கவலையின்றி இருங்கள்

திங்கள்கிழமை, 25 மே,2015,

பெங்களூரு, இந்தியா



நாம் அனைவரும் மகாராஷ்டிராவில் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் விட்டலாவை பற்றிய பஜனைப் பாடலைப் பாடினோம். இந்தப் படைப்பே விட்டலாவிலிருந்து உருவாகியது தான். சில சமயங்களில் நாம்,விட்டலா கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிலை என்றே  கருதுகின்றோம். இல்லை,அவ்வாறில்லை. படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே விட்டலாவினால் உருவாக்கப்பட்டது தான்.எங்கும் நிறைந்தவர் விட்டலா. அதனால் தான் மாதா விட்டலா,பிதா விட்டலா,குரு விட்டலா, சகா விட்டலா என்று பாடுகிறோம். நம்மை சுற்றியிருக்கும் அனைவருமே விட்டலா என்று காண்பதுவே உண்மையான சாரம்.

ஹிந்து சமயத்தில், குருவின் அருளின்றி முக்தியடைய முடியாது என்று நம்பப்படுகின்றதே ஏன்?

இது ஹிந்து சமயத்ததில் மட்டுமல்ல, புத்த சமயத்தில், ஜைன சமயத்தில், உலகிலுள்ள பிற சமயங்களிலும் கூட  குருவின்றி ஒருவன் முன்னேற்றம் மற்றும் விடுதலையினை அடைய முடியாது என்றே பரவலாக நம்பப்படுகின்றது. இதை கிறிஸ்தவ சமயத்திலும் காணலாம். ஏசுநாதர், "என் தந்தையுடன் நீங்கள் செல்ல விரும்பினால் என் மூலமாகவே செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். (இங்கு குரு அல்லது சமயத் தூதர் என்று பொருள் கொள்ளலாம்) குருதத்துவம் எப்போதும் எங்கும் உள்ளது. ஒரு காரை நீங்கள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அல்லது ஒரு காரோட்டும் லைசென்சை அடைய  வேண்டுமெனில் உங்களுக்கு ஓர் பயிற்றுனர், வழிகாட்டி தேவை. கால் பந்து விளையாடக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில், ஒரு நல்ல பயிற்சியாளர் தேவை. சில சமயங்களில் பிற நாடுகளிலிருந்து பயிற்சியாளரை வரவழைத்து நமது இந்திய கிரிக்கெட் வீர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். சற்றே சிந்தியுங்கள்: ஒரு பந்தை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வீசுவதற்கே அல்லது ஓர் மட்டையைப் பிடிப்பதற்கே ஒரு பயிற்சியாளர் தேவைப்படுகிறார். ஆன்மீகத்தில் வழிகாட்ட ஏன் ஒருவருக்கு குரு தேவைப்பட மாட்டார்? நிச்சயம் ஓர் குரு தேவை.

உங்கள் வாழ்வில் ஒரு குரு இருக்கும்போது என்ன நிகழ்கின்றது?

1. துக்கங்கள் குறைகின்றன
2. மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்து வழிகின்றன
3. குரு ஞானத்தினைக் காப்பாற்றிப் பாதுகாக்கின்றார்.
4. குருவின் முன்னிலையில் அனைத்துத் திறன்களும் மலர்கின்றன.
5. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நிறைவினை அனுபவிக்கின்றீர்கள்.

