கிருஷ்ண பகவான் - அன்பின் பதிப்பு


10 – ஆகஸ்டு- 2012 - பெங்களூரு - இந்தியா



 

இன்று கிருஷ்ணரின் பிறந்த நாள்.

இந்தியா முழுவதிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.கிருஷ்ணர் கூறுகிறார்" நான் என்றுமே பிறந்ததில்லை, ஒரு நாளும் இறப்பதும் இல்லை. நான் அஜந்மன் (பிறப்பு இல்லாதவன்).பிறப்பே இல்லாத ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது வசீகரமான விஷயம் அல்லவா?
கிருஷ்ணர் என்கிற அவதாரத்திற்கு முன்னர், கபிலமுனி என்கிற பிறப்பை எடுத்திருந்தார். அப்போது தனது தாயாருக்கு சான்க்ஹ்ய யோகா என்னும் உள்ளுயுர்த்தன்மை ஞானத்தை அருளி இருந்தார்.

ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டதென்றால், தன் குழந்தை மீண்டும் மீண்டும், ஒவ்வொரு பிறவியிலும் தனக்கே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்கிற ஆவலை உடையதாகும். உள்ளுயுர்த்தன்மை ஞானத்தை அடைந்திருந்த போதிலும், தன் குழந்தை மீதிருந்த பாசம் நீடித்திருந்தது. ஆகவே, கிருஷ்ணரின் அவதாரத்தின்போது, யசோதையாகப் பிறந்திருந்தாள்.
கபிலமுனியாக பிறந்த போது தாய்க்கு  ஞானத்தைஅளித்தவர், கிருஷ்ணராக பிறந்த போது, அன்பையும், பாசத்தையும்,அளித்தார். யசோதைக்கு ஞானத்தை அருளவில்லை. யசோதையிடம் குறும்புகள் பல செய்தார். எனவே, கிருஷ்ணஜயந்தி குறும்புகள் செய்யும் நாள்.! (கூட்டத்தில் சிரிப்பு)
ஞானம், அன்பு, குறும்பு ஆகியவை நிறைந்ததே கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண ஜெயந்தியான இன்று நீங்கள் அனைவரும் பகவத் கீதை படிப்பதாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு எத்தனை பேர் பகவத் கீதை படித்ததே இல்லை? (பலர் கை தூக்குகிறார்கள்) பாருங்கள்.இன்று முதல் நாமனைவரும் பகவத் கீதை படிக்கத் துவங்குவோம். எளிமையான மொழிபெயர்ப்புக் கொண்ட கீதை நூலை முடிந்தவரை படிக்க ஆரம்பியுங்கள். புரியாவிட்டாலும் பரவாயில்லை. எவ்வளவு புரிந்து கொள்கிறீர்களோ அது  போதும். ஒரே தடவையில் முழு பகவத் கீதையையும் புரிந்து கொள்ள முடியாது. வாழ் நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தால் தான் புரியும். நமது மனமும் அறிவும் முதிர்ச்சி அடையும் நிலையில் தான் பகவத் கீதையை புரிந்து கொள்ளலும் நிகழும்.
இன்று கார்த்திகை நட்சத்திரம் மிகுந்த ஒளியுடன் இருக்கிறது. வெள்ளிக்கிழமை. அஷ்டமி திதி. அத்துடன் இன்று ஜன்மாஷ்டமி. இன்று எல்லாம் கூடி வந்திருக்கின்றன. மிகச் சிறப்பானது ஆகும்.
கிருஷ்ணர் கூறுகிறார்: ''சேநானினம் அஹம் ஸ்கந்தா '' படைத்தலைவர்களுள் நான் கார்த்திகேயன். (கார்த்திகேயன் மிக சிறந்த படைத்தலைவர்).முனிவர்களுள் நான் கபிலமுனி; ஞானிகளுள் நான் வேதவியாசர். பாண்டவர்களுள் நான் அர்ஜுனன்ஆகவே அர்ஜுனன், கிருஷ்ணர் ஆகிய இருவரும் தானே தான் என்கிறார்.
பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தைப் படித்துப் புரிந்து கொண்டால் அத்வைத ஞானத்தை (இருமை இல்லாத நிலைதத்துவம் -அனைத்தும் ஒன்றே என்று உணரும் நிலை) அடையலாம். இது விபூதி யோக நிலை எனப்படுகிறது. விபூதி வாழ்வு நிலை. விபூதி என்றால் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநீறு என்பது மட்டும் பொருளல்ல. அற்புதங்கள் நிறைந்த- என்பதும் பொருளாகும். கிருஷ்ணருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவருக்கு ஒரு வரம் அல்லது சாபம் (என்றும் கூறலாம்) இருந்தது. ஒரு அற்புதம் நிகழ்ந்தால் மக்கள் அதை ஒரு வருடத்திற்கு மறந்து