அநீதிக்கு எதிராகப் போராடுவது உங்கள் கடமை


19 டிசம்பர் 2012  பெங்களூர், இந்தியா

கேள்வி: குருதேவ், போருக்கு முன் எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் கேட்காமல், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்ஜுனர் ஏன் போர்களத்தில் சந்தேகங்களை எழுப்பினார்?

குருதேவ்: கவனியுங்கள், அர்ஜுனர் சந்தேகமே கேட்கவில்லை, அவர் சொன்னதெல்லாம், ‘நான் போர் புரிய விரும்பவில்லை’, அவ்வளவுதான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முதலில் கேள்விகள் கேட்டார். அவர் சொன்னார், ‘அர்ஜுனா, நீ பரிதாபமாய் இருக்கிறாய், அழத்தேவையில்லாத விஷயத்திற்கு அழுகிறாய், மேலும் ஒரு கற்றறிந்த பண்டிதனைப் போல பேசுகிறாய்.’

அவர் சொன்னார்,’அசோச்யான் அன்வசச்சோஸ் த்வம் பிரக்யா வாதாம்ஸ் ச்ச பாஷசே கதாசூனு அகதாசூம்ஸ் ச்ச நஹனுசோச்சன்த்தி பண்டிதாஹ்’, (பகவத் கீதை 22 ஆம் அத்தியாயம், 11வது ஸ்லோகம்) அப்படித்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை ஆரம்பிக்கிறார்.

‘எதற்காக நீ வருந்தத் தேவையில்லையோ அதற்காக நீ வருந்துகிறாய்.’ பாருங்கள் நீங்கள் ஒரு போர் வீரனாகவோ, அல்லது ஒரு காவல் துறை அதிகாரியாகவோ  இருந்தாலோ உங்கள் வேலையை நீங்கள் செய்தாக வேண்டும்.

இன்று டில்லியில் ஒரு பெரிய ஊர்வலம்.

நேற்று ஆயிரக்கணக்கான வாழும்கலை தொண்டர்கள் (மேன்மையான இந்தியாவிற்கான தொண்டர்கள்) ஒரு மெழுகுவர்த்தி ஊர்வலத்தை ஆரம்பித்தார்கள், மேலும் இன்று நிறைய பேர் அதில் இணைந்திருக்கிறார்கள். JNU (ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்) இணைந்திருக்கிறது, IIT (இந்திய தொழில்நுட்பக் கழகம்) இணைந்திருக்கிறது, டில்லி பல்கலைக் கழகம் இணைந்திருக்கிறது, யாரோ ஒருவர் முதல் அடி எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது. நேற்று காலை, டில்லியில் உள்ள நமது ஆசிரியர்கள் கேட்டார்கள், ’குருஜி, நாங்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் சென்று பிரார்த்திக்க விரும்புகிறோம்.’

கோஷங்கள் இல்லை, யாரையும் குற்றம் சாட்டவில்லை, உரக்க கூக்குரல்கள் இல்லை, அமைதியாகச் சென்று அமர்ந்தனர். சில நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு மெழுகுவர்த்தி தீபங்கள் ஏற்றினர், பெண்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எளிமையாய் ஏற்படுத்திவிட்டனர்.

நம் நாட்டில் பெண்கள் மிக பாதுகாப்பாய் இருந்த ஒரு காலம் உண்டு, இப்போது இந்த இடம் வெகுவாக மாறிக்கொண்டிருக்கிறது.

நேற்று நம் தொண்டர்களும் ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஊர்வலம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நேற்று முடிவெடுத்தனர், சுமார் 6  மணி அளவில் எல்லாவிடத்திலிருந்தும் மக்கள் குவிந்தனர். தன் உணர்வுகள் பற்றி தெரியாதவர்கள் மற்றும் மனதை சாந்தப்படுத்தாதவர்களை விட, உள் அமைதியை மற்றும் உள் உலகத்தை சற்றேனும் தரிசித்தவர்களிடம் நான் அப்படி ஒரு வித்தியாசத்தை காண்கிறேன். அப்படிப்பட்டவர்கள் ஒரு வேலையை எடுத்துச் செய்யும் போது, கலக்கமாகவும், ஆவேசமாகவும் பிரச்சினை ஏற்படுத்துபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

ஒரு காவலர், ‘எனக்கு சட்டம் ஒழுங்கிற்க்கான பொறுப்பு எடுத்துக் கொள்ள விருப்பமில்லை.’ என்றால் என்னவாகும்?

அர்ஜுனருக்கு அதுபோலத்தான் ஆயிற்று. அவர் ஒரு போர் வீரர், அவருடைய கடமை மக்களை அநீதியிலிருந்து காப்பது, ஆனால் அவர் கூறினார், ’என்னால் மக்களை அநீதியிலிருந்து காக்க முடியாது.’ பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,’ஆம், நீ கற்றவனாக பேசுகிறாய், ஆனால் மக்களை காக்கும் கடமையிலிருந்து தவறி ஓடிப்போகிறாய்.’

