கடினமான மனிதர்களை எதிர்கொள்ளுதல்


18 டிசம்பர் 2012  பெங்களூரு, இந்தியா….


கே: குருதேவ், என் தந்தையிடம் நான் உரையாட முயல்கிறேன், நான் பேசும்போதெல்லாம் அவர் வித்தியாசமாக நடந்துகொள்கிறார். கோபம் வந்து ஒரே குழப்பமாய் போய்விடுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அவரிடம் நான் தொடர்பு கொள்வது? அவர் பிரச்சினைகளாலும் அதன் வலிகளாலும்தான் அவர் அவ்வாறு யாரிடமும் உரையாட முடியாத நிலையில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது. நான் என்ன செய்வது?


குருதேவ்: அன்பால் அவரை வெற்றி கொள்ளுங்கள். சில சமயங்களில், குழப்பம் ஏற்படுத்துபவர்களின் வழியிலேயே சென்று, மெதுவாக அவர்கள் நம்மை புரிந்துகொள்ளச் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இரண்டு நாட்களுக்கு அவரை எதிர்க்காமல் அவர் சொன்னதையெல்லாம் செய்யுங்கள், அவ்வளவே. அவர் உருகும் அளவுக்கு அதிக அன்பை செலுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இந்த வழியை பயன்படுத்தியிருக்கிறீர்களா?

(கேள்வி கேட்ட பக்தர்: அவரிடம் பேச முயற்சித்தேன், முடியவில்லை) பேசுவது சரியல்ல; நீங்கள் அவரிடம், ‘அப்பா, உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டீர்களா?

(கேள்வி கேட்ட பக்தர்: இல்லை, அப்படி நான் கேட்கவில்லை) பாருங்கள் நீங்கள் ஒரு தடவை கூட, 

‘அப்பா, உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கவில்லை. இப்போது நீங்கள் அவரிடம் சென்று இதைக் கேளுங்கள்.

மக்கள் ஏன் குழப்பம் செய்கிறார்கள் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் பாதுகாப்பின்றி இருப்பது போல உணர்கிறார்கள். அவர்கள் அன்பு செய்யப் படுவதாக உணரவில்லை. அவர்கள் அடிக்கடி உணர்வது என்னவென்றால், ‘என் முழு வாழ்க்கையையே தியாகம் செய்து, ஒவ்வொருநாளும் காலை முதல் மாலை வரை நான் என் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் எவ்வளவோ செய்கிறேன், ஆனாலும் அவர்கள் என் மீது அக்கறை செலுத்துவதில்லை.’ இந்த எண்ணம் அவர்கள் இதயத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கிறது.

வாழ்நாள் முழுவதும், பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவர அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததில்லை. அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அற்பணித்துவிட்டனர். எனவே அதற்கு பதிலாக எந்த வித அன்பும் மரியாதையும் கிடைக்காதபோது கோபம் கொள்கின்றனர்.

யாரும் அவர் பேச்சைக் கேட்காதபோது, தகுந்த மரியாதை கிடைக்காத போது அவர்களின் கோபம் அதிகமாகிறது. தமக்கு மரியாதை கிடைக்கும் அளவுக்கு தாங்கள் நடந்து கொள்ளவில்லை என்றாலும் அதை அவர்கள் புரிந்துகொள்வதும் இல்லை. இதுதானே உண்மையான பிரச்சினை?

(கேள்வி கேட்ட பக்தர்: ஆம், அப்படிதான் குருதேவ்) அவருடைய நடைமுறை நீங்கள் மரியாதை தரும் அளவு இல்லை, ஆனால் அவருக்கு இது புரிகிறதா? எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது, ‘அப்பா, உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேளுங்கள்.

பாருங்கள்! எப்போதுமே கோபமான மன நிலையில் யாரும் இருப்பதில்லை! மக்களுக்கு நல்ல மன நிலைகளும் உண்டு. அவர்கள் அப்படி நல்ல மன நிலையில் இருக்கும்போது பேசுங்கள். அப்படி நல்ல மன நிலையில் இல்லாதபோது, நீங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள்.