விடுவர். அதாவது நிகழ்ந்த அற்புதத்தை ஒரு வருடம் கழித்தே நினைவுகூற முடியும். இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது ஸ்ரீமத் பாகவதம் என்ற சமஸ்க்ருத நூலில் (விஷ்ணுவின்-முக்கியமாக கிருஷ்ண அவதாரத்தில் பக்தி நிலை பற்றியது) கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் காலியா என்கிற சர்ப்பத்தின் மேல் நடனம் ஆடியதைப் பார்த்த மக்கள் அனைவரும் தம் வீடுகளுக்கு செல்லும் போதே தாம் கண்ட அந்த அதிசயத்தை மறந்து விட்டனர். எதுவுமே நடக்காத மாதிரி தம் தம் அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு அற்புதங்கள் உடனே மறக்கப்படும் என்றும், ஓராண்டு கழித்தே நினைவுக்கு வரும் என்று விதிக்கப்பட்டிருந்தது. இதை சிலர் வரமென்றும், சிலர் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவின் சாபம் என்றும் கருதுகிறார்கள்.
கிருஷ்ணரின் கிராமமான கோகுலத்தில் ஏதேனும் பேரிடர்கள் ஏற்படும்போது, மக்கள் ஒன்று கூடி "ஓம் நமோ நாராயணா" என்று கூவி தங்கள் கிருஷ்ணருக்கு எந்த பங்கமும் ஏற்படக் கூடாது என்று விஷ்ணுவை ஆராதித்துப் பிரார்த்தனை செய்து வந்தார்கள். யதுகுல நந்தனாகிய கிருஷ்ணருடைய பாதுகாப்பிற்காக ''ஓம் நமோ நாராயணா'' என்று பண்ணிசைத்து, மக்கள் பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ணருக்காக, மக்கள் சிவனையும் வணங்கி வந்தனர். சகடாசுரனையும்,கம்சனால் (கிருஷ்ணரின் மாமா) அனுப்பப்பட்ட புதனா என்கிற அரக்கியையும் கிருஷ்ணர் அழித்த அற்புதத்தை கண்ட மக்கள் ஒரு சில நொடிகளிலேயே அதை மறந்து விட்டனர். பின்னர் ஓராண்டு கழித்தே அது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் மக்கள் எப்போதும் நடந்து முடிந்த பழைய விஷயங்களை பற்றியே பேசி வந்தனர். இவ்வாறு ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
கிருஷ்ணரின் காலத்தில் நிறைய வேடிக்கைகள், விழாக்கள், மகிழ்ச்சி, கொண்டாட்டம்,அன்பு, பக்தி இவை நிறைந்திருந்தன. அத்துடன் சாந்தமான மனநிலையும் காணப்பட்டது. நடுநிலையான சாந்தமான மனநிலை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம் ஒரு அரிய, அசாதரணமான , ஒன்றுடன் ஒன்று வேறுபட்டதாகத் தோன்றும் குணங்களான, சாந்தம்,காதல்,ஞானம்,பக்தி இவையாவின் சங்கமம்.
இதில் கிருஷ்ணரே நடு நாயகமாக இருக்கின்றார். அவருடன் மூத்த சகோதரரான பலராமனும் இருக்கின்றார்.பலராமன் பலம் மற்றும் ஆற்றலின் பிரதிநிதியாகத் திகழ்கிறார். பொதுவாகவே காதல் உள்ள இடத்தில் பலமிழந்த நிலைதோன்றும். அன்பும் காதலும் சக்தியுள்ளவையாக  இருந்த போதிலும் அதில் திளைக்கும் மனிதர்கள் பலவீனமாகவே தோன்றுவர். அன்பினால் ஏற்படும் இந்த பலவீனத்தை மட்டுமே காணும் மக்கள் அதிலிருந்து  விடுபட்டு ஓடவே விரும்புவர். அது நாளாவட்டத்தில் வெறுப்பாக மாறிவிடும்.
கிருஷ்ணர் கவர்ச்சியும் காதலும் உள்ளவராகவும் பலராமன் பலம், ஆற்றல் இவற்றின் பிரதிநிதியாகவும் இருக்கின்றனர். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.
இது தவிர ராதையில்லாமல் கிருஷ்ணர் இல்லை. ராதா சக்தியின் அம்சம். ராதா என்பவர் தனியான ஒருவர் அல்ல.கிருஷ்ணரின் ஆற்றலும் அன்பின் பலமும் சேர்ந்த பிரதிநிதியே ராதா. பலராமனின் வீரமே கிருஷ்ணருடன் எங்கு சென்றாலும் உடன் செல்கிறது.நிர்பல்கே பலராம்’' என்று கூறப்பட்டுள்ளது. ராமர் எவ்வாறு பலவீனமாவருக்கும், நிர்கதியானவருக்கும் அடைக்கலம் அளித்தாரோ அது போன்று வீரத்தின் திருவுருவமான பலராமன் கிருஷ்ணருடனேயே இருந்து அவரின் பலத்தைக் குறிப்பவரானார்.
