மறுபடியும் பிறகின்றோம்....


27 – டிசம்பர் – 2012 - பாட் ஆண்டோகாஸ்ட் - ஜெர்மனி

கே: மறுபிறவியை ஏன் தவிர்க்க வேண்டும் என்று தயவு செய்து விளக்குவீர்களா?

குருதேவர்: நீ விழிப்புணர்வோடு கவனித்தால், வாழ்க்கையில் நிறைய துன்பம் இருக்கிறது என்பதை அறிவாய். துன்பம் உனக்குப் பிடிக்காத ஒன்று. நீ துன்பத்தை விரும்புவதில்லை. நாம் எதை விரும்பு வதில்லையோ அதை துன்பம் என்று சொல்லலாம். அது வாழ்வில் இருக்கிறது. கணவன் மனைவி இடையே, தந்தை தாய்க்கு நடுவே, தாய் மகளுக்கிடையே, மகள் மற்றும் மகனோடு, நண்பர்களோடு, பகைவர்களோடு துன்பம் ஏற்படுகின்றது. உன் உடலும் உனக்கு மிகத் துன்பத்தைக் கொடுக்கிறது. நீ எது செய்தாலும் அதில் சிறிது துன்பம் இருக்கிறது.

நீ இந்த உலகில் பிறக்கும் போது மற்றவர்களை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும் போது, உன்னால் எழுந்து நடக்கக் கூட முடியாது. யாராவது உன்னைத் தூக்க வேண்டும். யாராவது உன் உடலைத் துடைக்க வேண்டும். பிறந்ததிலிருந்தே உனக்கு மற்றவர்களின் உதவி தேவையாக இருக்கிறது. வயோதிகம் அடைந்த பின்னும் மற்றவர்களின் உதவி உனக்குத் தேவை. ஆனால் நீ சுதந்திரமானவன் என்ற போலியான கருத்தை உனக்கு பணம் உண்டாக்குகிறது. அதனால் தான் அதை மாயை என்று சொல்கிறோம். மாயை என்பது உன் மனதில் தவறான கருத்தை உருவாக்குகிறது.

நீ யாரிடமாவது சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தால், அவர்கள் உனக்காக வேலை செய்வார்கள். அதனால் நீ பணத்தின் உதவியால் தனியாக எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறாய்.வாழ்க்கை என்பது மற்றவர்களின் உதவியால் தான் நடக்கும். மற்றவர்களின் உதவியை நீ நாடும் போது துன்பம் ஏற்படும். துன்பம் உனக்கு மகிழ்ச்சியைத் தராது. நீ துன்பத்தை விரும்புவதில்லை. அதனால் தான் “எனக்கு மற்றொரு பிறவி வேண்டாம். துன்பப்பட்ட வரை போதும்” என்று சொல்கிறார்கள். கற்பனையில் நீ மறுபடியும் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் அடி வாங்குவதாக நினை. கல்லூரிக்குச் சென்று மாணவப் பருவத்தில் எல்லா இடர்களையும் மீண்டும் சந்திப்பதாக நினைத்துக் கொள்.

மாணவர்களைப் பார். முகம் வீங்கி, மிகக் கோபமாக இருப்பவர்களைப் பார். அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கோபமாக இருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. உன் பகைவர்கள் மட்டும் உன்னைத் தொந்தரவு செய்வதில்லை. உன் நண்பர்களாலும் நீ பாதிக்கப்படுகிறாய். எல்லாமே தொந்தரவு தான்.

உன் மனத்தில் பகைவர்களைப் பற்றிய நினைவு மட்டும் இருப்பதில்லை. அதில் உன் நண்பர்களைப் பற்றிய எண்ணங்களும் நிரம்பியிருக்கின்றன. எல்லா எண்ணங்களாலும் நீ பாதிக்கப்படுகிறாய். மேலும் உன் தொந்தரவுகள் அனைத்தையும் ஒரு பக்கம் வைத்தாலும், உன் மனமே உன்னுடைய மிகப் பெரிய தொந்தரவுக்கான காரணமாகிறது. இவ்வுலகில் உள்ள எதுவும் உன்னைப் பாதிப்பதில்லை. உன் மனமே நீ பாதிக்கப் படுவதற்கான காரணமாக இருக்கிறது.மற்றவர்கள் உன்னைத் தொந்தரவு செய்வதாக எண்ணினாலும், அதற்கான காரணம் அவர்கள் அல்ல. உன்னுடைய மனமே உன் பாதிப்புக்கான காரணம்.

