குருவின் அருகாமையில் இருத்தல்..


29 டிசம்பர் 2012 பாட், ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி

கே: உபநிஷதத்தைப் பற்றிச் சொல்லும்போது அது குருவின் அருகாமையில் இருப்பது என்று விளக்கினீர்கள். உடல் ரீதியில் அருகில் அமர்வது தான் உபநிஷதமா?


குருதேவர்: நாம் அனைவரும் ஏற்கனவே இங்கு ஒன்றாக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருக்கிறோம். இல்லையா? அருகாமை என்பது மனத்திலிருந்து வருவது. இதய பூர்வமாக உணர்வது. உன் மனம் எங்கோ இருந்து, சந்தேகத்தால் நிரம்பி, எதிர்மறை எண்ணங்களில் உழல்வதாக இருந்தால், நீ என் அருகில் அமர்ந்திருந்தால் கூட அது உதவாது.

ஆனால், உன் இதயம் நிர்மலமாக இருந்து உன் மனம் தூய்மையாக இருந்து உனக்கு சரியான நோக்கம் இருந்தால், நீ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த போதிலும் நாம் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருக்கிறோம்.

நாம் இருவரும் ஒருவரே, நாம் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருக்கிறோம் என்று அப்போது தான் உனக்குத் தெரிய வரும். அப்படிப் பட்ட முழு உணர்வு உனக்கு இருந்தால் நமக்கிடையே இடைவெளி இல்லை என்பது உனக்குப் புரியும்.ஆனால், நீ இங்கு அமர்ந்து, “குருதேவர் என்ன நினைக்கிறார். அவர் எல்லோரையும் கூட்டி வைத்து தலைமை பதவியை நாடுகிறாரோ என்ற சந்தேகம் இருந்தால் அருகாமையை உணர முடியாது.

ஒரு பெண் “நீங்கள் எல்லோரையும் வசியம் செய்யும் சக்தியைப் பெற என்ன செய்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்டாள். மக்களை வசியம் செய்ய நினைப்பவன் மக்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறான். மக்களிடமிருந்து அதைப் பெற முயல்கிறான். ஆனால், எனக்கு எதுவும் வேண்டாம். நான் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும், எல்லோரும் ஆன்மீகப் பாதையில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பார்! இன்று உலகில் அனைவருக்கும் ஆன்மீக ஞானம் தேவை. நமக்கு வன்முறையற்ற சமுதாயம் தேவை. இந்தியாவில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கொடும் பாவமான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அது மிகவும் துர்பாக்கியமான ஒரு நிகழ்ச்சி. நாடு முழுவதும் கொந்தளிக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்குக் கேடு விளைந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாமல் குற்றங்கள் நிகழ்கின்றன. மக்கள் மற்றவர்களை ஒரு மனிதராகப் பார்ப்பதில்லை.

அதனால் தான் நான் வன்முறை, குற்றங்கள் இல்லாத ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்புகிறேன். எல்லோரும் இப்படிப் பட்ட உலகை அடைய விரும்ப வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சமுதாயம் உருவாக வேண்டும். இல்லையா? யாரோ “குருதேவா! உங்களுக்கு நிறைய சக்தி இருக்கிறது” என்று சொன்னார். என்ன சக்தி? நான் எல்லோரையும் வசியம் செய்யும் சக்தி வாய்ந்தவன் என்று நீங்கள் சொல்வதை ஒரு அவமதிப்பாக நினைக்கிறேன். “ஓ! அந்த ஆன்மீக இயக்கம் அல்லது மூடநம்பிக்கையுள்ள கூட்டம், அவர்கள் பலத்தால் எல்லோரையும் அடக்க வல்லவர்கள்” இப்படி நினைப்பது மூடத்தனமாகும். இதெல்லாம் மக்களின் மனத்தில் இருக்கும் தவறான கருத்துக்களாகும்.

அந்தப் பெண்ணிடம், “இந்தக் கேள்வியை அன்னை தெரசாவிடம் கேட்பாயா? இல்லை. ஏன் கேட்கக் கூடாது. ஏனென்றால் அவர் ஒரு ஏற்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர். யாரும் அன்னை தெரசாவிடம், அவர் தன் வசிய சக்தியால் மக்களை ஆட்டி வைத்தார் என்று சொல்லவில்லை. அவர் ஆசிரமத்தில் 4000 பேர்கள் தங்கி இருக்கின்றனர். எல்லோருமே, தங்கள் வீட்டை விட்டு வந்து இங்கு ஏழ்மையோடு இணைந்த வாழ்க்கை நடத்துவோம் என்ற சபதம் எடுத்திருக்கிறார்கள்.

