தியானம் பற்றிய உண்மைகள்

புதன்கிழமை 29 ஏப்ரல் 2015

வாஷிங்டன் டி.சி. யுனைடெட் ஸ்டேட்ஸ்


(யோகா மற்றும் தியானத்தின் மூலம் அமைதியினை உருவாக்குங்கள்) என்ற கட்டுரையின் தொடர்ச்சி கீழே வருகிறது.

கேள்வி பதில்கள்

ஒரு குழுவாக அமர்ந்து தியானம் செய்வதில் கிடைக்கும் அனுபவம் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் போது இருப்பதில்லை. குழு தியானம் மற்றும் தனி நபர் தியானம் பற்றிச் சொல்ல முடியுமா?

ஆம். குழுவாக அமர்ந்து பலர் தியானம் செய்யும் போது ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நாமனைவரும் சக்தியுள்ளவர்கள். நாம் மற்றவர்களின் சக்தியைப் பெற முடியும். மற்றவர்களுடைய செல்வாக்கால் நாம் பாதிக்கப்படுகிறோம். குழுவில் ஒரு பைத்தியக்காரர் இருந்தால் நீயும் பைத்தியமாகி விட முடியும். இப்படிப்பட்ட அனுபவம் எல்லோருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். நீ ஒரு அறையில் நுழையும் போது அங்குள்ளவர்கள் கூச்சலிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தால், உன் மூளையில் ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நீ குவாண்டம் ஃபிஸிக்ஸ் படித்திருந்தால், இப்படிப் பட்ட தாக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்வாய்.

நிறைய பேர் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்யும் போது அவர்களைச் சுற்றி ஒரு புலம் (ஃபீல்ட்) உருவாகிறது. எனவே குழுவில் செய்யும் தியானம் ஆழமாக உள்ளது. ஞானம் பற்றிய உரைகளை கேட்டு வந்தால், தியானப்பயிற்சி எடுத்துக் கொண்டால், நீ தனியாக தியானம் செய்யும் போதும், அதன் தாக்கம் குழுவில் செய்யும் தியானம் போலவே ஆழமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் இரு முறை தியானம் செய்ய வேண்டும் என்று கூறினீர்கள். நான் 24 மணி நேரமும் தியான நிலையில் இருக்க விரும்புகிறேன். தினசரி இரு முறை தியானம் செய்வது சரி தான். ஆனால் வாழ்க்கை மிகவும் மன உளைச்சலோடு இருப்பதால், இரு முறை தியானம் செய்தால் போதாது என்று நினைக்கிறேன்.

வண்டியை குதிரைக்கு முன் வைக்கலாமா? துவக்கத்தில் ஒவ்வொரு நாளும் 20 நிமிடம் தியானத்தில் அமர்ந்து பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அப்படிச் செய்தால் நாள் முழுதும் மனம் அமைதியாக இருக்கும். அது 24 மணி நேரம் தியானம் செய்வது போலவே இருக்கும். இப்படிப்பட்ட அனுபவம் கிடைக்க சில காலம் பிடிக்கும். இடைவிடாமல் பழக்கப்படுத்திக் கொண்டால் உன்னால் அதை உணர முடியும். முழு மனதாக தியானம் செய். படிப்படியாக மெதுவாக ஈடுபாட்டோடு செய். அப்படிச் செய்ய முடியவில்லை என்று செய்யாமல் இருக்காதே. சிலர் அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு 24 மணி நேரம் தியானம் செய்த பின்னும் என் மனம் அலைபாய்கிறது என்று சொல்கிறார்கள்.

எனவே, தினசரி 20 நிமிட தியானம், உன் மனதை அமைதியாக வைக்க, பழக்கத்தில் வர உதவும். படிப்படியாக உனக்கு மேலும் நேரம் கிடைக்கும் போது, மேல் நிலை தியானப் பயிற்சிகளில் கலந்து கொண்டு, அதிக நேரம் தியானத்தில் ஈடுபடலாம். அப்படிப் பழகிய பின் ஒரு நாள் தியானம் செய்ய முடியாமல் போனாலும் உன் மனம் அமைதியாக இருப்பதை உன்னால் உணர முடியும்.

என்னுடன் வேலை செய்பவர்கள் மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அவர்களை எப்படி யோகப் பயிற்சிக்கு அழைத்து வருவது என்று எனக்கு தெரியவில்லை. எப்படிச் சொல்லி அவர்களை யோக சாதனைகளை கற்கும் படி செய்யலாம்?

