அழகான இந்தியா...



பெங்களூர், இந்தியா - 5 ஆகஸ்ட், 2012

குருதேவர் வானத்தைப் பார்த்துவிட்டு சொல்கிறார்....

பார்த்தீர்களா. அதற்குள் மேகங்கள் வந்து விட்டன. மாதக் கடைசிக்குள் நல்ல மழை வந்து விடும். நேர்மையின்மை தலை தூக்கி, நற்குணங்கள் நாட்டில் குறையும் போது, இயற்கையும் தன் சீற்றத்தைக் காண்பிக்கும். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்கள் பதவியில் இருந்து லஞ்சம் வாங்கி நாட்டுக்குத் தீங்கு செய்யும்போது இயற்கையும் தன் சீற்றத்தைக் காண்பிக்கும்.
நம் நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நம் விவசாயிகளுக்கு அநீதி ஏற்படும் போது இயற்கை தன் சீற்றத்தைக் காண்பிக்கும். ஆகவே மக்களிடையே நேர்மை ஓங்க வேண்டும். நாட்டை ஆள்பவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால் நாடு அழிந்து விடும். நாட்டு மக்கள் அழிந்து போவார்கள்.
இது ஒன்றும் புதிது அல்ல. இது பல காலமாக நடைபெற்று வரும் ஒன்று. பழங்காலத்தில் மன்னன் தவறு இழைக்கும் போது ராஜகுரு அவர் காதில், “நீ தவறு இழைத்தால் நீயும் உன் குடி மக்களும் அழிந்து விடுவீர்கள்” என்று முன்னெச்சரிக்கை செய்வார். தற்போது யாரும் அப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கேட்பதில்லை. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது.
இன்று முதல், உணவு அருந்தும் முன், “அன்ன தாதா சுகி பவ” என்று சொல்லிவிட்டு சாப்பிடுங்கள். நமக்கு உணவு கிடைக்கக் காரணமான விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 

தானியத்தை விவசாயிகளிடமிருந்து நமக்கு கொண்டு வந்து கொடுத்த வியாபாரிகள்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மூன்றாவதாக இந்த உணவை சமைத்து படைத்திருக்கும் நம் இல்லத்துப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த மூவரும் மகிழ்ச்சியாக இருந்தால், இந்த உலகமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால், இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். உணவு சமைக்கும் பெண்கள் வருத்தத்தோடு சமைத்தால், துயரமும் கோபமும் கொண்டிருந்தால், உணவு நமக்கு ஜீரணமாகாது. நம் மனத்தையும் பாதிக்கும்.
வியாபாரிகள் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் ஏமாற்று வேலை செய்ய மாட்டார்கள். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்ய மாட்டார்கள். நமக்குத் தூய்மையான சுகாதாரமான உணவு கிடைக்கும். மேலும் வியாபாரிகள் விலையை மிக அதிகப் படுத்தி கொள்ளை அடிக்க மாட்டார்கள்.
வெகு காலமாக வியாபாரிகள் சமூக சேவையில் ஈடு பட்டு வருகிறார்கள். குளம் வெட்டுவது, கோயில் கட்டுவது, தர்ம சத்திரங்கள் அமைப்பது போன்ற காரியங்கள் செய்திருக்கிறார்கள். வியாபாரிகள் பேராசை காரணமாக, மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால், மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள்.
அதே போல் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பது  அவசியம். இது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே இவைகளை மனதில் கொண்டு, ஒவ்வொரு வேளையும் உணவு அருந்து முன் ‘அன்ன தாதா சுகி பவ’ என்று சொல்லுங்கள். நமக்கு உணவு கிடைக்க ஏதுவானவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடையவர்களாக இருக்கட்டும் என்று வாழ்த்துங்கள்.
கே: குருதேவா! சமீபத்தில் மின்சார இணைப்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தன, இதை எப்படித் தீர்ப்பது.
குருதேவர்: இங்கு ஒருவர் வந்து குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி செய்வதைப் பற்றி விளக்கினார். கர்நாடக மாநிலத்தில் அவ்வாறு செய்ய அவரை ஊக்கப் படுத்தினேன். அதற்கு ஆயிரம் கிலோ குப்பை தேவை என்றார். அதை எப்படி நடை முறையில் செயல் படுத்தலாம் என்று பார்ப்போம்.
கே: புனித குருமார்கள் பலர், உதாரணத்துக்கு ஏசு கிறிஸ்து, கொடூரமான முறையில் மரணமடைந்தார்கள். அது ஏன்?
குருதேவர்: பகவான் கிருஷ்ணர், பகவத் கீதையில் ‘கிலேசோ, திகதராஸ் தேஷம் அவ்யக்த சக்த – சேடசம் அவ்யக்த ஹி கதிர் துக்கம் தேஹவாத்பிர் அவ்யப்தே” என்றார். (12-ம் அத்யாயம், 5-வது ஸ்லோகம்)
ஒருவர் நிர்குண ப்ரம்மத்தை மட்டும் வழிபடும் போது அது நிறைய துக்கத்தை அளிக்கும்.மோசஸ், ஏசுநாதர், முகம்மது நபி இவர்களின் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்கள் எண்ணிறந்த கஷ்டங்களுக்கு ஆளானார்கள். குரு நானக்கும் அவர் வழியில் வந்த குருக்களும் அதே போன்ற கஷ்டங்களைச் சந்தித்தார்கள். ஏனென்றால் அவர்கள் சகுண ப்ரம்மத்தைத் தவிர்த்து (குணம் நிறைந்த பரமாத்மா) நிர்குண ப்ரம்மத்தை (உருவமில்லாத, குணமில்லாத, வரையரையற்ற பரமாத்மா) மட்டும் வழிபட்டு வந்தார்கள். இது ஒரு ருசிகரமான விஷயம்.
“அவித்யாய ம்ருத்யம் தீர்த்த வித்யாய அம்ருதம் ஸ்நுதே” என்று அதனால் தான் சொல்லப்பட்டது. வ்யக்தா (உருவகப்படுத்த முடிந்த) மற்றும் அவ்யக்தா (உருவமில்லாத), இரண்டுமே அவசியம்.
“ஈஸ்வரோ குருராத் மேதி மூர்த்தி பேத விபாகினே, வ்யோமவத் வ்யோம தேஹாய தக்ஷிணா மூர்த்தயே நமஹ” – குரு, ஆத்ம ஞானம், இறைவன் எல்லாமே அவசியம். வாழ்க்கையில் இவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் இந்த உலகிலும், மறு உலகிலும் மகிழ்ச்சி அடையலாம்.
கே: நான் ஒரு விவசாயி. எனக்கு 100 கிலோ சோளத்துக்கு 1200 ரூபாய் கிடைக்கிறது. பெங்களூர் பெரிய அங்காடிகளில், பல மடங்கு அதிக விலையில் விற்கிறார்கள். விலை நிர்ணய குழு ஒன்று அமைக்கலாமா?
விவசாயிகள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுடைய உழைப்புக்கு சரியான விலை கிடைப்பதில்லை. விலை நிர்ணய குழு ஒன்றை அமைக்கும் படி அரசைக் கேட்கலாமா?
குருதேவர்: நான் காஷ்மீர் சென்றிருந்த போது ஒரு அதிகாரி விமான நிலையத்தில் வந்து என்னை வழியனுப்ப வந்திருந்தார். அவர் முன்னாளில், நிதி மற்றும் விவசாயத் துறை அமைச்சகங்களில் பணி ஆற்றியவர். அவர் விவசாயிகளுக்கான ஒரு புதிய திட்டத்தை புகுத்த விரும்பினார். உதவித்தொகைக்கு (சப்ஸிடி) பதிலாக சந்தையில் விலை அதிகரிக்கும் போது அதிக விலையிலும், சந்தையில் விலை குறையும் போது குறைந்த விலையிலும் தானியங்களைக் கொள்முதல் செய்வது அத்திட்டத்தின் நோக்கம். இதைச் செய்திருந்தால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு 17000 கோடி ரூபாய்கள் மிஞ்சியிருக்கும். விவசாயிகளுக்கும் சரியான விலை கிடைத்திருக்கும்.