நீ உன் மனதிலிருந்து (எண்ணங்களிலிருந்து) விடுபட விரும்புகிறாய். அதனால் தான் “எனக்கு மறு பிறவி வேண்டாம்” என்று சொல்லுகிறாய். எப்போது உன் பாதிப்புக்கு மற்றவர்கள் பொறுப்பல்ல, பாதிப்புக்கு உன் மனமே பொறுப்பு என்று அறிவது தான் ஞானமாகும். அந்த ஞானம் உதயமாகும் போது, “நான் பத்து முறை பிறந்தாலும் சரி ,100 முறை, 1000 முறை வேண்டுமானாலும் நான் பிறந்து வருவேன்” என்று சொல்வாய். வாழ்க்கை இன்ப மயமானது. உன் மனம் உண்மையைத் திரித்து, நரகத்தையோ அல்லது சொர்க்கத்தையோ உருவாக்குகிறது. எனவே உன் மனதின் பிடியிலிருந்து விடுதலையை நீ விரும்புகிறாய். ஆனால் நான் மறுபடி பிறக்க விரும்பவில்லை என்று சொல்கிறாய்.

கே: மிகவும் ஆணவம் பிடித்தவர்களுடன், அதுவும் அவர்கள் நடத்தையால் மற்றவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

குருதேவர்: அவர்கள் மிகவும் ஆணவம் பிடித்தவர்களாக இருக்கட்டும். நீ ஏன் அதனால் பாதிக்கப் படுகிறாய்? அவர்களையும் விட அதிகமாக உன் ஆணவத்தை வளர்த்துக் கொள். கதை முடிந்து விடும். உண்மையில் சொல்லப்போனால், உன் ஆணவம் அவர்களின் ஆணவத்தை விட பெரியது என்று நான் சொல்வேன். மற்றவர்கள் பெரிய ஆணவத்துடன் நடந்து கொள்ளட்டும். அதனால் என்ன? மற்றவர்களின் ஆணவத்தை அழிக்க அல்லது குறைக்க நீ ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுந்து இட்டிருக்கிறாயா?

யாராவது அதிக ஆணவத்தோடு இருந்தால், இயற்கையே அவர்களுக்குப் பாடம் புகட்டும். என்றாவது ஒருநாள் துன்பப்படுவார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடு. அவர்களே அனுபவப்படட்டும்.
மற்றவர்களின் ஆணவத்தைப் பற்றி நீ ஏன் துன்பமடைகிறாய்? அது எனக்குப் புரியவில்லை. உன்னால் எவ்வளவு முடியுமோ, நீ என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்து விட்டு மேலே செல். அவ்வளவு தான். வாழ்க்கையில் அப்படித் தான் செல்ல வேண்டும்.

யாராவது உன்னிடம் விவகாரம் செய்யும் போது, நீ எழுந்து நின்று அவர்களைப் பார்த்து கத்தலாம். சூளுரைக்கலாம். “நேற்று இப்படிச் செய்தாய், அதற்கு முதல் நாள் அப்படிச் செய்தாய்” என்று சொல்லலாம். என்றோ நடந்த (நேற்றோ அல்லது ஒரு மாதம் முன்போ நடந்த) தவறைப் பற்றிப் பேசி தற்சமயத்தை வீணடிக்கிறாய் என்று நான் சொல்வேன். தற்சமயத்தின் அழகான தருணத்தை நீ வீணாக்குகிறாய்.
“கடந்த காலத்தில் நடந்தவைகளைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. தற்சமயத்தை வீணாக்க மாட்டேன்” என்று இப்போதே ஒரு முடிவுக்கு வா. அவ்வளவு தான். இவ்வுலகம் ஒரு சமுத்திரத்தைப் போன்றது. இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டேயிருக்கும். அவைகள் கடந்து செல்லும். ஒரு காரணமும் இல்லாமல், நண்பர்கள் பகைவர்களாகவும், பகைவர்கள் நண்பர்களாகவும் மாறக்கூடும். நீங்கள் மற்றவர்களுக்கு நன்மையே செய்திருக்கும்போதும், ஒரு காரணமும் இல்லாமல், அவர்கள் உங்களுக்கு பகையாக நடந்து கொள்வார்கள். அப்படிப் பட்ட அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கிறது? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)