அன்பு இருக்கும் இடத்தில் ஏங்குதல் இருக்கும்.ஏங்குபவர் அன்புடையவர். இது ஒன்றுடன் ஒன்று இணைந்த இயல்புகள். அது போலவே அன்பு அதிக சக்தியைக் கொடுக்கும். பலராமர் பல முறை இப்பூவுலகைச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பு கொண்டார். ஆனால் கிருஷ்ணர் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தார், உலகமே அவரைச் சுற்றிக் கொண்டிருந்தது.பலத்தை அடைய ஒருவர் முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்; அன்பிற்காக எங்கும் செல்ல வேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம். எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே அன்பில் ஆழ்ந்து விடலாம்.
பகவான்  பலராமர் முயற்ச்சியையும் கடின உழைப்பையும் குறிக்கின்றார். அதே சமயம் பகவான் கிருஷ்ணர் ஆழ்ந்த ஓய்வைக் குறிக்கின்றார். அந்த ஆழ்ந்த ஓய்வில் தான்  உங்களுக்குள் அன்பு மலர்கின்றது. 
அன்பு என்பதை ஒன்றும் செய்யாமல் இருக்கும் ஓய்வில் தான் உணர முடியும்.கடும் முயற்சி செய்து உழைப்பதனால் அன்பை உணர முடியாது. ஆனால் சக்தி அல்லது பலம் என்பது முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் தான் உண்டாகும். ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால் பலம் கிடைக்காது. 
எந்தத் துறையிலும் திறமையை வளர்த்துக் கொள்ள கடின உழைப்பும் விடா முயற்சியும் வேண்டும். சிதார் வாசிக்க வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது கடும் பயிற்சி வேண்டும். புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமென்றாலும் பயிற்சி வேண்டும். உடல் வலிமையுடன் இருக்க வேண்டுமென்றால் தொடர்ந்து தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஞானம் பெறுவதற்குக் கூட முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அன்பிற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். நீங்கள் தளர்வாக உங்களுடனேயே ஒன்றி இருந்தால் மட்டும் போதும். 
பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்' உங்கள் உள்ளே எழும் ஆசைகள் தர்மத்திற்கு எதிராகவோ அல்லது தர்மத்தை அழிப்பதாகவோ இல்லாதவரை அவைகள்  நானே என்பதை அறிந்து கொள்ளுங்கள் (என்னால் தூண்டப்பட்டவை). தர்மத்திற்கு எதிரான ஆசையோ அல்லது செயலோ நானாக இருக்க முடியாது. இது மிகவும் ஆச்சரியமானது.
நீங்கள் தர்மத்திற்குட்பட்டு நடந்தால் உங்களது ஸ்வதர்மா,அதாவது வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள உங்களது கடமைகளுக்கு உட்பட்டு நடந்தால் உங்கள் உள்ளே எழும் எல்லா நியாயமான ஆசைகளும் என்னிலிருந்து உண்டானவைகளே. உங்களுக்குள் ஏற்படும் நியாயமான ஆசைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் நானே. 
அவர் சொல்கிறார்," பலசாலிகளின் பலமும் நானே.அழகானதென்று நீங்கள் பார்ப்பவைகளின் அழகும் நானே. நீங்கள் மற்றவர்களிடம் பார்க்கும் எந்த ஒரு அல்லது எல்லா நல்ல குணங்களுமே என்னிடமிருந்து வருபவை தான்."  பகவான் கிருஷ்ணர் ஏன் இவ்வாறு சொல்கிறார்?  ஏனென்றால் அழகைக் காணும் இடங்களுக்கெல்லாம் செல்வது மனதின் இயல்பு.அத்தகைய மனதை திரும்பவும் தான் என்னும் இறைத்தன்மைக்குள் கொண்டு வருவதற்காகத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜுனா, பார்க்கும் எல்லாவற்றிலும் என்னை மட்டுமே பார்.எங்கோ யாரிடமோ நீ பார்க்கும் மேன்மையாவை அனைத்திற்கும்  காரணம் நானே. அனைத்திற்கும் பின்னால் இருக்கும் சக்தி நானே." 

இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் மனதை மீட்டுக் கொண்டுவந்து ஒன்று படுத்தி அனைத்து சக்திக்கும் ஆதாரமான ஆத்மாவில்  ஒருமுகப்படுத்துவதற்காகவே,சித்தியடைவதற்காக வே இந்த விபூதியை (அதி உன்னதமான இரகசியத்தை) பகவான் கிருஷ்ணர் அளித்திருக்கின்றார்.
பகவான் கிருஷ்ணர் தெய்வீக அன்னை தேவியை வணங்குவது வழக்கம். இது துர்கா சப்தஷதியில் (மார்கண்டேய புராணத்தில் தேவியை ஆராதிக்கும் 700 அடிப் பாடல்களில்) குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை பேர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? 
இந்த வரிகள் துர்கா சப்டஷதியில் ஆர்கால ஸ்தோத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை உச்சரிப்பவர்களுக்கு இவை கவசமாக ஆகின்றன. இதன் பொருள் "பகவான் கிருஷ்ணரால் முடிவில்லாத பக்தியோடு வழிபாடு செய்யப்படும்   தேவியே, எங்களுக்கு அழகு, வெற்றி,மேன்மை போன்றவற்றை அளித்து ஆசிர்வதித்து  எங்களது தீராத ஆசை, அறியாமை போன்றவற்றை அழிப்பாயாக."இது கவச ஆர்கால கீலகத்தில் மூன்று வரிகளில் இருக்கும் வழிபாடு ஆகும். 
பார்க்கப்போனால், பகவான் கிருஷ்ணரை உண்மையில் காப்பாற்றியது தேவி தான். தேவியும் அதே அஷ்டமி தினத்தில் யசோதைக்குப்  பிறந்தவள் தான். அதே தினத்தில் மதுராவிற்குக்   கொண்டு வரப்பட்டாள். கம்சன் அவளைப் பிடித்து கொலை செய்ய முயற்சி செய்த போது அவன் கைகளிலிருந்து தப்பி விட்டாள். 
இங்கே கம்சன் தான் என்னும் அஹங்காரத்தை குறிக்கின்றான். பகவான் கிருஷ்ணன் பேரானந்தத்தை குறிக்கின்றார். துர்கை அல்லது தேவி நம்முள்ளிருக்கும் சக்தியை குறிக்கின்றாள். தான் என்னும் அஹங்காரமானது சக்தியையும் (தேவியை) பிடிக்க முடியாது.  ஆனந்தத்தையும் (கிருஷ்ணர்) பிடிக்க முடியாது (வெல்ல முடியாது). அஹங்காரத்தை (கம்சன்) அழிப்பதற்கென்று  தீர்மானிக்கப்பட்டவனே ஆனந்தம்(கிருஷ்ணர்) அவன் ஏற்கெனவே பிறந்து விட்டான்.

