இறை நம்பிக்கையை எப்படி தக்க வைக்க முடியும்?

23 ஜூன் 2013 - பெங்களூர் - இந்தியா 
               

கே: ஶ்ரீ ஶ்ரீ ஜெர்மனியிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பேரழிவைத் தந்த வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளானார்கள். மக்களிடையே நாம் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் இதற்காக செய்தி நிறுவனங்கள் எப்படி பங்கு பெற வேண்டும் என்று விளக்குங்கள்.

குருதேவர்: இயற்கையின் சீற்றத்தால், இப்படி அபாயங்கள் வரக்கூடும். மனித சமுதாயத்தின் தவறான செயல்களாலும் அதிக அழிவு ஏற்படுகிறது.  அபாயம் நேரக் கூடிய இடங்களில், முன் கூட்டியே அதை எதிர் பார்த்து அழிவுகளைத் தவிர்க்கவோ அல்லது நஷ்டத்தைக் குறைக்கவோ நாம் தயார் நிலையில் இருப்பதில்லை. என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது. சமீபத்தில் பேரழிவைத் தந்த வெள்ளத்தால் கேதார்நாத் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது ஒரு விதத்தில் நாம் இயற்கையை பற்றிய விழிப்புணர்வோடு இருக்கத் தவறியதால் ஏற்பட்ட விபத்தாகும். நாம் இயற்கையைப் பாதுகாக்க தவறி விட்டோம். இமய மலைப் பகுதியில் காடுகளை பெருமளவில் அழித்ததால் இப்படி விபத்துகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் மரங்களை வெட்டி காடுகளை அழிக்கிறோம். மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நதிகளின் போக்கில் அணைகளைக் கட்டுவதால் நதிகளின் போக்கு மாறுகிறது. அப்படிச் செய்வதை நிறுத்தி, மாற்றுத் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

இரண்டாவதாக, இந்தியாவில் யாத்திரிகர்களின் தேவைகளை பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கத்துக்கு அவர்களின் உயிர் நலனைப் பற்றிக் கவலை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கேதார் நாத்துக்கு செல்கிறார்கள். அவர்கள் பயணம் செய்ய நல்ல அகலமான சாலைகளை அமைத்திருக்க வேண்டும். மாற்று வழிகளும் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். வெள்ளம் வருவதும், அதனால் சில பகுதிகள் சேதமடைவதும் இயற்கை. தகுந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், குறைந்த பட்சம் பல மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
கனடாவிலும், ஐரோப்பாவிலும் வெள்ளச் சேதமிருந்தாலும், மக்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் எல்லோரையும் காப்பாற்றி விட்டார்கள். சுனாமிக்குப் பிறகு இதுவரை இவ்வளவு பெரிய உயிர்ச் சேதம் எங்கும் நிகழ வில்லை. கேதார் நாத் விபத்தை இமாலய சுனாமி என்றழைக்கலாம். வாழும் கலைத் தன்னார்வலர்கள் அங்கு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க ஏற்பாடு செய்து அங்கு சேவையில் ஈடு பட்டிருக்கிறார்கள். வாழும் கலையினர் ஜெர்மனியிலும் கனடாவிலும் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

நான் யாரையும் அங்கு அனுப்பவில்லை. தானாகவே முன்வந்து அங்கு சென்று சேவை செய்கிறார்கள். நம் ஆத்ம சக்தி வெளிப்படும் போது, இப்படி மக்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வருவார்கள். மனித நேயப் பண்புகளை நம் இதயம் வெளிப்படுத்தும். தன்னிச்சையாக உடனுக்குடனே அவதிக்குள்ளானவர்களுக்கு உதவி செய்வார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள், மனித நேயப் பண்புகள் வெளிப்பட வாய்ப்பாக அமைகின்றன. நீ ஒரு இயந்திரமா அல்லது மனிதனா என்று சோதிக்கிறது.  சமயத்தில் நாமனைவரும் சேர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். எங்கு விபத்துகள் ஏற்பட்டாலும், பெருமளவில் மக்கள் முன் வந்து உதவ வேண்டும். அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். வாநிலை பரிசோதனைச் சாலைகள் முன் கூட்டியே வெள்ளம் வருவதைக் கண்டறிந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்ல உதவ வேண்டும். உயிர்ச் சேதம் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். நாம் இதைக் குறித்து செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. அபாய நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு விஞ்ஞானமாகும். மக்கள் நலனில் அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சூழ்நிலைகளை சமாளிக்க உதவ வேண்டும். பலர் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த எல்லோருக்கும் நான் நன்றி சொல்கிறேன். குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்களுக்கு மிக மிக நன்றி. தன்னலம் கருதாத அவர்களுடைய அயராத உழைப்பு மிக போற்ற தக்கது.