நம் டில்லி காவலர்கள் சொல்வதுபோல, ’இது என் பொறுப்பல்ல.’ அல்லது அரசியல்வாதிகள் சொல்வது போல, ’இது என் வேலையில்லை.’ ஒரு விதத்தில் நான் அவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்; ஏனென்றால் மனித மதிப்புகள் மக்களிடம் இல்லை என்றால் எண்ணிக்கையில் வெகு சிலரே உள்ள காவலர்கள் என்ன செய்ய முடியும். இருந்தாலும்!!

காவல் துறையின் ஊக்கம் அடிக்கடி குலைக்கப் படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா? காவலர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளை தேடி கைது செய்தபின், அரசியல்வாதிகள் தொலைபேசியில் அழைத்து, ’இல்லை, இந்த ஆள் மீது எந்த புகாரும் பதிவு செய்யாதீர்கள், அப்படியே விட்டுவிடுங்கள்’ என்கிறார், காவலர்களும் அப்படியே அந்தக் குற்றவாளியை வெளியே விட்டாகவேண்டும். வெளியே விடப்பட்ட அந்த குற்றவாளி காவலர் பின் வந்து அவரை பயமுறுத்துகிறார்கள் அதனால் காவலர்களின் ஊக்கம் குலைக்கப்படுகிறது. இது அதர்மம் (சட்டத்திற்கு புறம்பானது) இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட அறிக்கை மற்றொரு அதர்மம். யார் இடஒதுக்கீடு பெற்றாலும் அது தவறு. வேலைக்கு இட ஒதுக்கீடு பெறலாம், ஆனால் வேலையில் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு பெறுவது சரியல்ல.
ஒரு மேலாளர் தனக்குக் கீழே பணிபுரிய ஒரு கணக்கரை வேலைக்கு வைக்கிறார். அந்த கணக்கர் தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால், மூன்று வருடங்களில், அந்த மேலாளரை விட மேல் பதவி கிடைத்தால் அந்த மேலாளரின் ஊக்கம் என்னவாகும்?

நாட்டின் ஆட்சி அதிகார அமைப்பு முழுதும் பாழடைந்து விடாதா? இளநிலையில் உள்ளவர்கள் முதுநிலை அதிகாரிகளை விட முதுநிலை பதவி பெற்றால் அவ்வளவுதான், இந்த அமைப்பே முழுமையாய் சிதைந்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் ஒரு மேலதிகாரி, உங்களுக்கு கீழ் இருப்பவர் பதவி உயர்வு பெற்று உங்களை விட மேல் பதவிக்கு சென்றுவிட்டால், உங்களால் அவரை அவர் செயல்களுக்கு பொறுப்பாக்க தைரியம் இருக்குமா? முதலாவதாக இது இல்லை.

இரண்டாவதாக, நீங்கள் உங்கள் துறை செயல்பாடுகளை மேலதிகாரியாக நன்கு நிர்வகிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்களுக்கு கீழ் இருந்த இளநிலை அதிகாரி உங்களுக்கு மேலான பதவியை எட்டி உங்களைப் பழி வாங்கினால், அது அப்படி ஒரு அவமானம்.

அதிகார ஆட்சி அமைப்புத்தளத்தில், இளநிலையில் இருக்கும் ஒருவர் தனக்கு மேல் இருப்பவரை விட திடீரென்று உயர்வது, மக்களுக்கு அப்படி ஒரு அவமானம். இது அதிகார ஆட்சி அமைப்புத் தளத்தையே முடிவுக்குக் கொண்டுவிடும்.நம் நாட்டில் இது ஒரு பரிதாபமான நிலை.இது கொஞ்சமும் சரியில்லாத விஷயம் என்று காலையிலிருந்து நான் பலரை அழைத்து கூறி வருகிறேன். நம் நாட்டில் ராஜ்ய சபா நுண்ணறிவு உடையோரின் அவையாக இருக்க வேண்டியது. இப்படிப்பட்ட சட்டத்தை எப்படி இந்த நுண்ணறிவு பெற்றோரின் அவை நிறைவேற்றுகிறது? இது மிக அபாயகரமானது. எதிர்காலத்தில், மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இது ஜாதி பற்றி அல்ல. உங்களுக்குக் கீழே இளநிலையில் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட மக்கள், தங்களின் ஜாதித் தகுதியால் மட்டுமே உங்களுக்கு மேலே செல்வது சரியானதல்ல.
இது அநீதி. இது உச்ச நீதிமன்றத்தில் நிற்காது என்று நான் நினைக்கிறேன். மேலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இரண்டு முறை நிராகரித்துவிட்ட இந்த சட்டத்தை, இவர்கள் திரும்பவும்  நிறைவேற்றப் பார்கிறார்கள். இது ஒத்துக்கொள்ளவே முடியாத விஷயம். நீதிமன்றம் இதை அநீதி என்று கூறிய பின்னும், வேறு வழியில் இதை நிறைவேற்றப் பார்ப்பது செய்வதற்கு சரியானதல்ல. மக்களாகிய நாம் கண்ணைமூடிக்கொண்டு அமர்ந்திருக்க முடியாது.

