உருவ வழிபாட்டை எந்த அளவு ஏற்றுக் கொள்ளலாம்?

6 ஜூன் 2013 - பெங்களூர், இந்தியா



   
கே: குருதேவா! என் கேள்வி இந்து மதத்தில் வழங்கும் உருவ வழிபாட்டை பற்றியது. கிறிஸ்துவர்களுக்கு மாதா கோவில் எல்லா இடத்திலும் இருப்பதில்லை. மசூதிகளும், குருத்வாராக்களும் எல்லா இடங்களிலிலும் இருப்பதில்லை. ஏன் இந்துக்கள் மட்டும் எல்லா இடங்களிலும் கோவில் அமைத்து வழிபடுகிறார்கள்?  ஒவ்வொரு மரத்தின் அடியிலும், ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு கோவிலை பார்க்கலாம். உருவ வழிபாட்டை எந்த அளவு ஏற்றுக் கொள்ளலாம்?

குருதேவர்: கிறிஸ்துவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்று யார் சொல்கிறார்? கிறிஸ்துவ மதத்திலும் உருவ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் உள்ளது. எல்லா இடத்திலும் சிலுவை வழிபடுகிறார்கள். சாலைகளிலும்,மலை உச்சிகளிலும் சிலுவையைப் பார்க்கலாம் அல்லவா? மசூதிகளும் பல இடங்களில் அதிக அளவில் இருக்கின்றன. இப்போது, இந்து மதத்தில் எந்த அளவு உருவவழிபாட்டை ஏற்றுக் கொள்கிறோம் என்ற கேள்விக்கு விடையை தேடுவது நல்லது. எங்கெல்லாம் மக்கள் உருவ வழிபாட்டை எதிர்த்தார்களோ, அங்கெல்லாம் வேறு ஏதோ குறியீடு தலையெடுத்திருக்கிறது. உருவச்சிலை என்பது என்ன? அது ஒரு அடையாளம் / குறியீடு. தெய்வம் என்பதற்கு உருவம் கிடையாது. அதை விளக்க முடியாது. பார்க்கமுடியாது, தொடமுடியாது. அப்படிப்பட்ட தெய்வத்தை காணவும், அதைப் புரிந்து கொள்ளவும் ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதை தான் நீ உருவச் சிலை என்று சொல்கிறாய். தெய்வம் உருவச்சிலையில் இல்லை. ஆனால் தெய்வம் என்று ஒன்று உண்டு என்பதை அந்த உருவச்சிலை சுட்டிக்காட்டுகிறது.

உன் வீட்டில் சுவற்றில் தாத்தாவின் படத்தை மாட்டி வைத்திருக்கிறாய். யாராவது உன் தாத்தா யார் என்று கேட்கும் போது அப்படத்தை காட்டுகிறாய். அந்த படம் உன் தாத்தாவாக முடியுமா? இல்லை. உன் தாத்தா இறந்து விட்டார். எனவே ஒரு படமோ (உருவச்சிலையோ) ஒரு குறியீடாக வழங்குகிறது. அதனால் தான் அதை உருவத்தின் பதிப்பு என்று அழைக்கிறோம். நல்ல வேளையாக கிறிஸ்துவர்களுக்கு ஒரே மாதிரி குறியீடு இல்லை. அப்படி இருந்தால் தெய்வத்தை அதே குறியீட்டில் இருப்பதாக நினைப்பார்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான தெய்வங்களின் உருவச்சிலைகள் இருக்கின்றன. தெய்வத்தை நீ எந்த உருவத்திலும் காண முடியும். உனக்குப் பிடித்த உருவத்தில் தெய்வத்தை காணலாம். இஷ்ட தேவதை என்பது ஒருவர் அல்லது ஒரு குழுவினரால் விரும்பி வணங்கப்படும் உருவசிலை