கே: இது வரை நடக்காத, மிகவும் எதிர்பாராத வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்து கேதார்நாத்தில் பல ஆயிரம் உயிர்களைப் பறித்துச் சென்றது. பலர் உறவினர்களைப் பிரிந்து தவித்தார்கள். இறைவனைப் பிரார்த்திக்கச் சென்றவர்கள் இப்படிப்பட்ட விபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அனுபவத்தில் பலர் இறை நம்பிக்கையை இழக்கக் கூடும். இதை எப்படி நாம் சமாளிக்கலாம்.

குருதேவர்: முதலில் கடவுள் பார பட்சமற்றவர் என்பதை அறிய வேண்டும். இயற்கை பாரபட்சமற்றது. அது தன்னிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதில்லை. கடவுள் கேதார்நாத்தில் மட்டும் வாழ்பவர் அல்ல. அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். உன் இதயத்தில் இருக்கிறார். அவர் எங்கும் இருப்பவர். யாத்திரிகர்கள் செல்லும் இடங்களில், வேண்டிய வசதிகள் செய்து தர வேண்டும். இப்போது அப்படி இல்லை. நாம் மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்ய வேண்டும். சென்று வர நல்ல சாலைகளும் அமைக்கப் பட வேண்டும். தொலைபேசி வசதிகளும் அதிகரிக்கப் பட வேண்டும். விபத்துக்களால், சில மக்கள் நம்பிக்கை இழக்கலாம். ஆனால் நாம் எது நடந்தாலும் அசையாத நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உண்மை ஒரு நாள் வெல்லும். நல்லவர்கள் தங்களுக்கு உரிய இடத்தை அடைவார்கள். இது பிரார்த்தனைக்கான சமயம். விபத்து நேரும் போது, நம் மனத்தை பயம் ஆட்கொள்ளும் போது பிரார்த்தனை உதவும். மனத்தைத் தளர விட வேண்டாம். எல்லா இடங்களுமே கடவுளுக்குச் சொந்தமானது. இயற்கையின் சீற்றத்தால் விபத்து ஏற்படும் போது உன் நம்பிக்கை சோதனைக்குள்ளாகிறது. அசையா நம்பிக்கையுடன், இந்த சமயத்தில் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்.

எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல். உயிர் இழந்தவர்களின் ஆத்மா அமைதி அடைய பிரார்த்தனை செய். அவர்கள் குடும்பத்தினருக்கு அமைதி கிடைக்கவும், தங்கள் துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வரவும் கடவுளை வேண்டலாம். உயிர் பிழைத்தவர்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல். கொடுமையான விபத்திலிருந்து அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைத்துப் பார்.

மக்கள் அடைந்த துயரத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. விழிப்புணர்வோடு அந்த இடத்தில் என்ன மாற்றங்கள் செய்து, பின் வரும் நாட்களில் மக்கள் பாதுகாப்பாகச் சென்று வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நல்ல சாலைகள், முறையான தொலைபேசித் தொடர்பு, முறையான வாகன வசதிகள், உணவு விடுதிகள் முதலியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

மக்கள் பல ஆண்டுகளாக அந்த இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். விபத்துகளால், மக்கள் அங்கு செல்வதைத் தடுக்க முடியாது. கடந்து போன விபத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். விபத்துகள் பூமியில் எந்தப் பகுதியிலும் ஏற்படாமல் காக்க வேண்டும். பிற்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று நம்மால் சொல்ல முடியாது. முடிந்த வரை நம்முடைய அசட்டையைத் தவிர்க்க வேண்டும்.

கே: சமீபத்தில் ப்ரேசில் நாட்டில் நடந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களால், வாழ்க்கையின் எல்லா பக்கங்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதை எப்படி சமாளிக்கலாம்?

குருதேவர்: மக்களுக்கு நீதி கிடைக்காத போது, லஞ்ச ஊழல்களால் மக்கள் அவதிப் படும்போது போராட்டங்கள் ஏற்படுவது இயல்பானது. மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். இது நல்லது. மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது. லஞ்ச ஊழலை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியல்ல. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே, ஏற்றுக் கொள்வது ஒரு வழி. மற்றொரு வழி லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவது; அநீதிக்கு எதிராகப் போராடுவது; எது தவறு என்று நினைக்கிறோமோ அதை எதிர்த்துப் போராடுவது. இது வரவேற்கத் தக்க பண்பாகும். இதை நாம் பாராட்ட வேண்டும்.

