பெருந்தன்மையை அதிகரித்து கொள்ளுங்கள்


புதன்கிழமை, 20 மே 2015, 

பெங்களூரு, இந்தியா


(பிறரை மாற்றுதல் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

ஒருவர் கூறுவது அறிவுப்பூர்வமாகவா அல்லது இதயபூர்வமாகவா என்று எவ்வாறு அறிந்து கொள்வது?

அறிவை விட இதயம் வலிமையானது. இதயபூர்வமாக வரும் எதுவும், பேரார்வத்துடன் வருவது, அறிவுபூர்வமாக வருவதனைத்தும் லட்சியத்துடன் வருபவை. சில சமயங்களில் இரண்டும் இணைந்து உங்களது உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை எழுப்பும். தொழிலை அறிவு மூலமாக செய்யுங்கள், வாழ்க்கையை இதயபூர்வமாக வாழுங்கள். இரண்டுமே அவசியம். உங்கள் வாழ்க்கை துணை, காதலி/காதலன், அல்லது நண்பர்கள் இவர்களையெல்லாம் அறிவுடன் இணைக்காதீர்கள். அதே சமயம்,அதிக அளவில் உணர்ச்சிவசப்பட்டு நெளிந்து கொண்டும் இருக்காதீர்கள்.

கடந்த காலத்தை பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். “ஏன் கடந்த காலத்தில் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஒருவர் அன்பு செலுத்தும் போது, அவருக்கு உங்கள் மீதுள்ள அன்பினைப் பற்றிக் கேட்கவே கேட்காதீர்கள். "உண்மையாகவே என்னை விரும்புகிறாயா? என்று உங்களை கேட்டால்,கடவுளே! எவ்வாறு நான் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறேன் என்று நிரூபிப்பது?" என்றே கூறுவீர்கள். யாருடைய தலையிலும் அவர் தம் அன்பை நிரூபிக்கும் சுமையினை ஏற்றவேண்டாம். அன்பினை அழிக்கும் வழியாகும். நீங்கள் அன்பை அதிகாரமாக கோரும் போது, நீங்கள் அதை அழிக்கின்றீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். சற்றுக் குறைவாக உங்கள் மீது அன்பு செலுத்துவது போன்று உணர்ந்தால், "ஏன் என்னை இந்த அளவு அதிகமாக விரும்புகிறீர்கள்?" என்று கேளுங்கள். 

எப்போதுமே பெறும் அன்புக்கு நீங்கள் உகந்தவர் அல்ல என்று உணருங்கள். உங்கள் தகுதிக்கு நீங்கள் பெறும் அன்பு மிக அதிகமானது என்று எண்ணுங்கள். இந்த அடக்கம் இருந்தால், நீங்கள் பெருந்தன்மையுடன் கௌரவத்துடன் நடந்து கொள்வீர்கள். கடந்த காலத்தையே அசை போட்டுக் கொண்டிருக்காமல், நிகழ் காலத்தில் வாழ்வீர்கள். மற்றவர்களது அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுப்பீர்கள். மற்றவர்களின் நிலையைப் புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மை உள்ளிலிருந்து வரவேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டால், நீங்கள் அன்பிற்கு அதிகாரக் கோரிக்கை விடுக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வில் அன்புக்கு அதிகாரக் கோரிக்கை இல்லாத போது அன்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

அன்பை அதிகாரமாக கோரும் போது, அன்பினை நீங்கள் அழிக்கின்றீர்கள். உங்களிடம் அதிக அன்பு செலுத்துபவர் கூட சலித்துப்போய் விடுகிறார். ஒருவர் எப்போதும் புகார் கூறிக் கொண்டும், கேள்வி கேட்டுக் கொண்டும், கண்காணித்துக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும் இருந்தால் உங்களில் எத்தனை பேர்  நீங்கள் திணருவீர்கள்?. அது முற்றிலும் திக்குமுக்காடச் செய்யும். இந்த மூச்சுத் திணறல், உங்கள் நடத்தையில் பிரதிபலித்து, உங்கள் உறவுகளை சிரமப்படுத்தி வேதனையடைய செய்யும்.

உங்கள் பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர், வாழ்க்கைத் துணை, நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டினர் ஆகிய எந்த உறவாயினும் முக்கியமானது, உங்கள் உணர்ச்சிகளை, உங்கள் மனதை ஸ்திரமாக இருக்கும் திறனை, பரந்த நோக்குடன் பார்க்கும் உங்கள் திறனை புரிந்து கொள்ளுதலே. அதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது  வாழ்க்கையில் பரந்த கண்ணோட்டத்தை தருவது; உங்களுக்கு வலிமையையும் ஸ்திரத் தன்மையையும் தருவது, வாழ்க்கையில் ஓர்  பார்வை மற்றும் பணியினைத் தருவது.

