சுய ஞானத்தின் சக்தி

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2016,

பெங்களூரு, இந்தியா


 என்னுடைய் தியானம் எவ்வாறு உலகைப் பாதிக்கும்?

உலகம் என்பது அதிர்வலைகள் நிறைந்தது. அதிர்வலைகள் நல்லிணக்கத்துடன் இருந்தால் மோதல்கள் இருக்காது. நாம் வெளிவிடும் அதிர்வலைகள் நல்லிணக்கமின்றி இருந்தால் நிச்சயமாக அது தொந்தரவுகளை உருவாக்கும். இதுதான் சாதாரண அனுபவம். சில சமயங்களில்  நீங்கள் செல்லும் ஓர் இடத்தில்  காரணமின்றி வேதனையடைவீர்கள். அதனுள் சென்று பார்த்தால், அந்த இடத்தில் தேவையில்லாத விவாதங்கள் அல்லது சண்டைகள்  நிகழ்ந்திருக்கும். ஆகவே நமது வாழ்க்கை, நமது நடத்தை நமது சூழல் அனைத்துமே அதிர்வலைகளால் பாதிக்கப்படுகின்றன.

சாம வேதத்தை பற்றி விவரித்துக் கூறினீர்கள். அதைக் கற்க முடியுமா?

சாம வேதத்தைக் கற்க அதிக காலம் ஆகும். முடியாததா என்ன? கற்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதைச் செய்யுங்கள். ஆனால் ஒழுங்கான வாழ்க்கை முறையுடன் அதிக காலம் செலவிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆசிரியருடன் அமர்ந்து கற்க வேண்டும். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பர். அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும்.

பகவத்கீதையின் முதல் அத்தியாயம் விஷாத யோகம் என்று அழைக்கப்படுகிறது. விஷாதம் எவ்வாறு யோகமாகும்?

யோகா மூன்று விதமாக விளக்கப்பட்டிருக்கின்றது.

1. பல மூலிகைகளின் சேர்க்கை. ஆயுர்வேதம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் ஆகியவையும் யோகம் என்று அழைக்கப்படுகின்றன.
2. பல கோள்களின் கலவையும் யோகம் என்றே அழைக்கப்படுகிறது. ராஜ யோகம், கால சர்ப்ப யோகம் என்னும் சொற்கள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
3. தனிப்பட்ட ஆத்மா பிரபஞ்ச ஆத்மாவுடன் இணைதலும் யோகமே ஆகும்.

யோகத்தில் முழு அதிகாரத்துடன் விளங்கும் பகவத் கீதை சிறிய தனிப்பட்ட ஆத்மா பிரபஞ்ச ஆத்மாவுடன் இணைவதையே குறிப்பிடுகிறது. சிறிய சுயம் பெரிய சுயத்துடன் தொடர்பு கொள்வது விஷாத அதாவது வருந்துதல் என்பதாகும். இவ்வாறு தான் அதாவது போர்க்களத்தில் குதித்து விட்டதற்காக வருந்துதல் - வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களுக்காக வருந்துதல் - என்றுதான் யோகம் துவங்குகிறது. அதுதான் விஷாத யோகம்.

பலர் இதிலேயே சிக்கிக் கொண்டு விட்டனர் என்றே நான் கருதுகிறேன். பெரும்பாலும் மக்கள் வாழ்க்கைக் கஷ்டங்களை சந்திப்பதால் ஆன்மீகத்திற்கு வருகின்றனர். பிரச்சினைகள் வரும்போது ஆன்மீகத்திற்குத் தாவுகின்றனர். அர்ஜுனனுக்கும் அதே நிலைதான். அவன் மனம் உடல் இரண்டும் வருந்தி, அவற்றுக்கு விடை காண ஸ்ரீ கிருஷ்ணரிடம் வருகின்றான். எனவே பகவத் கீதை விஷாத யோகத்துடன் துவங்குகின்றது.

