எந்த மதமும் வெறுப்பை போதிப்பதில்லை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர், 2014                        

ஈராக்

(வன்முறை, மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குர்டிஸ்தானத்திலிருக்கும் எர்பில் நகரில் நடந்த அமைதி மாநாட்டின் போது வாழும் கலை ஸ்தாபகரும் மற்றும் புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவருமான ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்கள் பேசியது)

என்னை பேச அழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கௌரவிக்க தகுந்த கவர்னர் டாக்டர் முகமது இர்ஷத் அவர்களுக்கும், பொதுக் குழுத் தலைவருக்கும்,வந்திருக்கும் பிரமுகர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி.

பொதுவாக அமைதி மாநாடுகள் ஏற்கனவே அமைதி நிலவும் இடத்தில் நடப்பது வழக்கம். ஆனால் அமைதி நாடுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஆகவே, மோதல் நடந்த இந்த இடத்தில் நாம் அமைதி மாநாடு நடத்த வேண்டுமென்று நான் சொன்னதற்கு இது ஒரு காரணமாகும். எடுத்துக்கொண்ட கருத்தில் தெளிவு காண்பதற்காக மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பல பிரமுகர்களுக்கிடையே, பல்வேறு இனத்தவர்களுக்கிடையே, பேச்சுவார்த்தை மூலம் உறவுகள் மேம்படுவதற்காக மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பேச்சு வார்த்தைகள்,வேறு எண்ண ஓட்டங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். மீண்டும் அமைதியை நிலைநாட்ட, உறுதிமொழி எடுப்பதற்காக இந்த மாநாடு நடத்தபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பயம் நீங்கி வலுப் பெறுவதற்கு இந்த மாநாடு வழி செய்ய வேண்டும்.

சமயத்தில், வாழும் கலையை சேர்ந்த எங்கள் தன்னார்வத் தொண்டர்கள், இரண்டு ஆண்டுகளாக இங்கு செய்து வரும் சேவையை நினைவுபடுத்த விரும்புகிறேன். திருமதி / குமார் மௌவானி ஏற்கனவே சொல்லியபடி, பல அரசு சாரா நிறுவனங்கள், ஒன்றாக இணைந்து, போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் நலத்துக்காகப் பாடுபட்டு வருகின்றன. இந்த 21 ம் நூற்றாண்டில் பலர் மக்களின் கலாசாரத்தை பின் நோக்கி இழுத்து, நாகரீகமற்ற இருண்ட காலத்துக்கு கொண்டு செல்வதைப் பார்க்கும் போது மனதில் வலியேற்படுகிறது. தீவிரவாதிகள்,அமைதியாக வாழ விரும்பும் மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தி, நாடுகளுக்கிடையே பகையை மூட்டி சமுதாயத்தில் அழிவை உருவாக்குகிறார்கள்.

கௌரவிக்க தகுந்த தலைவர், ஏற்கனவே சொல்லியபடி, இந்தியாவும் அவர் சொன்ன மதிப்புகளைப் (கருத்துகளை) பகிர்ந்து கொள்கிறது.இந்தியா எப்போதுமே மற்ற நாட்டின் மீது படையெடுப்பதில்லை. ஆனால் மற்ற நாடுகளின் படையெடுப்பால் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வது, அமைதி மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே. மகாத்மா காந்தி அவர்களும் மற்ற பல தலைவர்களும், கடந்த காலத்தில் ஏற்பட்ட இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் போது, மக்கள் மனதில் நம்பிக்கையைப் பதித்து அமைதியை வளர்த்து வந்தார்கள்.

பூங்கொத்தில் பல அழகிய மலர்கள் இணைந்திருப்பது போல, குர்திஸ்தானத்தில் பல இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல கலாசாரங்கள் வழக்கில் உள்ளன. இப்படிப்பட்ட சமுதாயத்தை நாம் காத்து வளர்க்க வேண்டும். வழங்கி வரும் பல்வேறு கலாசாரங்களில், ஒரு மதத்தையோ, ஒரு கலாசாரத்தையோ இழந்து விட்டால், உலகுக்கே ஒரு இழப்பாகி விடும். எல்லா கலாசாரங்களுமே இவ்வுலகின் பாரம்பரியத்தை சேர்ந்தவை. எல்லாவற்றையும் காத்து வளர்ப்பது அவசியம். இப்படிப் பார்க்கும் போது, யெஸிடிஸ் மற்றும் ஷாபத் (இப்பகுதியில் வழங்கி வரும் பழமையான மத நம்பிக்கைகள்) இனத்தவர்களை அழியாமல் காக்க வேண்டும்.