“கடவுளே! நான் இவருக்கு நன்மையே செய்திருக்கும் போது, ஏன் நம்மைக் குறை சொல்கிறார்? ஏன் என்னுடைய பகைவராகி விட்டார்?” என்று நீ ஆச்சரியப்படுவாய். மேலும் சிலருக்கு நீ எதுவுமே உதவி செய்யாத போதும், அவர்கள் தானாகவே முன்வந்து உனக்கு நன்மை செய்வார்கள். உனக்கு நிறைய உதவுவார்கள். இப்படிப்பட்ட அனுபவம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)
பார்! நண்பர் பகைவராவதும், பகைவர் நண்பராக மாறுவதும் கர்ம வினைப்படி நடக்கிறது. அதனால் தான் எல்லாவற்றையும் ஒரு கூடையில் போட்டு விட்டு ஓய்வெடு. நான் இதை ஒரு கொள்கையாகப் பின்பற்றுகிறேன். நீ ஒருவருக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், அவர் உன் மேல் கோபமாக இருக்கிறார். அல்லது உன்னைப் பழி சொல்கிறார். என்ன செய்ய முடியும்? கடந்து போன நிகழ்ச்சியை, அந்த எண்ணத்தை அசைபோட்டு, அசைபோட்டு தற்சமயத்தை வீணாக்காதே.

இது சரியான கருத்து தானே? தற்சமயத்தைக் கொண்டாடுவோம்.

முன்பெல்லாம், நான் மக்கள் சொல்வதைக் கேட்பேன். அவர்களுடைய கதைகள், மற்றவரைப் பற்றிய புகார்கள் எல்லாவற்றையும் கேட்பேன். “இனிமேல் யாருடைய புகார்களையும் கேட்கமாட்டேன். தற்சமயத்தின் சக்தியை வீணடிக்க விரும்பவில்லை” என்று திடீரென்று மனதில் தோன்றியது. உன் கர்மவினைப்படி, உன்னுடைய பிரச்சினைகளை அனுபவிப்பது உன் பொறுப்பு. நம் முன்னோர்கள் சொன்னதும் இதுவே. அவர்கள் அமர்ந்து உன் பிரச்சினைகளையும் கதைகளையும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். வா! தற்சமயத்தை விழிப்போடு பார்! (கைவிரலைச் சொடுக்குகிறார்) அது உன் மனதுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி சக்தியைக் கொடுக்கும்.

உடனே அப்படிச் செய்யத் துவங்காதே. உன்னை உணர்ச்சியற்ற கொடுமையான மனிதன் என்று சொல்வார்கள். புரிகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். மக்கள் சொல்வதைக் கேள். நானும் பல ஆண்டுகள் அப்படிக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் “சரி போதும். இதற்கு மேல் நான் கேட்க மாட்டேன்” என்று சொல்ல வேண்டும்.

சில சமயம் நம் வீட்டில் வயதானவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.குற்றம் சாட்டுவதை மகிழ்ச்சியோடு செய்வார்கள். எவ்வளவு பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள். (பலர் கைகளை உயர்த்துகிறார்கள் )அவர்கள் மிக மகிழ்ச்சியோடு மற்றவரைப் பற்றிக் குற்றம் சாட்டுவார்கள். புகார் செய்வார்கள். யாராவது காது கொடுத்துக் கேட்டால், மேலும் மேலும் பழி சொல்வார்கள். அந்த சமயம் ஒரு இசைத் தட்டை இயக்கி, “வாருங்கள்! இந்த இசையைக் கேட்கலாம். நடனம் ஆடலாம். குற்றம் சொல்வதை நிறுத்திவிடுங்கள்” என்று சொல்.

