ஒருமுகப்படுத்தப்பட்ட பக்தி……

ஜூன் 4, 2013

பெங்களுரு, இந்தியா



எது நிலையானது, எது நிலையற்றது, எது சாசுவதமானது, எது தற்காலிகமானது மற்றும் விரைவில் அழியக்கூடியது ஆகியவை மகாத்மாக்களுக்கு தெரியும் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அவர் மேலும், அத்தகைய மகாத்மாக்கள் என்னுடைய சாசுவதமான நிலையை ஒரு தூய உணர்வு என்று அறிந்துகொண்டு, ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் என்னை வழிபாடு செய்கின்றனர் என்றும் கூறுகின்றார்.

இது அவர் இங்கே சொல்லுகின்ற ஒரு முக்கியமான விஷயம் ஆகும். நிலையற்ற தன்மைகளை அறிந்திருப்பதனால், ஒரு மகாத்மா எப்போதுமே தெய்வீகத்தை முழு ஈடுபாட்டுடன் வழிபடுகிறார். கடவுளிடம் அற்பமான விஷயங்களை கேட்பதனால் என்ன பயன் என்றும் மிக உயர்ந்த பரிசாக எனக்கு கடவுளே கிடைத்திருக்கிறார், எனக்கு வேறு ஏதும் தேவை இல்லை என்றும் அவர் கூறுவார். இதுவே ஒருமுகப்படுத்தப்பட்ட மனதின் பண்பு.

சமயங்களில் பாடல்கள் பாடுவதையும் பூஜைகள் செய்வதையும் நாம் கடவுளுக்காக செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நம்முடைய மனம் பெரும்பாலான நேரங்களில் அந்த பாடல்களிலோ அல்லது இறைவனிடத்திலோ லயிக்காமல் நாம் விரும்புகின்ற மற்ற விஷயங்களை அடைவதிலேயே லயித்திருக்கும். நாம் கடவுளை வணங்குவதற்காக குனியும் போது கூட நாம், தேர்வில் வெற்றி அடைய வேண்டும், என்பது போன்ற சில சுயநலமான நோக்கங்களுக்காகவே அதை செய்கின்றோம் .

மனதில் வேறு ஒரு விருப்பத்துடன் வழிபாடு செய்யும் போது, மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை வழிபடுவது ஆகாது. உங்கள் மனதில் ஏதோ ஒன்று புதைந்துள்ளது என்பது அதன் பொருள். அப்பொழுது நாம் செய்யும் பூஜைகள், உடல் பயிற்சிகள், சத்சங்கங்கள் அனைத்துமே நம்முடைய விருப்பங்கள் பூர்த்தி அடைய செய்யப்படுபவையே ஆகும். ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு கடவுளுக்கு செய்யப்படும் வழிபாடு ஆகாது. ஆனால் ஒரு மகாத்மா என்ன செய்கிறார்? அவர்கள் அனைத்தையுமே கடவுளை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் செய்கின்றனர். அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் பஜனைகள் பாடுகின்றனர். அவர்கள் வேறு எதன் மீதும் விருப்பமோ நாட்டமோ கொள்ளாது மகிழ்ச்சியுடன் கடவுளை புகழ்ந்து பஜனை பாடல்கள் பாடுவார்கள். மகாத்மாக்கள் ஏதாவது வேண்டும் என வேண்டி கடவுள்   முன் தலை சாய்த்து வணங்குவது  கிடையாது. அதை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக மட்டுமே அதை செய்கிறார்கள்.

இரண்டு வகையான பூஜைகள் அல்லது வழிபாடுகள் உள்ளன. விரும்புவது கிடைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் அல்லது விரும்பியது கிடைத்ததற்காக நன்றி கூறும் எண்ணத்துடன் வழிபடுவது ஒரு வகை. கடவுளே நீங்கள் எனக்கு இதை கொடுத்திருக்கிறீர்கள் என்று நாம் நினைக்கிறோம் அல்லது கடவுள் எனக்கு அழகான ஒரு வீட்டை கொடுத்திருக்கிறார். எனக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார் என்றெல்லாம் நினைக்கிறோம். கடவுளிடம் இருந்து இவை எல்லாம் கிடைத்ததற்கு பதில் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து நாம் அவருக்கு பூஜை செய்கிறோம். ஆனால் இது ஒரு முகப்படுத்தி செய்வது அல்ல; ஏன் என்றால் இது ஏதோ கிடைத்ததற்கு பிரதி உபகாரமாக செய்கிறோம் அல்லது ஏதோ ஒன்றை வேண்டி நாம் அதை செய்கிறோம்.

ஒரு மகாத்மாவுக்கு மனதை ஒருமுகப்படுத்தி கடவுளிடம் பக்தி செய்வதை விட பேரின்பம் ஏதும் இல்லை. கடவுளை புகழ்ந்து பாடுவதை விட வேறு அவருக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது கிடையாது. அவர் அதிலே ஆனந்தத்தை காண்கிறார். அதனால் தான் உண்மையான ஒரு பக்தர் கடவுளிடம் "இறைவா! நான் உன்னை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பெருமளவு மன நிறைவை பெறுகிறேன்" என்று சொல்லுவார். நீங்கள் எப்போதாகிலும் ஒரு குழந்தையிடம் "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டால், அது எபோதுமே "எனக்கு எதுவும் வேண்டாம்"  என்றே சொல்லும் உள்ளபடியே அக்குழந்தை எனக்கு எதுவும் வேண்டாம் என்று கூட சொல்லாமல், "எதுவுமில்லை" என்றே சொல்லும். இதை நீங்கள் ஒரு மனநிறைவு பெற்ற மனிதரிடமும் பார்க்கலாம். தூய்மையான அப்பாவித்தனமும் அனைத்திலும் மன நிறைவும் உடைய ஒருவர் அத்தகைய ஒருமுகப்படுத்தப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துவதை காணலாம்.  

