போல தோன்றுகிறதோ, அப்போது தான் நமக்கு நாமே கேட்கிறோம், ‘இதிலிருந்து எப்போது விடுதலை?’ எதிர்காலத்தில் எப்போதாவது விடுதலை கிடைக்கும் என்று நினைக்காதீர்கள்.இந்தக் கணமே நீங்கள் விடுதலையாகவே இருக்கிறீர்கள். இதை அப்படியே ஏற்றுக் கொண்டு மேலே செல்லுங்கள். எல்லாமே வெறும் விளையாட்டு, அதில் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. மனதில் பல எண்ணங்கள் வந்து போகிறது. நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் வகைகள் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் மனதில் தோன்றும் சில எண்ணங்களைக் கண்டு நீங்கள் பதட்டமடைவீர்கள். ஆனால் எண்ணங்கள் வந்து போகும் என்பதையோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நாம் நம் எண்ணங்களை விட வெகு மேலானவர்கள். எனவே இதை தெரிந்து கொண்டு இறுக்கம் தளர்ந்தால் போதும்.

கே: குருதேவ், முஸ்லிம்கள் ஏன் இறைவனை அல்லா என்றும், இந்துக்கள் இறைவனை பகவான் என்றும் அழைக்கிறார்கள்?

குருதேவ்: வெவ்வேறு மக்கள், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பெயர்களில் அதே ஒரே இறைவனை அழைக்கிறார்கள். வேறு மதங்களில் இறைவனை வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். இது புரிந்ததா? இறைவன் ஒருவன் என்பதையே நாம் எப்போதும் சொல்கிறோம்.

ஏகம் விப்ர பஹுட வதன்டி’ (இதன் பொருள், கற்றோர்களாலும் சான்றோர்களாலும் பல பெயர்களால் அழைக்கப்படும் அந்த ஒன்று) என்று ஒரு பழமொழி உண்டு. எப்போதும் நம் புரிதலும் அதுதான். எந்தப் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் இறைவன் அந்த ஒருவன் தான் என்பது நமக்குத் தெரிந்திருந்ததால், இந்தியாவிற்கு எந்த இனம் வந்தாலும் அவர்கள் வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். 

மக்களில் நாம் வித்தியாசம் பார்த்ததில்லை. நம்முடைய கடவுள் தான் உண்மை, மற்றவர்கள் வழிபடும் கடவுள்கள் பொய் என்று நாம் ஒருபோதும் சொன்னதில்லை. இதைச் சொல்லி தம் மதத்திற்கு மதமாற்றம் செய்பவர்கள் தவறு செய்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் மற்றவர்களிடம், ‘என் கடவுள்தான் உண்மையான கடவுள், மற்ற கடவுள்கள் எல்லாம் பொய், அந்தப் படங்களையெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து எடுத்துவிடுங்கள்.’ என்றெல்லாம் சொல்லி தவறாக வழிநடத்துகிறார்கள், அது மிக மிகத் தவறு.

கே: குருதேவ், உங்கள் எதிரில் இருக்கும்போது எல்லாமே சூட்சுமமான கனவு போலத் தெரிகிறது. நீங்கள் அருகில் இல்லாத போதும் எல்லாமே கனவுபோல இருக்கிறது. இது ஏன் அப்படி?

குருதேவ்: நீங்கள் எல்லாவற்றையும் கனவுபோல உணர்வது நல்லது தான். நீங்கள் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உண்மையை காண வேண்டும்.

கேள்வி: குருதேவ், மகாசிவராத்திரியின் பொது சங்கல்பம் (உறுதி எடுத்துக் கொள்வது) செய்துகொள்வதின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: சங்கல்பம் என்றால் உங்களுடைய மெய்யுணர்வை பிரபஞ்சத்திற்கு, எல்லையற்றதிற்கு எடுத்துச் சென்று; பின்னர் உங்கள் மனதை இந்த கணத்திற்கு கொண்டு வந்து, உங்கள் மனதில் நீங்கள் நீண்டகாலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை அடைய உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை உறுதி செய்வது. இதுதான் சங்கல்பம் செய்வது.

சங்கல்பம் எடுக்கும்போது, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, ஏதோ ஒன்றை வேண்டுகிறார்கள். எல்லா யாகங்களும் பூஜைகளும் சங்கல்பம் செய்து தான் ஆரம்பிக்கிறார்கள். யாகம் என்பது எல்லோராலும் ஒன்றாகக் கூடி செய்யவது. எனவே ஏல்லோருக்கும் அதில் பங்கிருக்கிறது. யார் தொண்டு செய்தாலும் அவர்களும் அந்த யாகம் செய்வதில் பங்கேற்கிறார்கள். அந்த யாகத்திற்கு தொண்டு செய்யும் எவரும் அந்த யாகத்தில் தானும் ஒரு பங்கேற்கிறார்கள். சமையலறையில் உணவு பரிமாறி கொண்டிருந்தாலும் அல்லது பக்தர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தாலும், அவர்களும் அந்த யாகம் செய்வதில் பங்கேற்கிறார்கள்.

ஆனால், உங்கள் நண்பர்களுக்காகவோ அல்லது உங்கள் உறவினர்களுக்காகவோ உங்கள் மனதில் ஏதும் வேண்டுதல் இருந்து, அந்த யாகத்தின் பலன் அவர்களுக்கு சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். சங்கல்பம் செய்யும் போது, நீங்கள் உங்கள் பெயரை எடுத்துக் கொண்டு, மனதில் யாருக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அவரை அந்த வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு அந்த யாகம் செய்யும் பண்டிதரிடம் (யாகம் செய்யும் ஆச்சாரியர்) சங்கல்ப சடங்கை செய்துகொள்ள வேண்டும். அதுவும் கூட முடியும்.
இந்த வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதைச் செய்வதன் மூலம் யாராவது சிறப்பான பயன் பெறலாம் என்பது அல்ல. யாகத்தில் பங்குபெறும் அனைவரும் அதில் நம்பிக்கை உள்ள அனைவரும் பலன் பெறுவார்கள். ஆனால் நீங்கள் தனியாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டுமானாலும் வழி இருக்கிறது.

கே: மனம், புத்தி மற்றும் ஞாபகத்தில் எந்த பதிவுகளும் தங்கிவிடாமல் இருக்க ஏதாவது உத்தி இருக்கிறதா?

குருதேவ்: இறுக்கம் தளர்ந்து, இயல்பாய் இருங்கள். எனக்கு இந்தப் பதிவுகள் மனதில் இருக்கக் கூடாது என்று நீங்கள் கூறினால், பிறகு அந்த பதிவு இன்னும் அழுத்தமாகத் தான் பதியும். அது இருந்தால் இருக்கட்டும், இல்லையென்றால் இல்லை. எனவே இறுக்கம் தளர்ந்து இருந்தால் போதும்.சரியானது மட்டுமே தங்கும் என்பதை பார்ப்பீர்கள்.