நான் யாரையுமே, நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வந்து விடுங்கள் என்று கேட்பதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து மகிழ்ச்சியோடு இருங்கள் என்று தான் சொல்கிறேன். எங்கிருந்தாலும் மகிழ்வோடு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கி அதில் வாழுங்கள் என்று தான் சொல்கிறேன்.4000 பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வந்து அன்னை தெரசாவிடம் வந்து தங்கி முக்தி அயைய விரும்பினார்கள். ஆனால் “நீ அவர்களை உன் வசிய சக்திக்குள் கட்டுப்பாட்டோடு வைத்திருக்கிறாய்” என்று நீ அன்னை தெரசாவிடம் கேட்கமாட்டாய். இது மனத்தின் விகாரம்.
ஆன்மீகத்தில், இன்று உண்மையானவர்கள் பலர் இல்லை. அதனால் தான் ஆன்மீகத்தை வியாபாரமாகக் கருதாமல், ஒரு உண்மையான வழியில் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். 

ஆன்மீகத்தின் பெயரில் ஏமாற்றுபவர்கள் இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், நாம் அதைப் பற்றி அதிகக் கவலைப்பட வேண்டாம். அதற்காக ஒவ்வொரு ஆன்மீக இயக்கமும், மக்களை தவறான வழியில் செலுத்துவதாக எண்ண அவசியமில்லை.ஒரு இயக்கம் என்பது படத்தைச் சுற்றி இருக்கும் ஃபோட்டோ ஃபிரேம் போலத் தான் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். ஃப்ரேம் இல்லாமல் படத்தைத் தனியாக மாட்ட முடியாது. அதைப் போல் ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.

எவ்வளவு பேர் உங்களுக்குத் தங்கும் வசதியையும், உணவுக்கான தேவைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?. உங்களுக்கு ருசியான இத்தாலிய தேசத்து உணவு வகைகளைப் பறிமாறிய அனைவருக்கும் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் இதை ஒரு ஒப்பந்த வேலையாக நினைக்காமல், எதையும் எதிர்பாராத சேவையாகச் செய்கிறார்கள்.

இந்த சேவையை மக்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் இதயபூர்வமாகச் செய்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட சேவைகளில் ஈடுபடுகிறேன். உலகின் பல பாகங்களுக்குச் சென்று பயிற்சி அளிக்கிறேன். நான் அதற்காகப் பணம் வாங்குவதில்லை. என்னுடன் இருக்கும் அனைவரும் அதைப் பார்த்து ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டு சேவை செய்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் நன்கொடைகளை நானே வைத்திருந்தால் பெரிய கோடீஸ்வரனாக ஆகியிருப்பேன்.

நான் இங்கு வந்து உங்களுக்குப் பாடம் சொல்கிறேன். இங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்கிறேன். இந்த ஆசிரமத்துக்கு, ஆசிரியர்கள் வந்து இப்படிப்பட்ட பயிற்சிகள் நடக்காவிட்டால், இந்த ஆசிரமத்தை மூட வேண்டி வரும். சிலர் மட்டுமே இந்த ஆசிரமத்தை நடத்த முடியாது. இங்கு வந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் செய்யும் சேவைகளை மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறேன்.

எல்லா தொண்டர்களும் சேவை செய்து அதன் பலனை குருவுக்கு அளிப்பதாக நினைக்க வேண்டாம்.. குருவே, எல்லா சேவைகளுக்கும் காரணமாக, தூண்டு கோலாக நின்று தொண்டர்களைத் தூக்கி விடுகிறார் என்று அறியுங்கள்.நான் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்து பலருக்கு உதவுகிறேன். இதை மகிழ்வோடு செய்கிறேன். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறேன். நான் விரும்புவது எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் எனக்கும் மகிழ்ச்சி கிடையாது.