நீங்கள் ஒரு சிசுவை கவனித்தால், அது நல்ல மனநிறைவுடன் இருப்பதை பார்க்கலாம். அதற்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை. ஒரு பக்தனுடைய நிலையம் அவ்வாறானதே. நீங்கள் ஒரு பக்தனிடம் என்ன வேண்டும் என்று கேட்டால் அவரும் எதவும் இல்லை என்கின்ற அந்த பதிலையே கூறுவார். புத்திசாலியான ஒருவர் கடவுளை ஒருமுகமாக நினைந்து வழிபடுவார்.  ஒரு மகாத்மாவும் கூட கடவுளை அவ்வாறே ஒருமுகமாக வழிபடுவார், விஷயங்கள் மற்றும் பொருட்களின் தற்காலிகமான தன்மை அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் "கடவுளிடம்   அற்பமான விஷங்களை கேட்பதனால் என்ன பயன்? எனக்கு தேவையானவற்றை அவர் எனக்கு அபரிதமாகவே அளித்துள்ளார். மிக உயந்த பரிசாக எனக்கு கடவுளே கிடைத்திருக்கும் போது, எனக்கு வேறு ஏதும் தேவை இல்லை." 

இதுதான் ஒருமுகப்புத்தப்பட்ட மனதின் பண்பு. ஏதோ ஒன்றை வேண்டி கடவுளை வழிபடுபவர்கள் எதையுமே ஒரு அர்ப்பணிப்புடன் பின்பற்ற முடியாது. வேண்டியது கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் அவர்கள் இங்கே சிறிது வழிபடுவார்கள், வேறு இடத்தில் சிறிது வழிபடுவார்கள். அத்தகையவர்கள், ஒரு இடத்தில் அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை என்றால், மற்றொரு இடத்திற்கு செல்வதுமாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள். அவை அனைத்துமே வீண்.

இது எதனால் என்றால், கடவுளிடம் சரணடைவது மற்றும் அவரை புகழ்ந்து பாடுவது அவர்களுடைய  நோக்கம் அல்ல. அவர்கள் விரும்பும் சிலவற்றை அடைவதே அவர்கள் நோக்கமாக இருக்கும். எனவே அவர்கள் விரும்பிய ஒன்றை பெறுவதற்காக எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் ஓடுவார்கள். அம்மாதிரியான மக்களை நாம் மகாத்மாக்கள்  என்று அழைக்க முடியாது. யார் ஒருவர் ஒருமுகமான பக்தியுடன் கடவுளை கௌரவிப்பவராகவும் வழிபாடு செய்பவராகவும் இருக்கிறாரோ அவரே ஒரு மகாத்மா என்பவர்

"இவ்வுலகில் அனைத்துமே தற்காலிகமானவை மற்றும் விரைவில் அழியக்கூடியவை. ஆனால் எனக்கு அழிவே கிடையாது ஏன் என்றால் நான் சசுவதமானவன் முடிவே இல்லாதவன்" என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். மகாத்மாவிற்கு ஒருமுகமாய் நின்று இறைவனை வழிபடுவதை விட பேரின்பமானது வேறு ஏதும் இல்லை. கடவுளை புகழ்ந்து பாடுவதை தவிர வேறு எதவும் அவருக்கு அந்த அளவு மகிழ்ச்சியை தருவது இல்லை. இதை நன்கு அறிவார் அதனால் அவர் ஒருமுகமாய் நின்று என்னை வழிபடுவார். நான் சசுவதமானவன் மற்றும் என்னுடைய அன்பும் சாசுவதமானது. இதை அறிந்து கொண்டுள்ள அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் ஒருமுகமான மனதுடன் என்னை வழிபடுவார்கள். அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் "இறைவா! என்ன நடந்தாலும் பரவாயில்லை. எதுவும் கிடைக்கின்றதோ இல்லையோ. நான் எப்போதுமே உங்களுடையவன் நீங்கள் எப்போதுமே என்னுடையவர்" என்று எண்ணுவார்கள். இந்த உணர்வு அல்லது எண்ணம் இருப்பதே மனதை ஒருமுகப்படுத்துவது ஆகும்.

அடுத்த வரிகளில் பகவான் கிருஷ்ணர் " அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் எபோதுமே என்னையே புகழ்ந்து பாடுகின்றார்கள். என்னிடம் கொண்டுள்ள பக்தியில் அவர்கள் மிகவும் வலிமையாகவும் உறுதியாகவும் இருகிறார்கள். அவர்கள் எந்த செயலை செய்யும்போதும் சாதாரணமாகவே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செய்கிறார்கள். அவர்கள் என்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். என்னை மட்டுமே வணகுகிரார்கள். அந்த மாதிரியான தெய்வ பக்தியுள்ள ஆன்மாக்கள் என் மீதுள்ள பக்தியில் மூழ்கி எனக்கு மிக அருகிலேயே இருக்கின்றனர்" என்று கூறுகிறார்.


இவைகளே மகாத்மாக்களின் அறிகுறிகள். அவர்கள் எப்போதுமே தெய்வீகம் மற்றும் தெய்வீகத் தன்மைகளின் நிழலிலேயே குடியிருக்கின்றனர்.பகவான் கிருஷ்ணர் மகாத்மாக்கள் மற்றும் பக்தர்களின் அறிகுறிகள் பற்றி கூறுகிறார். ஒரு ஞானியின் குணங்கள் எவை என்று நாம் நாளை பார்க்கலாம்.