நல்லவர்களுக்கு ஏன் தீயவை நிகழ்கின்றன?

வியாழக்கிழமை, 28 மே,2015,

பெங்களூரு, இந்தியா


அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் பிராணன் உடல் வழியாக முழுவதும் மையநாடியை சென்றடைய உதவுகின்றன.இந்த மையநாடி நமது உடலின் நடுப்பகுதியினூடே ஓர் தூண் போன்று இருக்கின்றது. அது யோகாவின் மூலம் செயல்திறன் பெறுகின்றது. யோகா என்பது ஆசனங்கள் மட்டுமல்ல, தியானமும் ஆன்மீகப் பயிற்சிகளும் இணைந்தது. இந்த ஆற்றல் பாயும் போது, வலிமையுடனும் உறுதியாகவும், மனத்தெளிவுடனும் உணருகின்றீர்கள். நாம்  புலன்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது இந்த  ஆற்றல் வலுவிழக்கின்றது. அதிக உணவு உட்கொள்வது, அதிக திரைப்படங்களை காண்பது, அதிகமாக கவலைப்படுவது அல்லது பேரார்வம் மிக்கவராக இருப்பது என்பது போன்ற நிலைகளில் பிராணன் மையக் கால்வாய் வழியாக செல்லாமல் பலமிழக்கின்றது. பிராணன் உடைந்தது போன்ற உணர்வினை பெறுகிறோம். பிராணனின்  ஓட்டம் உடைந்து, ஏடாகூடமாக செல்வது போன்று  தோன்றும் போது, மனம் அலைபாய்கின்றது. கவனக்குறைவு, கற்க முடியாத அல்லது வெளிப்படுத்த முடியாத நிலை, போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நல்ல தொடர்புகள் ஆற்றலைச் சரியான நிலைக்கு மீட்டெடுத்து வருகின்றன.

நீங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று உங்களது பிராணனே உங்களுக்கு தெரிவிக்கும். பிராணன் உடையும்போது உங்கள் உடலின் நடுப்பகுதியில் தொடர் பாய்வினை உணர முடியாமல் நீங்கள் பலமிழந்து உணர்வீர்கள். தடையற்று  பிராணன் பாய்ந்து கொண்டிருக்கும் போது,  உண்மை, அர்ப்பணிப்பு, தைரியம், நம்பிக்கை கருணை, மற்றும் மகிழ்ச்சி ஆகியவை வாழ்வில் தோன்றும்.

குருதேவ், நல்லது ஏதேனும் நிகழும் போது நாம் அதை குருக் கிருபை என்று கூறுகிறோம். கெட்டது நிகழும் போது என்ன கூறுவது? குரு இருப்பது ஒருவருக்கு பாதுகாப்பு என்று பொருள் எனக் கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் ஏன் தீயவை நிகழ்கின்றன?

நல்லது. கடவுள்  யார் எப்படியிருந்தாலும்,அனைவரையும் விரும்புகிறவர். கெட்டவை நிகழும் போது அது உங்கள் நம்பிக்கையை அகற்றுமானால் அது நம்பிக்கையே அல்ல. ஆனால் தீயது எது நிகழ்ந்தாலும், நம்பிக்கை அகலாமல் இருந்தால் அதன் முடிவு எப்போதுமே சிறப்பானதாகவும் அற்புதமாகவுமே இருக்கும்.

பாண்டவர்களின் தாயான குந்தி ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு விசித்திரமான வரத்தினை வேண்டினாள். அவள்," கிருஷ்ணா! என் வாழ்க்கையில் தீயவை நிகழட்டும்" என்று கூறினாள் அதிர்ச்சியடைந்த ஸ்ரீ கிருஷ்ணர், ஏன் இவ்வாறு கேட்கின்றீர்கள் என வினவினார். குந்தி, " எப்போதெல்லாம் தீயவை நிகழ்கின்றனவோ அப்போதெல்லாம், நீ என்னுடனேயே இருக்கின்றாய் நான் அவற்றைத் தாண்டி வர உதவுகின்றாய் என அறிகின்றேன். ஒவ்வொரு ஆபத்தான காலத்திலும் நீ என்னுடனேயே இருந்ததை நான் அறிந்திருந்தேன் "என்று பதிலிறுத்தாள்.இத்தகைய மெய்யுணர்தல் மிக தனித்துவம் வாய்ந்தது. கெட்டவை நடக்கும் போது நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதல்ல, ஏனெனில் நீங்கள் முற்பிறவியில் ஏதேனும் தீயது செய்திருக்கலாம், அந்தக் கர்மபலன் இப்போது வெளிப்படலாம். அந்தப் பலன்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். தவறான உணவை உண்டால் அது ஏதேனும் நோய் வடிவில் வெளிவரும். உங்கள் மனநிலை பதட்டமாக இருந்தால், அது உங்கள் உடலில் ஏதேனும் நோயாக வெளிவரும்.

குருதேவ், ஏன் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபத்தினைக் கண்டு அச்சத்தால் கல்லாய்ச் சமைந்து விட்டான்? அவன் தயாராக இல்லாத காரணத்தாலா? கடவுளின் வடிவம் ஏன் அச்சத்தை வரவழைக்கின்றது?

