குருதேவின் புத்தாண்டுச் செய்தி


31 டிசம்பர் 2012 – பெர்லின் - ஜெர்மனி
இந்த 2012 ஆம் ஆண்டு வெகு வேகமாகக் கடந்து சென்று விட்டது. அதை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். இந்த ஆண்டு துவங்கிய போது, டிசம்பர் 21 ஆம் நாள் பற்றி நிறையப் பேச்சு இருந்தது. அன்றைய தினத்தில் உலகம் அழிந்து விடும் என்ற வதந்தி நிலவி வந்தது. பொதுவாக மக்கள் வதந்திகளை நம்புகிறார்கள்; அதிலும் சிலர் மிக அதிகமாக நம்புகிறார்கள்.
ஆகவேஅவர்கள் உணவுப்பொருட்களை வாங்கி வீடுகளின் அடித்தளத்தில் பதுக்கி, இறுதி நாளுக்கு காத்திருந்தார்கள். நான் எப்போதும் அத்தகைய நிகழ்வுக்கு சாத்தியம் இல்லை என்றே கூறி வந்தேன். ஆனால் இந்த ஆண்டு, முந்தைய ஆண்டுகளைப் போலவே அழிவுகள் ஏற்பட்டன. முந்தைய ஆண்டுகளை விட இன்னும் சற்று அதிகமாகவே என்றும் கூறலாம். அமெரிக்காவில்,  ஜப்பானில்,மற்றும் பல நாடுகளில், இயற்கையின் சீற்றத்தால் அழிவுகள் ஏற்பட்டன.
அதே சமயத்தில், பொருளாதாரச் சரிவினால் ஏற்படக்கூடிய வீழ்ச்சியும் சமாளிக்கப் பட்டுவிட்டது. எல்லாமே ஓரளவு சரியாகி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதை விட நன்றாக முன்னேற வேண்டும். முன்னேற்றம் ஆரம்பித்து விட்டது. 2013 நன்றாகவே இருக்கும்.
சுற்றுச் சூழல்பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆண்டுகளாக நாம் கூறிவந்த மனிதநேயம்வன்முறையை ஒடுக்குதல் ஆகியவை பற்றி மக்கள் இப்போது விழித்துக்கொண்டு, அதைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு நாம் அனைவரும்,மேம்பட்ட சமுதாயம்- அதாவது வன்முறையற்றகுற்றம், ஊழல் இல்லாத,பாதுகாப்பான, நேர்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
எல்லாவற்றிக்கும் மேலாக, ஆன்மீக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்கு நாம் உழைக்க வேண்டும். ஏற்கனவே அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்து விட்டது.அதிகமான அளவில் மக்கள் விழிப்படையத் துவங்கி விட்டனர்.
நமது வாழும்கலை நிறுவனம் பெருமளவில் எழப்போகிறது. இந்த ஆண்டு மக்களின் வாழ்கையை மேலும் மகிழ்ச்சியாக்கக் கூடிய இரண்டு புது க்ரியாக்களை கற்றுத் தரப்போகிறோம். அவற்றால் மக்கள், அதிக மகிழ்வுடனும் ஆற்றலுடனும், கடமையுணர்வும், கருணையும் ஆக்கசக்தியும் மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள்.
காலம் நமக்கு பல சவால்களைத் தந்து வருகிறது.அவற்றை எவ்வாறு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறோம் என்று பாருங்கள். ஒவ்வொரு சவால் எழும்போதும் அதை எவ்வாறு நமது வளர்ச்சிக்குரிய சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று கவனித்து செயல்படுங்கள். இதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
இந்த ஆண்டு முடிவடையும் இத்தருணத்தில்,முடிந்த ஆண்டில் நீங்கள் சந்தித்த அனைத்து சவால்களையும், அவை எவ்வாறு உங்கள் வளர்ச்சிக்கு உதவியது என்றும் எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு சவாலையும் எப்படி சமாளித்தீர்கள், அப்போது என்னென்ன தவறுகள் செய்தீர்கள் அந்த தவறுகளிலிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள் என்று யோசனை செய்து பாருங்கள். இதுவே முதல் படி.
இரண்டாவதாக , கடந்த ஆண்டு உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கிடைத்த நன்மைகள் யாவை என்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய நன்மைப் பரிசுகளை உலகின் நலனுக்காக எவ்வாறு உபயோகிக்கப் போகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறன் அல்லது நன்மை கிடைத்திருக்கும்.அவற்றை எவ்வாறு பயன் படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்களது திறமையை நன்கு பயன் படுத்துகிறீர்களா? இதுதான் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயம்.இனி வரும் ஆண்டிற்கு திட்டமிடுங்கள். வருகிற 12 மாதங்களில் ஒவ்வொரு நாளும் என்ன செய்யப் போகிறீர்கள்
தினமும் தியானம் செய்யுங்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் நேரத்தை ஒதுக்கி, நமது முது நிலை பயிற்சியான ஆழ்ந்த தியானமும், மௌனமும் அனுசரியுங்கள்.குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தகைய பயிற்சி செய்யுங்கள்.தவிர சமூகத்திலுள்ள பிற மக்களுக்காக ஏதாவது பயனுள்ள தொண்டில் ஈடுபடுங்கள்.
உங்களைப்பற்றி  மட்டும் நினைத்துக் கொண்டு இருக்காமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். பிறகு உங்களுக்கென்று என்ன வேண்டியிருந்தாலும் அது தானாகக் கிடைப்பதைக் காண்பீர்கள் முதலில் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கேட்பது கிடைக்கும். எனக்கு மட்டும் எல்லாம் வேண்டும், ஆனால் எனக்கு எதுவும் செய்ய விருப்பமில்லை என்று சொன்னால் அது நடக்காது. நீங்கள் சமுதாயத்தில் சில நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். 

