நுண்ணறிவு முக்கியமானது

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015,

பெங்களூரு, இந்தியா



என் உணர்ச்சிகளை என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் கட்டத்தில் வாழ்கிறேன். நான் இதை நன்கு விழித்துணர்ந்திருக்கின்றேன். இல்லையெனில், அவைகள் அடக்கப்பட்டுவிட்டன என்றே நினைக்கிறேன். நான் சரியான பாதையில் இருக்கின்றேனா?

உணர்ச்சிகள் என்பவற்றிலிருந்து சில சமயங்களில் விலகி இருக்க வேண்டும். சமயங்களில் அவற்றை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தீவிரமான எந்தக் கருத்தையும் நீங்கள் பின்பற்றக் கூடாது. எப்போதும் உங்கள் உணர்ச்சிகளை அடக்கவும் கூடாது, அதே போன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கவும் கூடாது. இரண்டுமே உங்களுக்குக் கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளை உருவாக்கும். உங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டே இருந்தால் பிரச்சினை ஏற்படும்.அவற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால், உங்களுக்கும் பிரச்சினை பிறரையும் கஷ்டப்படுத்துவீர்கள். அதனால் தான், உணர்ச்சிகளை புத்தியின் மூலம் ஒழுங்குபடுத்த வேண்டும். அத்தகைய ஞானம் இருந்தால், எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்,வெளிப்படுத்தக் கூடாது மற்றும், எந்த இடத்தில் வெளிப்படுத்த வேண்டும், கூடாது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

ஒருவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருக்கும் போது," நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறிக் குதிக்க முடியாது. சந்தோஷம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த கூடாது. அது போன்று, நீங்கள் வேதனையுடன் இருக்கும் போது, ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால்,அங்கு "நான் மிக வருத்தமாக இருக்கிறேன்" என்று கூற முடியாது. அவர்கள் கொண்டாடி மகிழும் இடத்தில் வருத்தமாக இருப்பதை காண மக்கள் விரும்பமாட்டார்கள். நீங்கள் அந்தச் சூழலையே கெடுத்துவிடுவீர்கள். ஆகவே, நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை எங்கு, எப்போது, எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும், வெளிப்படுத்துவது அறிவீனமாக இருக்கும் என்பதையெல்லாம்   உங்கள் பாகுபடுத்தும் திறனை பயன்படுத்தி அறியவேண்டும்.

செய்தித் தாள்களில் பிற மக்கள் செய்யும் தீயவைகளைப் பற்றிப் படிக்கும்போது, அது நமது கர்மாவை பாதிக்குமா?

இல்லை, ஆனால் அதை மேலோட்டமாகப் படிக்க வேண்டும்.அதை நீங்கள் உங்களுக்குள் அதிகமாக எடுத்துச் சென்றால், அது உங்கள் மனதைப் பாதிக்கும். இல்லையெனில் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. படித்துவிட்டு அதை மறந்து விடுங்கள். இவையெல்லாம் உலகின் ஒரு பகுதி தான்.

ஞானம் அடைந்தவர்களின் மீது ஏற்படும் கவர்ச்சி, சந்தோஷம் அமைதி இவற்றை அளிக்குமா? அல்லது அதுவும் பிற ஆசைகளைப் போன்றது தானா? ஞானம் அடைந்தவர்கள் என் இவ்வளவு கவர்ச்சியாக இருக்கின்றனர்?

தெரியவில்லை! நீங்கள் மையமாகும் போது அனைவரிடமும் சமதூரத்திலேயே இருக்கின்றீர்கள். அந்த மையத்தின் அழகு.மையநிலை சுற்றளவின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சமதூரத்திலுள்ளது, மற்றும் சுற்றளவிலுள்ள ஒவ்வொரு புள்ளியும், மையநிலையினை நெருக்கமாக உணருகின்றது. முற்றிலும் இணைக்கப்பட்டதாக உணர்கிறது.அந்த இணைப்புணர்வு அன்பு மற்றும் வேறு அனைத்து நேர்மறை உணர்ச்சிகளையும் தூண்டி விடுகின்றது.

குருதேவ், பணியிடத்தில் அடக்கமாகவும் அதிகாரத்துடனும் இருப்பது எப்படி?

அது ஒரு திறன். அதை நீங்கள் மேலாண்மை செய்ய வேண்டும். நீங்கள் பணிவுடன் ஆனால் உறுதியாக இருக்கவேண்டும். கடுமையாக மற்றும் திமிருடன் இருப்பது எளிது. பணிவுடன் பலவீனமாக இருப்பதும் எளிது. ஆனால் பலவீனமான பணிவு நல்லதல்ல. பலமும், பணிவும் இணைந்திருப்பதே பாராட்டத்தக்க குணம். திமிருடன் அதிகாரம் செலுத்துவது மிக எளிது, ஆனால் அதிகாரமும் பணிவும் இணைந்திருப்பது மிக நல்லது. அதை அடைந்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் ஆகின்றீர்கள். அது போன்றே, கோபம், வெறுப்பு இவற்றால் விஷயங்களை விட்டுவிடுவது எளிது. ஆனால் திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் விட்டு விடுதல் என்பது ஓர் நற்திரன்.

குருதேவ் எவ்வாறு தியானத்தின் மூலம் மூளைத்திறன் அதிகரிக்கின்றது?

இதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்,அதை சந்தேகிக்க காரணமும் இல்லை. தியானம் செய்ய துவங்கி ஓரிரு வாரங்களே ஆனபோதும் மக்களிடம் மாற்றங்களை கண்டிருக்கின்றேன். தியானம் செய்யக் கற்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்,உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்களிடம் மாற்றத்தினை கண்டிருக்கின்றேன். மூளை என்பது மெய்யுணர்வு தன்னை காட்டிக் கொள்ளும் கருவி. அந்த மெய்யுணர்வு கருவை குழந்தையாக வளர்க்கின்றது. மெய்யுணர்வு இல்லையெனில் அது எவ்வாறு வளரும்? ஒரு கரு குழந்தையாக வளருகின்றது ஏனெனில் அதனுள் ஏதோ ஒன்று இருக்கிறது, அந்த ஏதோ ஒன்றுதான் வளர்ச்சிக்கு ஊக்கியாகி, மாற்றத்தையும்  ஆற்றுப்படுத்துவதையும் எந்நேரத்திலும் செய்யக்கூடும்.