உலகத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய விஷயம்


30 - ஆகஸ்ட் 2012 - ப்ரேசில், தென் அமெரிக்கா
 
குருதேவர்...
 
இப்போது உங்களை முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் ஒருவரை உண்மையிலேயே வாழ்த்துகிறீர்களா? இல்லை அதை ஒரு உபசாரமாக நினைக்கிறீர்களா?
தினமும் வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம். நல்ல வார்த்தைகள் சொல்லி அளவளாவுகிறோம். ஆனால் அவை ஒரு உபசாரத்துக்காகத் தான். (உண்மையாக அல்ல) இல்லையா? யாராவது ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால், “உங்களுக்கு மிக்க நன்றி” என்று சொல்கிறோம். “மிக்க” என்பதற்கு அர்த்தம் இல்லை. நீங்கள் சஹாரா பாலைவனத்தில், தாகத்தால் தவிக்கும் போது,  ஒருவர் உங்களுக்கு தண்ணீர் கொடுத்து,தாகம் தணியும் போது சொல்லும் “மிக்க நன்றி” உண்மையானது. எனவே, வாழ்க்கையில், நிறைய சந்தர்ப்பங்களில் நாம் மேலோட்டமாக பழகும் போது, அந்த உறவு ஆழமில்லாமல் இருக்கிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாமல், சாறு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை மாறி, நாம் மற்றவர்களுடன் உண்மையாக, கபடமில்லாமல், கலப்பட மில்லாமல், இதயத்துடன் இதயம் இணைந்து பழக வேண்டும்.இதைத் தான் நான் ஆன்மீகம் என்று சொல்வேன். உன் ஆத்மாவிலிருந்து உண்மையாக உறவு கொள்ளும் போது அதை ஆன்மீகம் என்று சொல்லலாம்.
 
குழந்தைகளாக இருந்த போது நாம் அப்படித்தான் கள்ளமில்லாமல் பழகினோம். நீங்கள் குழந்தையாக இருந்த சமயம் நினைவில் இருக்கிறதா? இந்த பூமி, உலகம் எல்லாமே உயிருள்ளதாகத் தோன்றியது. நிலவு உங்களுடன் பேசியது. மரங்கள், பிராணிகள் எல்லாமே உங்களுடன் பேசியன. நீங்கள் இயற்கையாக இந்த உலகத்துடன் பேசி வந்தீர்கள். உங்களுக்கு இது நினைவில் வருகிறதா? கார்ட்டூன் புத்தகங்களிலும் / படங்களிலும் உள்ள சிறுவர் சிறுமியர் மரங்களுடன் பேசுவது உங்களுக்குத் தெரியும். அது ஒரு வித்தியாசமான உலகம்.
 
இப்போது கேள்வி “நாம் இன்னும் அந்த கபடமற்ற குழந்தையின் உள்ளத்துடன், அதே சமயம் அறிவில் சிறந்தவர்களாக இருக்க முடியுமா?” என்பது தான். நம்மால் முடியும் என்று நான் சொல்கிறேன். அறிவும் கள்ளமில்லா மனமும் உலகில் சிறந்தது. அருமையானது. நிறைய பேர் அறிவுடனும் அதே சமயம் கபடமாகவும் நடந்து கொள்கிறார்கள். கபடமில்லாமல் அதேசமயம் அறிவில்லாமல் இருப்பது சுலபம். நமது கல்வி முறை, நாம் கள்ளமில்லா தன்மையை இழக்காமல், அறிவுடையவர்களாக ஆக உதவ வேண்டும. இப்போது நாம் எல்லோரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக, உபசாரமில்லாமல் உண்மையாக உணர்கிறோம். எந்த விஷயத்தைப் பற்றி இன்று பேசலாம்?
 