அவர்கள் மிக மோசமான மன நிலையில் இருக்கும்போது, அந்த இடத்திலிருந்து அகன்று விடுங்கள். எனவே, கடினமானவரை அன்பாலும் திறமையான பேச்சினாலும் வெல்ல உங்களுக்கு மூன்று வழிகள் உள்ளன; ஆம்! இன்றுதான், ஒரு பெண்மணி என்னிடம் வந்து தனது மாமியார் பெரும் பிரச்சினை செய்வதாக சொன்னார். அவர் என்னிடம் சொன்னார், ‘இது எனக்கு இரண்டாவது திருமணம். ஆனால் இதுவும் முறிந்துவிடும் போல இருக்கிறது. என் முதல் திருமணம் மாமியாரால்தான் முறிந்தது. இப்போது இதுவும் அப்படி ஆகிவிடுமோ என்று பயமாயிருக்கிறது.’ 

இதைச் சொல்லும்போது அழுதேவிட்டார்.அவர் உங்கள் மாமியார், எனவே அவரை நம்பி அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். உங்கள் மாமியார் பகல்தான் இரவு, இரவுதான் பகல் என்று சொன்னால் கூட, ‘ஆம் மாமி, அப்படித்தான்.’ என்று ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களிடம் வாதம் செய்வது முட்டாள்தனம்.
ஒரு முட்டாளை எதிர்கொள்ளும்போது என்ன செய்வது? அந்தச் சூழலில், அவர்கள் போக்கிலேயே கூடச் செல்வதைத் தவிர மற்ற வழிகள் குறைவு.

ஒருமுறை அப்படிப்பட்ட ஒருவர் என்னை ஒரு மாநாட்டிற்கு அழைத்தார். அவர் என்னை மாநாட்டிற்கு அழைத்ததின் காரணம் மக்கள் முன் அவர் என்னுடன் வாதம் செய்ய விரும்பியது தான். அவர் சொன்னார், ‘இந்த நூல் (குருதேவ் எழுதியது) முழுவதுமே தவறாய் இருக்கிறது’. என்னை தூண்டிவிட்டு அவரோடு முன்னும் பின்னும் வாதம் புரியவைக்க விரும்பினார். இரண்டு சமூகங்களுக்கு நடுவே ஒரு சண்டையை ஏற்படுத்தி, காவல்துறை வந்து தலையிட்டு ஒரு சூழ்நிலையை உண்டாக்க விரும்பினார். இதன் மூலம் தான் புகழடையவே அதைச் செய்தார். அவர் சொன்னார், ’இந்தப் புத்தகத்தில் நீங்கள் எழுதியிருப்பது தவறு.’

நான் எளிமையாக, ‘ஆம், சரிதான். நீங்கள் சொல்வது முழுமையாக உண்மை.’ என்று பதிலுரைத்தேன். நான் ஏற்றுக் கொண்டவுடன், அவருக்கு சண்டை போடவோ அல்லது வாதம் செய்யவோ எதுவுமில்லாமல் போயிற்று. அவருடைய நோக்கம் எனக்கு புரிந்தது. என்னைத் தாழ்த்தி அவமானப் பட வைப்பதே அவரின் நோக்கம். இந்து மதம் மற்றும் இஸ்லாம் பற்றிய இந்த நிகழ்ச்சி இங்கு பெங்களூரிலேயேதான் நடந்தது.

இந்து மதம் மற்றும் இஸ்லாமில் கடவுளைப் பற்றிய தத்துவமே அந்த மாநாட்டின் மையக்கருத்து. நான் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களில் உள்ள ஒற்றுமை என்ன என்று ஒரு நூல் எழுதியிருந்தேன். அவர் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் மையக் கருத்தை விட்டுவிட்டு வாதம் செய்ய ஆரம்பித்தார். அந்த மாநாட்டின் முதன்மை நோக்கத்தையும் மறந்துவிட்டார். ஏதாவது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் இரு சமூகங்களும் சண்டையிட்டுக் கொள்ளவேண்டும் என்று மட்டுமே விரும்பினார். ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர் அந்த புத்தகத்தை எடுத்து, ‘இது தவறு.’ என்று கூறினார். நான் சொன்னேன், ’ஆம், அப்படி இருக்கலாம். ஆனால், இதை விட்டுவிட்டு, இந்த மாநாட்டின் மையக் கருத்தில் நாம் கவனம் செலுத்துவோம்.’ என்றேன்.