நீங்கள் அஷ்டவக்கிர கீதையை பார்த்தால், அது விஷாத யோகத்தில் துவங்குவதில்லை. அது ஜிஞ்ஞாநச யோகத்துடன் துவங்குகிறது. ஜனகர்  ஞானம் தேடுபவர். அர்ஜுனன் பாதிக்கப் பட்டவன். கஷ்டத்தில் பாதிக்கப்பட்டு யோகத்தில் செல்கிறீர்கள். ஞானம் தேடியும் யோகத்தில் செல்லலாம். கஷ்டத்திலிருந்து அர்ஜுனன் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும்  ஆவலினால் மேலும் மேலும் அறிய விரும்புகிறான். ஆனால் ஜனகர் முற்றிலும் ஞானம் தேடுதல் மட்டுமே கொண்டுள்ளார். இது மிகவும் சுவாரஸ்யமான ஓர் விஷயம்.

எதுவாயினும் உங்கள் வாழ்க்கையில் விஷாத யோகத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அங்கிருந்து நகர்ந்து, சாங்க்ய யோகத்திற்குச் செல்லுங்கள். உலகில் பெரும்பான்மையினர் வருத்த நிலை யிலேயே இருக்கின்றனர். விஷாத யோகத்திலேயே சிக்கி  இருக்கின்றனர்.  ஆனால் எவ்வாறா யினும் நீங்கள் 12 வது அத்தியாயமான  பக்தி யோகத்திற்குச் செல்ல வேண்டும்.

வெற்றிடம் எவ்வாறு மனதைப் பாதிக்கிறது என்பதைப் பற்றிக் கூற முடியுமா?

காலம் மற்றும் இடம் இவற்றால் மனம் பாதிப்படைகின்றது. ஆனால் உங்கள் ஆத்மா மனதை விட சக்தி வாய்ந்தது. அது இடம் மனம் காலம் அனைத்தையும் பாதிக்கின்றது.ஆகையால் சுய ஞானம் தான் எல்லாமே என்றாகிறது. சுய ஞானம் மகிமையானது. மற்றும் சுய ஞானம் அடைந்தவன் மகிமை பெற்றவன். ஏனெனில் அதுவே அனைத்திற்கும் விடை காண்கின்றது. தியானம், பக்தி, ஈடுபாடு, கவனம் அனைத்தும் மிக மகிமை வாய்ந்தவை ஏனெனில் அவற்றால் காலம் மற்றும் இடத்தின் பாதிப்பை செல்லத்தகாததாகச் செய்ய முடியும்.

புற நிலை மற்றும் அக நிலை  ஞானம் பற்றி எடுத்துரைத்தீர்கள். அக நிலை ஞானம் உண்மையானது என்றும் கற்பனையில் வீழ்ந்து விடவில்லை என்றும் எவ்வாறு அறிந்து கொள்வது ?

அதற்குத்தான் இந்த வகுப்புக்கள் மற்றும் தியானப் பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு அளிக்கப் படுகின்றன. நீங்கள் அறிவொளி பெற்று விட்டீர்கள் என்று எண்ணினால் ஜாக்கிரதையாக இருங்கள். ஓர் ஆசிரியரிடம் பேசுங்கள். அவர் மூலம் என்னிடம் பேசுங்கள். எனக்கு எழுதுங்கள். அது கற்பனையா அல்லது உண்மையா என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

உண்மையில் நடப்பவை  போலத் தோன்றினாலும் கூட அது உண்மையில்லை என்பதைப் பற்றிப் பேச முடியுமா?

அதற்குச் சிறந்த உதாரணம் கனவுகள். கனவு காணும்போது, அது உண்மை போன்றே தோன்றுகிறது, ஆனால் விழித்தெழுந்தால் அது உண்மையில்லை. அதுதான். மிக எளிதான விஷயம். ஏன் இவ்வளவு எளிதான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? சவாலான கேள்விகளைக் கேளுங்கள்!