உங்கள் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

ஜூன் 21 – 2013 - பெங்களூர் - இந்தியா


"ஔஷதி ஜஹ்னவி தோயம்  வைத்யோ நாராயணோ ஹரிஹி"  என்று சொல்லப் படுகின்றது. நாம் ஒரு மருந்தை உட்கொள்ளும் போது கங்கை நதி நீரைப்போல் அதை புனிதமாகக் கருத வேண்டும் என்பது இதன் பொருள். கங்கை நதியிலிருந்து நீரை பருகும் போது நீங்கள் எப்படி உணருகின்றீர்கள்?  தூய்மை மற்றும் நம்பிக்கை உணர்வோடு பருகின்றீர்கள் இல்லையா? சாதாரண நீருக்கும், கங்கை நீருக்கும் இருக்கும் வித்தியாசம் இதுவே. நீங்கள் எப்போது நம்பிக்கையோடு குடிக்கின்றீர்களோ அப்போது அது தீர்த்தமாகி விடுகின்றது. ஒரு மருந்தையும் அதே உணர்வோடு உட்கொண்டால் அது நல்ல பலன் தரும். வெறுமனே மாத்திரையை வாயில் போட்டு கொண்டு தண்ணீர் குடிப்பது கூடாது. 

ஒரு மருத்துவர் பகவான் நாராயனனாக கருதப்பட வேண்டும்.'வைத்யோ நாராயணோ ஹரி' இதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. உண்மையான மருத்துவர் நாராயணனே;  உண்மையான மருந்து கங்கைத் தீர்த்தமே என்பதாகும். மற்றொன்று, ‘ஒரு மருந்தானது கங்கைத் தீர்த்தத்தைப் போல் புனிதமாகக் கருதப்பட வேண்டும்; மருத்துவர் நாராயனனாகக் கருதப்பட வேண்டும்’ என்பதாகும். 

உங்கள் உடல் நலனைப் பாதுகாக்க நல்ல பழக்க வழக்கங்கள் வேண்டும். இதில் பெரும் பங்கு நம் மனதிற்கு இருக்கின்றது. நாம் தீய பழக்கங்கள் இல்லாமால் இருக்க வேண்டும் என்றால் நமது மனம் இனிமையாகவும் அமைதியாகவும் வைத்திருக்கப் பட வேண்டும். நமக்கு நம்பிக்கை வேண்டும். ஒரு நோய் குணமாவதற்கு நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல மருந்து ஆகிய மூன்றும் தேவை என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். மருந்தை உட்கொள்வதோடு  கூட அமைதியான மனமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும். 

ஆயுர்வேதம் கங்கை நதிக்கரையில் தோன்றி வந்தது. நீங்கள் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் சென்றால், அங்கு நிறைய ஆயுர்வேத மருந்து கடைகள் இருக்கும். இப்பொழுது ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. 

உங்கள் உடல் நலனை தகுந்த இடைவேளைகளில் சரி பார்த்துக்கொள்ளுங்கள். நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் நலனை கெடுத்துக் கொள்ளுகின்றோம். பலர் உடற்பயிற்சி செய்வதே இல்லை. இப்போதெல்லாம் மக்கள் முன்போல் கடினமாக உழைப்பதும் இல்லை. ஆறு அங்குலமுள்ள ஒரு கரும்புத் துண்டினை திண்பதற்கு நாம் அதிக முயற்சி செய்ய வேண்டி உள்ளது. அதிக முயற்சி செய்து உண்பதனால் அது எளிதில் ஜீரனமாகின்றது. உங்களை யாராவது பத்தடி நீளமுள்ள கரும்பினை சாப்பிடச் சொன்னால் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்.அதன் பிறகு எதையுமே சாப்பிட முடியாத அளவிற்கு நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் பத்தடி நீளமான கரும்பின் சாறு அடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் ஒரு நாளில் பல தேக்கரண்டி சர்க்கரை சாப்பிடுகின்றோம். உடற்பயிற்சியும் உடல் உழைப்புமின்றி அவ்வளவு சர்க்கரை சாப்பிட்டால் நம் உடல் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோயினால் எலும்பில் கால்சியம் சத்துக் குறைபாடும் மூட்டுகளில் வலியும் உண்டாகின்றது. காரணம் வெள்ளை சர்க்கரையே பிரிடிஷ்காரர்கள் நம்மை வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை பயன்படுத்த வைத்துவிட்டார்கள். நாம் சர்க்கரை சாப்பிட்டு உடல் நலனைக் கெடுத்துக் கொண்டு வருகின்றோம். 

நீங்கள் சர்க்கரை சாப்பிட்டால் அதற்குத் தேவையான அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தினால்  நீரிழிவு போன்ற நோய்கள் உண்டாகின்றன. நாம் நம் உணவுப் பழக்கத்தில் அக்கறை செலுத்தினால் வாழ்வில் பெரும் மாற்றம் காணலாம். சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு அதற்கு பதில் வெல்லம் உபயோகியுங்கள். வெல்லத்தில் ஜின்க், மக்னீசியம், பொட்டசியம் மற்றும் வேறு சில தாதுக்கள்  உள்ளன. அவை நம் உடல் வலுப்பெறவும், இரத்தம் உற்பத்தியாகவும், தலைமுடி வளரவும் மேலும் பல விதங்களிலும் உதவுகின்றன. வெள்ளை சர்க்கரையில் உள்ள சல்பர் நம் உடலிலுள்ள கால்சியம் சத்தினை குறைத்து விடுகின்றது. அதனால் தான் ஆஸ்டியோபோரோசிஸ்  போன்ற நோய்கள் உண்டாகின்றன. 


சர்க்கரை உள்ள இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். வெல்லத்தினால்i செய்யப்பட இனிப்புகளை மட்டுமே சாப்பிடுங்கள். இதனால் உங்கள் உடல்நலம்  நன்றாக இருப்பதை நீங்களே காணலாம்.