குற்ற உணர்வுக்கு இடமில்லை

வியாழக்கிழமை - 13 நவம்பர் 2014
பெங்களூர், இந்தியா


(நீ உன் உலகை உருவாக்குகிறாய் என்ற உரையின் தொடர்ச்சி)
கேள்வி பதில்கள்
குருதேவா, நான் பல ஆண்டுகளாக ஒரு வாழும் கலை ஆசிரியராக இருக்கிறேன். என்னிடமும், மற்ற ஆசிரியர்களிடமும் ஒன்றை பார்க்கிறேன். நாங்கள் பயிற்சியில் சொல்லப்படும் 5 சூத்திரங்களை எப்போதும் பின்பற்றுவதில்லை. வகுப்பில் பயிற்சி பெறுபவர்களிடம் இந்த சூத்திரங்களை பின்பற்றும்படிச் சொல்லும் போது, ஒரு மோசடி செய்பவன் போல் உணர்கிறேன். என்ன செய்யலாம் ?
இந்த விஷயத்தைப் பற்றி வருத்தப்படுவது நல்லது. அது ஒரு பாதுகாப்பு வால்வ் போல் வேலை செய்யும். நீ போதிப்பதை பின்பற்றவில்லை என்பதை உணர்ந்த பின்பும், அதைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்,அது பிரச்சினையாகி விடும். எந்த க்ஷணத்தில் நீ உன் குறைபாடுகளை அடையாளம் கண்டு கொள்கிறாயோ, அதே க்ஷணத்தில் நீ பாதுகாப்பாக இருப்பாய்.
மோசடி செய்பவன் என்று நினைக்காதே.இந்த ஞானப் பாதையில் செல்பவன். உன் பின்னால் வருபவர்களுக்கு வழி காட்டுகிறாய். இந்த அறிவு உனக்குப் பணிவைக் கொடுக்கும். இந்த ஞானம் விலை மதிப்பற்றது என்பதை அறிவாய்.100% பின்பற்றவில்லை என்பதில் சந்தேகம் இல்லை. உன் வாழ்க்கை மாறியிருக்கிறது என்பதை நீ மறுக்க முடியாது. குறைந்தபட்சம் 80% பின்பற்றுகிறாய். எனவே பயிற்சியில் வரும் சூத்திரங்களை நீ 100% பின்பற்றாவிட்டாலும், 80% பின்பற்றுகிறாய். பலர் இந்த சூத்திரங்களை பற்றி புரிந்து கொள்ளவேயில்லை. ஞானப் பாதையில் தங்களுடைய பயணத்தைத் துவக்கவேயில்லை. உண்மையில் அப்படிப்பட்ட மக்களுக்கு நீ உதவ முடியும்.
மற்றொரு விஷயம். நீ மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் போது, நீயும் கற்றுக் கொள்கிறாய். எனவே நீ ஒப்புக்காக நடிக்கிறேன் என்று சொல்ல வேண்டாம். நீ சொல்லிக் கொடுக்கும் போது நீயும் கற்றுக் கொள்கிறாய். ஞானத்தைப் புதுப்பிக்கிறாய். உட்கார்ந்து கொண்டு உன்னையும், மற்ற ஆசிரியர்களையும் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு, பயிற்சி வகுப்புகள் எடுப்பது நல்லது. இல்லாவிட்டால் குற்ற உணர்வோடு நீ உன்னையே நிந்திப்பாய். பலவீனமாக உணர்வாய். என்னால் ஞானத்தைப் பின்பற்ற முடியவில்லை. நான் கெட்டவன் என்று எண்ணி, தன்னைத் தானே குற்றம் சொல்லி வருந்துவாய். இது ஆன்மீகப் பாதையில் ஒருவருக்கு நிகழும் மிகக் கெடுதலான அனுபவம்.
அதனால் தான், எப்போதும் நாம் ஆன்மீகப் பாதையில் குருவுடன் செல்கிறோம். உன் பலவீனத்தைக் குருவிடம் சமர்ப்பித்துவிட்டு, உன்னால் எவ்வளவு முடியுமோ, அதே பலத்துடன் மேலே செல். மிகவும் வருத்திக் கொள்ள வேண்டாம். (கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்). அதே சமயம் ஞானப் பாதையின் நெறிகளை அடையாளம் கண்டு, பின்பற்ற வேண்டும். பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் வருவதே நல்லது. எனவே மேலே பயணம் செய். பாதையை விட்டு விலகி, உன்னிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த குற்ற உணர்வு தொடர்ந்தால், இங்கு வந்து மேல் நிலை பயிற்சியிலோ (மௌனம் மற்றும் தியானப் பயிற்சி) அல்லது ஆசிர்வதிக்கும் பயிற்சியிலோ சேர்ந்து கொள். அது உன் மனதிலிருக்கும் குற்ற உணர்ச்சிகளை நீக்கி உன்னைத் தூய்மையாக்கி விடும். ஏனென்றால், வாழ்க்கையே ஒரு பயணம் தான். முழுமையை அடையும் வரை நீ பயணம் செய்ய வேண்டும். கண்டிப்பாக, மெதுவாக, நிதானமாக நீ முழுமையடைய முடியும்.