உங்கள் வாழ்வில் ஓர் பார்வை மற்றும் பணி இல்லையெனில், எந்த நோக்கமுமின்றி செல்ல இடமின்றி, சுற்றியலைந்து கொண்டிருப்பவனை போன்று உணருவீர்கள். அதனால் மனச்சோர்வு ஏற்படும். இன்று சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய வாழ்க்கையில் எந்த சாதனையும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில்லை. பொருள், வசதிகள், குடும்பம். நண்பர்கள் இருந்த போதிலும் வெறுமையுணர்வு உங்களை முற்றுகையிடுகின்றது. இத்தகைய வெறுமையுணர்வு வேதனையளிப்பதாக உள்ளது. அதை இட்டு நிரப்ப, மக்கள் போதை பொருட்களை நாடுகின்றனர். உங்களுக்குப் போதையூட்டிக் கொள்கின்றீர்கள், உலகையே சில கணங்களுக்கு மறந்து விடுகிறீர்கள், ஆனால் விழித்துக் கொண்டவுடன், முன்னை விட மோசமான நிலையில் அதே இடத்திற்கு திரும்புகிறீர்கள். இது ஏனெனில் போதை உங்களது ஆற்றலை குறைத்து விடுகின்றது. உங்கள் பிராண சக்தி குறைகிறது. பிராண சக்தி குறையும் போது, வாழ்க்கை பயனற்றது என்று மனம் உணர்ந்து வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் எண்ணம் எழுகின்றது. இந்த உணர்வை நாம் ஞானத்தின் மூலம் மாற்றியமைக்க வேண்டும். அஷ்டவக்கிர கீதையை கேளுங்கள். பிராணாயாமம் செய்யுங்கள். சக்தி க்ரியா, சுதர்சனக் க்ரியா செய்யுங்கள். உலகெங்கும் பல லட்சக்கணக்கான  மக்கள் இவற்றால் ஆறுதல் அடைந்திருக்கும் போது, உங்களுக்கும் மட்டும் கிடைக்காதா என்ன? நிச்சயம் நீங்களும் பயனடையப் பெறுவீர்கள்.

என்னுடைய மகள் வேறொரு சமயத்தை சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். அவளை மேற்படிப்பிற்கு அனுப்பியது நான் என்பதால் என் மனைவி என்னை இதற்குப் பொறுப்பாக்கி விட்டாள். இது எவ்வாறு என் தவறாகும்?  நான் என்ன செய்வது? எவ்வாறு இவற்றிலிருந்தெல்லாம் வெளியேறுவது?

என்றாவது ஒரு நாள் அனைவரும் இங்கிருந்து வெளியேறத்தான் வேண்டும். வெளியேறும் வரை புன்னகையுடன் இருங்கள். நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அனைவரிடமும் அன்புடன் இருங்கள். அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யுங்கள். மகளிடம், தன்னுடைய சமயத்தினை துறக்க வேண்டாம் என்று கூறுங்கள். தன்னுடைய சமய நம்பிக்கையை தொடர்ந்து கொண்டு பிற மதத்தையும் மதிக்கட்டும்.அவள் தனது தாயுடன் நெருங்கி, அவர்களையும் மரியாதை செய்யும்படிக் கூறுங்கள். 

பூஜைகள்,அதிலும் துர்க்கா பூஜை வங்காள மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் மகளை பூஜை விடுமுறை காலத்தில் வீட்டிற்கு வருமாறு அழையுங்கள். கட்டாயமாக்குங்கள். மக்கள் பிற சமயத்தினரை திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்களைத் தங்கள் சமய வழக்கப் படி பண்டிகைகள் கொண்டாடவோ, தங்களது சமயச் சடங்குகளை செய்யவோ விடுவதில்லை, அதனால் குடும்ப உறவுகள் முறிந்து விடுகின்றன. மகளிடம், கணவரின் சமய பண்டிகைகளையும் கொண்டாடி, தன்னுடைய சமயப் பண்டிகைகளையும் கொண்டாடுமாறு அறிவுறுத்துங்கள். பெண்கள் தங்களுடைய விருப்பத்தின்படி இருக்க வேண்டும். அடிமைகளாக வாழக்கூடாது. அன்பில் பங்குதாரர் உண்டு, அடிமைத்தனம் கிடையாது.

குருதேவ், நேற்று தாங்கள் சிவன் உருவமற்றவர் என்று கூறினீர்கள். ஆனால் சிவன் மற்றும் பார்வதி உடல் வடிவத்தில் உள்ளவாறு கதைகள் கேட்டிருக்கின்றோமே?

அது உடல் வடிவமல்ல, நுண்ணிய வடிவம். நுண்ணிய பரிமாணத்தில்,பல வெளிப்பாடுகள் உள்ளன. அது ஓர் ஆற்றல். அந்த ஆற்றல் ஒளியாகி, பல வண்ணங்கள் தெரிகின்றன, ஆயினும் அனைத்து வண்ணங்களும் ஒரே ஒளிதான், அந்த ஒளி ஆற்றல் என்றே பொருள்படும்,அதை இவ்வாறு புரிந்து கொள்ளுங்கள். மின்சாரத்தில் ஆற்றல் உள்ளது. அது வெளியே தெரிவதில்லை. உங்களால் அதைப் பார்க்க முடியாது. தொட முடியாது, அதை அனுபவிக்க முடியாது. யாராலுமே முடியாது. ஆயினும் மின்விளக்காகப்  பிரகாசிக்கும் போது அதை அனுபவிக்க முடியும். அதே போன்று, ஒரே பரப்ரம்மன் சிவன், சக்தி என்று வெளிப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம் நுண்ணிய நிகழ்வுகள். எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அனைத்தும் ஒன்றே, ஒன்றே அனைத்திலும் உள்ளது.    

அன்புள்ள குருதேவ், ஜோதிடம் எப்போதுமே உண்மையாகுமா?


ஜோதிடம் ஓர் வழிகாட்டி வரைபடம். இங்கே தியானம் மற்றும் ஆன்மீகம் இவற்றுக்காக நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இவை ஜோதிடத்தை விட ஒரு படி உயர்ந்தது. ஆன்மீகம் விருப்பங்களை வழங்கும் சக்தியுள்ளது. ஜோதிடம் எது  நிகழக்கூடும் என்று மட்டுமே கணிக்கும். என்ன நிகழப் போகின்றது என்று கூறாது.