போராட்டங்களின் போது நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. கூட்ட மனப்பான்மையினால் மக்கள் வன்முறையில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புப் போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும். போராட்டங்கள் ஒரு தனி மனிதனை எதிர்க்காமல் அவனுடைய கொள்கையை மட்டுமே எதிர்ப்பதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவரும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள முடியும். மக்கள் இப்படி மாறுவதை நாம் கவனிக்க வேண்டும். எதிர்ப்புப் போராட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட விஷயத்துக்காக மட்டும், அமைதியாக ஒரு முறையோடு நடத்த வேண்டும்.

நாம் அமைதியாக இல்லாவிட்டால், நாம் தீர்மானித்த விஷயத்தை, நம் இலட்சியத்தை மறந்து விடுவோம். போராட்டங்களை சரியான வழியில், வன்முறையில்லாமல் நடத்த வேண்டும். போராட்டம் தீர்மானிக்கப் பட்ட கருத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். தனி ஒரு மனிதரை எதிர்க்கக் கூடாது. அவர்களுடைய சொத்துக்கோ, அரசாங்கச் சொத்துக்கோ சேதம் ஏற்படக்கூடாது. இதைக் கருத்தில் வைப்பது மிக மிக அவசியம்.

மக்கள் நல்ல எண்ணத்தோடு போராட்டத்தைத் துவங்குகிறார்கள். சில சமூக விரோதிகளால், போராட்டம் வன்முறையை நோக்கிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. மக்கள் இது பற்றிய விழிப்புணர்வோடு இருந்து, சமூக விரோதிகள் தங்கள் பக்கம் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வன்முறையற்ற அமைதியான போராட்டங்களை நாம் வரவேற்க வேண்டும். கட்டாயமாக வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால், தகுந்த போலீஸ் படையையோ, ராணுவத்தையோ அழைத்து வன்முறையை அடக்க வேண்டும். இது ஒரு கடினமான சூழ்நிலை. அதனால் தான் நான் ஒரு அமைதியான புரட்சியை, வன்முறையற்ற போராட்டத்தை வலியுறுத்துகிறேன். இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியம்.

கே: அன்பான குருதேவா ! நம்மால் நம் உரிமைகளை, வன்முறையில்லாமல் எப்படிக் காக்க முடியும்? அரசாங்கம் மக்களைப் பிரித்து, அரசியல் நடத்தும் போது, மக்களுக்குள் ஒருவரை ஒருவர் சேர்ந்தவர் என்ற உணர்வை எப்படி கொண்டு வர முடியும்?

குருதேவர்: எந்த ஒரு லட்சியத்துக்கும் பல தடைகள், பல சவால்கள் இருக்கும். இந்த சவால்கள் பெரிதாகும் போது, நாம் நம்முடைய நற்பண்புகளை மறக்காமல் நடந்து கொள்ள வேண்டும். அநீதியால் வாடும் போது அமைதி காப்பது கடினம் (அதுவும் வன்முறை மற்றும் கலவரங்களின் போது அமைதியாக இருப்பது கடினம்) என்று எனக்குத் தெரியும். நாம் நம் ஆத்ம பலத்தைப் பெருக்கி, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எது வந்தாலும் நாம் நம் உரிமைகளைக் காத்து, இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நீ மன உறுதியோடு இருந்தால், தடைகள் மற்றும் பின்னோக்கி இழுக்கும் சக்திகளை வென்று முன்னேற முடியும். நீதியை நாடுவது, மனித உரிமைக்காகப் போராடுவது எளிதல்ல. இது ஒரு நீண்ட பாதை. சமூகத்தில் சுயநலம் அதிகார வெறி பிடித்தவர்களும் இருக்கிறார்கள். சிலர் வன்முறையை மட்டுமே பின்பற்றி முன் யோசனையில்லாமல் நடக்கிறார்கள். சூழ்நிலையில், நாம் வன்முறையைத் தவிர்த்து, அமைதியாகப் போராட மிகவும் கவனத்தோடு செயல் பட வேண்டும்.
மக்கள் மனம் தளராமல் இருக்க, அவர்களோடு இணைந்து நல்வழியில் ஒன்று சேர்ந்து செல்லும் போது, உண்மை எப்போதும் வெற்றி அடையும். வாய்மை வெல்லும் என்ற திட நம்பிக்கையோடு இருந்தால், எந்த விதமான தடைகளையும் மீறி, சுய நம்பிக்கை மற்றும் தைரியத்தோடு முன்னேறி இலட்சியத்தை அடைய முடியும்.

நாம் குழப்பமடைந்தால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டால், கோபம் கொண்டால், நமக்குள்ளே ஏதோ ஆட்டம் கண்டு சக்தியிழந்தவராக ஆகிறோம். பெரிய காரியத்தை சாதிக்க நமக்கு அபார சக்தி தேவை. அப்படிப்பட்ட பெரிய சக்தி நாம் அமைதியாக இருக்கும் போது கிடைக்கும்.