இப்படிப்பட்ட சிந்தனை உன்னோடு இருக்கட்டும். ஏனென்றால் அவர்களை இந்த வகுப்புக்கு அழைத்து வர உனக்கே ஒரு வழி புலப்படும். நீ யோக சாதனைகளால் ஏற்படும் நன்மைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அல்லது யோகாவுக்கு முன்னும் யோகாவுக்குப் பின்னும் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடலாம். இக்கட்டுரையைப் பற்றி விவாதிக்க அவர்களை அழைக்கலாம். விஞ்ஞான அறிவியலில் விருப்பமுள்ள மனிதர்கள் இப்படிப்பட்ட உரையாடல்களில் கலந்து கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஆனால், சிலர் எதையும் ஒப்புக்கொள்ளாத மனப் போக்குடையவர்களாக இருக்கக் கூடும். அவர்களை விஞ்ஞான அறிவுடையவர்கள் என்று சொல்ல மாட்டேன். மனதில் பார பட்சம் இருக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் நான் பாஸ்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஒரு பயிற்சி நடத்தத் திட்டமிட்ட போது, அங்குள்ள அதிகாரிகள் அதை ஒரு வித்தியாசமாகக் கருதினார்கள். நான் மிகவும் வலியுறுத்திக் கேட்டதால், ஒரு சிறிய தூசி படிந்த அறையைக் கொடுத்தார்கள். 9 கைதிகளை மட்டும் பயிற்சிக்கு அனுப்பினார்கள். ஆனால் இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று பல சிறைச்சாலைகளில் யோகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மக்கள் இப்பயிற்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தியானம் என்றால் என்ன? தியானம் செய்யும் போது, நான் வழி நடத்தும் அறிவுரைகளை கேட்டேன். இருந்தாலும் என் மனம் (பல சிந்தனைகளோடு) அலைந்தது. ஆனால், 25 நிமிடம் தியானத்தில் இருந்ததை நான் உணரவில்லை.

சரி தான். உனக்கு முதல் அனுபவம். 25 நிமிடம் ஆனாலும், நேரம் கடந்ததை நீ உணரவில்லை. மனதில் சுற்றும் சிந்தனை அலைகள், கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி, உன் உடல் நன்றாக ஓய்வோடு இருப்பதை நீ அனுபவத்தில் உணரலாம். இது தான் தியானத்தின் அடையாளமாகும்.
உனக்குத் தெரியுமா? தியானம் என்பது ஒரு முறை செய்தால் போதாது. வழி நடத்துதலோடு செய்யும் தியானப் பயிற்சிகளுக்கான ஒலித் தட்டுகள் (ஆடியோ சி.டி) உள்ளன. துவக்கத்தில் இந்த ஒலித் தட்டுகளைக் கேட்டு நீ தியானம் பழகலாம். பழகிய பின் இந்த ஒலித்தட்டுகளுக்கு அவசியமிருக்காது.

நாம் சரியான திசையில் செல்கிறோம் (ஆத்மாவில் லயித்திருக்கிறோம் – நீங்கள் அதை எப்படி அழைத்தாலும்) என்பதை எந்த நேரத்தில் உணர முடியும் ?

இதை உன் காலில் உள்ள வலியைப் போல், வெளிப்படையாக உணர முடியும். உன் காலில் வலி இருக்கும் போது, யாரிடமும் சென்று என் காலில் வலியிருக்கிறதா? என்று கேட்க தேவையில்லை. அது ஒரு தனியான அனுபவம். தியானத்திலும் இப்படித்தான். நீ முற்றிலும் உனக்குச் சொந்தமான இடத்திலிருப்பதை உணர்வாய். ஆற்றல் மிகுந்திருக்கும். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சக்தியால் பூரித்திருப்பதை, துடிப்பதை உணரலாம். உண்மையில் உனக்கு ஒரு யோக ஆசிரியர் தேவையில்லை. ஒரு குழந்தை செய்வதை கவனித்துப் பார். பிறந்ததிலிருந்து 3 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு விதமான யோக ஆசனங்களைச் செய்கிறது. மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்கிறது. நாமனைவரும் பிறவியிலேயே யோகிகளாக இருந்தோம். ஆனால் நடுவில் அதை மறந்து விட்டோம். நாம் மறந்து விட்டதை திரும்பவும் செய்வது தான் யோக சாதனை என்பது.

நீங்கள் சேவை பற்றிப் பேசினீர்கள்.நேபாளத்தில் நடந்த நில நடுக்கத்தால் வந்த விளைவுகளை பற்றி எங்களில் பலர் கவலையாக இருக்கிறோம். நாங்கள் அங்கு அமைதியை நிலை நாட்ட, அங்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை நீக்க, (உங்கள் பார்வையில்) நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இன்று காலையில் கூட நேபாளத்தில் இருப்பவர்களோடு பேசினேன். அங்கு நிலைமை சீராகத் துவங்கியுள்ளது. காட்மாண்டு நகரில் மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.ஆனாலும் 5000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தூரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு உதவ பலர் சென்றிருக்கிறார்கள். இது இயற்கையில் ஏற்பட்ட பேரிடர். நீங்கள் அங்கு சென்று சேவையில் ஈடு பட விரும்பினால், உங்களால் இயன்றதை செய்யலாம். அங்கு ஐ.ஏ.எச்.வி நிறுவனம் சேவை செய்கிறது. அவர்கள் நேபாள மக்களின் புனர்வாழ்வுக்காக நிதி திரட்டுகிறார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப் போகிறோம். (மின்சாரம் இல்லாததால்) மக்களுக்கு சோலார் விளக்குகள் கொடுக்கிறோம்.