எல்லா கிரணங்களும் சூரியனிடமிருந்து தான் வருகின்றன. அதில் ஏழு வித்தியாசமான நிறங்கள் உள்ளன. அதனால் தான் நாம் ஐந்து தேவதைகளை பூசை, சடங்குகளின் போது வணங்குகிறோம்.சிவபெருமான், பார்வதி தேவி, விஷ்ணு பகவான், கணபதி மற்றும் சூரியனை வணங்குகிறோம். இத்துடன் ஏழு தேவமாதாக்களையும் வணங்குகிறோம். (தேவியின் ஏழு சொரூபங்கள் ப்ரம்மாணி, நாராயணி, இந்திராணி, மகேஸ்வரி, வாராஹி, கருமாரி மற்றும் சாமுண்டா) தெய்வம் ஒன்றாக இருந்தாலும், நம் முன்னோர்கள் அதற்கு வேறு வேறு பெயர்களும், உருவங்களும் கொடுத்தார்கள். நம் கலாசாரத்தில் உருவ சிலைகளை கோவிலில் அமைக்க விதி முறைகளும்,அதற்கான மந்திரங்களும் இருக்கின்றன. நம்பிக்கையோடும், தெய்வ பக்தியோடும்,மரியாதையுடனும் அமைக்கப்பட்ட சிலைகள் தான் வழிபாட்டுக்கு உகந்தவை. 

பகவத் கீதையையோ, சீக்கியரின் ஆதி கிரந்தத்தையோ (குரு கிரந்த ஸாஹிப்) யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதை பக்தியோடு வணங்கி, அதற்கு படையல் இட்டு சேவை செய்யும் போது அது வழிபாடாகும். ஒரு சிலைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அதை அமைத்து, அதை நோக்கி வணங்கும் போது உன் பக்தி அதிகரிக்கும். உதாரணமாக கிருஷ்ணனின் உருவச்சிலையைப் பார்த்து மீரா பாய் (பக்த மீரா) அவரிடம் மிகவும் அன்பு செலுத்தினார். மிகவும் மரியாதைக்குரிய சைதன்ய மகா பிரபுவுக்கு, கிருஷ்ணரிடம் இருந்த அளவில்லாத பக்தியால், மஞ்சள் பட்டு அணிந்த கம்பீரமான தோற்றங்கொண்டு ஒரு மரத்தடியின் கீழ் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை அவர் பூஜை செய்யும் சிலையில் பார்த்து ஞானம் பெற்றார்.

யாருக்கு உருவச் சிலை தேவையோ, அவர் அதை தெய்வத்தை அடைய ஒரு படி போல் உபயோகிக்க முடியும். அந்த உருவ சிலையிலேயே சிக்கிக் கொள்ளாதீர்கள். தெய்வம் உங்களுக்குள்ளே இருக்கிறது என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும். ஆகவே பழங்காலத்தில் கோவிலுக்குப் போய் வழிபடும் வழக்கம் இருந்தது. அங்கு சென்று தெய்வத்தில் சிலையைப் பார்த்து வணங்கிய பின் சில நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்து தெய்வம் நமக்குள் இருப்பதை உணரலாம். கோவிலுக்குச் சென்ற பின் சிறிது நேரம் அமராமல் வரக்கூடாது என்று சொல்வார்கள். தற்சமயம் கோவிலுக்கு செல்பவர்கள் சில நொடிகள் அமர்ந்து விட்டு அவசரமாக எழுந்து வருகிறார்கள். இது நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வருவது அவசியம்.

அந்தக் காலத்தில் தெய்வத்தின் சிலையை கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் இருண்ட சூழ்நிலையில் வைத்தார்கள். தெய்வத்தின் முகத்தை அகல் விளக்கொளியிலும் தீப ஆராதனையின் போதும் மட்டும் காண முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான். “கடவுள் நம் இதயத்தின் இருண்ட குகையில் வசிக்கிறார். அவரை ஆத்ம ஞானம் என்ற ஒளியால் மட்டுமே காண முடியும். இது தான் உண்மை.“

உன் மனது அங்கும் இங்கும் அலையாமல் இருப்பதற்காகவே சிலைகளை அழகாக அலங்கரித்தார்கள். நீங்கள் முழு மனதுடன் கடவுளை வழி படலாம். சலவைக் கல்லில் வடித்த அழகான தெய்வச் சிலைகளை வைத்து அதை அழகான பட்டு மற்றும் பொன் நகைகளால் அலங்கரிப்பது வழக்கம். இது நாம் கடைத் தெருவுக்குப்  போய் கண்ணாடி வழியாக கடையில் வைத்திருக்கும் பொருள்களைப் பார்த்து ஆனந்திப்பது போன்றது. மனம் அப்பொருள்களில் நிலைத்திருப்பது போல் கோவிலில் நம் மனம் தெய்வத்திடம் நிலைத்திருக்கும். ஆடை, சுகந்தமான வாசனை பூக்கள், பழங்கள், நைவேத்தியங்களால் நாம் கவரப்படுகிறோம். நம் முன்னோர்கள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். ஐம் புலன்களுக்கும் தேவையானவற்றை கோவில்களில் வைத்து நம்மை தெய்வத்திடம் அழைத்துச் சென்றார்கள்.