அதில் என்ன தவறு இருந்தது தெரியுமா? நான் இந்து மதத்துக்கும் சுஃபி சாதுக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அந்தப் புத்தகத்தில் நான் கூறியிருந்தேன். சுஃபிக்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அவர் கூறினார். இந்துக்கள் பஜனை செய்வது போல சுஃபிக்களும் பாடுகிறார்கள் என்று கூறியிருந்தேன். சுஃபிக்கள் மற்றும் இந்துக்கள் இருவருமே ஜெப மாலை உபயோகிக்கிறார்கள். சுஃபிக்கள் காபாவை (மெக்காவிலுள்ள கருவறை) சுற்றி வருகிறார்கள். இந்துக்கள் கருவறையை சுற்றி வளம் வருகிறார்கள்.

இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் இந்த நல்ல கருத்துக்களை எல்லாம் வெல்ல விரும்பினார், ஆனால் நான் அப்படி இல்லை என்று சொன்னேன். அந்த புத்தகம் தவறாக இருக்கலாம் என்றும் அச்சுப் பிழையாக இருக்கலாம் என்றும் கூறினேன். அது சுமார் 30 பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகம். ‘ஏதோ அவசரத்தில் அதை அச்சடித்தோம், ஒன்றிரண்டு பிழைகள் இருக்கலாம், விட்டு விடுங்கள்.’ என்று கூறினேன்.

அதே நாளில், பெங்களூரில், ஜைனர்களின் ஒரு பெரிய விழா நடந்துகொண்டிருந்தது. அங்கு ஷ்வெதம்பரர்களும் திகம்பரர்களும் விக்ரக வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.ஆனாலும் அந்த மனிதர் விக்ரக வழிபாட்டை தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டும் அதை நிராகரித்தும் பேசிக்கொண்டிருந்தார். ‘பாருங்கள், இது தவறு. தன் விருப்பப்படி இறைவழிபாட்டு முறைகளை ஒருவர் மேற்கொள்ளலாம் அதை நீங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். அதைச் செய்வதின் மூலம் அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறதென்றால், நீங்கள் ஏன் வருத்தமும் கோபமும் கொள்ள வேண்டும்? அவர்கள் அப்படியே செய்யட்டும். நீங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொண்டு வாழ்வில் முன் செல்ல வேண்டும். முகம்மது கூட அதைத்தான் கூறியிருக்கிறார்.’ என்று கூறினேன்.
இந்தக் கருத்தை நான் முன் வைத்தேன். எனவே, சிலர் இப்படித்தான் இருப்பார்கள். 

சண்டையிடுவதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி, அதனால் வேறு எதன் மீதும் ஆர்வம இல்லாமல் சண்டைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன், அப்படிப்பட்டவர்கள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை அன்பால் வெல்லுங்கள். உங்கள் மாமியார் ஏதாவது சொன்னால், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.

உங்கள் அம்மா உங்களைத் திட்டுவதை கேட்பீர்கள் அல்லவா? அம்மாவிடம் திட்டு வாங்காத மகள் யாரவது உண்டா? நம் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் நம் அம்மாவிடம் திட்டுவாங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் திட்டுவது பழகிப் போய் அது உங்களை பாதிப்பதில்லை. ஆனால் மாமியார் சொன்னால் அது நம்மை பாதிக்கிறது.