ஆனால் அமைச்சரோ இந்தத் திட்டமடங்கிய காகிதங்களை குப்பைக் கூடையில் வீசி விட்டார். ஏன்? இந்தத் திட்டத்தால் அமைச்சருக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
அந்த அதிகாரியிடமிருந்து அந்தத் திட்டத்தைப் பற்றிய விவரங்களைத் தருமாறு கேட்டிருக்கிறேன். அதைப் பற்றிய விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிப்பது என் பொறுப்பு என்று சொன்னேன். எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கு அவர்களைப் பற்றி ஒன்றும் தெரிவதில்லை.
அந்த அதிகாரி, “விவசாயிகள் தங்களுக்குச் சரியான விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்” என்று சொன்னார். சந்தையில் பொருள்களின் விலை ஏறுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு அது போய் சேருவதில்லை. அவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. மேலும் நமது தானியக் கிடங்குகளில் வைத்திருக்கும் தானியங்கள் அவிந்து கெட்டு விடுகின்றன. அவர் போட்ட திட்டம் விவசாயிகளுக்கும், அரசுக்கும் லாபகரமாக இருக்க வழி செய்தது. ஆனால் அமைச்சர் அதை அமலில் கொண்டு வர விடவில்லை. அப்படிப்பட்ட அமைச்சர்கள் பதவியில் இருக்கும் வரை நாடு எப்படி செழிக்கும்? எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும்.
கே: மனிதப் பிறவி கிடைப்பது மிகவும் அரிது என்று சொல்லப் படுகிறது. ஆனாலும் சிலர் மிகவும் செல்வந்தர்களாகவும், மற்றும் பலர் வறுமையில் வாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு ஏன்?
குருதேவர்: செல்வந்தர்கள் தங்களிடமிருப்பதை வறுமையில் வாடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் தியாக மனப்பான்மையை மனதில் கொண்டு, ஆன்ம பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஞானம் உங்களுக்கு ஆத்ம பலத்தைக் கொடுக்கும். ஆத்ம பலம் வாழ்க்கையில் சகிப்புத்தன்மையைக் கொண்டு வரும். மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வலிவைத் தரும். அதனால் தான் ஞானம், இசை, தியானம் முதலியன வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
கே: கடந்த 4 ஆண்டுகளாக நான் சுதர்சன கிரியா செய்து வருகிறேன். நான் கடினமாக உழைத்து என் கல்லூரிப் படிப்புக்குத் தயார் செய்தேன். ஆனாலும் நான் விரும்பிய பாடத்தில், விரும்பிய கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்க வில்லை. என் நம்பிக்கையை இழந்து விட்டேன். எனக்கு கம்ப்யூடர் விஞ்ஞானத்தில் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது.
குருதேவர்: கம்ப்யூடர் விஞ்ஞானம் நல்ல பாடம் தான். அதைப் படி. கவலைப் படாதே. உனக்கு எந்தப் பாடத்தில் இடம் கிடைத்ததோ அதை நன்றாகப் படி. உன் வாழ்க்கை நன்றாக அமையும். புரிகிறதா!
உன் போன்ற பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் இடிந்து போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்காவிட்டால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எப்போதும் தற்கொலையைப் பற்றி எண்ணாதே. உன் உயிரைத் தாழ்வாக எடை போடாதே. உன் உயிர் விலை மதிப்பற்றது. உன்னுள் என்ன திறமைகள் ஒளிந்திருக்கின்றன என்று நீ அறிய வில்லை. நீ ஒரு நல்ல அமைச்சராகவோ, நல்ல தொழிலதிபராகவோ வர வாய்ப்பிருக்கிறது.