புத்த மதத்திலும், புத்தரின் சிலைக்கு ஆடை அணிகலன்களால் அலங்கரிப்பது வழக்கம். நம் மனதை ஈர்க்கும்.புத்தரின் உருவத்தையே நவரத்தினங்களை செதுக்கி வடிவமைக்கிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியாலும் புத்தர் சிலையைச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட புத்தர் சிலைகளை அவர்களுடைய கோவில்களில் காணலாம்.

பூக்கள், சந்தன மணத்துடன் கூடிய வத்திகள், இனிப்புப் பண்டங்களை புத்தரின் சிலைக்கு முன் வைத்து வணங்குகின்றனர். இப்படிச் செய்யும் போது மனம் அமைதியடைந்து தெய்வத்திடம் ஒரு நிலைப்படும். மனம் அமைதியடைந்ததும் கண்களை மூடி தியானம் செய்கிறார்கள். இது இரண்டாவது படி. தியானத்தின் போது நீ உன்னுள் தெய்வத்தைக் காண முடியும். அழகான பழமொழி ஒன்று உள்ளது. “மனஸ்யானம் அபஸூ தேவதா மனிஷினாம் தேவி தேவதா, பாலானாம் தோஷ கஷ்டேஷூ க்யானினோ ஆத்மானி தேவதா. “ (இது வேதாந்தத்திலிருந்து எடுத்த ஒரு ஸ்லோகம்)கடவுள் எங்கே என்று கேட்கும் போது, அறிஞர்கள் இந்த ஸ்லோகத்தை பதிலாகச் சொல்வார்கள். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் பின் வருமாறு.

“மனிதர்களுக்கு அன்பு என்பதே தெய்வம். ஞானிகள் எல்லாவற்றிலும் தெய்வத்தை பார்ப்பார்கள். அஞ்ஞானிகளுக்கு மரத்தாலும் கல்லாலும் செய்த சிலை மட்டும் தெரிகிறது. ஆனால் ஞானிகள் தெய்வத்தை தங்கள் ஆத்மாவிலும் பார்க்கிறார்கள். நாளை ஆச்ரமத்தில் சதுர்த்தி யாகம் செய்யப் போகிறோம். நீங்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ளலாம்.  மந்திரங்களைக் கேட்டபடியே தியானம் செய்யலாம்.

பூஜைக்காக பல விதிகள் இருந்த போதிலும், நாம் எல்லாவற்றையும் செய்யத் தேவை இல்லை. ஏனென்றால் நாம் தியானத்தில் இருக்கும் போது தெய்வத்தைப் பார்க்கிறோம். (உணர்கிறோம்) இருந்தாலும் பாரம்பரிய கலாசாரத்தை காப்பதற்காக விதிப்படி எல்லா சடங்குகளையும் செய்ய வேண்டும். இதைப் பார்த்து நம் குழந்தைகள் அப்படி செய்யக் கற்றுக் கொள்வார்கள். அடுத்த தலைமுறையினரும் நம் பாரம்பரிய கலாசாரத்தைக் கற்று, பூஜை விதிகளைக் கடைப்பிடித்து நம் கலாசாரத்தை காப்பார்கள்.

நாம் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்? அதைக் கொண்டாட அவசியம் இல்லை. அப்படிக் கொண்டாடாவிட்டால், நம் வருங்கால சந்ததியினருக்கு நம் பழமையான கலாசாரங்கள் தெரியாமல் போய்விடும். தீபாவளி என்று ஒரு பண்டிகை இருந்தது என்று தெரியாமல் போய்விடும். நம்முடைய பவித்திரமான பழக்க வழக்கங்கள் மறைந்து விடும். இப்படி கொண்டாட்டங்களின் காரணத்தை ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொண்டால், அதன் மகத்துவம் விளங்கும். அதனால் தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். 