கல்லூரியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சரி, ஆனால் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு நம் ஆட்சி அமைப்பையே அழித்துவிடும். இது ஒரு அதி  முக்கியமான பிரச்சினை. உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை? உங்களில் எத்தனை பேர் அப்படி நினைக்கிறீர்கள்? (எலோரும் கைகளைத் தூக்குகிறார்கள்).

அதைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார், ‘துரியோதனன் அப்படி ஒரு அராஜகம் செய்துகொண்டிருக்கிறான், நீ கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க விரும்புகிறாயா. போரிடுவது உன் கடமை. வா, எழுந்திரு.’ பிறகு அவன் போருக்குத் தயாரானபோது, அவனுக்கு ஞானத்தை அளிக்கிறார், ‘யோகாஸ்த குரு கர்மாணி சங்கங் த்யக்த்வ தனஞ்சயா.’ (பகவத் கீதை 2ஆம் அத்தியாயம், 48 ஆம் ஸ்லோகம்)

‘முதலில் உள்ளே சென்று எல்லாவற்றையும் நீயே சுத்தம் செய். வெறுப்பினால் போர் புரியாதே, நியாயத்திற்காக போர் செய்; சமநிலையாய் போர் செய்.’ வெறியுடனும் கோபத்துடனும் போர் செய்யும்போது உன்னை நீயே காயப்படுத்திக் கொள்வாய், ஏனென்றால் வெறிகொள்ளும்போதும் உணர்ச்சிகள் பொங்கி எழும்போதும் உன் புத்தியும் மனமும் சரியாக வேலை செய்யாது.
அதனால்தான் உன் மனம் முதலில் அமைதியாக வேண்டும். அது அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கையில், நீதி கிடைக்கும், சரியான எண்ணங்கள் தோன்றும், உன் யோசனைகள் அதிக படைப்பாற்றலுடன் நேர்மறையாய் வெற்றிகரமாய் இருக்கும். வெறி இருக்கும்போதுதான் எதிர்மறை யோசனைகள் தோன்றும். நீங்கள் அமைதியாய் இருக்கும்போது நேர்மறையான படைப்பாற்றல் மிகுந்த யோசனைகள் உதிக்கும். இதுதான் பகவத் கீதையின் சாரம்.

யுத்யஸ்வ விகடா-ஜ்வராஹ்.’ ஜ்வராஹ் என்றால் ஜுர வேகம், அந்த கோபம், வெறுப்பு; அதை முதலில் விட்டுவிட்டு பிறகு போர் செய்.        

எப்படி பகவத் கீதை இன்றைய தின சூழலுக்கும் ஒத்துப் போகிறது என்பதை பாருங்கள். மிகவும் வெளிப்படை. நேற்று, இன்று முழுவதும், இந்தியா கேட்டிற்குச் சென்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, நாடெங்கும் ஒரு பெரிய அலையை ஏற்படுத்திய நம் தொண்டர்களைப் பற்றி நான் மகிழ்கிறேன்.

டெல்லியில் நம் வாழும் கலை தொண்டர்கள் நேற்று செய்தது, இன்று நாடு முழுவதும் பரவியிருக்கிறது. எல்லாயிடங்களிலும், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தி மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசுகிறார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று. உங்கள் சக்தியை குறைத்து எடை போடாதீர்கள், இதைத்தான் நான் அடிக்கடி கூறிவருகிறேன். நம்மிடம் இருக்கும் சக்தி ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு தலைவர், நீங்கள் இந்த சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்தால் பின்னர் இந்த நாடு மாறும், இங்குள்ள மக்கள் மாறுவார்கள். ஒவ்வொரு வருக்குள்ளும் இந்த உறுதியான விழிப்புணர்வு இருக்கிறது. எது முக்கியமேன்றால், நாம் பொறுப்பெடுத்துக் கொள்வதுதான். நாம் விரல் நீட்டி ஒருவரை பொறுப்பாளியாக்க முடியாது. இவ்வளவு மக்கள் தொகை உள்ள நாட்டில், இந்த ஒரு காவலர் தன் வேலையைச் செய்யவில்லை என்று கூறிவிட்டுப் போக முடியாது.

மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அது நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது நல்ல விஷயம்.

கேள்வி: நாம் இறக்கும் நாள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதா அல்லது நம் வாழ்நாளில் அது மாறுமா?

குருதேவ்: ஆம், மாற முடியும். பெருவழிசாலையில் செல்லும்போது, சில வெளிச் செல்லும் பாதைகள் உண்டு, அதில் நீங்கள் போகலாம், அல்லவா?! அதைப் போலவே, எல்லோருடைய வாழ்க்கையிலும், சில வெளியே செல்லும் பாதைகள் வரும். ஒரு வெளிச்செல்லும் பாதையை விட்டு விட்டால் அடுத்ததிற்குப் போகலாம்.