தற்போது உலகில் அவநம்பிக்கை நிலவுகிறது. கணவன் மனைவியிடையே சந்தேகம். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே நம்பிக்கையின்மை. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மேல் அவ நம்பிக்கை. இப்படிப் பலப்பல சந்தேகங்கள்..இது இப்படியே சென்றால் சமுதாயம் சீரழிந்து வாழத்தகுதி இல்லாததாக ஆகிவிடும். இதை மாற்றியாக வேண்டும்.மக்களுக்கு சுயநம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. எல்லோரும் தன்னை நம்ப வேண்டும். சமுதாயத்தில் நல்ல எண்ணத்தின் மேல் நம்பிக்கை வேண்டும். உலகை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் மெல் நம்பிக்கை வேண்டும். எங்கும் பரவி இருக்கும் தெய்வ சக்தியின் மேல் நம்பிக்கை வேண்டும்.
இந்த மூன்றின் மேலும் நம்பிக்கை வைப்பது அவசியம். அதைத்தான் நாம் ஆன்மீகம் என்று சொல்கிறோம். உன் மேல் நம்பிக்கை வைக்கத் துவங்கு. உன்னைச் சுற்றியிருப்பவர்களிடம், அவர்களின் நல்ல குணத்தின் மேல் நம்பிக்கை வை. தெய்வத்தின் மேல் நம்பிக்கை வை. அது தான் ஆன்மீகத்தின் சாரமாகும்.

கே: விஞ்ஞான அறிவின் படி, காலம் மாறக் கூடியது, ஆகாயம் நிலையானது என்று சொல்லப்படுகிறது. பழைய ஏடுகளின் படி, காலம் நிலையானது. ஆகாயம் மாறக் கூடியது என்று சொல்கிறார்கள். இதை விளக்குவீர்களா?

குருதேவர்: காலம் இருவகைப்படும். ஒன்று மாறக்கூடியது. கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம். மற்றொன்று மகத்தான காலம். அது என்றும் மாறுவதில்லை. மற்ற மாறக் கூடிய காலங்கள் எல்லாம் அதில் அடங்கும். அது மகா காலம் என்று அழைக்கப் படுகிறது. அது தான் எல்லாவற்றையும் அடக்கிய மகா காலமாகும்.

மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நீ சொல்லும் போது ஒரு கால கட்டத்தை அடிப் படையாக வைத்து மற்றொரு காலகட்டம் வரை மாறுதல்கள் என்ன என்று சொல்வாய். இந்த மாற்றத்தை அறிவதற்கு  மாற்றமே இல்லாத அடிப்படையான ஒன்று இருக்க வேண்டும். அது ஆகாயத்தில் இடை வெளியாகவோ (இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தூரம்) அல்லது காலத்தின் இடைவெளியாகவோ இருக்கலாம்.

ஆகவே அடிப்படையான மாறாத ஒன்று மற்ற மாற்றங்களை நிர்ணயிக்கிறது. காலத்தைப்  பற்றி அறிய, மனத்தைப்  பற்றி அறிவது அவசியம். நீ மனதை அறியா விட்டால், காலத்தைப்  பற்றி அறிய முடியாது. மனதை அளவிட முடியாது. அதேபோல மகா காலத்தையும் அறிய முடியாது. அதனால் தான் எவ்வளவு நீ மனத்தை அறிகிறாயோ, அவ்வளவு காலத்தைப் பற்றியும் அறியமுடியும் என்கிறார்கள்.

கே: ஆசிர்வாதம் எப்படி செயல்படுகிறது என்று விளக்குவீர்களா?

குருதேவர்: ஆசிர்வாதம் என்பது தூய்மையான இதயத்திலிருந்து பாயும் ஆக்கபூர்வமான சக்தி.

கே:  வைராக்கியத்தைப் பற்றியும், அதி தீவிர ஆசை (ஜுர வேகம்) இல்லாமல் இருப்பதைப்  பற்றியும் அழகாகப் பேசினீர்கள். ஆனால் இந்த அறிவுரை உங்களைப் பார்த்ததுமே ஜன்னல் வழியாக வெளியேறி, ஜுரவேகம் அதிகரிக்கிறது.

குருதேவர்: எதையாவது பிடித்துக் கொள்வது மனத்தின் இயல்பு. மனம் மற்ற விஷயங்களிலிருந்து விடுபடும் வரை, ஏதோ ஒன்றைப் பற்றி இருப்பது சரிதான். நாள் ஆக ஆக மனம் அமைதியாக ஆகும் போது, நீ அதிலிருந்தும் (ஜுரவேகத்திலிருந்து) விடு பட்டுவிடுவாய்.

கே: குருதேவா! திருமணம் செய்து கொள்ளாமலோ, குழந்தைகள் இல்லாமலோ இருப்பதால் கர்ம வினைகள் குறையுமா? அல்லது அவை நம் விருப்பத்தைப் பொறுத்ததா?