மும்பையில் தள்ளு வண்டியில் காய்கறி விற்ற ராம்நாத் கோயங்கா என்பவர் இந்தியாவிலேயே பெரிய பதிப்பகத்தை ஆரம்பித்தார். ஆகவே நீ வருத்தப் பட வேண்டாம். உனக்கு கம்ப்யூடர் விஞ்ஞானம் பாடத்தில் இடம் கிடைத்திருக்கும் போது அதை விரும்பிப் படி. நம் நாடு எவ்வளவோ முன்னேறி யிருக்கிறது. கம்ப்யூடர் விஞ்ஞானத்திலும் மேலும் முன்னேற்றமடையும்.
கே: உங்கள் கனவில் எந்த விதமான இந்தியாவைப் பார்க்கிறீர்கள்? (குறிப்பாக கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி சம்பந்தமாக)
குருதேவர்: நான் காணும் கனவு ஒரு ஊழல் இல்லாத வன்முறையற்ற அழகான சமுதாயம். பூடான், ஸ்விட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற சிறிய நாடுகள் எவ்வளவு அமைதியாக இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவும் இப்படித்தான் இருந்தது.
“நான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பிரயாணம் செய்து பார்த்த போது, ஒரு பிச்சை க்காரனையோ, ஒரு திருடனையோ காண முடியவில்லை. அப்படிப்பட்ட செல்வம்! அப்படிப்பட்ட நேர்மை, நல்வழியில் நடப்பவர்களை இந்த நாட்டில் கண்டேன்” என்று மெக்காலே பிரபு சொன்னார். அப்படிப்பட்ட பிரசித்தமான நம் நாட்டை மீண்டும் அப்படிப்பட்ட நிலையில் காண வேண்டும்.
கே: சில நாட்களுக்கு முன், “எந்தக் காரியமானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள நாம் லஞ்சம் கொடுக்கக் கூடாது” என்று சொன்னீர்கள். கடவுளிடம் ஏதாவது வேண்டி, அது நிறைவேறிய பின், நாம் காணிக்கை அளிப்பதாக வேண்டி, காரியம் ஆனபின் காணிக்கை செலுத்துகிறோம். இது எந்தவிதத்தில் நியாயமாகும்?
குருதேவர்: நீ வேண்டிக்கொள்வது, நீ காணிக்கை செலுத்துவது உனக்காகவே. கடவுளின் அருள் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் எதிர் பார்த்து வருவதல்ல. நீ ஏதோ காணிக்கை கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் உனக்கு அளிப்பவர் கடவுள்.
காணிக்கை கொடுக்கும் பழக்கம் இடையில் வந்தது. இதைப் பற்றி நம் வேதங்களில் எதுவும் சொல்லப்படவில்லை. நீ மற்றவர்களுக்கு நல்ல உதவி செய்தால், உனக்கு அது நல்ல புண்ணியத்தை அளிக்கும். உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
கே: சுவாமி நித்தியானந்தர் நம் இந்து கலாசாரத்தைக் கெடுத்து விட்டதால் மக்கள் ஒரு ஆசிரமத்துக்குள் நுழைவதே தவறு என்று நினைக்கிறார்கள். (பயப் படுகிறார்கள்). தெய்வம் அந்த பாபத்தை செய்ய அனுமதித்தது? அதை நினைத்து மிகவும் வேதனைப் படுகிறேன்.
குருதேவர்: இது ஒன்றும் புதிதல்ல. பழங்காலத்திலும் இப்படி நடந்திருக்கிறது. ராமாயணத்தில் ராவணன் சாதுவாக வந்து சீதையை ஏமாற்றினான். துறவி உருவத்தில் வந்தால் சீதை ஏமாந்து விடுவாள் என்று ராவணனுக்குத் தெரிந்திருந்தது.
விஜயநகர சாம்ராஜ்யம் சாது போன்ற வேஷத்தில் வந்த விரோதி ஒருவனால் அழிக்கப் பட்டது. அவன் துறவி போன்ற உருவத்தில் நுழைந்து ஒரே நாளில் மன்னனைக் கொன்றான். நூற்றுக் கணக்கான யானைகளையும், ஆயிரக்கணக்கான படை வீரர்களையுமுடைய சாம்ராஜ்யம் ஒரே நாளில் அழிக்கப் பட்டது. ஏனென்றால் துறவிகள் எந்த இடத்திலும் தடையில்லாமல் நுழைய முடியும்.
