நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள்

வியாழக்கிழமை, 21 மே 2015,

பெங்களூரு,இந்தியா


குருதேவ், ஜோதிடம் வேதங்களின் கண்கள் என்று போற்றப்படுகின்றது. உண்மையில் நமது வாழ்க்கை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை, இயக்கம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கின்றதா?

படைப்பின்  ஒவ்வொரு துகளும், நமது வாழ்க்கையுடன் தொடர்புடையவையாகும்.திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல (இங்கு நகைச்சுவையாக திரையுலக நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு ) அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் மற்றும் வான்கோள்களும் நமது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவை. படைப்பு முழுமையும் - மிகச் சிறிய அணு முதல் மகாத்தத்துவம் வரையில் (இருப்பின் அடிப்படை கோட்பாடு - தான் என்பதை விட நுண்ணியது) அனைத்தும் ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

ஓர் வண்ணத்துப் பூச்சி தென் அமெரிக்காவில் தன் சிறகுகளை அடித்துக் கொண்டால், அது சீனாவில் சுற்றிக் கொண்டிருக்கும் மேகக் கூட்டத்தினைப் பாதிக்கின்றது (தொடர்புடைமை  நிலையைக் குறிப்பிட்டு) என்று இன்றைய அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் உலகம் முழுமையும் ஒன்றே. ஓர் யக்ஞம் நடத்தினால் அதன் அதிர்வலைகள் அனைத்து இடங்களையும் சென்றடையும் என்று நமது முன்னோர்கள் மற்றும் ரிஷிகள் கூறியிருக்கின்றனர். நீங்கள் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை  உலகத்தையே அசைக்கும் வலிமையுடையது. எனவே இது உண்மை.இதைத் தவறாகப் புரிந்து கொண்டு அனைத்தும் விதிவசம், அதை சகித்துக் கொள்வதைத்  தவிர வேறு வழியில்லை என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். 

உங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று எண்ணாதீர்கள். வாழ்க்கை, விதி மற்றும் விருப்பம் இரண்டும் இணைந்ததேயாகும். சில விஷயங்களை நமது செயல்களின் மூலம் மாற்றலாம், சிலவற்றை நம்மால் மாற்றமுடியாது அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியது தான்.
உதாரணமாக, 17-20 வயதிற்குப் பின்னர், உங்களுடைய உயரம் அதிகரிக்காது. அந்த வயதில் ஐந்தடி இருந்தீர்கள் என்றால், உங்கள் உயரம் அவ்வளவு தான். அதற்கு மேல் அதிகரிக்காது. உங்கள் எடை 100 கிலோவைத்  தாண்டி விட்டால் இதுதான் என் விதி என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணாதீர்கள். உங்களால் எடையைக் குறைக்க முடியும் ஆனால் உயரத்தை அதிகரிக்க முடியாது. வாழ்க்கையும் இது போன்று தான். நம்மால்  மாற்றக் கூடிய விஷயங்கள் பல உள்ளன. பலவற்றை மாற்ற முடியாது. ஆகவே கிரகங்களும் நட்சத்திரங்களும் நமது வாழ்வில் நிச்சயமாக பலன்களை ஏற்படுத்துகின்றன. அவற்றைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. அதனால் தான் 108 என்னும் தனித்துவம் வாய்ந்த எண் ஜபித்தலுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

ஒன்பது கிரகங்களும் 12 நட்சத்திர ராசிக் குழுக்களும் உள்ளன. ஒன்பது கிரகங்களும் 12 நட்சத்திர ராசிக் குழுக்களுக்குள் நகரும் போது நம் வாழ்வில் 108 விதமான பலன்களை  அளிக்கின்றன. அந்த அதிர்வலைகளின் தீய பலன்களை தவிர்க்கும் பொருட்டு 108 முறை ஓம் நமசிவாய என்று ஜபம் செய்கின்றோம். ஓம் நமசிவாய என்று ஜெபிக்கும் போது அது நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, தீய பலன்களிலிருந்து  நம்மைக் காக்கின்றது.

குருதேவ், நாம் எதுவோ அதுவே நாம் கவர்வது என்று கூறப்படுகிறது. நான் நேர்மையான அமைதியான நபராக இருந்த போதிலும் நான் நேர்மையற்ற அமைதியற்றவர்களை கவர்கின்றேன். ஏன்?