கே: குருதேவா! 2012 நந்த ஆண்டு, பரமானந்தம் தரும் ஆண்டு என்று சொன்னீர்கள். ஆனால் 2012 மிகக் கடுமையான ஆண்டாக இருந்ததே? அது எப்படி?

குருதேவர்: நந்த ஆண்டு இன்னும் முடியவில்லை. அது மார்ச்சு மாதத்தில் முடியும். இன்னும் மூன்று மாதங்கள் மீதி இருக்கின்றன. உனக்குள் ஒரு குமுறல் இருப்பது நல்லது. அப்போது விழிப்புணர்வு பெறுவாய். வெளி உலகில் மட்டும் அப்படி நடப்பதில்லை. ஆன்மீகத்திலும் அப்படித்தான் நடக்கிறது. மக்கள் ஆன்மீகத்தை நாடி இங்கு வருகிறார்கள். ஆனால் பல தடைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அவன் இப்படிச் சொன்னான். அவள் இப்படிச் சொன்னாள் என்று குறை சொல்கிறார்கள். வா! உலகம் கெட்டது. அதற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கிறது. அப்படியிருப்பதால் நீ உன்னைக் கட்டுப்பாட்டோடு நேர் படுத்திக் கொள்ளலாம். உன்னுடைய குறைகளை நீ உணராத போது, நீ மற்றவர்களின் குறைகளைப் பார்க்கிறாய். எல்லோரும் கெட்டவர்கள். நான் மட்டும் குறையில்லாத நல்லவன் என்று நினைக்கிறாய்.

அப்படி நினைப்பவர்கள் மிக மிகத் தவறு செய்கிறார்கள் என்று நான் சொல்வேன். அவர்கள் ஆன்மீக சாதகர்கள் அல்ல. ஆன்மீக சாதகர் தன்னை முதலில் பரிசோதிக்க வேண்டும். நான் என் தவறுகளை, குறைகளை எப்படி போக்கிக் கொள்ளலாம் என்று பார்க்க வேண்டும்.

குளிர் காலத்தில் ஜெர்மனியில் வெளியில் மிகவும் குளிராக இருக்கிறது என்று குற்றம் சொல்ல முடியாது. அது அப்படித்தான் இருக்கும். முடிந்த வரை வீட்டுக்குள்ளோ, அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருப்பது நல்லது. எனவே இந்த ஞானத்தை அறிந்து கொள். அது தான் உண்மை.அதனால் தான் யோக சாதனைகளில், தியானத்தில் ஈடுபடுகிறோம். உனக்குள்ளே ஆத்ம சக்தியை உருவாக்கி, உன்னால் எந்த சூழ்நிலையிலும் புன்முறுவலோடு நடக்க முடியும். எல்லோரும் அப்படிப்பட்ட நிலையை அடைய விருப்பம் உள்ளவரே. இல்லையா? அப்படிப்பட்ட ஆத்மபலம் இருக்கும் போது, யாரும் உன்னிடமிருக்கும் புன்முறுவலை அபகரிக்க முடியாது. அது தான் மிக அவசியம்.

கே: ஆத்ம பலத்தைப் பெருக்கி, அதைக் குறையாமல் வைத்திருப்பது எப்படி?