இரண்டாவது: எப்போதும் பேச்சு வார்த்தையைத் துவங்க உடன்பட வேண்டும்.

மூன்றாவது: ஒரு மனிதரை அல்லது ஒரு அமைப்பை கெட்டவர் / கெட்டது என்று முடிவு செய்து லேபில் ஒட்ட வேண்டாம். அப்படிச் செய்தால், நீ பேச்சு வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறாய். மகாத்மா காந்தி, ஆங்கிலேயரை, எப்போதுமே கெட்டவர்கள் என்று நினைக்க வில்லை. எப்போதுமே பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பினார்.மற்றவர்களோ / அரசாங்கமோ மக்களுக்கு எதிராக செயல் படுவதாக நினைக்க வேண்டாம். அப்படி நினைக்கும் போது கோபம் அதிகமாகி நம் சக்தியை இழக்கிறோம்.

பேச்சு வார்த்தைக்கான சந்தர்ப்பத்தை இழக்காமல் இருப்பது தான் நல்லது. விடா முயற்சியோடு, லட்சியத்தை நோக்கி, நீதியை நாடி, நம் உரிமைகளைப் பெற, அமைதியை நாடி, செல்வ வளம் மற்றும் முன்னேற்றத்தை நாடி செல்ல வேண்டும். நீங்களும் திட மனதோடு, மற்றவர்களையும் ஊக்குவித்து, அமைதியான போராட்டங்களை நடத்த வேண்டும். சொல்வது எளிது, செய்வது கடினம் என்று நான் அறிவேன். இருந்தாலும் இந்த பாதையில் செல்லும் போது வெற்றி பெறுவது உறுதி.

கே: குருதேவா! பாகிஸ்தானில் உள்ள முகமதியர்களும் அமைதியை விரும்புகிறார்கள். அந்த நாட்டில் வன்முறையை எப்படி நீக்கலாம்?

குருதேவர்: வன்முறையை ஒழிக்க, வன்முறையாளர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி வழி காண வேண்டும். அவர்களுடைய தவறான கருத்துகளை நீக்கி மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இரண்டாவது:வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கருத்து வேற்றுமைகள் விரோதமாக / வாக்கு வாதமாகத் தேவையில்லை. வேற்றுமைகள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவரும் தனித்தனியானவர். வேறு வேறு உடைகளை அணிகிறோம். வாழ்க்கை முறைகள் தனித்தனியாக இருக்கின்றன. வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு, உலகம் முழுதும் ஒரு குடும்பமாகும் நோக்கத்தோடு வாழ வேண்டும்.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பல மொழிகளைப் பேசுகிறோம்.பல மதங்களை பின்பற்றுகிறோம். பல விதமான கலாசாரங்களைப் பின் பற்றி வருகிறோம். பல நாடுகளில் வாழ்கிறோம். நம் இளைஞர்களின் மனதில், இப்படிப்பட்ட பல்வேறு கலாசாரங்களைக் கொண்டாடும் மனப் பாங்கை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு அது புரிந்தால், அவர்கள் தீவிர வாதியாக அல்லது பயங்கரவாதியாக மாற மாட்டார்கள்.

சிலர் சொர்க்கத்தின் திறவுகோல் தங்கள் கையில் மட்டும் இருப்பதாக நினைப்பது தான் பயங்கர வாதம் வரக் காரணமாகிறது. இது ஒரு தவறான எண்ணம். இந்த தவறான கருத்தினால் அப்படி ஒரு இடத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். நான் தீவிர வாதக் கொள்கை உடையவர்களை சந்தித்திருக்கிறேன். தீவிர வாதிகளில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். ஒன்று தீவிர மதவாதிகள். மற்றொன்று தங்கள் கொள்கைக்காக வன்முறையில் ஈடுபடுபவர்கள். 

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள் தங்கள் கொள்கைக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதால், அவர்களை வருத்துவதால் தங்கள் லட்சியத்தை அடைய முடியாது என்று அவர்கள் அறிவதில்லை. தீவிரவாதத்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்காது. வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும் என்ற அறிவை மக்களிடையே பரப்ப வேண்டும். மனம் விட்டுப் பேசும் கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும். நான் சொல்வது மட்டுமே சரி. மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் சில மூச்சுப் பயிற்சிகளைக் கற்று ஓய்வாக இருக்கப் பழகினால் இயற்கையின் அழகை, வேற்றுமையில் காணக் கூடிய அழகை உணர்ந்து மாற்றம் அடைவார்கள் என்பது உறுதி. பலர் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.  ஏதோ தெரியாத பயம், தவறான கொள்கையைச் சரி என்று நினைப்பது, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அகப்பட்டு வருந்தியவர்கள், வன்முறையாளர்களின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு அவர்களுடைய வலையில் சிக்குகிறார்கள். தவறான கொள்கைக்காக தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்கள்.