மக்கள் முகங்களில் புன்னகையை கொண்டு வர வேண்டும்.

அப்படிச் செய்தால் மட்டுமே, உங்களுக்கென்று எதுவும் கேட்கும் உரிமை உங்களுக்குக் கிடைக்கும். நான் சொல்வது புரிகின்றதா? இதுதான் உண்மையான பணம். உங்களிடம் பணமோ அல்லது வங்கியின் கடன் அட்டையோ இல்லாமல் கடைக்குச் சென்றால் எந்தப் பொருளையும் யார் தருவார்கள்

உங்கள் வங்கிக் கணக்கில் கொஞ்சமாவது இருப்பு இருக்க வேண்டும் இல்லையா? நீங்கள் சேவை செய்யும்போது உங்கள் வங்கி இருப்பு உயர்கின்றது. பிறகு நீங்கள் எது வேண்டுமென்று விரும்பினாலும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கடை முழுவதையும் கூட வாங்கலாம்.  எனவே சமுதாயத்தில் சிறிதளவாவது நல்லது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.நமக்கு எது வேண்டுமென்றாலும் நமக்குக் கிடைக்கும், நமக்கு கொடுக்கப்படும்  என்று நம்பிக்கை கொள்வோம். நம் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும். நாம் ஒன்றை விரும்பினால் அது நிச்சயம் நமக்கு அளிக்கப்படும்.

அடுத்ததாக, நீங்கள் வாழ்க்கையில் புது பாடங்களைக் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.  உங்களுடைய உற்சாகம், மகிழ்ச்சி , புன்னகை ஆகியவற்றை வாழ்க்கைப் பயணம் முழுவதும் நிலையாக வைத்திருக்க வேண்டும். புரிந்ததாஅனைவரும் நடந்து செல்கின்றனர். சிலர் கூக்குரலும் அழுகையுமாக நடந்து செல்கின்றனர்.  சிலர் புன்னகையோடு நடந்து செல்கின்றனர். அனைவரும் நகர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கொணறி பட்டை மீது இருக்கின்றனர். சிலர் சிரித்துக்கொண்டும் சிலர் அழுதுகொண்டும் யார்  எப்படியிருந்தாலும் கன்வேயர் பெல்ட் மட்டும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் என்கின்ற இந்த கன்வேயர் பெல்ட் மீது எப்படி நடப்பதென்பது உங்கள் விருப்பம். அது உங்கள் கைகளில் இருக்கின்றது.

ஒரு சீருந்து வண்டியில் (கார்)முன்பக்கம் பார்க்கும் கண்ணாடி பெரியதாகவும் பின்புற பார்வைக்கான கண்ணாடி சிறியதாகவும் இருக்கின்றது. இவை இரண்டும் மாறி இருந்தால் உங்களால் காரை ஓட்டிச் செல்ல முடியுமா? முடியாது. இல்லையா? இதன்மூலம் கார் உங்களுக்கு கற்பிக்கும் பாடம் என்ன தெரியுமா? பின்புறப் பார்வைக்கான கண்ணாடி கடந்த காலத்தையும் முன் பக்கம் பார்க்கும் கண்ணாடி நிகழ் காலத்தையும் குறிக்கின்றன. 

கார் ஓட்டும் போது நாம் பக்க வாட்டிலும் பின்புறமும் பார்க்க வேண்டியது அவசியமென்றாலும் முக்கியமாக முழு கவனத்துடன் முன் பக்கம் பார்த்து ஓட்ட வேண்டும்.பக்க வாட்டிலும் பின் புறமும் மட்டுமே பார்த்து ஓட்டினால் விபத்து நேரிடும். கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் சிறிதளவு கவனத்தில் கொண்டு நாம் முழுமையாக நிகழ் காலத்தில் வாழ வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நல்ல மனிதர்களின் குரல் ஓங்கும் காலம் வந்து விட்டது. தீமை செய்பவர்கள் மனம் மாறி வெளிச்சத்திற்கு வருவார்கள். ஆன்மீக அலை மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கும். வரும் ஆண்டுகளில் இது நிச்சயம் நிகழும். ஆன்மீக அலை அதிக முக்கியத்துவம் பெறும். பிறரை ஏமாற்றும் மக்கள் எல்லோரும் அம்பலப்படுத்தப்பட்டு பதவியிலிருந்து கீழே இறங்குவார்கள். ஏமாற்றுக்காரர்கள் அம்பலப்படுத்தப்படுவது நிச்சயம் நிகழும். நல்ல நேரம் நம்மை எதிர்நோக்கியுள்ளது .