எப்பொருளானாலும்,எந்த நிகழ்வு ஆனாலும், அது நான் தான் என்று அறிந்துகொள்.“ அதனால் நாம் பழைய பூஜைகளையும், சடங்குகளையும் விடாமல் தொடர்ந்து செய்கிறோம். இதை நிறுத்த அவசியமில்லை.

கே: குருதேவா! டி.வி. நிகழ்ச்சிகளில், மகாதேவர், பார்வதி, ஜலந்தரன் முதலிய பாத்திரங்களை காண்பிக்கிறார்கள். இப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கிறார்களா? தயவுசெய்து விளக்குங்கள்.

குருதேவர்: நல்லது! அப்படிக் காண்பிப்பது எனக்கு சரியாகப்படவில்லை. பார்வதி கோபம் கொள்வது போல் காண்பிக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்காக நடுநிலை இழந்து மற்றவர்களைக் கடிந்து கொள்வதாக காண்பிக்கிறார்கள். இவை தெய்வீக குணங்கள் ஆகாது. தெய்வீக குணங்கள் என்பவை நடுநிலை தவறாமை. மகிழ்ச்சி, இயல்பாக இருப்பது, எளிமையாக இருப்பது மற்றும் வரப்போவதைக் கணிக்கக் கூடிய அறிவு முதலியவை. இக்குணங்களை மட்டுமே டி.வி.யில் காண்பிப்பது நல்லது.

தெய்வ சக்திகள் இருப்பது போல் அசுர சக்திகளும் இருக்கின்றன. தெய்வங்களை மனிதர்களை போல் சித்தரிக்கின்றன. இயல்பான மனிதரைப் போலல்லாமல் உணர்ச்சி வசப்படுபவர்களாக, எதிர்மறை குணங்களுடன், துயரப்படுபவர்களாக காட்டுகிறார்கள். இது அறிவுள்ள செயல் அல்ல. இது மட்டுமல்ல. அவர்கள் கதைகளை நீ உண்மையென்று எடுத்துக்கொள்ளாதே. கதையின் ஆழ்ந்த கருத்து என்ன என்று புரிந்து கொள். இல்லையென்றால் இதுவும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி போலாகி விடும். இதனால் ஒன்றும் பயன் கிடையாது.

உதாரணமாக நிகழ்ச்சியில் ஜலந்திரன் என்ற அசுரனைக் காட்டுகிறார்கள். எல்லாமே சிவ பெருமானுக்குள் அடங்கியிருக்கும் போது அசுர சக்தி எங்கிருந்து வந்தது? எல்லாமே சிவ சக்தி தான் என்றால் அசுர சக்தியும் அதிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.எனவே எல்லா அசுரர்களுமே ப்ரம்மத்தில் அடக்கம். ப்ரம்மத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.

கதை இப்படிப் போகிறது. இந்திரனுடைய அகந்தை காரணமாக, சிவபெருமான் அவர் மேல் கோபம் கொண்டார். சிவபெருமான் அமைதியே உருவானவர். (தூய்மையான ஆத்மா). இந்திரன் என்பது ஒரு கூட்ட மனப்பான்மையைக் குறிக்கும். (ஒரு குழுவின் ஆத்மா).
ஒரு இந்திரன் 1000 கண்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். இது ஒரு கூட்டத்திலிருக்கும் 500 பேர்களின் பார்வைக்குச் சமம். ஒரு கூட்டத்தின் மனம் (ஆத்மா) தனியாக செயல்படும். இதையே கூட்ட மனப்பான்மை (மாப் சைக்காலஜி) என்று சொல்கிறோம். இது பொதுவாக அழிக்கும் காரியத்தில் ஈடுபடும்.கூட்டமாகச் சென்று பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்து எல்லோருக்கும் கஷ்டம் கொடுப்பார்கள்.நஷ்டம் ஏற்படும். கூட்ட மனப்பான்மை அழிவை நோக்கிச் செல்லக் கூடியது. அதனால் அமைதியே உருவான சிவதத்துவம் அழிக்கும் சக்தியான இந்திர தத்துவத்தின் மேல் கோபம் கொண்டது இயல்பு. கோபம் அங்கு நிற்கவில்லை. சிவபெருமானின் கோபம் அசுர சக்தியாக உருவெடுத்தது. (சிவபெருமானின் கோபத்தை வெளிப்படுத்தும் ரூபமாக ஜலந்தரன் இருக்கிறான்). கோபம் யாரிடமிருந்து வருகிறதோ அவருக்கு கோபத்தின் எதிர்ச் செயல் வந்து சேரும். 

