நாம் ஞானத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

வியாழக்கிழமை, 14 ஜனவரி 2016, 

பெங்களூரு இந்தியா


(படைப்பின் மர்மங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

தீவிரவாத இயக்கங்கள் முழு விழிப்புணர்வுடன் மக்களைக் கொல்கின்றன. அப்போதும் நிகழ் தருணம் மகிழ்ச்சியானது என்று கூற முடியுமா?.

தவறான புரிதலுடன் அவர்கள் எதையோ செய்கின்றனர். இங்கே யாரையாவது கொன்றால், தாங்கள்  சுவர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று எண்ணுகின்றனர். இறைவனின் பணியைத் தாங்கள் செய்வதாகவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களது நம்பிக்கை. இது மகிழ்ச்சியான தருணம் என்று எவ்வாறு கூறமுடியும்? தூக்கிலிடப்படுபவர்களுக்கு நிச்சயமாக இது மகிழ்ச்சியான தருணம் இல்லை. தவறாகப் பொருள் கொள்வதையும், எந்த அர்த்தமும் இல்லாத வகையில் ஞானத்தை விரிவாக்குவதையும் தவிர்த்து விடுங்கள். இது ஓர் விசித்திரமான கேள்வி. நிகழ் தருணத்தில் இருப்பதற்கு பலவற்றை நீங்கள் செய்ய முடியும் அல்லது செய்யாமல் இருக்க முடியும்.

இவை மனதின் விக்ருதி (சிதைவு). இவ்வாறே ஈடுபட்டால், "ஒ! அப்பாவி மக்களைக் கொல்வதும் மகிழ்ச்சியானது தான்" என்று மனம் தவறாக எண்ணக் கூடும்.ஆகையால் நாம் ஆறு செல்வங்களை பற்றிப் பேசுகின்றோம்.க்ஷமா(மனசாந்தம்) தமா(புலனடக்கம்) உபரதி (இருப்பதில் மகிழ்ச்சியடைதல்) திதிக்ஷா (மனோபலம்) சமாதானா (சுயத்தில்),இறைமையில் நிலைத்திருத்தல்) மற்றும் ஷ்ரத்தா  (அசைக்க முடியாத நம்பிக்கை) ஆகியவற்றை ஒருவர் அடைய வேண்டும்.

நல்லொழுக்கங்களின் அமைப்பில் ஸ்திரப்படும் வரையில்,ஞானத்தின் நான்கு தூண்களில் நன்கு நிறுவப்படும் வரையில் ஒருவன் வேதாந்தத்தை பேச முடியாது. இவற்றில் நிலைபெறாமல் "ஒ! அனைத்தும் கடவுளே! அவ்வாறெனில் கொன்று குவிப்பவர்களும் பிரம்மனே. அனைத்தும் பேரின்ப மெய்யுணர்வான ஆனந்தத்தில் தோன்றியதென்றால் இவர்களும் அதிலிருந்து வந்தவர்களே ஆவர் " என்றும் கூறலாம்.இது மிக உயர்ந்த ஞானத்தின் தவறான பயன்பாடு. நல்ல விவேகம் வைராக்கியம் ஆறு செல்வங்கள் மற்றும் முமுக்ஷத்வா (முக்தியை நோக்கி ஈடுபாடு) இவற்றினை அடையும் வரையில் மிக உயர்ந்த ஞானம் ஒருவருக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த நான்கு கோட்பாடுகளும் நம்முள் நன்றாக நிறுவப்பட வேண்டும்.அப்போது தான் வேதாந்தம் பேச முடியும். அனைத்தும் கடவுள், அனைத்தும் பிரம்மன் என்னும் தத்துவத்தை, பகுத்தறியும் திறனை அடையாதவர்களுக்குக் கற்பிக்க வேண்டாம் என்றே கூறப்பட்டுள்ளது. 

ஓர் திருடன் கூட இதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். திருடன், என்னவாயினும் அனைத்தும் பிரம்மனே, எனவே இந்தப் பணம் என்னுடைய பையில் இருந்தால் என்ன அல்லது வேறொருவரது பையில் இருந்தால் என்ன? ஏன் நானே வைத்துக் கொள்ளக் கூடாது? என்று கூறலாம் .(சிரிப்பு). இது போன்றிருந்தால் வேதாந்தத்தை பயன்படுத்தி அனைத்து திருடர்களும் தங்களது செயலை நியாயப்படுத்திக் கொள்ளக் கூடும். ஆகையால்தான் உயர் ஞானம் எளிதாக வழங்கப்படுவதில்லை.
சரியாக புரிந்து கொள்ளாமல் அனைத்தும் பிரம்மன் என்று நீங்கள் எண்ணினால் உங்களால் களிமண்ணிற்கும் வாழைப் பழத்திற்குமிடையே வேறுபாடு காண முடியாது. அப்போது நீங்கள் மண்ணையும் உண்ண வேண்டியதிருக்கும். மக்கள் பல சமயங்களில் ஞானத்தைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவே தவறாகப் பயன்படுத்துதல் ஆகும். ஞானம் உங்களுக்கு உங்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. உங்களுடைய வசதிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் நெறியற்றதாகும்.  ஞானத்தில் திளைத்து வாழ்ந்தால், அது நிச்சயமாக உங்களுக்கு முழு ஆறுதலையும் முழுமையான ஆனந்தத்தையும் அளிக்கின்றது.

குருதேவ், சிவபெருமானின் ஜடாமுடி, புனித கங்கையை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றது. கங்காதேவி ஞானத்தின் அடையாளம். ஜடாமுடி எதன் அடையாளம்? அது எதைக் குறிக்கிறது?