உங்கள் மாமியாரை உங்கள் அம்மாவாகக் கருதுங்கள். உங்கள் மாமியார் எவ்வளவுதான் திட்டினாலும், நீங்கள் அதை உங்கள் அம்மா திட்டியதாக கருதி, ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். அப்படி இல்லாமல், உங்கள் மாமியார் திட்டும்போது, நீங்கள் உங்கள் கணவரிடம் சென்று அழுதால் அவர் கவலை கொள்வார், பிறகு அவர் ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தால் பின்னர் வீட்டில் தொந்திரவும் குழப்பமும் ஏற்படும். அப்படிப்பட்ட துன்பம் நேரும் போது ஒருவருக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்கு ஓடிவிடலாம் போலத் தோன்றும்.
சுவாமிகள் அல்லது சந்நியாசிகளாக விருப்பம் உள்ளவர்களை பெயர் கொடுக்கச் சொன்னேன், ஏராளமான திருமணமானவர்கள் வந்து பெயர் கொடுத்தார்கள்! (சிரிப்பு) நம்முடைய பக்தர் சஞ்சய் கவலைப் பட்டார். அவர் கேட்டார், ‘நீங்கள் மணமானவர், பிறகு ஏன் இங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் திரும்பிச் சென்று உங்கள் குடும்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.’

அங்கு வந்தவர்கள் மனைவிக்கும் அம்மாவிற்கும் இடையே மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள். எனவே அத்தகைய சூழலை உருவாக்காதீர்கள். நான் சொல்கிறேன், உங்கள் மாமியார் என்ன சொன்னாலும் அவரை அன்பால் வெல்லுங்கள். அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். வயதானால் கொஞ்சம் குறை சொல்வது அதிகமாகத்தான் இருக்கும். அப்படி என்ன குறை சொல்வார்கள்? சமையலில் உப்பு அதிகமாகிவிட்டது அல்லது குறைந்து இருக்கிறது, அல்லது காய் அதிகம் வெந்துவிட்டது அல்லது வேகவில்லை.

நீங்கள் வீட்டை சரியாக சுத்தம் செய்வதில்லை என்று சொல்லலாம். அதிகம் சுத்தம் செய்தீர்கள் என்றால், வீட்டையே துடைத்து எடுத்து விட்டாய் என்பார்கள். அதிகம் செலவழித்தால் செலவாளி என்றும் இல்லையென்றால் கருமி என்றும் சொல்வார்கள்.குறை சொல்வதற்கு எந்த வித தனித்திறமையும் தேவையில்லை. ஒரு நாளில் 24 மணி நேரமும் ஒருவர் குறை கூறிக்கொண்டே இருக்கலாம். எப்படிக் குறைகூறுவது என்ற இந்த ஒரு திறமையை மட்டும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இது பெரும்பாலும் மாமியார் மற்றும் மருமகள் இடையே தான் நடக்கிறது. உங்கள் மாமியார் கூறலாம், ‘என் மருமகள் என்னை மதிப்பதே இல்லை. அவள் இப்படி இருக்கிறாள் அப்படி இருக்கிறாள். தன்னைப் பற்றி மிக அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறாள், இதை தன் சொந்த வீடாக நினைப்பதே இல்லை.’ 

இப்படியாக தம் மருமகளைப் பற்றி பலவற்றை அவர்கள் சொல்லலாம். அதனால் தான் உங்கள் தகவல் தொடர்புத் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கே: குருதேவ், நான் தியானத்தில் பேரானந்தம் பெறும்போது நல்ல அதிர்வுகளை உணர்கிறேன். நம் உடலில் உள்ள பல்வேறு சக்தி தளங்களை, நிலைகளைப் பற்றி தயை கூர்ந்து பேசுகிறீர்களா?

குருதேவ்: இந்த முழு பிரபஞ்சமும் அதிர்வுகளின்றி வேறில்லை. இவையெல்லாம், அலைகளாலும், அதிர்வுகளாலும் மற்றும் சக்தியாலும் செய்யப்பட்டது.உங்கள் அதிர்வுகள் மற்றவருடைய அதிர்வுகளுடன் பொருந்தாதபோது நீங்கள் அதை ‘எதிர்மறை’ என்று அழைக்கிறீர்கள். உங்கள் அதிர்வுகள் மற்றவர்களுடைய அதிர்வுகளுடன் பொருந்தும்போது, ஒத்திசைவு ஏற்படுகிறது அதை நீங்கள் பேரானந்தம் என்கிறீர்கள். உங்கள் சக்தி மாறி பிரபஞ்ச அளவில் மாறும்போது, சுற்றுப்புறம் எப்படி இருந்தாலும் நீங்கள் அதனால் நீங்கள் பாதிப்பில்லாமல் விஞ்சி இருப்பீர்கள்.

