நோக்கத்தின் சக்தி

15 மே 2015, பெங்களூரு, இந்தியா


பரமாத்மா: பரம் என்பது ஆத்மாவிற்கு அப்பாற்பட்டது. ஆத்மா என்பது சுயம். யாருமே ஆத்ம வினை மறுக்க முடியாது. எதையுமே நம்பவில்லை எனினும்,தான் கூறும் ஓர் வாக்கியத்தையாவது நம்பித்தான் ஆகவேண்டும். ஒருவர் நான் எதையுமே நம்பமாட்டேன் என்று கூறினால் தான் கூறுவதையும் நம்பமாட்டார் என்று பொருளாகின்றது அல்லவா? ஒன்றைக் கூறிவிட்டு அதையே நம்பவில்லை என்பது இயலாத காரியம். எனவே நான் எதையும் நம்ப மாட்டேன் என்று ஒருவர் கூறினால் என்னைத் தவிர வேறெதையும் நம்பமாட்டேன் என்று கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் "என்னை" என்பது என்ன? யார்? அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

கடவுள் ஒரு புறம் இருக்கட்டும். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். முதலில் "நான் யார்" என் வாழ்க்கை என்ன?" "நான் எங்கிருந்தேன்?" இதற்கு பிறகு எங்கு செல்வேன்?" என்று கண்டுபிடித்து கொள்ளுங்கள்.இந்த கேள்விகள் போதும், பயணம் துவங்கிவிட்டது. நான் யார் என்று கண்டறிய வழி தியானமே. கபீர் தாஸ், "ஹரி ஹரி என்று நான் கூறும் போது என்னால் ஹரியைத் தரிசிக்க முடியவில்லை. நான் என்னுள் நோக்கும் போது ஹரி என் பின்னாலிருந்து கபீர் கபீர் என்று அழைக்கிறார் என்று கூறியுள்ளார். அசைவின்றி இருங்கள். மனம் அசைவின்றி இருப்பது தான் முக்கியம்.அவ்வப்போது பல உணர்ச்சி எழுச்சியலைகள் ஏற்படுகின்றன. சிலவற்றை விரும்புகிறீர்கள், அப்போது அலை மேலேழும்புகிறது, சிலவற்றை விரும்புவதில்லை அப்போதும் அசைக்கப்படுகின்றீர்கள். மனம் விருப்பு வெறுப்புக்களால் அலைக்கழிக்கப்படுகின்றது. இவற்றிலிருந்தெல்லாம் குதித்து எழவேண்டும். அதற்குத்தான் இங்கு அனைவரும் இருக்கிறீர்கள். சரியான இடத்திலேயே இருக்கின்றீர்கள், சரியானதையே செய்து கொண்டும் இருக்கின்றீர்கள்.

குருதேவ், சிவன் மற்றும் கிருஷ்ணருக்கிடையே உள்ள உறவு என்ன? அவர்களிருவரும் நண்பர்களா? ஒன்றாகப் பணிபுரிபவர்களா அவ்வாறெனில் அவர்களில் தலைமை வரிசை உள்ளதா?

அவர்களிருவரில் ஒருவரை பற்றித் தெரிந்து கொண்டுவிட்டீர்கள் எனில் இருவரையுமே பற்றித் தெரிந்து கொண்டது போலத் தான். ஏனெனில் அவர்களிருவரும் ஒருவரே! ஒரு கோப்பையை இங்கிருந்து அங்கு நகர்த்தினால், அதன் இடம்  ஒன்றா அல்லது மாறிவிட்டதா? அந்த இடம் ஒன்று தான் ஆனால் வித்தியாசமானது அல்லவா? கோப்பையின் இடம் அதுவே தான் ஆனால் அதை நகர்த்தும் போது அது வித்தியாசமாகிறது. அது போன்றதே சிவன் மற்றும் கிருஷ்ணர்.  ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூமியில் வலம் வந்திருக்கின்றார். சிவன் என்பது ஒரு மனிதன் அல்ல. அது ஆற்றல். மிக நுண்ணியமானது. நம் அனைவரின் உள்ளேயும்  இருப்பது சிவம். அதை நீங்கள் உணரும் போது அதுவே கிருஷ்ணர்.அதனால் தான் "சிவோஹம் சிவோஹம்"என்று இசைக்கிறோம். (நானே சிவம், நானே சிவம்). கடவுள் எங்கேயோ மேலே அமர்ந்திருக்கவில்லை. அசைவின்றி இருங்கள், அப்போது நீங்கள் இப்பிரபஞ்சம் முழுவதிலும் சிவனையன்றி யாருமில்லை என்று உணர்ந்தறிவீர்கள். சிவனை எவ்வாறு விவரிக்கின்றார்கள் தெரியுமா? இப்பிரபஞ்சம் முழுமையுமே சிவனின் உடல் அதனால்தான் சிவனை நீல நிறத்தில் சித்தரிக்கின்றார்கள்.  நீலம் நிறமல்ல, நாம் எப்போதுமே வாழுகின்ற ஆற்றல், அந்த ஆற்றலே சிவம்.