தெய்வ அன்னை கங்கை, ஞானத்தை வர்ணித்துக் காட்டுகின்றது. ஒரு தனி மனிதன் அந்த அளவு ஞானத்தை பெற்றுக் கொள்ளவோ,பிடித்து வைத்துக்  கொள்ளவோ  முடியாது. முடிவில்லாத  பேரின்பம் (சிவன்) மட்டுமே அத்தகைய ஞானத்தை பிடித்து வைத்துக் கொள்ள முடியும். சாதாரண மனிதன்  முடிவில்லாத ஞானநதியிலிருந்து சிறிய ஊற்று மட்டுமே ஏற்று  திருப்தியையும் பேரின்பத்தையும் அடையமுடியும். ஒரு நூலகத்தில் ஏராளமான அளவு அறிவுச் செய்திகள் உள்ளன. உங்களுக்குள் அசைவற்ற நிலையையும் உள்ளடக்கத்தையும் அடைய உண்மையில் எவ்வளவு தேவை? ஒரு சிறிதளவு மட்டுமே அல்லவா? தேடும் அறிவுச் செய்தியை மட்டுமே நீங்கள் படிக்கிறீர்கள். ஒரு சிறிய துளி ஞானம் உங்களை வந்தடையும் போது அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கின்றது. ஆனால் அச்சிறிதளவின்றி ஞானநதி முழுவதுமே பெருக்கெடுத்து வந்தால்,ஒருவன் (ஒரே சமயத்தில் பரந்த அளவு அறிவுச் செய்திகளை புரிந்து ஏற்றுக்கொள்ள இயலாமல்) சங்கடப்படுவான்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் தனது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டிய போது அர்ஜுனன் மிகவும் பயந்து நடுங்கத் துவங்கி விட்டான்.அவன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்,"பகவானே! இந்தப் பரந்த அற்புதமான, பயம் தரும் தெய்வ ரூபத்தை முடித்துக் கொண்டு சாதாரண உலக ரூபத்திற்கு வருகை புரியுங்கள். என்னால் முடிவில்லாத உங்களுடைய தெய்வ தரிசனத்தை பார்க்க இயலவில்லை" என்று கூறினான். இதுவே ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்ஜுனனின் பிரார்த்தனை. ஞானம் பரந்தது மற்றும் முடிவில்லாதது. ஓர் சிறு துளி ஞானம் ஆத்மாவிற்கு திருப்தியையும் அமைதியையும் தரும்.

குருதேவ், ஒருவன் காயத்ரி மந்திரத்தை தன் பெற்றோரிடமிருந்து மட்டும்தான் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு யாரிடமிருந்தும் பெற்று கொள்ளலாமா?

காயத்ரி மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒலி நாடா  மூலம் கேட்பதோ ஜபிப்பதோ சரியல்ல. முறையான சடங்குகள் மூலம் ஒருவன் காயத்ரி மந்திர சிக்ஷை அடையும் போது அம்மந்திரத்தின் சக்தி அதிகரித்து, பயனுள்ளதாகின்றது.

குருதேவ் ! ஸ்ரீ என்பதன் பொருள் என்ன? பணம் மட்டுமே ஸ்ரீ என்று குறிப்பிடப்படுகிறதா அல்லது மற்ற எல்லாவிதமான நிறைவும் செல்வமும் அவ்வாறே அழைக்கபடுகின்றனவா?

இல்லை. “ஸ்ரீ” என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. “ஸ்ரீ”  என்பது படைப்பு அல்லது ஞானம் செல்வம் போன்ற அனைத்தையும் குறிக்கும். இவையனைத்தும் “ஸ்ரீ”  என்னும் முற்சேர்க்கையைக் கொண்டவை. வெளிப்படும் அனைத்தும் “ஸ்ரீ” ஆகும். பகிரங்கமாகத் தெரியாதவற்றின் புகழும் “ஸ்ரீ”  என்றே அழைக்கப்படுகிறது. பகிரங்கமாக தெரியாத, பார்க்கமுடியாத,உணரமுடியாத மெய்யுணர்வின் சிறப்பும் புகழும் “ஸ்ரீ”  என்றே குறிப்பிடப் படுகின்றது. திறமை, வலிமை உடல் நலம் ஆகிவையும் “ஸ்ரீ”  யே ஆகும்.

குருதேவ், கம்சனின் தந்தை அக்ரசேனர் தேவ அரசர், ஆனால் கம்சன் மோசமானாவனாகி விட்டான். அதே சமயம், அரக்க அரசனாகிய ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் உன்னதமானவனாகவும் பக்தனாகவும் இருந்தான். பெற்றோரின் சம்ஸ்காரங்கள் (எண்ணப் பதிவுகள் அல்லது ஒழுக்கங்கள்) கூட குழந்தைகளுக்கு கடந்து செல்லுமா?

ஆம்.அவை குழந்தைகளுக்கு செல்லும். சிசுவின் வாழ்வை நான்கு அம்சங்கள் பாதிக்கும். 25 சதவீதம் முற்பிறவிகளிலிருந்து அவர்கள் கொண்டு வரும் எண்ணப் பதிவுகள். 25 சதவீதம் அவர்களது தாய் மற்றும் தந்தையிடமிருந்து வரும் எண்ணப் பதிவுகள்.25 சதவீதம் அவர்களிருக்கும் உடனடியான சூழல். அது ஓர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மீதமுள்ள 25 சதவீதம் தன்னுடைய நடவடிக்கை எண்ணப் பதிவுகளால் ஏற்படுவது. இவ்வாறு பல விஷயங்கள் ஓர் குழந்தையின் வாழ்வில் பதிவினை ஏற்படுத்துகின்றன. ஓர் ஆசிரியரும் கூட பெரிய அளவில் ஒருவரது வாழ்வில் எண்ணப் பதிவினை ஏற்படுத்துகின்றார்.