வாழ்க்கை ஆனந்தத்தால் நிறைந்து இருக்கும் போது அஹங்காரம் மறைந்து விடும். ஒருவன் ஆனந்தமயமாக இருக்கும் போது அஹங்காரம் இருப்பதில்லை. ஆனால் அஹங்காரம் இருக்கும் வரையில் ஒருவன் துன்பமும் துயரமும் அடைகின்றான். ஏதோ ஒரு காரணத்திற்காக வருத்தமடைகின்றான். யாராவது ஒருவரை குறை கூறிக் கொண்டே இருக்கின்றான். இருந்தாலும் அஹங்காரத்தால் ஆன்மா என்னும் சக்தியை அழிக்க முடியாது.  ஏனென்றால் ஆன்மா அழிவில்லாதது. ஆன்மாவின் சக்தியை எதுவுமே அழிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. அது நிலையானது; நிரந்தரமானது. பௌதீகம் அறிந்தவர்களுக்கு  சக்தி என்பதை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என்பது நன்றாகத் தெரியும் .  அதே போல் ஆன்மா என்பதையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. அதற்கான எந்த முயற்சியும் தோல்வி தான் அடையும்.  

மேலோட்டமாக பார்க்கும் போது அது வெறும் கதை போல் தோன்றும். ஆனால் அதில் ஆழ்ந்து போகும் போது அற்புதமான வியப்பளிக்கும் ஞானம் அதில் மறைந்திருப்பது புரியும். பகவான் கிருஷ்ணன் ஒரு சிறைச்சாலையில் பிறந்தார். அவர் பிறந்த போது சிறைச்சாலையின் காவலர்கள் அனைவரும் உறங்கிவிட்டனர். இங்கே காவலர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது நம் புலன்கள் தான். எப்போதும் வெளியிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நம் புலன்கள் அமைதி நிலைக்கு வரும்போது தான் நாம் நம் உள்நோக்கி செல்ல முடியும்.  அப்போது தான் உண்டாகும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். 

எனவே இது போன்ற கதைகளை  தொடர்ந்து  ஆராய்ச்சி செய்து சிந்தனை செய்து கொண்டிருங்கள். வியக்கத்தக்க ஞானமும் அன்பும் உங்களுக்குக் கிடைக்கும். 
பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்,"உங்களை நீங்களே உங்கள் பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. நான் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுதலை செய்கின்றேன். "ஒருவன் உண்ணா நோன்பிருப்பது,இறை வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, செய்த தவறுகளுக்காக வருந்துவது போன்ற அனைத்துச் செயல்களையும் தன்னை பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகவே செய்கின்றான்.எனவே பகவான் கிருஷ்ணர் சொல்கிறார், அவர் சொல்கிறார், "நீங்கள் செய்ய வேண்டியது  ஒன்று தான்.அனைத்தையும் என்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டு என்னிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்." 
இது தான் முதல் நிபந்தனை. பிறகு நான் உங்களை உங்களது எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கின்றேன். அது என் வேலை" எனவே அவரிடம் அடைக்கலம் அடைவது  ஒன்று மட்டுமே உங்கள் வேலை. அவர் உங்களை உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் முக்தி அடையச் செய்வார். இது ஒன்றிலேயே அவர் அனைத்தையும் சொல்லி விட்டார். இதுவே அனைத்தையும் முடித்து வைத்து விட்டது. 
பகவான் கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை நாம் எல்லா இடங்களுக்கும் எல்லோரிடமும் பரப்ப வேண்டும். நாம் இதைச் செய்யாமல் நம்மைச் சுற்றியுள்ள  மற்ற விஷயங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மத மாற்றங்களைத்  தடுப்பதற்கு முக்கியமாக பின் வரும் இந்த வார்த்தைகள் மட்டுமே போதும்.
"என்னிடம் வந்து சரணடையுங்கள். என்னிடம் அடைக்கலம் கொள்ளுங்கள். நான் உங்கள் பாவங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கின்றேன்." பகவான் கிருஷ்ணரும் இதையே சொல்லி இருக்கின்றார்.