நாமனைவரும் இவ்வுலகில் ஒற்றுமையாக வாழமுடியும். உலகின் வடிவமைப்பே அப்படித் தானிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். அமைதியாக வாழும் மன உறுதி, கருணை மற்றும் ஒன்றாக இணைந்து வாழும் மனித நேயப் பண்புகளைப் போற்றி வளர்ப்பது தற்போதைய கால கட்டத்துக்கு மிகவும் அவசியம். நேற்று ஓரிரண்டு முகாம்களுக்குச் சென்றேன். அங்கு வசிக்கும் மக்களின் நிலைமையை பார்த்தாலே மனமுடைந்து போகிறது. அவர்களுடைய மொழி புரியாவிட்டாலும், அவர்களுடைய வலியை, மன வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வந்து அகதிகளாக வாழ்கிறார்கள். பல இளைஞர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். அகதிகள் முகாம்களில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

யேசு கிறிஸ்துவோ, கடவுளோ இதை விரும்ப வில்லை. கடவுளின் வேலையை செய்வதாக நினைத்து கொடுஞ்செயல் செய்பவர்கள் மிகவும் தவறு செய்கிறார்கள். கௌரவிக்கத் தக்க மதத் தலைவர்கள், எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், யெஸிடிஸ் மற்றும் பல மதங்களின் உட்பிரிவுகளை சேர்ந்த பல தலைவர்கள், இந்த அமைதி மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கிறோம்.நாமனைவரும் சேர்ந்து பேசி, வன்முறையாளர்களுக்கு, வன்முறையால் கடவுளை மகிழ்விக்க முடியுமென்ற தவறான கொள்கையுள்ளவர்களுக்கு ஒரு தெளிவான செய்தி அனுப்ப வேண்டும்.

துரதிஷ்டவசமாக, வன்முறையில் ஈடுபடும் மக்கள் அமைதியை மதிப்பதில்லை. அமைதியான மக்கள் எப்போதுமே வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். சமுதாயத்தில் இரண்டு விதமான மக்களையும் ஒன்றாகக் கூட்டி பேச்சு வார்த்தை நடத்த நாம் வழி காண வேண்டும். இந்த அமைதி மாநாட்டில், மன அளவிலும், இதய பூர்வமாகவும் சிந்தித்து, நம்மால் என்ன செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும். வழி தவறி மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரிடம், எப்படி பேச்சு வார்த்தை நடத்தலாம்? பெண்களையும்,குழந்தைகளையும் எப்படிப் பாதுகாப்பது? இளைஞர்களை, தற்கொலைப்படையில் சேராமல்,பயங்கரவாதக் கொள்கைகளை பின்பற்றாமல், தீவிரவாதியாகாமல் எப்படித் தடுப்பது? இக்கேள்விகளுக்கான விடை காண்பது, இந்த மாநாட்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

இங்கு பல அறிஞர்கள் இருக்கிறார்கள். நம் எல்லோருடைய சிந்தனைகளையும் முன் வைத்து, கலந்து பேசி, வன்முறையை அறவே ஒழித்து, உலகின் எல்லா பகுதிகளிலும் வெறுப்பு நீங்கி, மக்கள் ஒற்றுமையாக, அமைதியாக வாழவும், தீவிர வாதிகள் தங்கள் கொடுஞ் செயல்களை கைவிட்டு, மக்களிடம் கருணை காட்டவும், வறுமை நீங்கி செல்வம் செழிக்கவும் ஒரு உறுதியான திட்டம் தீட்ட வேண்டும்.சில வார்த்தைகளோடு, குர்டிஸ்தானத்தில் பெண்களை பாதுகாக்கவும், அமைதியை நிலை நாட்டவும் வழி காண்பதற்காக நடத்தப்படும் இந்த அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். அமைதிக்காக நாமனைவரும் பாடுபடுவோம்.