நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை எப்படி கண்டுபிடிக்கலாம்?

செவ்வாய்க்கிழமை, 2 - பிப்ரவரி, 2016

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

உங்கள் கருத்துப்படி, அன்பின் வரையறை என்ன?

மிகவும் எளிது. எதை வரையறுக்க முடியாதோ, அதுவே அன்பு. இதுவரை நீ அன்பை அனுபவிக்காமலிருந்தால், வருங்காலத்திலும் அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. எனவே அதற்கு வரையறை இல்லை. அன்பானவனே, நீ அன்பால் உருவாக்கப்பட்டிருக்கிறாய். இந்த ப்ரபஞ்சமே அன்பு என்றழைக்கப்படும் அந்தப் பொருளால் உருவானது. எனவே மற்ற எல்லா பொருட்களுமே தூய்மையான அன்பு, அல்லது அன்பிலிருந்து சிதைந்த வடிவில் இருக்கும். கோபம் என்பது அன்பின் சிதைந்த ஒரு உணர்வு. நீ எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க விருப்பமுள்ளவனாக இருந்தால், அது அப்படி இல்லாத போது உனக்குக் கோபம் வரும். அது சரியாக வைப்பதற்கான அன்பு. பொருள்களின் மேல் அதிக அன்பை பேராசை என்று சொல்கிறோம். ஒருவரின் மேல் இருக்கும் அதிக அன்பு, பொறாமையாகவோ, சொந்தப் படுத்திக் கொள்ள சுயநலமாக மாறலாம். எதிர் மறை உணர்வுகள் அன்பிலிருந்து பிறந்தவையே. ஞானமற்ற அன்பு, எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஞானத்துடன் கூடிய அன்பு பேரானந்தத்தைக் கொடுக்கும்.

மகாத்மா காந்தி ராமராஜ்யத்துக்காக கனவு கண்டார். பெண்கள் நடு  இரவிலும், தைரியமாக தெருவில் நடந்து செல்ல முடியும் என்று அவர் சொன்னார். இந்தியா சுதந்திரமடைந்த நாடாகும் போது அப்படி நடக்குமென்றார்.

எங்கெல்லாம் ஞானமுள்ளதோ, அதுவே ராமராஜ்யமாகும்.  அஞ்ஞானமுள்ளதோ, அது அசுர ராஜ்யம். புரிந்ததா?

குருதேவா ! சில சமயம் நான் எண்ணியபடி நடக்கிறது. சில சமயம் அப்படி நடப்பதில்லை. ஏன் அப்படி?

ஆம். எனவே நீ உன் எண்ணத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டும். நீ எண்ணியபடி நடந்தால், உன் எண்ணம் சரியாக இருந்தது. அப்படி நடக்காவிட்டால், உண் எண்ணம் தவறாக இருந்தது. உன் எண்ணப்படி எப்போதும் நடக்காமலிருந்ததில்லை. சில சமயம் அப்படி நடந்திருக்கிறது. உன்னுள் சத்வ குணம் நிரம்பியிருக்கும் போது உன் எண்ணப்படி நடக்கும். எனவே நீ சத்வ குணத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டால், நீ விரும்புவது நடக்கும். சில மனிதர்களின் மனதில் விருப்பம் எழும் போதே அது நிறைவேறிவிடும்.

குருதேவா ! வாழும் கலையின் சின்னம், இரண்டு அன்னப் பறவைகளுக்கு நடுவில் சூரியன், இதன் முக்கியத்துவம் என்ன ?

உன் படைப்பாற்றலை உபயோகித்து, நீயே இதன் முக்கியத்துவத்தைப்  பற்றிச் சிந்தித்துப் பார். நீ எப்படி விரும்பினாலும் அப்படியே விளக்கமளிக்கலாம். சின்னம் ஒரு சின்னம் தான். யாரோ ஒரு கலைஞர் அதை வரைந்து காட்டினார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். “ வாழும் கலை “ என்ற பெயரும் அப்படியே. இந்தப்  பெயரை நான் வைக்க வில்லை. அது தானாகவே நடந்தது. என் பேச்சு, எப்போதும், பெயரையும், வடிவத்தையும் தாண்டி எப்படிச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியே இருக்கும். பெயர், சின்னம் இவைகளில் ஒன்றுமில்லை.

மக்களுக்கு சுகாதாரம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றி, வாழும் கலை ஏன் பயிற்சியளிப்பதில்லை ? உதாரணமாக எச்சில் துப்பக் கூடாது, குப்பையை வீட்டுக்கு வெளியே போடக் கூடாது. நாட்டுக்குப் பயன் தரும் பல விஷயங்களைப் பற்றி  ஏன் பயிற்சியளிக்க க் கூடாது ?

நாம் அப்படிச் செய்கிறோம். நம் பயிற்சிகளான பால் சேத்னா (குழந்தைகளுக்கான விழிப்புணர்வு) மற்றும் ஒய்.எல்.டி.பி (இளைஞர்களுக்கான தலைமைப் பதவிக்கான பயிற்சி), இவற்றில் இதைச் செய்கிறோம். இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு, இதை புரிந்து கொள்ளலாம். மேலும் நாம் வாழும் கலையில், 5 எச் திட்டத்தை செயல் படுத்தி வருகிறோம். (ஹோம்ஸ் ஃபார் ஹோம்லெஸ், ஹெல்த் கேர், ஹைஜீன், ஹ்யூமன் வேல்யூ, ஹார்மனி இன் டைவர்சிடி)

இவைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்த மக்களுக்கு, இதை எடுத்துச் சொல்ல அவசியமில்லை. நீ தினமும் பல் துலக்க வேண்டும் என்று உனக்குச் சொல்லத் தேவையில்லை. உனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் பழங்குடியினர், பின் தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுகாதாரப் பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு, இதை எடுத்துச் சொல்வது அவசியம். எனவே நம் பயிற்சிகள் இடத்துக்கேற்றவாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. சுற்றுப் புறத்தைத் தூய்மைப் படுத்துவதில், வாழும் கலை உறுப்பினர்கள் பெரிய அளவில் பங்கேற்கிறார்கள். உண்மையில், இத்திட்டத்தை, நாம் 2008 லிருந்தே நாட்டின் எல்லா பகுதிகளிலும் செய்து வருகிறோம். நாட்டின் பிரதமர், சமீபத்தில் தூய்மையான பாரதம் என்ற திட்டத்தைத் துவங்கி வைத்திருக்கிறார். வாழும் கலை பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறது.