உண்மை என்பது காலத்தை வெல்வது

12 நவம்பர் 2014, 

பெங்களூரு,  இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ், இந்த உலகம் நிஜம் போலத் தோன்றினாலும், உண்மையில் இது தற்காலிகமானது மற்றும் நிஜமானதல்ல. துன்பமும் துயரமும் நிறைந்தது போலவும் இது தோன்றுகிறது. எப்படி ஒரு பொருள் ஒரே நேரத்தில் நிஜமாகவும் நிஜமில்லாததாகவும் தோன்றுகிறது?

நிஜம் போலத் தோன்றுகிறது என்று மிகச் சரியாக சொன்னீர்கள். உண்மையில் இது நிஜமல்ல.
இதை புரிந்து கொள்ள ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். நீரோட்டம் உள்ள ஒரு நதியை பாருங்கள். அது தொன்மையானதா அல்லது புதியதா? இந்தக் கேள்விக்கு விடையை நீங்களே சிந்துத்து பாருங்கள். எப்படி இது இரண்டுமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது. அந்த நதி தொன்று தொட்டு இருந்து வருகிறது,ஆனாலும் அதில் ஓடும் நீர் புதியது. ஒவ்வொரு கணமும் புதிய நீர் ஓடுகிறது. அதை போலவே, இந்த உலகம் நிஜம் போலவும் நிரந்தரமானதாகவும் தோன்றுகிறது,ஆனாலும் ஒவ்வொரு நாளும் மாறியபடி இருக்கிறது. அதனால் தான் அது நிஜம் என்று கருதப்படுவதில்லை. உண்மை என்பதின் வரையறை என்ன? தத்துவரீதியாக உண்மை என்பது, ‘திரிகாலபாதிதம் யத் தத் சத்’. அதன் பொருள், உண்மை என்பது காலத்தின் மூன்று நிலைகளிலும் மாறாமல் அப்படியே இருப்பதுஇந்த வரையறையின் அடிப்படையில் பார்த்தால் இந்த உலகம் உண்மையில் நிஜமாகத் தோன்றவில்லை.ஆனால் உலகம் இல்லாமலும் போய்விடவில்லை. எல்லா நேரங்களிலும் மாறாமல் அப்படியே இருப்பதில்லை, ஆனாலும் அது இருக்கிறது, அவ்வளவே.

பதஞ்சலி யோக சூத்ராவில், நீங்கள் மனதின் ஐந்து நிலைகளை பற்றி கூறியிருக்கிறீர்கள். தவறான ஞானத்திற்கு மனம் போகும் போது அதை உண்மை என்றே அது கருதுகிறது. அப்படி என்றால் தவறான ஞானத்திலிருந்து வெளி வருவது எப்படி?

விபர்யாயா (தவறான புரிதல்) என்பது மனதின் பரிமாணங்களில் ஒன்று. ஆனால் அதில் வெகு நேரம் இருப்பதில்லை. அதனால் தான் அஷ்டாங்க யோகத்தில், ஏதேனும் ஒரு அங்கம் உங்கள் மனதை திறந்து இது தவறான ஞானம் என்று தெரிவிக்கிறது. அதனால் புரிதல் ஏற்படுகிறது. ஒரு அனுமானத்தில் இருந்துவிட்டு,அதிலிருந்து வெளியே வரும் போது, ‘ஓ நான் அப்படி அனுமானத்திலிருந்தேன்,’ என்று சொல்கிறீர்கள். காலம் உங்களில் அந்தப் புரிதலை ஏற்படுத்தும்.
விபர்யாயாவிலிருந்து வெளி வர இரண்டு வழிகள்.
·         காலம்
·         ஒரு விரிந்து பரந்த பேருணர்வில், ‘நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன், இது சரியா தவறா?’, என்று உங்களால் பார்க்க முடியும் போது.

நியாய சாஸ்திரம் முழுதும் இதை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது உபங்கத்தின் ஒரு அங்கம். உங்களுக்கு ஏதோ ஒரு புரிதல் இருக்கிறது, அது சரியா அல்லது தவறா என்று எப்படித் தெரியும்? சரியா தவறா என்று கண்டறிய ஒரு வழி முறை சொல்லப்பட்டிருக்கிறது, அதுவே நியாய தரிசனம் எனப்படுகிறது. இந்த நியாய சாஸ்திரம் ஒரு அதி அற்புதமான நூல். உங்களுக்கு ஞானம் கிடைக்க பெற்ற வழியை தெரிந்துகொள்ள அல்லது அடையாளம் காண உதவுகிறது. உங்கள் புரிதல் சரிதானா அல்லது உங்கள் மனம் ஆடும் விளையாட்டா என்பதை அறியலாம். அதில் உதாரணங்களும் வழிகளும் கூறப்பட்டுள்ளது. வேறு ஒரு சமயத்தில் நியாய சாஸ்திரத்தைப் பற்றி பேசலாம். கௌதமரின் நியாய சாஸ்திரம் கூறுகிறது, ‘சூரியன் எழுவதையும் மறைவதையும் காண்கிறோம், ஆனால் அது எழுவதுமில்லை, மறைவதுமில்லை என்று உங்களுக்குத் தெரியும். அதைப்போல, ஒரு குவளையில் உள்ள தண்ணீரில் ஒரு எழுது கோலைப் போட்டால் அது வளைந்திருப்பது போலத் தெரிகிறது, ஆனால் அது உண்மையில் வளைந்திருப்பதில்லை.’ நம் பார்வையைத் தாண்டிச் செல்கிறது இது.
  
தவறான புரிதலை அல்லது தவறான ஞானத்தை உண்மையில் நாம் அறிவியலை கொண்டல்லவா அடையாளம் காண முடியும்?

ஆம் சரிதான், அதனால் தான் ஆன்மிகம் ஒரு அறிவியல் எனப்படுகிறது. பல ஆயிரங்கள் வருடங்களுக்கு முன்பு ஆறு தரிசனங்களில் (வழிமுறைகள்) இதைத்தான் கூறியுள்ளார்கள்.
அந்த ஆறு தரிசனங்கள்:
·         சாம்கியா (பேருணர்வு மற்றும் பொருள் பற்றிய முக்கியத்துவம்)
·         யோகம் (தியானம், சிந்தனை மற்றும் விடுதலை பற்றிய முக்கியத்துவம்)
·         நியாயம் (ஞானத்தின் மூலம் பற்றிய முக்கியத்துவம்)
·         வைஷேஷிகம் (மேலும் பிரிக்க இயலாதவாறு பகுக்கப்பட்ட பொருளான அணுவும் அதன் சுற்றியுள்ள வெற்றிடமும் தான் இந்த உலகம் என்று கூறும் தத்துவம்)
·         மீமாம்சம் (மதம் மற்றும் நியதிகளைப் பற்றிய முக்கியத்துவம்)
·         வேதாந்தம் (ஞானம்)

இந்த தரிசனங்கள் அறிவியல் அன்றி வேறில்லை. அதனால் தான் நாம் சொல்கிறோம், ‘ஞான விஞ்ஞான திரிபத்ம,’ அதாவது ஞானமும் அறிவியலும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை.
இந்தியாவில் எப்போதும் அறிவியல் எதிர்க்கப்பட்டதில்லை. முதலில் ஐந்து பொருட்களை (ஐம் பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் வெளி) தெரிந்துகொள்ளுங்கள், பிறகு ஆறாவது பொருளான மனம் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்றே நாம் சொல்லிவருகிறோம்.
நியாயம் என்பது நாம் தெரிந்துகொண்டிருப்பது சரியானதா அல்லது தவறானதா என்று அறிந்துகொள்ளும் வழிமுறை.

நம்மிடம் இருக்கும் அறிவு எண்ணங்கள் சார்ந்ததா அல்லது புற சோதனைகளால் அறிந்துணரப்பட்ட காரண அறிவா என்பதைத் தெரிந்துகொள்ளும் தீவிர முனைப்பும் விழிப்புணர்வும் உலகில் வேறெங்கும் இல்லை. ஒரு பொருளை ஆராய்ந்து அறிவதோடு அல்லாமல், அதை யார் தெரிந்து கொள்கிறார்கள், அவர்களுடைய பேருணர்வின் தரம் என்ன என்பதையும் காண்பது. மது அருந்தியிருக்கிறாரா? அவருக்கு மஞ்சள் காமாலை உள்ளதா? மஞ்சள் காமாலை உள்ளவருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். எனவே தெரிந்துகொள்ளப்படும் பொருள் மட்டுமல்லாமல் தெரிந்துகொள்ளுபவரையும் ஆராய்ந்து அறிந்தனர். நம்முடைய பண்டைய நூல்கள் இவ்வளவு ஆழமும் விவரங்களும் கொண்டவை. அதனால்தான் அவர்கள் இது உண்மை இது உண்மையல்ல என்று கூறினார்கள்.

இந்தப் பயிற்சியை முடித்தவுடன், இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இறைவியும் அவருக்கு இடப்பக்கம் சிவ பெருமானும் வலப்பக்கம் கணேசரும் இருக்கும் இந்தப் படம். இதை எப்படி புரிந்துகொள்வது?

எனக்கும் இது மிகவும் பிடித்தது அதனால் தான் இதை இங்கு வைத்திருக்கிறோம். இது காசி விசாலாட்சியின் படம். கணவர் ஒரு புறமும் மகன் மற்றொரு புறமும் இருக்கிறார்கள். ஒரு கையில் ஜபமாலையும் மறு கையில் கமண்டலமும் வைத்திருக்கிறார் இறைவி. ஜபமாலை ஞானத்தையும் தவத்தையும் குறிக்கிறது, கமண்டலம் வரம் அருள்வதைக் குறிக்கிறது. மிக அழகானது இந்தப் படம்! எனக்கும் இது மிகவும் பிடித்ததினால் இதை இங்கு விசாலாட்சி மண்டபத்தில் வைத்திருக்கிறோம். விசாலமான பார்வையை உடையவள் என்பது பொருள். விசாலமான பார்வையை அளிக்கக் கூடியவள் விசாலாட்சி எனப்படுகிறாள். 

ருத்ர பூஜையில் பல்வேறு தளங்களில் வழிபாடு நடக்கிறது. இந்தத் தளங்கள் ஒரே வெளியில் இருக்கிறதா?

இந்தப் பிரபஞ்சம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது பிரபஞ்சம் அல்ல பலப்பல பிரபஞ்சங்கள், ஏனென்றால் இது பல்வேறு தளங்கள் கொண்டது. தொலைக்காட்சியில் எப்படி பல ஒளிபரப்புகள் உண்டோ அப்படி.1960 அல்லது 70 களில் ஒரு ஒளிபரப்பு மட்டுமே இருந்தது. வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது நூற்றுக்கும் அதிகமான ஒளிபரப்புகள். அதைப்போல இந்தப் பிரபஞ்சமும் பல்வேறு தளங்களைக் கொண்டது மற்றும் ஞானம் அளப்பறியாதது. ஞானத்திற்கு முடிவே இல்லை. எல்லா ஒளிபரப்புகளையும் ஒரே தொலைக்காட்சியில் பார்க்கிறீர்களா அல்லது வேறு வேறு தொலைக்காட்சிகளில் பார்க்கிறீர்களா?