குருதேவர்: அது உன் விருப்பத்தைப்  பொறுத்தது. நீ உன் மனதை எப்படிக் கையாள்கிறாய் என்பதைப் பொறுத்திருக்கிறது.

கே: 12.12.12 அன்று நடந்த மூன்று தியானங்கள் பற்றிச் சொல்வீர்களா? (மனித சமுதாயம் பற்றி, பூமியைப் பற்றி, இவ்வுலகைப் பற்றி)

குருதேவர்: தியானத்தின் அனுபவத்தை அளக்க முடியாது. நமக்குத் தெரிந்த அளவுகோல்களுக்கு அப்பால் தியானம் இருக்கிறது. ஆனால் கட்டாயம் தியானத்தின் அனுபவத்தை நாள் செல்லச் செல்ல நீ தெரிந்து கொள்வாய்.இவ்வுடல் சில காலமே இருக்கும் என்று சொல்கிறீர்கள். எப்படி பீஷ்மர் தன் விருப்பப்படி பல நாள் வாழ்ந்து அவர் விருப்பப்படி உயிர் நீத்தார்.?

குருதேவர்: நான் பீஷ்மருக்கு வக்கீலாக இருக்கப் போவதில்லை. மகாபாரதத்தின் வேறு எந்தப் பாத்திரத்துக்கும் நான் வக்கீலாக மாட்டேன். நீ ஒரு வக்கீலோடு, ஆதிமனித சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளரோடு உட்கார்ந்து இந்த ஆராய்ச்சியைச் செய்.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது ஒரு பறவை எப்படி சில மனிதர்களைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியும் என்று வியப்படைந்திருக்கிறோம். ஒரு சிறு பறவையின் மேல் எப்படி ஒரு மண்டபத்தை வைக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

பொதுவாக புராணக் கதைகளில் ஒரு பறவை ஒரு சிறிய வீட்டைத் தூக்கிக் கொண்டு பறப்பதை சித்திரம் மூலமாகவோ, கதைகளின் மூலமாகவோ தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த சிறு வீட்டை இந்தியாவில் மண்டபம் என்று சொல்வோம்.

உங்களுக்குத் தெரியுமா? விஞ்ஞானத்தின் படி, நம் விஞ்ஞானிகள் 300 டன் எடையைத் தூக்கக் கூடிய பறவைகள் இருந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். டைனோசர்கள் இருந்த காலத்தில் விமானத்தைப் போன்ற பெரிய பறவைகள் இருந்திருக்கின்றன. அப்படிப் பட்ட பெரிய பறவைகளின் மேல் 10 மனிதர்களை வைக்கலாம். 10 மனிதர்கள் ஏன்? 100 மனிதர்கள் கூட அதன் மேல் பறக்கலாம். அந்தப் பறவைகளுக்கு அப்படிப்பட்ட பயிற்சி அளிக்கலாம். ல்லாம் சாத்தியமே.

கே: நாம் நினைப்பது சரியாக நடக்காத போது, சுயஅறிவோடு, சுறுசுறுப்பாக இருந்து கோபம் கொள்ளாமல் இருப்பது எப்படி?

குருதேவர்: சில சமயம் கோபம் வந்தால் மனதில் வைத்துக் கொள்ளாதே. கோபம் வரட்டும். அது நீண்ட நேரம் இருக்க வேண்டாம். வந்து போகட்டும். சில சமயம் கோபம் அவசியம். அது வந்தால் பரவாயில்லை. உன் கோபத்தால் யாருக்காவது நன்மை விளையுமென்றால், சிறிது கோபம் வரட்டும். ஆனால் உன் கோபத்தால் உனக்குத் துன்பம் ஏற்படுமென்றால், அது உன்னை வருத்தப் படுத்துமென்றால் அதை சரியாகப் பார்க்க வேண்டும். .

உனக்கு ஏன் கோபம் வருகிறது. தெரியுமா? மற்றவர்களை குறைபாடு உடையவர்களாக நீ பார்க்கிறாய். அல்லது உன்னை குறைபாடு உடையவனாக நீ பார்க்கிறாய். உன் மீதே உனக்குக் கோபம் வருகிறது. அதனால் தான் இந்த ஞானம் (வாழும் கலை) உனக்கு உதவும். உன் மனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.நீ உன்னை உயர்வானவனாக நினைத்தால், உன்னிடம் இருக்கும் குணங்களை, நீ யார் என்பதை நீ அறிய மாட்டாய். எனவே, இயற்கையே உனக்குத் தேவையான பாடங்களை அளித்து, உண்மையை அறிய வைக்கும்.