குருதேவர்: இந்த ஞானத்தை அறிந்து விழிப்புணர்வு பெறுவதால் ஆத்ம பலத்தைப் பெருக்க முடியும்.ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வந்து ஞானத்தைப் பற்றிக் கேட்டுச் சென்றால் மட்டும் போதாது. உன் அன்றாட வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் உன் ஆத்ம பலம் நிலைத்திருக்கும்.மேலும் பணிவாக இருப்பது மிகவும் முக்கியம். சிலசமயம், சிலர் ஞானத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் எல்லாம் அறிந்தவன் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஆணவமாக நினைப்பது சரியல்ல. எனக்கு ஞானத்தைப் பற்றித் தெரியும். மேலும் அதில் என்ன இருக்கிறது? என்று சொல்வது சரியல்ல. மீண்டும் மீண்டும் ஞானத்தைப்பற்றி சிந்தனை செய்ய வேண்டும். ஒரு முறை கேட்டதை, தெரிந்தவற்றை, மறுபடியும் கேட்டு அதன்படி நடப்பது மிகவும் முக்கியம்.

இந்தக் காரியம் கடினமானது அல்ல. ஞானத்தை சில க்ஷணங்கள் நீ மறந்தாலும் அது திரும்பி வரும். நீ அதை இழக்க மாட்டாய் என்ற அறிவு, அது திரும்பிவரும் என்ற அறிவு எப்போதும் உன்னிடம் இருக்கும்.
கே: “நம்முடைய வசதியான வரையரைகளை விட்டு வெளியேறி காரியம் செய்வது நல்லது. நமக்குப் பிடிக்காத, நமக்கு வசதியில்லாத காரியங்களையும் சில சமயம் செய்வது நல்லது” என்று சொல்வீர்கள். அது ஏன் என்று விளக்குவீர்களா?

குருதேவர்: உன் வசதியான வட்டத்திலிருந்து வெளியே வருவதால் உன் திறமைகளை வளர்த்து உன்னை திடமானவனாக்கும். உன் வளர்ச்சிக்கு உதவும். நீ உன் வட்டத்துக்குள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறாய். ஏனென்றால் அதை விட்டு வெளியேறத் தடையாக இருப்பது உன் பயம், கவலை, மோகம் முதலியன. உன்னுடைய மோகமே உன்னை அடைத்து வைத்திருக்கிறது. ஒரு நாள் அதை நீ உணர்ந்து, இந்தத் தடைகளை மீறி வெளியே வருவேன் என்று சொல்லும் போது உன் பலம் உனக்குத் தெரியவரும்.

கே: நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன்? நம் அன்பை அவர்கள் உணரவில்லையா?

குருதேவர்: ஏனென்றால் ஞானம் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. உயிரின் மதிப்பை அவர்கள் அறியவில்லை. மரணத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியவில்லை. பிராண சக்தியைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றிய ஞானம் அவர்களுக்கு இல்லை. தன் சுகத்துக்கு அதிக மகத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் (அப்படி நடக்காத போது) தற்கொலை செய்து கொள்கிறார்கள். யாருக்கு மிக அதிகமான சுகம் தேவையோ அவர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சகிப்புத் தன்மை கிடையாது. சிறிய அசௌகரியத்தைக் கூட அவர்களால் தாங்கமுடியாது. அப்படிப்பட்ட சமயத்தில் அவர்களுக்கு அதிக பிராண சக்தி தேவை.

நீ ஒருவரை தற்கொலை செய்து கொள்ளாதே என்று மேலும் மேலும் சொல்லும் போது, “முடியாது. நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சொல்வார்கள். சில சமயம் அப்படிப் பட்டவருக்கு நான், “சரி, தற்கொலை செய்து கொள். ஆனால் அதற்கு முன்பு எவரெஸ்ட் மலையுச்சிக்குப் போய் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள். வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு சாகாதே. ஒரு சாகசமான காரியத்தைச் செய்து விட்டு சாகலாம். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கட்டும்” என்று சொல்வேன்.