பின்னால் திரும்பிப் பார். சிந்தித்துப் பார். ஒருவேளை நீ இந்த அளவு கூட சூத்திரங்களைப் பின்பற்றாவிட்டால் நீ எங்கிருப்பாய்? நினைக்கவே பயமாக இருக்கிறது. இல்லையா? இதைப் புரிந்து கொண்டு மேலே நடக்கலாம். உன் குற்றம் குறைகளை என்னிடம் விட்டுவிடு.
குருதேவா, பல குருக்கள் இந்தியா மறுமலர்ச்சி அடைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். புது அரசு வந்ததன் காரணமாக, அந்த நேரம் வந்து விட்டது போல் உணர்கிறோம். மறு மலர்ச்சி எந்த ரூபத்தில் வர வேண்டும் ?
சில ஆண்டுகளுக்கு முன்பே மறுமலர்ச்சி துவங்கிவிட்டது. மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். உற்சாகத்தோடு, வேகமாகத் தொடர வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள், மிகவும் கவனமாக, ஆத்மபூர்வமாக மறுமலர்ச்சிக்காக செயல்பட வேண்டும். அப்படி நடப்பார்கள் என்று நம்புகிறேன். அதிகாரத்தில் உள்ள பலர், இந்தியாவின் மறுமலர்ச்சிக்காக உழைப்பார்கள்.
குருதேவா, அன்பை தக்க வைப்பது எது ? சில சமயம் அன்பை உணர்கிறேன். சில சமயம் அன்பை உணர முடியவில்லை. ஏன் ?
ஆம். அன்பு என்பது ஒரு பரிசு. கிடைக்கும் போது நன்றியுணர்வோடு இரு. கிடைக்காத போது அதற்காக ஏங்க வேண்டும். அப்போது உன்னுள் பிரார்த்தனை உதயமாகும். கவிதை பிறக்கும். கவிதை அன்புள்ள போது மட்டும் பிறப்பதில்லை. அன்புக்காக ஏங்கும் போதும் கவிதை பிறக்கும். பிரார்த்தனை நிகழும். பல அற்புதங்கள் நிகழும். எனவே எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்.
குருதேவா, யெஸிடிஸ் இன மக்கள் ஏன் இவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அவர்கள் ஹிட்லரின் கொடுங்கோல் முகாம்களில் காவலர்களாக இருந்தார்களா? அல்லது இது அவர்களுடைய கர்ம வினையா? ஏன் ஒரு இனத்தவர் மட்டும் செய்யாத தவறுக்காக இப்படி பாதிப்புள்ளாக வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு விடை கிடையாது. நம் அறிவுக்கெட்டாத பல பெரிய விஷயங்களுடன் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன. அவர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆச்சரியப் படுவதைக் கைவிட்டு, அவர்களுக்கு நாம் என்ன உதவி செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். அவர்களுடைய பாதிப்புக்கு இது தான் காரணம் என்று எந்த முடிவுக்கும் வர வேண்டிய அவசியமும் இல்லை. அதற்குப் பதிலாக நாம் அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்கலாம்.
குர்டிஸ்தான் நாட்டவர்கள் ஏற்கனவே 110 டன் உணவுப் பொருள்களையும் மற்ற தேவையான பொருள்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பொருட்களை விமானம் மூலமாக சின்ஜார் மலைப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம். அங்கு 9500 பேர்கள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. வாழும்கலை அமைப்பு இந்தக் காரியத்தில் செயல்படுகிறது. உதவி செய்ய விரும்புபவர்கள் ஐ.ஏ.எச்.வி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். நாம் அவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று பார்ப்போம். அவர்களுடைய பாதிப்பை பற்றி, மற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
மத்திய காலத்தில் ஈரான் நாட்டில் பார்ஸி இனத்து மக்கள் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். ஈரான் நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் சிறு சிறு கப்பல்களில் இந்தியாவின் குஜராத் பகுதியை வந்தடைந்தார்கள். இந்தியாவின் குறுநில மன்னர்கள் பார்ஸி இனத்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்கள் இங்கு வாழ வழி செய்தார்கள். இந்திய மக்கள் மிகவும் கருணையுள்ளம் படைத்தவர்கள். பார்ஸி இனத்தவர்கள், இந்தியாவிலும் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், அவர்களுடைய கலாசாரத்தைக் கைவிடாமல் வளர்க்கவும் அனுமதி அளித்தார்கள். கொடியவர்களின் அச்சுறுத்தலால் உயிரை இழந்து விடுவோம் என்று அச்சப் படுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது பண்டைய இந்தியாவின் கலாசாரமாகும். அதே போல் யூத மதத்தினரும் இந்தியாவுக்கு வந்து அடைக்கலம் புகுந்தார்கள். பாதுகாக்கப் பட்டார்கள்.