கடவுளிடமிருந்து வெளிப்பட்டாலும் அவரிடம் அதன் விளைவுகள் திரும்பி வரும். எல்லாமே புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும். கோபமும் அப்படித்தான். எனவே சிவபெருமானின் கோபம் ஜலந்தரன் என்ற அசுர வடிவில் அவரிடம் வந்து கலந்தது. சிவன் ஆதி சக்தியை அழைத்து ஜலந்தரனை அழிக்க வேண்டினார்.

சிவபிரான் ஆத்மாவின் அமைதியான வடிவம். எல்லா காரியங்களையும் தன் சக்தியால் நடத்துபவள் தெய்வீகமான அன்னை (பார்வதி). ஆதிசக்தி மூன்று விதமான சக்தியை தன்னுள் அடக்கியவள். ஞான சக்தி (அறிவு), கிரியா சக்தி (செயல் திறன்), இச்சா சக்தி (மனதில் எழும் ஆசையை அடையும் சக்தி). எனவே சிவபெருமானும், ஆதிசக்தியும் ஒன்றாகி கோபத்தை வென்றார்கள். ஜலந்தரன் என்ற அசுரனை அழித்தார்கள். (ஜலந்தரன் என்ற அசுரன் மக்களை குழப்ப வலையில் சிக்க வைப்பவன்). இது தான் கதையிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

கே: குருதேவா ! கணவனை இழந்த பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்ளலாமா? தன் வாழ்க்கையை மற்றவர்களின் நலனுக்காக சேவையில் அர்ப்பணித்துக் கொள்ளலாமா? தன் வாழ்க்கையை முன் போல் நடத்தலாமா?

குருதேவர்: கண்டிப்பாக! முதலில் உன் துயரத்திலிருந்து விடுபட்டு, இழப்பினால் உண்டான நஷ்டத்தை மறக்கவேண்டும். 13 நாட்கள் துக்கம் கொண்டாடினால் போதும். அதிக பட்சம் ஒரு ஆண்டு காலம். நீ உன் துயரத்திலிருந்து வெளி வர வேண்டும். உன் கணவர் அவர் விதிப்படி எவ்வளவு நாள் இவ்வுலகில் வாழ வேண்டுமோ, அவ்வளவு நாட்கள் வாழ்து விட்டுப்போனார். அது சரி தான். இப்போது நீ உன் வாழ்க்கையை தொடர வேண்டும்.
இருவரும் சேர்ந்தா இவ்வுலகுக்கு வந்தீர்கள்? இல்லை. நீ தனியாக வந்தாய். அவரை எங்கோ வழியில் பார்த்தாய். நீ உன் பயணத்தை தனியாக தொடரலாம். அமைதியாக இரு. தெய்வத்தின் மீது கவனம் வை.

இதைத்தான் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். “நான் உன் தந்தை. நான் உன் தாய். நானே உன் பாட்டனார். உன் வாழ்க்கையில் நீ சந்தித்த அனைவருமே நான் தான்” யார் எந்த ரூபத்தில் உன் முன்னே வந்தாலும், அவரே தெய்வம் என்று அறிந்து கொள்.

கே: குருதேவா! நான் ஒரு அரசாங்க ஊழியன். என் வருமானம் மிகக் குறைவு. லஞ்சம் வாங்காமல் நான் ஒரு வெற்றிகரமான மற்றும் வசதியான வாழ்க்கை நடத்த முடியுமா?
குருதேவர்: நீ அமைதியாக உறங்க விரும்புகிறாயா? ஒரு பயமும் இல்லாமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறாயா? தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து வாழ விரும்புகிறாயா? நேர்மையான வாழ்க்கையில் உனக்குக் கிடைக்கும் ஆனந்தம், நேர்மையற்ற வாழ்க்கையில் எப்போதும் உனக்குக் கிடைக்காது. உன்னிடம் எல்லா விதமான ஆடம்பரப் பொருட்களும் கருவிகளும் இருக்கலாம். அமைதியாக தூங்க முடியாவிட்டால் அப்பொருள்களால் உனக்கு என்ன பயன்?