(பார்வையாளர்கள்: அன்பு, பிறப்பு, மன்னிக்கும் தன்மை, உறவுகள், தீர்மானம் செய்தல், கடவுள், ஊழல், அமைதி, கருணை, கோபம், பயம், தனியார்துறை பொருளாதாரம், நம்பிக்கை, பொறுமை) பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதை அடுத்த ஆண்டு பேசுவேன். அப்புறம் _ _ _ _ _.சொல்லுங்கள். நிஜமாகவே இன்று இரவு என்ன விஷயம் பேசுகிறேன் என்பது முக்கியமா? உங்களுக்கே தெரியும். நான் வார்த்தைகளில் சொல்வதை விட அதிகமாக இங்கு இருப்பதாலேயே தெரிவிக்கிறேன். இல்லையா? எதைப் பற்றிப் பேசுவது என்பது அவ்வளவு முக்கியமா? இந்த உலகம் அதிர்வுகளால் ஆனது.
உன் பௌதீக ஆசிரியரிடம் பேசினால், இந்த உலகம் அலைத் தன்மையே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்பார். நாம் ஒவ்வொருவரும் அலைகள் தான். நீ உன் மையத்துடன் (ஆத்மாவுடன்) தொடர்பு கொண்டால், அலைகள் நல்லெண்ணத்தைப் பரப்பும். நீ உன் மையத்தோடு (ஆத்மாவுடன்) தொடர்பில்லாமல், சிக்கியிருந்தால் உன் அலைகள் எதிர்மறை சக்திகளை பரப்பும். அமைதி, அன்பு, கருணை இவை தான் நம்முடைய உண்மையான அலைகள். பிசிறில்லாத உண்மையான அலைகள். நம்மிடமிருந்து வரும் நல்லெண்ணங்களை அந்த அலைகள் உலகில் பரப்பும்.
நீ கோபம் அடைந்து நிலை தடுமாறும் போது, எதிர்மறை எண்ணங்கள் வரும் போது என்ன செய்ய வேண்டும்? அதை மாற்றி நல்ல எண்ணங்களைக் கொண்டு வர வேண்டும். ஆனால் இதை எப்படிச் செய்வது என்று யாரும் நமக்குக் கற்றுக் கொடுக்க வில்லை. வீட்டிலும், பள்ளியிலும் சொல்லிக் கொடுக்க வில்லை. இல்லையா? உன் பாட்டி ஒருவேளை உனக்குச் சொல்லியிருக்கக் கூடும். (கோபம் குறைய) ஒரு மூலையில் போய் பத்து வரை எண்ணு. அவ்வளவு தான். ஆனால்10 வரையோ 100 வரையோ எண்ணுவது இப்போது உதவுவதில்லை.
நீங்கள் உங்கள் மனதை கவனித்தால், உங்கள் மனம் கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி கோபம் கொள்கிறது. வருங்காலத்தில் நடக்கப் போவதை எண்ணி அச்சமுற்று கவலையில் ஆழ்கிறது. இரண்டும் நமக்கு உதவப் போவதில்லை. இல்லையா? கடந்த காலத்தைப் பற்றிக் கோபப் படுவதில் என்ன கிடைக்கும்? அது சென்று விட்டது. வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படுவதால் என்ன நடக்கும்? அதுவும் அர்த்தமற்றது. தற்சமயம் உனக்கு உதவக் கூடியது தியானம் தான். மக்கள் சில நிமிடங்கள் தியானத்தில் இறங்கப் பழகுவார்களானால், தினமும் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மன அழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியடைய முடியும்.
நான் ஒரு வன்முறையற்ற சமுதாயம், நோயில்லாத உடல், குழப்பம் இல்லாத மனம், கட்டுப் பாடில்லாத அறிவு, சுழன்று சுழன்று கஷ்டப் படுத்தாத நினைவு, வருத்தமில்லாத ஆத்மா இவற்றைக் காண விரும்புகிறேன்.காண எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள்? (பார்வையாளர்கள் அனைவரும் கைகளை உயர்த்துகிறார்கள்) நம் குழந்தைகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, ஒரு நல்ல உலகத்தைக் கொடுக்க வேண்டும். அதிகமான அன்புள்ள, அதிகமான கருணையுள்ள உலகத்தை உருவாக்க வேண்டும். துப்பாக்கிகள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு போதை மருந்து தேவையில்லை. வன்முறை தேவையில்லை. அவர்கள் மேலும் மேலும் அன்பானவர்களாக வேண்டும். மனிதாபிமானம் உள்ளவர்களாக வேண்டும். கருணையுள்ள சமுதாயத்தில் வாழ வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தில் வாழ வேண்டும். நீங்களும் அப்படி விரும்ப வில்லையா? அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
கே: இந்த பூமியில் நமது நோக்கம் என்ன?
குருதேவர்: இந்த பூமியில் நமது நோக்கமில்லாமல் எவைகள் இருக்கின்றன?: முதலில் எதெல்லாம் நமது நோக்கமாகக் கூடாது என்று ஒரு பட்டியல் போட வேண்டும். நீ துயரத்தில் உழலக் கூடாது. மற்றவர்களை துயரத்தில் ஆழ்த்தக் கூடாது. சரியா? இப்படியே, எதெல்லாம் உனது நோக்கம் இல்லை என்று தள்ளி விட்டால், உன்னுடைய நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்வாய்.
கே: மற்றவர்கள் எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும்போது, அதில் பாதிக்கப் படாமல் எப்படி இருக்கலாம்.
குருதேவர்: நீ உன் ஆத்மாவுடன் இரு. சில குறைபாடுகளை ஏற்றுக் கொள். சில சமயம் குறைகளை ஏற்றுக் கொள்ளும் பொறுமை நம்மிடம் இல்லாததால் நாம் பாதிக்கப் படுகிறோம். சிலர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தால், அவர்களை சில சமயம் அப்படியே இருக்க விடு. அவர்கள் அப்படி நடக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று நினை. (அவர்களை விட்டுப் பிடிக்கலாம்). நான் இங்கு வந்திருப்பது உங்களுடைய கவலைகளை எடுத்துச் செல்வதற்காகத் தான். உங்கள் பிரச்சினைகள், கவலைகளை என்னிடம் விட்டு விடுங்கள். உங்கள் முகத்தில் என்றும் மாறாத புன்னகையைக் காண விரும்புகிறேன்.
கே: நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா?
 
