உணர்ச்சி சார் நுண்ணறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்

திங்கள்கிழமை, 24 நவம்பர் 2014,

ஹரியானா - இந்தியா


(முடிவான அன்பு என்னும் இடுகையின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது)

குருதேவ், என்னைச் சுற்றியிருக்கும் மக்கள், என்னை விரைவாகவும் எளிதாகவும் ஏமாற்றி விடுகின்றார்கள் என்று கருதுகின்றேன். இவ்வாறு செய்வதில் அவர்கள் என்ன மகிழ்ச்சியை அடைகின்றார்கள்?

ஏமாற்றுவதில் விரைவாக செய்தால் என்ன? மெதுவாக செய்தால் என்ன? அவர்கள் விரைவாகவே உங்களை ஏமாற்றட்டும், மெதுவாக ஏமாற்றினால் அது உங்களுக்குப் பிரச்சினைகளை அதிகமாகத் தரும். கவனியுங்கள், நீங்கள் அறிவுள்ளவர் என்பதை அறியுங்கள். எவ்வாறு இரு கைகளையும் இணைத்துத் தட்டினால் தான் ஓசை ஏற்படுமோ அது போன்று ஏமாற்றுவதற்கும் இருவர் தேவை.. ஒருவர் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றினால் நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இல்லாததும் அதற்கு காரணம். உங்களை சுற்றி நடப்பவை பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் அவர்கள் எவ்வாறு உங்களை ஏமாற்றக்கூடும்? எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உணர்ச்சிகளினால் நீங்கள் மெய்மறந்து விடாமல் இருந்தால், யார் உங்களை ஏமாற்றமுடியும்? இது உங்களுடைய உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் பிற சொந்த உறவுகளுக்கும் பொருந்தும். உங்களுடைய உணர்ச்சிகள் உங்களை மங்க விட அனுமதிக்காதீர்கள். உறவுகளில் உணர்ச்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால் நீங்கள் அறிவுத்திறனுடன் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டிய நிலையில், உணர்ச்சிகளில் ஆழ்ந்து மெய்மறந்து விடக்கூடாது.எச்சரிக்கையுடன் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். நீங்கள் ஏமாற்றப்படமாட்டீர்கள், உறவுகளும் ஒத்திசைவுடன் இனிமையாக இருக்கும். மக்கள் தங்களுடைய அறிவுத்திறனைப் பயன்படுத்தாமல், உணர்ச்சி வேகத்திலேயே மட்டும் செயல்படும் போது அற்ப விஷயங்களுக்குக் கூட சண்டையிடுவதை பார்த்திருப்பீர்கள்.  நம்மை ஏமாற்ற யாருக்கும்  சந்தர்ப்பம் அளிக்கக்  கூடாது. உங்களில் எத்தனை பேர் நான் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்)

வீட்டில் அதிகமான நகைகளும் பணமும் இருந்தால் அவற்றைப் பத்திரமாகப் பூட்டி வையுங்கள். வெளியில் வைக்க வேண்டாம். கவனக் குறைவாக வெளியில் அவற்றை வைத்தால், உங்கள் பணிப்பெண் அவற்றை ரகசியமாக எடுக்கும்போது அவளை எவ்வாறு குறை கூற முடியும்? முதலில் வெளியே வைத்தது உங்கள் தவறு. புத்தியுடன் வெளியே வைக்காமல் இருந்தால் அவர்களுக்கும் திருடும் சபலம் ஏற்படாது.

ஒரு குழுவிலோ அல்லது பொது இடங்களிலோ யாரேனும் என்னை அவமானப்படுத்தினால் நான் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றிப் புகார் கூறுவது சரியா?

ஒருவர் உங்களை அவமானப்படுத்தினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உங்களால் அனைவரின் வாயையும் கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய சூழலில் உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.

1. நீங்களும் அது போன்றே நடந்து கொண்டு அவர்களை அவமானப்படுத்தலாம்.
2.அவர்களது அறியாமையைப் புன்முறுவலுடன் எதிர்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் அறியாமையும் அதை வெளிப்படுத்திக் கொள்ளும் இருக்கும் உரிமையும் உள்ளது என்று அவர்களிடம் கூறி அமைதியாக இருக்கலாம்.