கே: சமூக வளர்ச்சிக்கு அமைதியே சரியான வழி என்று அர்ஜெண்டினாவின் அரசியல் வாதிகளுக்கு எப்படிப் புரிய வைக்கலாம்?

குருதேவர்: அரசியலில் ஆன்மீகம் வர வேண்டும். வியாபாரத்தில் சமூக நலம் பற்றிய உணர்வு இருக்க வேண்டும். மதச் சார்பற்ற சமூக வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இது தான் இந்தக் கேள்விக்கு விடையாகும். மதச் சார்பில்லாமல் இருப்பதன் அர்த்தம் மதத் தலைவர்கள், தங்கள் மதத்தையும், தங்கள் இனத்தவர்களையும் மட்டும் எண்ணாமல் உலக முழுவதையும் கருத்தில் வைக்க வேண்டும்.

பொதுவாக மதத் தலைவர்கள் தங்கள் மதத்தை பின்பற்றும் மக்கள் மட்டும் தங்களை சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறார்கள். மதத் தலைவர்கள் இந்த எல்லையைக் கடந்து, உலகில் உள்ள எல்லா மக்களின் நலத்துக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு வியாபாரியும் சமூக நன்மை கருதி ஏதாவது பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொறுப்பு அவர்களுடைய நிறுவனத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் முதலில் தங்கள் நாட்டின் நலன் பற்றி நினைக்க வேண்டும். பிறகு தங்கள் கட்சி நலன் பற்றியும், கடைசியில் தங்கள் நலனைப் பற்றியும் எண்ண வேண்டும்.  பெரும்பாலும் இன்றைய அரசியல்வாதிகள் முதலில் தங்கள் நலனைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். பிறகு தங்கள் கட்சியின் நலனைப் பற்றி எண்ணுகிறார்கள். நாட்டு நலன் பற்றி எண்ணுவது மிகவும் குறைவாக இருக்கிறது. உடனடியாக இந்தப் போக்கைத் திருப்பி மாற்றி அமைப்பது மிகவும் அவசியம். சமூகத்தில் பெரும் பான்மையினருக்கு நலன் ஏற்பட அவர்கள் காரியம் செய்தால், இயற்கையாகவே ஆன்மீக வழியில் செல்வார்கள்.அமைதியை விரும்புவார்கள். இன்று உலகம் முழுதும் சமூகத்தில் நிலவும் குறுகிய கண்ணோட்டம் மறைந்து விடும்.

செல்வம் மற்றும் பதவி வரும்; போகும். நம் நற்பண்புகளால் செய்யும் நற்காரியங்கள் எப்போதும் நிலைத்திருக்கும். அரசியல் வாதிகள் இதைப் புரிந்து கொள்வது அவசியம். குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்த்து, பலருக்கு, நீண்ட நாள் பயனளிக்கும் செயல்களைச் செய்ய வேண்டும். அவர்களின் திட்டங்கள் இந்த இலட்சியத்தை அடைய உதவ வேண்டும். இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும். எனவே அமைதி மிக மிக இன்றியமையாதது. அமைதியாக இருக்கும் போது நாம் நல்ல கருத்துக்களைப் பற்றி சிந்தனை செய்ய முடியும். நமக்கு அமைதி இல்லா விட்டால், நாம் மிகவும் குழப்பமாக இருக்கும் போது, நம் செயல்களும், எண்ணங்களும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். மன அமைதி மேலும் குலைந்து விடும். அதனால் எல்லோரும் தியானம் செய்வது அவசியம்.

கே: அமைதி என்றால் என்ன? நம் வாழ்வில் அமைதி நிலவ, நம் மதம், கலசாரம், குடும்பம் மற்றும் நம் கல்வி முறைகளில் (மூன்று வயது முதல்) என்ன மாற்றம் செய்ய வேண்டும்?

குருதேவர்: குழந்தைகளை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பனை (தோழியை) சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். 40 , 50 குழந்தைகள் படிக்கும் ஒரு வகுப்பில் ஒரு குழந்தையை, உனக்கு எவ்வளவு நண்பர்கள் என்று கேட்டால், பொதுவாக கையில் இருக்கும் விரல்களிலேயே எண்ணி விடுவார்கள். அந்த நண்பர்களோடு மட்டுமே ஆண்டு முழுதும் இருக்கிறார்கள். குழந்தைகளின் தோழமை உணர்ச்சியை வளர்க்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பனைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். யாராவது கேலி செய்தால், வருத்தப்பட வேண்டாம். சிரித்து விட்டு மேலே செல். நகைச் சுவை உணர்ச்சியோடு இரு. ஒரு விளையாட்டு வீரனைப் போல் இரு. (வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்). வேற்றுமைகளைப் புகழலாம்.