நாங்கள் பெரு நாட்டிலுள்ள மாச்சு பிச்சு என்ற இடத்திற்குச் சென்ற பொது அங்குள்ள மக்கள், அங்கு அதிர்வுகளை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ‘நான் எதுவும் உணரவில்லை’, இது ஏனென்றால் நாம் எங்கு சென்றாலும் நம்முடைய சொந்த அதிர்வுகளை உண்டாக்குகிறோம். எனவே நான், ‘இது எதிர்மறையாய் இருக்கிறது, அது அப்படி இல்லை’, என்றெல்லாம் சொல்வதில்லை.

மக்கள் கலக்கத்தில், துயரத்தில் இருக்கும்போது அது நிச்சயமாய் எதிர்மறை அதிர்வுகளை உங்களைச் சுற்றி உருவாக்குகிறது; சந்தேகமேயில்லை. ஆனால் ஞாபகத்தில் வையுங்கள், அவையெல்லாம் நேர்மறையான நல்லதிர்வுகளைப் போல வலிமையானதல்ல. உங்களுக்கு எதிர்மறை அதிர்வுகள் வெல்வது போல தோன்றினாலும், உண்மையில் அப்படி அல்ல.

கே: அன்பு குருதேவ், ஒரு ஞானம் தேடுபவராக இருந்து, நம் மனதை நடுநிலையில் வைக்க, மக்களின் பிரச்சினையிலிருந்து நாமே ஒதுங்கியிருக்க வேண்டுமா, அல்லது அவர்கள் பிரச்சினை தீர்வதற்கு உதவ வேண்டுமா? அந்தக் கோட்டை எங்கே போடுவது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

குருதேவ்: நீங்கள் இதை இலகுவாக செய்ய வேண்டும். மற்றவர்களுடைய பிரச்சினையைத் தீர்க்கும்போது நீங்கள் அதில் சிக்கி குழம்பிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஒட்டுதலில்லாத உணர்வோடு செய்தால், அது உங்களுக்கு உதவும்.

கே: நீங்கள் ஒரு அற்புதமான மேலாளர். இவ்வளவு குறுகிய காலத்தில், ஒருவர் கற்பனை செய்ய முடியாத அளவு வாழும் கலை அமைப்பு வளர்ந்திருக்கிறது. நானும் ஒரு மேலாளர், எனக்கு சில மேலாண்மை குறிப்புகள் கூற முடியுமா?

குருதேவ்: ஆம், சுய உன்னதம் அடைதல்) மற்றும் – மாறுதலுக்கான தலைமை மற்றும் உன்னதம் அடைதல்) போன்ற எல்லா வகுப்புகளும் இந்தக் குறிப்புகளை உள்ளடக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றை மறக்காதீர்கள், இந்தப் பிரபஞ்சத்தின் மேலாளர் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தை மேலாண்மை செய்பவர், அந்த மேலாண்மைச் செயலை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை; அவர்தான் செய்கிறார் என்பதையும் வெளிப்படுத்துவதில்லை. அதைபோல பின்னேயிருந்து மேலாண்மை செய்யுங்கள். பின்னேயிருந்து தலைமை செய்வதே சிறப்பானது.
நீங்கள் ஒரு திட்டத்திற்கு தலைமை ஏற்க விழைந்தால் உங்கள் தலைமைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அதை நீங்கள் பின்னேயிருந்து செய்ய வேண்டும்.
சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உள்ளது, பரோக்ஷா பிரியஹி வை தேவஹா, அதாவது இறைவன் மறைமுகமாக தனது செயல்களை செய்ய விரும்புகிறார், வெளிப்படையாகக் காட்டிகொள்ள மாட்டார்.