ஒரு குரு உங்கள் வாழ்வில் இருக்கும்போது எவ்வாறு எந்த வகையிலும் குறையைக் காண முடியும்? உங்களுக்கு குரு இருக்கும் போது, சிறிய விஷயங்களைப் பற்றி அழுதுகொண்டோ குறை கூறிக் கொண்டோ இருக்க மாட்டீர்கள். வலுவும் ஸ்திரமும் கூடும். எதை எண்ணுகிறீர்களோ அது வெளிப்பட்டு நிகழத் துவங்கும். எத்தனை பேர் அனுபவித்திருக்கின்றீர்கள்? கை உயர்த்துங்கள் (கூட்டத்தில் பலர் கை உயர்த்துகின்றனர்) குருவுடன் இருக்கும் போது, ஒருவரது சங்கல்பம் நிச்சயம் நிறைவேறும். அத்தனை நேர்மறையான விஷயங்களையும் கண்டுணர்ந்து, நமது ரிஷிகள் குரு பினா கதி நஹி" (குருவின்றி முன்னேற்றமில்லை) என்று சரியாகக் கூறியுள்ளனர்.

குருதேவ், ஒருவர் ரிஷி அல்லது ஸ்வாமியாக என்ன செய்ய வேண்டும்?

ரிஷி அல்லது ஸ்வாமியாக எதுவும் செய்யவேண்டிய தேவையில்லை. அவ்வாறு ஆக வேண்டும் என்னும் நேர்மையான எண்ணமே போதும். அத்துடன், சில விதி முறைகள், வாழ்வியல் ஒழுக்கம் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வளவு தான். தனக்கென்று எதுவும் வேண்டாம் என்னும் நிலையில் ஒருவர் ஸ்வாமி ஆகிறார். ஒரு ஸ்வாமி மற்ற அனைவரின் நலன் மற்றும் பயனுக்காக உழைப்பவர். திருமணமானவரானால் அவர் ஸ்வாமியல்ல, ரிஷி.

குருதேவ், ஆங்கிலத்தில் அமெரிக்கா,நேபால், ஸ்ரீலங்கா ஆகியவை அதே பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆனால் பாரத் ஏன் இந்தியா என்று ஆங்கிலத்தில் அழைப்படுகிறது?

பம்பாய் மும்பை ஆனது போன்று விரைவில் இந்தியாவும் பாரத் (இந்தியா பழங்கால அமைதி மற்றும் வளத்தினைக் காணும் என்னும் பொருளில்) ஆகிவிடும். மெட்ராஸ் சென்னை என்றாகியது, பெங்களுர் பெங்களூரு என்று ஆகியது. இந்தியக் கலாசாரத்தின்படியுள்ள பெயர்களை நாம் மெதுவாக திரும்பச் சென்றடைகின்றோம். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டகன்ற பின்னர், அவர்கள் அளித்த பெயர்களையே நமது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தோம். அதனால் தான் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பெயர்களில் வேறுபாடு காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் சென்று விட்ட போதிலும் அவர்களது வழிகளில் நாம் கொண்டிருந்த அடிமைத்தனம் நமது இந்திய மனப்பான்மையை விட்டு அகலவில்லை. நமது வேர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் கலாச்சார பெருமையின் மறுமலர்ச்சியினை காண்கின்றோம். ஆகவே இந்த மாற்றமும் விரைவில் ஏற்படும்.

குருதேவ், ஒரு நடைமுறை சார்ந்த மற்றும் தொழில் கவனம் மிகுந்த பெண்ணாகிய நான் எப்போதும் பணியிடத்தில் ஆணாதிக்கத்தை எதிர்கொள்கின்றேன். எவ்வாறு கையாள்வது? நான் தவறாகப் பெண்ணாக பிறந்துவிட்டேனா?