குருதேவர்: வாழ்க்கைக்கு அடிப்படை தேவையானது, உணர்ச்சிகளை விட முக்கியமானது ஒன்று இருக்கிறது என்று அறியும் போது நாம் நம் உணர்ச்சிகளை சுலபமாகக் கடந்து செல்ல முடியும். அது தான் நம் ஆத்மா. உயிர் சக்தி. என்றுமே மாறாதது.
கே: அன்புக்கும், காம இச்சைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வது எப்படி?
குருதேவர்: அன்பில் மற்றவருக்கு முக்கியத்துவம் இருக்கும். காம இச்சையில் உனக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்.
கே: குருதேவா! (மற்றவரின் கருத்தை) மனதில் ஏற்றுக் கொள்ளாமல் தடுப்பவர்களுக்கு எப்படி உதவலாம்?
குருதேவர்: இவ்வுலகில் பல விதமான மக்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிலருக்கு மனத் தடை இருக்கும். அது பரவாயில்லை. அவர்கள் அவர்களின் வேகத்திலேயே நடக்கட்டும். இந்த பூமியில் முயல்கள், மான்கள், நத்தைகள் எல்லாமே இருக்கின்றன. ஒரு நத்தையை முயல் போல் ஓடச் சொன்னால் முடியுமா? சிலர் நத்தையின் வேகத்தில் நடப்பார்கள். சிலர் மான்களைப் போல் வேகமாக ஓடுவார்கள். உலகம் இப்படித்தான் இருக்கும். புன்முறுவலோடு மேலே செல்.
கே: மற்றவர்களின் தவறை மன்னிக்கக் கஷ்டமாக இருக்கிறது.
குருதேவர்: மன்னிக்க வேண்டாம். அது உனக்கு சுலபமாக இருக்கிறதா? ஒருவரை மன்னிக்காமல் இருந்தால், நீ அவர்களைப் பற்றியே எல்லா நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாய். ஒருவர் மேல் உள்ள கோபத்தை அடக்கி வைப்பது சுலபமா? அட கடவுளே! எவ்வளவு சக்தி விரயமாகிறது. மற்றவர்களை மன்னிப்பது எதற்குத் தெரியுமா? உன் நன்மைக்காகத் தான்.
குற்றவாளியை, பொறியில் மாட்டிய இரை போல் பார்த்தால் மன்னிப்பது சுலபமாகி விடும். ஒவ்வொரு குற்றவாளியும், அறியாமல் தவறிழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மனத்தின் சின்ன புத்தியினால் தவறு செய்திருக்கிறார்கள். இந்த மகத்தான, அழகான வாழ்க்கையைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. தன்னலம் காரணமாக, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், மதி கெட்டு தவறு செய்திருக்கிறார்கள் . அதற்குக் காரணம் சின்ன புத்தி தான். அதனால் அவர்களை மன்னித்து விட வேண்டும். உனக்குக் கிடைத்த வாய்ப்புகள் போல், பெரிய மனத்தோடு காரியம் செய்ய, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்று தெரிந்து கொள். எனவே கருணையோடு அவர்களை மன்னித்து விடு.