ஒருவர் நினைப்பார், ‘இதை நான் செய்கிறேன்’, ஆனால், அவரைச் செய்ய வைப்பது இறைவன்தான். மக்கள் தாங்களே செய்ததாக ஒரு ஆனந்தத்தை அவர்களுக்கு அளிக்கிறார் இறைவன், ஆனால் இறை சக்திதான் அதை சூட்சுமமாக செய்கிறது,அது வெளிப்படையாகத் தெரிவதுமில்லை.
கே: குருதேவ், நான் நவீன ஆடை அலங்காரத் துறையில் இருக்கிறேன், தயை கூர்ந்து நீங்கள் ஆடை அலங்காரத் துறையும் (Fashion) ஒத்திசைவும் (Harmony) பற்றி பேச முடியுமா? ஒத்திசைவைப் பற்றிய சேதியை என் துறை மூலம் மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்வது?

குருதேவ்: நவீன என்றால் இப்போதைய நேரத்தில் என்று பொருள். பழைய நவீனம் (Old fashion) என்பது oxymoron (முரண் வார்த்தை - எதிரெதிர் பொருள் கொண்ட வார்த்தை). நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? எனவே நவீனம் என்பது புதியதை எடுத்துக் கொள்வது.இந்த முழு பிரபஞ்சமே தன்னைத் தானே நவீனமாய் வடிவமைத்துக் கொள்கிறது. உங்களுக்குத் தெரியுமா, மேகங்கள் தமக்கென்று நவீனம் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாய் வடிவம் கொள்கிறது. சூரிய அஸ்தமனம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிறத்தில் அமைகிறது அல்லவா?
நீங்கள் இயற்கையைப் பார்த்தால், எப்போதும் புதுமையாய் இருக்கிறது, நம் மனதின் இயல்பைப் பார்த்தால் நவீனமாய் அது ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது புதுமையை கேட்கிறது. எனவே இவை நம்மை ‘இந்தக் கணத்திற்கு’ கொண்டுவருகிறது 
.
கே: ஜெய்குருதேவ்! நன்னம்பிக்கை வைப்பதின் மூலம் ஒரு வேலை நல்லவிதமாக முடியும்போது மகிழ்கிறோம், ஆனால் சில நேரத்தில் ஏதோ சில தீயவை நடக்கிறது அல்லது நமக்கு ஒரு தீய அனுபவம் நேர்கிறது, அத்தகைய நேரத்தில் நாம் அதை நன்னம்பிக்கை கொண்டு எப்படிக் கையாள்வது?

குருதேவ்: பாருங்கள், வாழ்க்கையில் விஷயங்கள் இப்படித்தான் நடக்கும். நல்ல விஷயங்களும் உண்டு, தீய விஷயங்களும் உண்டு, சில நேரம் துரதிருஷ்டவசமான நிகழ்வுகளும் நடக்கிறது. இதைப் பொருட்படுத்தி நின்றுவிடாமல் நாம் மென்மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும். அப்படியில்லாமல், உட்கார்ந்து நடந்ததை ஆராய்ந்து கொண்டிருந்தால் நேரம் தான் வீணாகும்.
‘இது ஏன் நடந்தது? இது ஏன் நடக்கவில்லை? எனக்கு நம்பிக்கை இருந்தும் இது ஏன் நிறைவேறவில்லை?’ என்றெல்லாம் எண்ணுவது கால விரயம்.

நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் நாம் மென்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். ஏனென்றால், நம்பிக்கை கொள்வதன்மூலம் நமக்கு அவ்வளவு அமைதியும், சாந்தமும் வலிமையும் கிடைக்கிறது. ஒரே ஒரு நிகழ்வினால் நம்பிக்கை இழப்பதினால்,துயரப்படப் போவது நாமன்றி வேறு யாரும் இல்லை. நம்பிக்கை ஒரு பெருஞ்செல்வம், எனவே அதை பாதுகாப்போம், திடப்படுத்தி வைப்போம், மேலே முன்னேறுவோம்.