இல்லை, ஒருபோதும் உங்களையோ உங்கள் பாலினை சந்தேகிக்காதீர்கள். நாம் ஒவ்வொருவரும் ஆண், பெண் இரு பாலினரின் அம்சங்களையும் நம்மில் கொண்டிருக்கின்றோம். இரண்டையும் நீங்கள் கௌரவிக்க வேண்டும்.சில சமயங்களில் ஆண் அம்சம் சற்று மேலாதிக்கம் பெற்றிருந்தால் பரவாயில்லை. அதையும் நீங்கள் கௌரவிக்க வேண்டும். பிறருக்கு அதிகமான தான் என்னும் அகம்பாவம் இருப்பதை பொருட்படுத்தாதீர்கள். அதைப் பொருட்படுத்தினால் மேலும் அதிகமாக நீங்கள் சக்தியளிக்கின்றீர்கள். எனவே அதை பொருட்படுத்தாதீர்கள். இயல்பாகவே இருங்கள். தான் எனும் அகந்தைக்கு இயல்புணர்வும், சார்புணர்வும், பிறருடன் ஒன்றிணைந்திருக்கும் உணர்வுமே  மாற்று மருந்து. அவ்வாறு அவர்கள் உணரவில்லை யெனில் அது அவர்களது பிரச்சினை. உங்கள் தரப்பில், நீங்கள் இயல்பாக இருங்கள். நீங்கள் அவர்களில் ஓர் பகுதி, அவர்கள் உங்களில் ஓர் பகுதி என்றே உணருங்கள். இதை நீங்கள் அனுபவிக்கும் போது பெரும் மாற்றம் ஏற்படும்.

என்னால் என்னுடைய கடந்த காலத்தை மறக்க முடியவில்லை. அது என்னைத் தொடர்ந்தே வந்து கொண்டிருப்பதால் என் கணவருடன் உள்ள உறவைப் பாதிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள்.தியானம் தான் இதற்கு விடை. தியானம் உங்களை நிகழ் தருணத்திற்கு எடுத்து வந்து, கடந்து சென்ற அனைத்திலுமிருந்தும் உங்களைத் துண்டிக்கும். உங்களில் எத்தனை பேர் சாதனாவிற்கு பிறகு புதியவராக உணர்ந்ததை அனுபவித்திருக்கின்றீர்கள்? (கூட்டத்தில் பலர் கை உயர்த்துகின்றனர்) பழையன அனைத்தும் வீழ்ந்து விடும். நீங்கள் அதே நபர் அல்ல. இந்தப் பாதைக்கு வந்த பின்னர் நீங்கள் பழையனவற்றை நினைவுபடுத்தி பார்த்தாலும், எவ்வாறு முன்பு இருந்ததோ அவ்வாறு நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ளமாட்டீர்கள்." ஓ ! நானா அவ்வாறு இருந்தேன்? என்றே உணர்வீர்கள்.

குருதேவ், தாங்கள் அடிக்கடி பல இடங்களுக்கு பயணம் செய்கின்றீர்கள். உங்களுக்குப் பயணக் களைப்பு ஏற்பட வில்லையா?


பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நீரினை அதற்கு களைப்பு ஏற்படுகிறதா என்றா கேட்கிறீர்கள்? மரம் எப்போதும் நின்று கொண்டிருப்பதால் களைப்பு ஏற்படுகிறதா என்ற கேட்கிறீர்கள்? சற்றுப் படுத்துக் கொள்ள விரும்புகிறதா என்ன? மரங்கள் எத்தனயோ ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கின்றன. சூரியன் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் களைப்படைகிறதா என்று கேட்கிறீர்களா? எல்லாமே அதன் இயற்கையை பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. நானும் என் இயற்கையிலேயே நிலை பெற்றிருக்கின்றேன். என் இயல்பில்லாத எதையும் நான் செய்ய வில்லை. பிறரை என் செல்வாக்குக்கு உட்படுத்த வேண்டும் என்று எதையும் நான் செய்வதில்லை. அது என் இயல்பல்ல. அன்றியும், நான் எந்த வகையான பற்றாக்குறை அல்லது சவாலான நேரம் இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் எதையும் செய்வதில்லை.அதனாலேயே பற்றாக்குறை என்பதே இல்லை. மிக ஏராளமே உள்ளது. மேலும், நான் தவறாக யாராலும் செலுத்தப்படுவதில்லை. நான் சீராக என் இயல்பில் நிறுவப்பட்டு இருப்பதால், தவறாக யாராலும் வசியப்படுத்தப்படுவதில்லை.