இப்படிப் பட்டவர்கள் எல்லாத் துறைகளிலும் எப்பொழுதும் இருப்பார்கள். இன்று இப்படிப்பட்ட விவகாரங்களை நாம் தொலைநோக்கி (டிவி) யில் பார்க்கிறோம். ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். பெற்றோர்கள் எப்படி நம்பிக்கையாக தன் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்?
ஒரு மருத்துவமனையில், மருத்துவர் நோயாளியைக் கற்பழித்து விட்டார். இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்  ஆன்மீகத்தின் அவசியத்தை, நல்வழியில் நடப்பதை உயர்வாக மதிக்கும் பண்பின் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன. நல்வழியில் நடப்பதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை எல்லோருக்கும், நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.
நாம் இடது புறம் அதிகம் சென்று விட்டோம். மதச்சார்பற்ற அரசாங்கம் என்ற பெயரில், நம் நாட்டின் நற்பண்புகளை, கலா சாரத்தை வீசி எறிந்து விட்டோம். தர்ம நெறிப்படி நடக்கும் நற்பண்புகளுடைய சமுதாயத்தை மறுபடியும் உருவாக்க வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், நீங்கள் இப்படிப் பட்ட அநியாயங்களைக் காண வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாம் பத்திரமில்லாத இடங்களாக ஆகி விட்டன.
நம் நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மிகவும் மரியாதை அளிக்கப் பட்டு வந்தது. “வைத்யோ, நாராயணோ ஹரிஹி”. ஒரு மருத்துவர் நாராயணனுடைய அவதாரமாக மதிக்கப் பட்டார்.“நிரூபோ நாராயணா” – அரசன் நாராயணனாகக் கருதப்பட்டான்.
கடவுள் எல்லா இடத்திலும் இருப்பது உணரப்பட்டது. அது ஒரு தெய்வீகமான சமுதாயமாக இருந்தது. தற்போது பயம் எல்லா இடத்திலும் உணரப்படுகிறது. மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும் அவல நிலை வந்திருக்கிறது. மக்கள் மருத்துவர்களிடம் செல்லவும் பயப்படுகிறார்கள். அவர்கள் உங்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். “அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. ஆனால் நோயாளி பிழைக்க வில்லை” என்று சொல்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஆன்மீக ஞானம் இல்லாதது தான். அதனால் தான் நீங்கள் அனைவரும் வாழும் கலை ஆசிரியராகவும், சாதகராகவும் ஆக வேண்டுமென்று சொல்கிறேன். மேலும் மேலும் மற்றவர்களையும் சாதகர்களாக ஆக்க வேண்டும். அப்படிச் செய்தால் கட்டாயமாக சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்.
240 வன்முறையாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு விட்டு இங்கு நம் ஆசிரமத்தில் வந்து புது வாழ்வைத் துவக்கியுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருடைய வாழ்க்கையும் ஒரு ருசிகரமான கதை போன்றது. ஒவ்வொருவரையும் பற்றி நாம் நாவல் எழுத முடியும்.
கே: ஆத்ம ஞானம் அடைய சுலபமான வழி என்ன?
குருதேவர்: தியானம்! நான் யார்? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பது. நீ யார் இல்லை என்று தெரிந்து கொள்வது.
கே: தற்கொலை செய்து கொள்வது பாபம் என்கிறார்கள். காந்தீய வழியில் சாகும் வரை உபவாசம் இருப்பதாகச் சொல்வது பாபமாகாதா?
குருதேவர்: எந்த முறையில் தற்கொலை செய்து கொண்டாலும் அது தவறு தான். நான் அதை எப்போதுமே ஒத்துக் கொள்ள மாட்டேன். ஒருவர் உண்ணா விரதம் இருந்து இறப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.