குருதேவ், நமது நல்ல செயல்கள் யாரேனும் ஒருவருக்கு தொல்லையளிக்கலாம். இவ்வாறு பாதிக்கப்பட்டவரை எவ்வாறு கையாள்வது?

உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அதுவே முக்கியமானது. ஒரு மருத்துவர் வயிற்றை கத்தியால் கிழிக்கிறார், திருடனும் கத்தியால் குத்துகிறான், வித்தியாசத்தை பாருங்கள். இருவருமே கத்தியை பயன்படுத்தினாலும் வெவ்வேறு காரணங்களுக்காக பயன் படுத்துகின்றனர். ஒருவர் வாழ வைப்பதற்காக மற்றவர் கொல்வதற்காக. இரு நிகழ்வுகளிலுமே ஒருவர் இறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது,அதே போல் பிழைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது ஆகவே இங்கு எது முக்கியமானது? நோக்கமே முக்கியம்.

குவாண்டம் பௌதீகத்தில் குவாண்டம் தொலை நகர்த்தல் என்னும் கருத்து உள்ளது. அது பழங்காலத்தில் குரு விரும்பும் போது மறைந்து மீண்டும் தோன்றுவது போல உள்ளது. தொலை நகர்த்தல் புதிய வழிமுறை பழங்காலத்தில் ஏற்பட்டிருந்தது போன்றதேயாகுமா?

நமது நுண்ணிய உடல் அதைச் செய்ய முடியும். நுண்ணிய அளவில், நீங்கள் பலரின் கனவுகளில் ஒரே சமயத்தில் தோன்ற முடியும். அது சாத்தியம் தான். கோட்பாட்டளவில் ஸ்தூல சரீரங்கள் தொலைநகர்த்தல் செய்யப்படுதல் சாத்தியமே. ஏனெனில் அனைவரும் வெறும் ஆற்றலேயாவோம். உருவப்படம் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு மின்சக்தி உருமாற்றம் மூலம் அனுப்பப்பட்டு அச்சிடப்படலாமெனில் (FAX Machine: தொலை நகல் இயந்திரத்தைக் குறிப்பிட்டு) எதுவுமே சாத்தியம் தான்.

வாழும்கலைப் பயிற்சிகளை முடித்த பின்னரும் சிலர் கோபம் தான் எனும் அகந்தை இவற்றை வெளிக்காட்டுகின்றனர். இவர்களை எவ்வாறு கையாள்வது?

ஒருவேளை இவர்கள் வாழும்கலை பயிற்சிகளை செய்திருக்கவில்லையெனில் எப்படியிருப்பார்கள்? இதை விட மோசமாக இருப்பார்கள். அல்லவா? சிலர் வாழும்கலைப் பயிற்சிகளை செய்கின்றனர், ஆனால் பயிற்சி முடிந்த பின்னர் அவற்றை  தொடர்ந்து செய்வதில்லை. செய்யவில்லையெனில் அது யாருடைய தவறு? பயிற்சியின் தவறா அல்லது பயில்பவர்களின் தவறா? பயிற்சியை எடுத்துக் கொண்ட பின்னர், அகந்தையை காட்டினால் அவர்களுக்கு தேவை தொடர்ந்து பயிற்சியினை செய்து வருதலேயாகும். திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

உணவு உண்டு ஆறு அல்லது ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் பசி எடுக்கின்றது, அப்போது மீண்டும் உணவினை உண்ண வேண்டும்.அல்லவா? நேற்று உணவருந்தி விட்டேன், ஏன் இன்று பசிக்கிறது? என்று கேட்க முடியாது. தினமும் குளிக்க வேண்டும்.ஏன் தினமும் குளிக்க வேண்டும்? நேற்று குளித்து விட்டேன், ஏன் உடல் இன்று நாற்றம் எடுக்கிறது என்று நீங்கள் கேட்பதில்லை.

அது போன்று ஓர் நாள் மட்டும் குளித்துவிட்டால் அது போதாது. மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டும். குளித்தால் ஏற்படும் புத்துணர்ச்சி அரை நாள் அல்லது ஒரு நாள் மட்டுமே நீடிக்கும். சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்க வேண்டும்.