யாராவது வேறு விதமான ஆடை அலங்காரங்களுடன் காட்சி அளித்தால், அவர்கள் மாற்றார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்களும் உன்னைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு பழகு. நம் குழந்தைகளுக்கு இப்படிப் பட்ட பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாழ்வில் அன்பும் அமைதியும் அளிப்பது தான் மதத்தின் நோக்கம். உலகின் ஒரே சத்தியமான இறைவனுடன் பக்தியுடன் சேர்வதற்கான வழி தான் மதம் எனப்படுவது. சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதும் மதத்தின் நோக்கமாகும். தெய்வீகமான ஆத்ம உணர்வு (அனுபவம் / ப்ரகாசம் / அன்பு) தான் மதத்தின் சாரமாகும். அதுவே நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது: நம்முடைய பல்வேறு விதமான கலாசாரம். சில நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கலாசாரம் வேறாக இருக்கிறது. மொழியும் மாறு படுகிறது. உணவுப் பழக்கமும் பேச்சு வழக்கும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த வேறுபாடுகள் படைப்பின் அழகாகும்.  இதை வெறுப்பாக மாற்றக் கூடாது. வேறுபாடுகளை நாம் பாராட்ட வேண்டும். கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். இப்படிச் செய்ய நமக்கு சக்தி தேவை.

நாம் மன அழுத்தமடைந்தால் சக்தி எப்படிக் கிடைக்கும்? அதனால் தான் நாம் பிராண யாமம் (மூச்சுப் பயிற்சி) செய்ய வேண்டும். சரியான உணவுப் பழக்கம் வேண்டும்.வாழ்வில் நகைச் சுவை அவசியம். தினமும் 10 நிமிடமாவது தியானம் செய்வது மிக அவசியமாகும். இதை எல்லோரும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 10 / 15 நிமிடங்கள் ஒரு இடத்தில் அசையாமல் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். மனதுக்கும் ஓய்வளிக்க வேண்டும். புத்திக்கும் ஓய்வளிக்க வேண்டும். உனக்குள் சென்று பார். மூச்சைக் கவனி. நீ ஒரு சக்தியின் ஊற்று. நீ அன்பின் சாகரம். நீ ஒரு கருத்துக்களின் மலை என்று அறிந்து கொள்.

கே: கொரியாவில் தற்கொலைகள் அதிகமாகியிருக்கின்றன. அதிக போட்டியின் காரணமாக கொரிய இளைஞர்கள் தங்கள் கலாசாரத்தை மறந்து ஆன்மீக நாட்டமின்றி இருக்கிறார்கள். எங்களுக்கு ஞானம் பற்றிய அறிவுரை கூறுங்கள்.

குருதேவர்: உன் சக்தி குறையும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. சக்தி மிகவும் குறைவாக இருக்கும் போது, தற்கொலை எண்ணம் மனதில் வருகிறது. முறையான மூச்சுப் பயிற்சிகள், தியானம் மற்றும் அன்பான நண்பர்கள், உறவினர்களின் உறவால் சக்தி அதிகரிக்கும். பொதுவாக நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழும் போது, அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது சிலர் அந்த எதிர் மறை எண்ணங்களைப் போக்காமல், அதை உறுதி செய்வார்கள். ஆம்! நீ சொல்வது சரி தான். இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியாது என்று சொல்வார்கள். இப்படிச் செய்வது சரியல்ல. அந்த எதிர்மறை எண்ணத்தைப் போக்கி, அவரை உற்சாகப் படுத்த வேண்டும். அவருடைய சக்தியை அதிகரிக்க உதவ வேண்டும்.

ஏழைகள் மட்டும் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். சில செல்வந்தர்களும், தங்கள் மன நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  தற்கொலைக்கும் செல்வ நிலைக்கும் சம்பந்தம் கிடையாது. தற்கொலை செய்து கொள்ள எண்னம் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தியானப் பயிற்சி அளிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் சக்தி பெற்று தற்கொலை எண்ணத்தைக் கை விடுவார்கள். அப்படிச் செய்ய முடியும்.