நூறு ஆயிரம் முறைகள் நமக்கு நம்பிக்கை இழப்பதாகத் தோன்றினாலும் நாம் மென் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் உங்களுக்குள் சந்தேகத்தை உண்டாக்கலாம், அத்தனையும் தாண்டி வலிவோடும் வீரத்தோடும் நீங்கள் முன்னேறினால், உங்களுக்கு உண்மையான நன்னம்பிக்கை உண்டு என்று ஒருவர் சொல்ல முடியும்.
வலிமையான நம்பிக்கை உள்ள ஒருவர் எப்போதும் தோல்வி காணமாட்டார்,வாழ்க்கையில் வீழ்ச்சி என்பதே அவருக்கு இல்லை.

கே: குருதேவ், எனக்கு எழுபது வயதாகிறது, நான் எங்கு சென்றாலும் உங்கள் அருளைப் பற்றி பேசிவருகிறேன். நான் முழு நம்பிக்கையோடும் நன்றியுணர்வோடும் இங்கு வந்திருக்கிறேன். என் மகன்கள் என்னை இங்கு அனுப்பி, நீங்கள் அளித்த மெய் ஞானத்தை மக்களிடையே, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும் பரப்புமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்கள். கடந்த ஆறு வருடங்களாக வீடு வீடாகச் சென்று உங்கள் ஞானத்தை பரப்பி வருகின்றேன். பிரிதம்புராவில் நான் ஒரு வகுப்பு ஆரம்பித்தபோது, ஒரு பகுதி ஒரு வீடு விடாமல் எல்லோருக்கும் அந்தச் செய்தியை கூறினேன். அதன் விளைவாக 113 பேர் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சியில் பங்கு பெற்றார்கள்.

குருதேவ்: இந்தத் தாயின் பேரார்வதைப் பாருங்கள். ‘ஓ, இது என்னால் முடியாது, எனக்கு வயதாகி முதுமை அடைந்துவிட்டேன்’ என்றெல்லாம் சொல்லக் கூடாது. வயதானாலும் நீங்கள் உங்களைச் சுற்றி உள்ள மக்களிடம் பேசி அவர்கள் தங்கள் மனங்களை தூய்மை செய்ய உதவலாம். வயதாகி தளர்ந்த உடம்பினால் ஒரு அறையை சுத்தம் செய்ய முடியாது, ஆனால் பேசுவதன் மூலம் மக்களின் மனங்களை சுத்தம் செய்யலாம்.

எனவே நாம் எல்லோரும் நிறைய செய்யலாம். ‘அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்று எண்ணுவதை நிறுத்துங்கள். வெட்கமில்லாமல் இருங்கள், தொண்டு செய்யுங்கள். நீங்கள் நல்லதே செய்தாலும் மக்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். உங்களைப் பற்றி கெட்டதாக நினைக்கக் கூட செய்வார்கள், ஏனென்றால் சிலரால் அதைத்தான் செய்ய முடியும். ஆனால் உங்கள் வார்த்தைகளால் சிலரது மனங்கள் சுத்தமானால்கூட அது நல்லது.

நாம் நம் நேரத்தை வீணாக்கக்கூடாது. நாம் எங்கு செல்கிறோம் என்பது பொருட்டல்ல, இந்த ஞானத்திலேயே இருக்க வேண்டும். அதனால் நம் உற்சாகம் குன்றாமல் இருக்கும். இல்லையென்றால் எனக்கு இது கிடைக்கவில்லை, அல்லது அது கிடைக்கவில்லை; அல்லது ஏதாவது உடல் நலக் குறைவு என்று தொடர்ந்து அழுதுகொண்டு இருப்போம்.

வாழ்க்கையில், இந்த மெய்யுடம்புடன், ஒன்றில்லை என்றால் மற்றது என்று நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். சில நேரம் தலைவலியால் அவதிப்படுவீர்கள், அல்லது சில நேரம் ஜலதோஷம் பிடிக்கும், அல்லது அதிகம் சாப்பிட்டதால் வயிறு சரியில்லாமல் போகும். ஏதோ ஒரு செய்தித் தாளில், சமீபத்தில் நான் படித்தது என்னவென்றால், பட்டினியால் இறப்பவர்களைவிட, அதிகம் சாப்பிட்டதால் நோய் வந்து இறந்தவர்களே அதிகம் என்கிறது ஒரு அறிக்கை.