புதிய அல்லது பழக்கமில்லாத எதுவும் பயத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் புதியவர் எவரையேனும் கண்டால் புதிய சூழலில் பயப்படுவார்கள். மூன்று வயதிற்கு மேல் குழந்தைகள் ஒரு புதியவரிடம் செல்ல மறுப்பார்கள். புதியவரிடம் பழக ஓரிரண்டு நாட்கள் ஆகும். நமது நரம்பு மண்டலமும் சரி செய்து கொள்வதற்கும், ஞானத்தைப் பற்றிக் கொள்வதற்கும் சற்றுநேரம் எடுத்துக் கொள்கின்றது, அதனால் தான், ஓர் ஆசிரியர் தேவை, ஓர் குரு முற்றிலும் தேவை. அது பயிற்சியாளர் மற்றும் மெய்க்காப்பு இன்றி நீச்சல் குளத்தில் குதிப்பது போன்றதாகும், அதிக பய உணர்வை அடைகிறீர்கள். ஒரு மெய்க்காப்பு இருந்தாலும் நீச்சல் குளத்தில் குதிக்க மக்கள் பயப்படுகின்றனர், ஏனெனில் அது உங்கள் உயிரை எடுத்து விடக்கூடும். அது போன்று ஒரு மாபெரும் ஆற்றல் அலை, சிறிய மனதை, நான் எனும் அகங்காரத்தை, ஆட்டி அசைத்து விடும், அதனால் பயம் ஏற்படும், அது இயல்பானது தான்.

குருதேவ், இருப்பின் ஏழு நிலைகளில் யார் தியானம் செய்வது?

ஏழு நிலைகளும் ஒத்திசைவுடன் இருக்கும் போது தியானம் நிகழ்கின்றது. யார் என்பதே இங்கு கிடையாது. தியானம் நிகழும் போது, அது தன் தாக்கத்தினை - உடல்,மூச்சு, மனம், அறிவு, நான் எனும் அகங்காரம், நினைவுத் திறன் மற்றும் ஆத்மா என்னும் ஏழு நிலைகளிலும் வெளிக் காட்டுகின்றது.

துறவு கர்வத்தை ஏற்படுத்துமா? அவ்வாறெனில் அதை எவ்வாறு கடந்து வருவது?

நிச்சயமாக. இரண்டு விதமான கர்வம் உண்டு.
1. அடைதல் மற்றும் வைத்திருத்தலினால் கர்வம்
2. விட்டுவிடுதல் தியாகம் இவற்றினால் ஏற்படும் கர்வம்

இரண்டுமே மோசமானவை. உண்மையில், அடைதலினால் ஏற்படும் கர்வத்தை கடப்பது சுலபம், ஆனால் தியாகத்தினால் ஏற்படும் கர்வத்தைக் கடப்பது கடினம், அது சில காலம் நீடித்து இருக்கும்.

குருதேவ், நான் எனும் அகங்காரத்திலிருந்து , சுயத்திற்குச்  செல்லும் பயணத்தைப் பற்றிச் சற்று விவரித்துக் கூற முடியுமா? இதை எளிதாக அடைவது எப்படி?

நான் எனும் அகங்காரத்திலிருந்து பயணம் செய்யும் போது, "பார் நான் சுயத்திற்கு செல்கின்றேன் " என்று கூறும். அவ்வாறானால் ஒரு அங்குலம் கூட அது  நகர்ந்திருக்காது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் என்பது அல்ல. உங்களுக்கு நான் எனும் அகங்காரம் இருப்பதாக உணர்ந்தால், அது அப்படியே இருக்கட்டும். அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அதில் தலையிடாதீர்கள் அல்லது அதை அழிக்க முற்படாதீர்கள். நான் எனும் அகங்காரத்திற்கு மாற்று மருந்து இயல்பாக இருப்பது தான்.

உங்கள் சுயத்திலிருந்து நீங்கள் வெளிவர முடியாது. சுயம் என்பது மெய்யுணர்வு; அதிலிருந்தே அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது தான் நீங்கள், மற்றும் உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும் ஆகும். “நான்” என்று நீங்கள் கூறும் போது அந்த “நான்” சுயத்தினாலேயே உருவாக்கப் பட்டிருக்கின்றது.உடல், மனம், மற்றும் அனைத்தும் சுயத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுயம் வெட்ட வெளியைப் போன்றது. அதிலிருந்து வெளியேற முடியாது, அதை எதுவும் செய்யவும் முடியாது.

அபயா (பயமின்மை) என்பது தெய்வீகக் குணம் என்று தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். பயமின்மையை எவ்வாறு அடைவது? எனக்கும் இன்னமும் பயப் பதிவுகள் உள்ளன.


பதஞ்சலியின் யோகா சூத்ராவில் பதஞ்சலி, மிகச் சிறந்த விவேகிகளையும்,அறிஞர்களையும் கூட எது தாழ்த்துகிறது என்றால் அது பயம் அல்லது அபிநிவேஷ் என்கிறார்.இயற்கை அதை எங்கேயோ ஓரிடத்தில் வைத்திருக்கிறது. ஆழ்ந்த சார்புணர்வு, அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வு ஆகியவை ஒருவருக்குப்  பயத்தைக் கடக்க உதவும்.