தன் மீது வன்முறை (தற்கொலை) மற்றவர்கள் மேல் செய்யப் படும் வன்முறையைப் போலவே கருதப் படும். இது மிகவும் கொடியது.இன்றைய உலகம் ஒரு புறம் சமூக விரோத செயல்களாலும், மற்றொரு புறம் தனி நபர் தற்கொலைகளாலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஆன்மீகம் ஒன்றால் மட்டுமே இரு சாராரையும் நடுவில் சேர்த்து கொடிய செயல்களிலிருந்து காப்பாற்ற முடியும்.
யாராவது தற்கொலை எண்ணம் கொண்டவர் என்று உனக்குத் தெரியும் போது அவரை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்து. அவர்களைச் சுற்றி நல்லவர்கள் இருக்கும் படிப் பார்த்துக் கொள். இசை நடனத்தில் ஈடுபாடு கொள்ளும் படிச் செய். வாழ்க்கை என்பது நம்மிடம் இருக்கும் பொருள்கள் மட்டும் அல்ல. வாழ்க்கை ஒரு குற்றச் சாட்டோ அல்லது ஒரு பாராட்டோ மட்டும் அல்ல. 

வாழ்க்கை என்பது ஒரு உறவு அல்லது ஒரு பதவியை விட மிக உயர்ந்தது. தற்கொலைக்குக் காரணம். உறவில் தோல்வி. வேலையில் தோல்வி. அடைய நினைத்ததை அடைய முடியாமல் போவது. வாழ்க்கை என்பது நம் மனதில் எழும் சிறிய ஆசைகளைக் காட்டிலும் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. வாழ்க்கையைப் பரந்த கண்ணோட்டத்தில் பார். சமூக சேவையில் உன்னை ஈடுபடுத்திக் கொள். மற்றவர்களுக்கு சேவை செய்வதால் மக்கள் தங்கள் மனதைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். மன உளைச்சல் என்பது பொருளாதார சீரழிவை விடக் கொடுமையானது. எந்த கடுமையான சூழ்நிலையிலும் ஒருவர் அதிலிருந்து வெளிவந்து மற்றவர்களையும் காப்பாற்ற பொறுப்பு ஏற்க வேண்டும். வாழும் கலை நிறுவனம் மன உளைச்சலால் வருந்துபவர்களுக்கு மிகவும் உதவி வருகிறது. மேலும் பலர் இதில் சேர்ந்து நம் சமுதாயத்தில் நிலவும் கொடுமையான மனச் சிதைவு நோயையும், தற்கொலை எண்ணத்தையும் அறவே நீக்கப் பாடுபட வேண்டும்.

கே: போதை மருந்துக்கு அடிமையாக இருப்பது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது முதலியன இன்றைய சமுதாயத்தில் மிகப் பிரச்சினையாக இருக்கின்றன. இதை ஒழிப்பது எப்படி? இப்பழக்கங்களுக்கு அடிமையான இளைஞர்களின் பெற்றோர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?

குருதேவர்: பெற்றோர்கள்,கெட்ட பழக்கத்திலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதனால் வரும் கெடுதல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். இளைஞர்கள் பாதுகாப்பு வேலியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருள்கள் இருக்கும் திசையையே அவர்கள் பார்க்கக் கூடாது. இப்படிச் செய்வது மிக அவசியம். ஒரு சிறிய செடியை வளர்க்கும் போது, அது அழியாமல் காக்க அதைச் சுற்றி ஒரு வேலி அமைப்பது போல், இளைஞர்களின் மனத்துக்கு ஒரு வேலி அமைப்பது அவசியம். அவர்களுக்குப் புரியும் படி விளக்கி கெட்ட வழியில் போகாமல் பாதுகாக்க வேண்டும்.

யார் அப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்களோ, அவர்களை மூன்று வழிகளில் திருத்த முடியும். 1. அன்பு. 2. பேராசை 3. பயம்.

1.   அவர் விரும்பும் ஒருவர் அவரிடமிருந்து சத்தியம் வாங்கிக் கொண்டால், அவர் அப்பழக்கத்தை சத்தியத்தைக் காப்பதற்காக விட்டு விடலாம்.
2.   அந்தப் பழக்கத்தை விட்டாரானால் அவருக்கு பெரிய அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லி பேராசையை உண்டாக்கலாம்.
3.   அப்பழக்கத்தால் விளையும் தீங்கைச் சுட்டிக் காட்டி பயத்தை உருவாக்கி அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கலாம்.