பாருங்கள், உங்களை யாரேனும் அவமானப்படுத்தினாலும் அது எப்போதும் நிலைத்திருக்காது. ஒருவர் கூறும் இனிமையற்ற சொற்கள் உங்கள் காதுகளை அடையும் சில கணங்களே அவை அங்கிருக்கும். நீரில் ஏற்படும் குமிழிகளைப் போன்று அவை மிகத் தற்காலிகமானது  ஆகும். இத்தகைய இனிமை யற்ற விஷயங்கள் வரும்,போகும், இந்த சின்ன விஷயங்களை பற்றி  எண்ணி மறுகிக் கொண்டிருக்கவோ, பிறரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கவோ யாருக்கு இவ்வுலகில் நேரம் இருக்கிறது? எனவே இத்தகைய விஷயங்கள் நடக்கும் போது அவற்றைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்களைப் பாதிக்கவும் விடாதீர்கள்.

இன்று சமுதாயத்தில் பரவலான மது நுகர்வு உள்ளது. நாம் இந்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய முடியும்?

மது அருந்தும் அனைவரையும் போதை தரும் சத்சங்கத்திற்கு அழைத்து  வாருங்கள். அவர்கள் தங்கள் தீமையான பழக்கங்களை முற்றிலும் மறக்கக் கூடிய போதை தரும் ஆன்மீகத்திற்கு அவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று உறுதியளிக்கின்றேன். பலர் புகை பிடித்தல், மது அருந்துதல், பிற தீய பழக்கங்கள் அனைத்தையும் இந்த ஆன்மீகப் பாதைக்கு வந்த பின்னர் துறந்திருக்கின்றனர். ஆகவே அத்தகையவர்களை நீங்கள் தவிர்க்க வேண்டாம். அதற்குப் பதிலாக அவர்களை சத்சங்கிற்கு வருமாறு சமாதனப்படுத்தி நம்ப வையுங்கள். எப்படி மாறுகின்றார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். பக்தி மற்றும் ஆழ்ந்த அன்பில் போதை காணும் போது அதை விட்டு விலகவே முடியாது.

குருதேவ், விவாகரத்தினை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

இல்லை, இல்லை. ஆனால் உங்களுடைய உறவு இருதரப்பினருக்கும் தொடர்வது கடினம் என்னும் நிலையில், அதனால் உங்கள் வாழ்வே நரகமாகும் நிலையில், எந்த முயற்சியும் அவ்வுறவினைக் காக்க இயலாத நிலையில், இருவரும் சமாதானமாக பிரிந்து அவரவர் வழியில் செல்வதே நல்லது என்று கூறுவேன். ஆனால் விவாகரத்திற்கு முன்னர், இருவரும் 100 சதவீதம் தங்களைத் திருத்திக் கொண்டு திருமண உறவினை மேம்பட முயற்சி செய்ய வேண்டும்.

குருதேவ், தயவு செய்து நம் நாட்டிலுள்ள வரதட்சிணை சட்டங்களைப் பற்றிப் பேசுங்கள்.

யாரும் எந்த உருவிலும் வரதட்சிணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது. இங்குள்ள அனைத்து இளைஞர்களையும் வரதட்சிணையை ஆதரிக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் பெற்றோரிடம் வேறெதையுமின்றி தங்கள் மருமகளை மட்டும்  வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறுங்கள்.

குருதேவ், பெண் சிசுவதையைப் பற்றிக் கூறுங்கள்

நான் முற்றிலும் அப்பழக்கம்  ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவேன். இங்கு ஹரியானாவில் பெருமளவில் அது நடைபெற்று வருவதாக அறிகின்றேன். பெண் சிசுவதை பத்திற்கு ஏழு என்னும் விகிதாசாரத்தில் நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இங்கு மருத்துவர்கள் இருக்கின்றார்கள்? அவர்களிடமெல்லாம், இதைத் தடுக்கவும், கருவினைப் பாலினம் சார்ந்த பரிசோதனை செய்ய மறுக்குமாறும்   நான் வேண்டிக் கொள்கின்றேன். பெண்சிசுவதை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் ஏற்பட வேண்டும்.