இன்று யெஸிடிஸ் இனத்தவர்கள் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தற்போதைய பிரச்சினையால் வந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும், நாம் வாழும் கலையிலிருந்து உதவப் போகிறோம்.
குருதேவா, அன்பு கிடைக்கும் போது வலிக்கிறது. அன்பு கிடைக்காமல் போனால் அதிகமாக வலிக்கிறது. அன்பை நிலைக்க வைப்பதும் வலியைக் கொடுக்கிறது. எந்த வலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?
நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசிர்வாதம் என்னுடையது. நீ வலியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கலாம். பெரிய வலியைத் தேர்ந்தெடு என்று நான் உனக்குச் சொல்வேன். ஏனென்றால் சிறிய வலிகளால் எந்தப் பயனும் கிடையாது. மனித குலம் அனைத்தின் மேலும் அன்பு செலுத்துவது பற்றி நீ கவலைப்பட வேண்டும். கிரகங்களின் மேல் அன்பு மற்றும் மிருகங்களின் மேல் அன்பு வைக்க வேண்டும். மிருகங்கள் உயிர் வாழ உரிமை பெற்றவை. மிருகங்களின் உயிரைப் பறிக்க நமக்கு உரிமை கிடையாது. எல்லாவற்றுக்காகவும் நீ கவலைப்பட வேண்டும். ஆடுகளின் கண்களைப் பார். கோழியின், பசுவின், நாயின் கண்களைப் பார். எல்லா கண்களையும் பார். இந்தப் படைப்பு அனைத்துமே அன்பால் நிரம்பியிருக்கிறது. மக்கள் தங்கள் வயிற்றை நிரப்ப எப்படி மிருகங்களை கொல்லலாம்?ஆரோக்கியமானதுமல்ல. துரதிருஷ்டவசமான நிலையாகும்.
குருதேவா, கடந்த ஐந்தாண்டுகளில் ஆசிரமம் ஒரு கோட்டை போலாகி விட்டது. அதற்கு முன்பு ஆசிரமத்தில், இப்போதிருப்பதை விட அமைதி கிடைப்பது சுலபமாக இருந்தது.
தற்சமயத்தில் இரு. ஞானம் பற்றிய உரையாடல்களைக் கேள். முன்பு சில பேர்களே இருந்தார்கள். தற்போது பலர் வருகிறார்கள். பலர் வரும் போது ஞானம் பற்றிய பகிர்ந்துரைகளுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஞானம் மற்றும் பொறுமை உன்னிடம் அதிகரிப்பதும் சாத்தியமாகிறது. நீயும் வளர வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. 30 ஆண்டுகளுக்கு முன் 10 பேர்களோடு கலந்து பேசியிருப்பாய். இன்று 1000 பேர்களுடன் ஒன்றாக இருக்க வேண்டியிருக்கிறது. வர வர இந்த எண்ணிக்கை அதிகமாகும். நாம் நம்முடைய குறுகிய எல்லைக்குள் இருக்கக் கூடாது.
உலக மக்களனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாம் சொல்கிறோம். உலக மக்களனைவரையும் நம் குடும்பத்தவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.இந்தக் கருத்துக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். யாராக இருந்தாலும், எல்லோருடனும் நம் குடும்பத்தினரை போல் பழகவேண்டும்., உன் சுகத்தை மட்டும் பார்க்காதே. மற்றவர்களோடு இருப்பது உனக்கு வசதிக் குறைவு என்று நினைக்காதே. உன் சுகத்தை விட்டுக் கொடுத்து மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். எத்தனை பேர்களுக்கு உன்னோடு இருப்பது பிடிக்கிறது என்று பார். உன்னைப் பற்றிய கணிப்பீடு செய். நீ எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்து மகிழ்ச்சியடைய வைக்கிறாய் என்று நினைத்துப் பார். மற்ற மக்களை நீ வெறுத்தால், அவர்களோடு நட்பு வைக்க உனக்கு விருப்பமில்லை என்று அர்த்தம்.
நாம் விரிவடையும் போது, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களோடு, பல விதமான இயல்புடைய மக்களோடு நட்பு வைக்கிறோம். நம் நாட்டை சேர்ந்தவர்களுடன், நம் மாநிலங்களில் வாழும் மக்களுடன், நம் மதத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுவது நமக்கு சுலபமாக இருக்கிறது. இங்கு ஆசிரமத்தில், நீ எல்லோருடனும் கலந்து பழக வேண்டும். பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் மற்றும் சீக்கியர்கள் வருகிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலத்தவர்களும் வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களும், தெற்கே கேரளத்தில் வசிப்பவர்களும் வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை உள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஒவ்வொருவரின் நடத்தையும், மொழியும், உணவுப் பழக்கங்களும் வேறு வேறானவை. உணர்ந்து நீ எல்லோருடனும் அனுசரித்துப் போக வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நீ மிகவும் அமைதியை அனுபவித்திருக்கிறாய். இப்போது அந்த அமைதியை மற்றவர்களுக்குக் கொடுப்பதே சிறந்தது.