அவர்கள் அவ்வாறிருப்பதைக்  கண்டறிந்தால், நீங்கள் மைய நிலையிலேயே இருக்க வேண்டும். அவ்வளவு தான். அதே எதிர்மறை நிலைக்கு நீங்கள் இழுத்துச் செல்லப்படாதீர்கள். இது இயல்பு தான், ஆனால் அனைத்தும்   நீங்கள் உங்களது வலிமையைக் கண்டறிந்து பிரதிபலித்து மைய நிலையிலேயே இருப்பதற்கான சந்தர்ப்பங்களே ஆகும். அவர்களுக்கு உதவ முடிந்தால் கண்டிப்பாக உதவுங்கள். அது நல்லது. ஆனால் அவர்களது எண்ணப் போக்கு உணர்ச்சிகள் ஆகியவற்றில் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அது மிக முக்கியமானது.

குருதேவ், ஒருவரை மன்னிப்பதற்குச் சிறந்த வழி எது?

நீங்கள் ஒருவரை மன்னிக்க விரும்பினால், நீங்கள் ஏற்கனவே அவரை மன்னித்து விட்டர்கள் என்று ஆகும்.வேறு வழியே வேண்டியதில்லை..ஏற்கனவே அது நடை பெற்று விட்டது. எப்போது உங்களால் ஒருவரை உண்மையில் மன்னிக்க முடியும்? அவர் பாதிக்கப்பட்டவர் என்று நீங்கள் கருதும் போது நீங்கள் அவரை மன்னித்து விடுகின்றீர்கள். ஒவ்வொரு குற்றவாளியும் பாதிக்கப் பட்டவர் தான்.   நீங்கள் ஒருவரை தெரிந்தே தவறு செய்யும் குற்றவாளி என்று எண்ணினால் உங்களால் அவரை மன்னிக்க முடியாது.

தீய கர்மாக்களை நல்ல கர்மாக்களாக மாற்றுவதற்கு எவ்வளவு சாதனா தேவைப்படும்? எவ்வாறு அந்தக் கணக்கை சமநிலைப்படுத்துவது?

துரதிர்ஷ்டவசமாக இந்த கர்மாக்களுக்கான கணக்குப் பரிசோதனையை இது வரையில் யாரும் செய்யவில்லை. (சிரிப்பு) நீங்கள் இந்த பூமியை விட்டுச் செல்லும்போது ஒரு வேளை சித்திரகுப்தன் உங்களுக்குக் கூறக்கூடும்."உங்கள் செயல்களை செய்து முடித்தவுடன் அவற்றை மறந்து விடுங்கள்." என்று ஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு- அது புண்ணியமானாலும்,பாபமானாலும் சரி அவற்றை உடனேயே விட்டுவிடுங்கள். உங்கள் செயல்களுக்கெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு என்ன பயன்? கவலைப்படாமல் உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.

தகுதியான வாழ்க்கைத் துணையினை அடைய , அவரிடமிருந்து புகை வருவது போன்ற ஓர் காணக் கூடிய குறிப்பினை ஏன் நமக்கு கடவுள் தருவதில்லை? நாம் ஏன் நமது நேரத்தையும் உணர்ச்சிகளையும் அந்த நபர் மீது செலவழித்து கண்டுபிடிக்க வேண்டியதிருக்கின்றது ?

புகை பின்னர் வருகிறந்து என்று எண்ணுகிறேன்.(சிரிப்பு) முதலில் நெருப்பு பிடிக்கின்றது, பின்னர் புகை வருகிறது. யார் உங்களுக்குத் துணையாக விரும்புகின்றாரோ, அவரும் அதையே விரும்பலாம். ஆகவே நீங்கள் வேண்டுவது போன்ற குறிப்பை  அவரும் உங்களிடம்  தேடிக் கொண்டிருக்கலாம். எனவே, அவ்வாறு நிகழும்போது, நீங்கள் பொங்கியெழுந்து விடாதீர்கள்.(சிரிப்பு)

குருதேவ், வானவில்லினை ஏற்படுத்தியது யார்?


வானவில், சூரியன், மழை மற்றும் உங்களால் ஏற்படுத்தப்பட்டது! ஏனெனில், நீங்கள் எங்கு நின்று கொண்டிருக்கின்றீர்களோ அங்கிருந்து  அதைக் காண முடிகிறது. அங்கிருந்து வேறிடத்திற்கு  நகர்ந்து விட்டால், வானவில்லை காண முடியாது.எனவே, வானவில் ஏற்பட  நீங்கள் அங்கிருக்க வேண்டும், மழைத்துளிகள் வேண்டும் சூரிய ஒளியும் வேண்டும். நீங்கள் அதிக முக்கியமானவர்.