தற்கொலை செய்து கொள்வது மூடத்தனமாகும். அவர்களுக்கு இந்த அழகான வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. உயிரின் மதிப்பையும் அவர்கள் அறியவில்லை. அதனால் தான் மூச்சின் மகத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். (வாழும் கலைப் பயிற்சிகள்)
பிராண சக்தி மிகக் குறைவாக இருக்கும் சமயங்களில் தற்கொலை பற்றிய எண்ணம் எழுகிறது. பிராண சக்தி அதிகரிக்கும் போது இந்த எண்ணம் வராது. பிராண சக்தி அதிகமாக இருக்கும் போது எந்தக் குற்றமும் நிகழாது. பிராண சக்தி அதிகரித்திருக்கும் போது நீ உனக்கோ, மற்றவருக்கோ கொடுமை செய்யமாட்டாய். அதனால் தான் மக்களுக்கு, சுதர்சன கிரியா, பிராணயாமம் மற்றும் தியானத்தைப் பற்றி பயிற்சி அளிப்பது அவசியம்.

மேலும் தற்கொலைக்கு முயலும் மக்களை, மற்றவர்களுக்கான சேவையில் ஈடுபடுத்த வேண்டும். பழங்காலத்தில் இந்தியாவில் சேவை செய்யாதவர்களுக்கு ஞானம் கற்பிக்க மாட்டார்கள். 10 அல்லது 12 ஆண்டுகள் ஒரு ஆசிரமத்தில் தங்கி, எலும்பு ஒடிய சேவை செய்த பின் ஞானம் பற்றி அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஞானம் புகட்டப்படும். உடல் சேவையில் ஈடுபட்டு வலுவாக இருக்கும் போது, மனமும் சரியான நிலையில் செயல்படும். பணிவும் வரும். களரிப்பயிற்சியிலும் இப்படித் தான் நடக்கிறது. களரிப் பயிற்சியைப் பார்த்திருக்கிறீர்களா? மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் தான் ஒருவன் வெற்றியடைய முடியும்.

படை வீரர்களுக்கும் அப்படிப் பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் அவர்களின் உணர்ச்சி அலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தன்னைப் பற்றி எண்ண நேரமில்லாமல் அவர்களுக்கு இடை விடாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கே: ஒரு பிரச்சினைக்கு முடிவு தேடும் சமயத்தில் நம் உள்ளுணர்விலிருந்து விடை கிடைக்கிறது. உள்ளுணர்வில் யார் பேசுகிறார். அதை எப்படி அறிவது? அது நம் மனமா, சுய உணர்ச்சியா, அல்லது தெய்வமா?

குருதேவர்: எல்லாமே ஒன்று தான். அதைப்பற்றிக் கவலை வேண்டாம். அதிகமாக ஆராய அவசியம் இல்லை. நாம் ஓவ்வாக இருக்கும் போது (மனம் அமைதியாக இருக்கும் போது) நமக்கு சரியான விடை கிடைக்கும். சுய உணர்வு முயற்சி செய்வதால் வராது. அது இயல்பாக நடக்கும் ஒன்று.

கே: உணர்ச்சிக் கொந்தளிப்பால் கோபம் வரும்போது, அதைக் கட்டுப் படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதை நினைத்துப் பின்னால் வருந்துகிறேன். அதிக கோபத்தை எப்படிக் கட்டுப் படுத்தலாம்?

குருதேவர்: சொல்லு! இப்போது முன்பைவிட எளிதாக இருக்கிறதா? முன்னாலும் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது. ஆனால் அது உன்னை வருத்துவது குறைந்திருக்கிறது. யோக சாதனைகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய். அது உன் கோபத்தைக் குறைக்கும். அப்படிக் குறையாவிட்டால், இறைவனே உனக்கு உதவ முடியும். நல்லதே நடக்கட்டும்.

இன்னும் நீ கோபப் பட்டால் நீ கோபப்படு. அது மற்றவர்களுக்குப் பொழுது போக்காகி விடும். உன்னைப் பார்த்து நகைப்பார்கள். உலகில் அதுவும் அவசியம். உப்பு உரைப்பான விஷயங்கள் மக்களுக்குத் தேவை. காரமான ஊறுகாய் மற்றும் மிளகுத்தூள் சிறிது தேவைதான். உன் கண்ணில் மிளகுத்தூள் விழாத வரை அது சரி தான். (கோபம் அளவோடு இருக்கட்டும்)