எந்த வழியிலாவது அவர்களுக்கு உதவி, தீய பழக்கத்திலிருந்து வெளிவரச் செய்ய வேண்டும்.  ஹோமியோபதியிலும், ஆயுர்வேதத்திலும் இதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட யோகப் பயிற்சிகள் மற்றும் தியானம் உதவும். யோகம் மற்றும் தியானத்தினால் பல லட்சம் பேர்கள் இப்படிப் பட்ட கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

கே: யோக பயிற்சிகள், தியானம் மற்றும் ப்ராணயாமம் ஒரு மத சம்பந்தமான பயிற்சி என்று நினைப்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

குருதேவர்: யோக பயிற்சிகள், தியானம் மற்றும் பிராணயாமம் ஒரு மதத்தைச் சேர்ந்தது, அதை பிற மதத்தவர் செய்யக் கூடாது என்ற தவறான எண்ணமுள்ளவர்கள் அதை அனுபவித்து உணர்ந்ததில்லை. இப்பயிற்சிகள் எல்லோருக்கும், (எல்லா மதத்தினருக்கும்) உதவக் கூடியவை. மனம் அமைதியாக உதவுகின்றன. பயிற்சியை இடை விடாமல் செய்கிறவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. இப் பயிற்சிகள் உலக முழுவதுக்கும் பொதுவானவை. இவை எந்த மதக் கொள்கைகளுக்கும் எதிரானதல்ல. இப்பயிற்சிகளை மதச் சார்புள்ளவை என்று நினைப்பது தவறு. இப்பயிற்சிகளைக் கற்றுச் செய்தால், இந்த தவறான எண்ணம் விலகி விடும்.

கே: உலகில் பல மதங்கள் உள்ளன. மதம் மனித இனத்தைப் பிரிப்பதற்குக் காரணமாக இருக்கிறதா? அல்லது மதம் எல்லோரையும் ஒன்று சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதா ?

குருதேவர்: சரியான ஞானம் இல்லாத போது, மதம் மக்களைப் பிரிப்பதாகத் தோன்றுகிறது. மதம் ஒன்று தான் ஒருவருடைய அடையாளம் என்று நினைக்கிறோம். பல்வேறு மதங்களிடையே பூசல் ஏற்படுகிறது. பிறகு ஒரு மதத்துக்குள்ளேயே பூசல் ஏற்பட்டு உட்பிரிவுகள் தோன்றுகின்றன. சரியாகப் புரிந்து கொள்ளாமல், சரியான ஞானம் இல்லாதது தான் இதற்குக் காரணம்.

ஒரு அறிவுள்ளவர் எல்லா மதத்திலும் கிடைக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வார். மதம் ஒருவருடைய வாழ்வில் ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவருக்குத் தெரியும். இதை அறியாமல், ஞானம் இல்லாமல் மதம் என்பது உன்னுடைய அடையாளம் என்று நினைத்தால் அது உன் வளர்ச்சிக்கு உதவாது. அது பிரிவினை எண்ணத்தைத் தூண்டும்.

முதல் அடையாளம்.
நாம் அனைவரும் ஒரே கடவுளைச் சேர்ந்தவர்கள் (பேரண்டத்தின் ஒரே ஒளியைச் சேர்ந்தவர்கள்) என்று தெரிந்து கொள்வது அவசியம்

இரண்டாவது அடையாளம்.
நாம் எல்லோரும் உலகக் குடும்பத்தில், ஒரே மனித சமுதாயத்தின் உறுப்பினர்கள்.

மூன்றாவது அடையாளம்.
நாம் ஒரு நாட்டையோ, ஒரு மொழியையோ சார்ந்தவர்கள்.

நான்காவது அடையாளம்.
நாம் ஒரு மதத்தைப் பின் பற்றுகிறோம்.

ஐந்தாவது அடையாளம்.
நம் கலாசாரம். நம் குடும்பம்.

நீங்கள் எந்த அடையாளத்தையும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு மனித சமுதாயத்தின் பகுதி, ஒரு பேரண்ட ஓளியைச் சேர்ந்தவர் என்பதை மறக்கும் போது மதச் சார்பான பிரிவுகள் தலை தூக்கி நம்மை அழித்து விடும். சரியான ஞானத்தோடு இருக்கும் போது வேற்றுமைகளை கொண்டாட முடியும். எல்லா மதத்திலுமுள்ள நல்ல கருத்துக்களை ஏற்று நல்ல மனிதனாக வளர முடியும்.

கே: ஶ்ரீ ஶ்ரீ ! எல்லோருக்கும் பொதுவான அறிவுரை என்ன?


குருதேவர்: ஒவ்வொரு மனிதரின் முகமும், பேரண்டம் என்ற புத்தகமாகும். கடவுளின் புத்தகம். ஒவ்வொருவரும் அன்பின் ஊற்று. இந்த அன்பு வெளிப்பட்டு, அன்பின் ஊற்று பெருகி நம் பூமியைச் செழிப்பாக்கட்டும். உங்கள் எல்லோருக்கும் என் அன்பு! வாழ்த்துக்கள்!