இப்போது நீ முடிவெடுக்கலாம். அமைதியாக, நிம்மதியாக வாழ விரும்புகிறாயா? தலை நிமிர்ந்து வாழ விரும்புகிறாயா? அச்சமில்லாமல் நான் நேர்மையான வாழ்க்கை நடத்துகிறேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா? இப்படிச் சொல்ல முடிந்தால் வாழ்க்கையில் ஆனந்தமும் திருப்தியும் நிலவும். வேறு எந்த பொருளாலும் உனக்கு வாழ்வில் ஆனந்தமும் திருப்தியும் கிடைக்காது.

கே: குருதேவா! உலகில் உள்ள எல்லா மனிதர்களும் பிரச்சினைகளில் உழல்கிறார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கென்றே நாம் இங்கு வந்திருக்கிறோமா?

குருதேவர்: நீ அவற்றை பிரச்சினைகள் என்று நினைத்தால், பிரச்சினைகளாக தெரியும். அது தெய்வத்தின் விளையாட்டு என்று நினைத்தால், விளையாட்டாக தெரியும். பலசமயம் நாம் பிரச்சினைகளுடன் வாழ பழகி விட்டோம். ஒரு பிரச்சினையும் இல்லாதபோது சலிப்படைந்து நாமே நமக்கு பிரச்சினைகளை உருவாக்கி கொள்கிறோம். நம்மை சுற்றியிருப்பவர்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறோம். வாழ்க்கையில் நம் கண்ணோட்டத்தை மாற்றுவது அவசியம். பரந்த நோக்கு வேண்டும். இவ்வுலகம் பலதரப்பட்டவர்களை கொண்டது. ஒவ்வொரு மனிதனும் வித விதமான இயல்புடையவனாக இருப்பான். இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

கே: குருதேவா! என் பெற்றோர்களுக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இப்போது அவர்களிடையே சுமூகமான உறவு இல்லை. என் தந்தையிடம் செல்லும் போது அவர் செய்வது சரியென்று தோன்றுகிறது. தாயிடம் செல்லும் போது அவர் செய்வது சரியென்று தோன்றுகிறது. என்ன செய்யலாம்?

நான் உனக்குச் சொல்லும் ஆலோசனை, இருவரிடமுமே போய் கொண்டிரு. இருவருமே சரியாக நடப்பதாக அவர்களிடம் சொல்லி, ஒருவருக்கொருவர் நெருங்கி வர முயற்சி செய். இம் முயற்சியைக் கைவிட வேண்டாம். 100 முறை முயன்றால் ஒரு தடவையாவது நல்லது நடக்கும்.  ஏற்கனவே 25 வருடங்கள் கடந்து விட்டன. 20 – 25 வருடங்கள்  கடந்து விடும். அதற்குப் பின் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதியை நிலைநாட்ட பெரு முயற்சி செய்ய வேண்டாம். சூழ்நிலையை அப்படியே ஏற்றுக்கொள். ஓய்வாக இரு. மனிதர்களின் இயல்பை மாற்றுவது கடினம். எப்படி இருக்கிறார்களோ அப்படியே விட்டு விடுவது நல்லது. நெருப்பு அதிகமாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம். அவர்கள் சண்டையிடும் போது நடுவில் நின்று தடுக்கலாம். நீ அறிவுள்ளவன். பலசாலி. நம் சமூகத்தில் பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன.

ஒரு கனவான் இருந்தார். “நீ ஏன் உன் மனைவியிடம் சண்டை போடுகிறாய்?” என்று ஒருவர் அவரிடம் கேட்டார். பதிலுக்கு அவர் “ நீ என்ன கேட்கிறாய் ? அவள் என் மனைவி. நான் அவளை விரும்புகிறேன். வேறு யாருடன் நான் சண்டைக்குப் போக முடியும்? யாரை விரும்புகிறேனோ அவரிடம் தான் சண்டை போட முடியும்“ என்றார். மிகவும் உண்மை. சின்னச் சின்ன சண்டை/வாக்கு வாதம் செய்வார்கள். மறுபடி ஒன்று சேர்வார்கள். ஒருவரை ஒருவர் விரும்புவார்கள். அது சரி தான். அவர்களிடையில் குறுக்கிட வேண்டாம். கவலைப்படாதே.