தீர்ப்பு சொல்லும் போக்கு

சனிக்கிழமை 09 மே 2015

லாஸ் ஏஞ்ஜலிஸ், யூ.எஸ்.ஏ



“வாழ்க்கையை வாழ இடைவெளியை உருவாக்க வேண்டும்“ என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி.

கேள்வி - பதில்கள்

நான் கேளிக்கை துறையில் வேலை செய்கிறேன். அதில் பல விழிப்புணர்வற்றவர்கள், மற்றவர்களை பற்றி அக்கரை இல்லாதவர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் தியானம் செய்து ஆன்மீக வழியில் செல்ல விரும்புகிறேன். எனக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?

உனக்கு விற்பனை செய்ய நிறைய வாய்ப்புள்ளது. நீ நல்ல காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. பெரிய வாய்ப்பு இருக்கிறது. நீ அந்த துறையில் இருப்பதால், அதை விட்டு விலக விரும்ப மாட்டாய். அங்கேயே தங்கி மக்களை ஞானப்பாதைக்கு அழைத்து வா. அவர்களை மேலும் விழிப்புணர்வு பெறச்செய்து, அவர்களை மேலும் அன்போடு, தாராள மனதோடு வாழச் செய்.
சில சமயம் மக்களை மேலோட்டமாக அறிந்து கொண்டு, அவர்கள் மட்டமானவர்கள் என்று தவறாக முடிவெடுக்கும் வழக்கமுள்ளது. அவர்களுடைய உயர்ந்த பண்புகளை அறிந்து கொள்ளும் திறமை உன்னிடமில்லாமல் இருக்கக்கூடும்.

என் கண்ணோட்டத்தில் நீ அவர்களை பார்த்தால், இந்த பூமியில் பல நல்ல மனிதர்கள் இருப்பதைக் காண்பாய். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், நல்லவர்கள், திறமையுள்ளவர்கள் இருக்கிறார்கள். நல்லவரில்லை என்று நாம் நினைப்பவரிடம் கூட சில நல்ல பண்புகள் மறைந்திருக்கின்றன. தூக்கத்தில் இருப்பவரை தட்டி எழுப்புவது போல், அந்த நல்ல பண்புகளை நீ வெளிக் கொணர முடியும். எனவே உனக்கு நிறைய வேலை இருக்கிறது.

பயத்தால் பீடிக்கப்பட்ட ஒருவரால், அந்த பயத்தை எப்படி நீக்க முடியும்? குறைந்த பட்சம் அந்த பயத்தை எப்படிக் கையாள்வது என்று கற்றுக் கொள்ள முடியுமா?

சரி. நான் உனக்கு மூன்று ஆலோசனைகள் தருகிறேன்.
·         உன் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்.
நீ பயப்படுவது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்பும், சில ஆண்டுகளுக்கு முன்பும் அந்த பயம் இருந்திருக்கும். அப்போது என்ன ஆயிற்று? இன்றும் நீ உயிரோடு இருக்கிறாய். எல்லா பயமுமே, இதில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க முடியுமா என்பதை பற்றியது தான். நீ இந்த நிலைமையிலிருந்து தப்பி விடுவாய் என்று தெரியும்போது பயம் நீங்கி விடும். கடந்து போன இந்த நிகழ்ச்சியை நினைவில் கொண்டு வரும் போது, அந்த அனுபவம் உனக்கு பலத்தைக் கொடுக்கும். கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது பயத்தைப் போக்க உதவும்.

·         உடலில் ஏற்படும் உணர்ச்சிகளை, அதன் மாற்றங்களை கவனித்துப் பார். உனக்கு பயமாக இருக்கும் போது என்ன ஆகிறது? மூச்சுப் பயிற்சி (ப்ராணயாமம்) செய், அது உனக்கு உதவும்.

உனக்குள் இருக்கும் பேராண்மையை, அதீதமான சக்தியைத் தட்டி எழுப்பு. உனக்கே சொல்லிக் கொள். எது வந்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்வேன். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வேன். உனக்குள் இருக்கும் இந்த சக்தி பிரச்சினையை சவாலாக எடுத்துக் கொள்ளும் போது உன் பயத்தைப் போக்கி விடும். உனக்குத் தெரியுமா? போன நவம்பர் மாதம் நான் ஈராக் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு அமைதி மகாநாட்டுக்காக, அந்த நாட்டின் பார்லிமெண்ட் என்னை அழைத்திருந்தது. அங்கு நான் யசீதி இனப் பெண்களை சந்தித்தேன். அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒரு பெரும் படையை அமைத்திருந்தார்கள். நிலைமை அவ்வளவு மோசமாகி விட்டது.

மேலும் பயப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் வாழ்வா, சாவா என்ற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த மென்மையான பெண்கள், துப்பாக்கி எடுத்துச் சுடத் தெரியாதவர்கள் சொன்னது இது. நாங்கள் ஒன்று சேர்ந்து எங்கள் எதிரிகளை (ஐ.எஸ்.ஐ.எஸ்) எதிர்ப்போம். அவர்களில் பலர் திருமணமாகாதவர்கள் 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ளவர்கள்.பலர் திருமணமானவர்கள். சிலர் 50 வயதிலிருந்து 60 வரையும் 60 க்கு மேற்பட்டவர்களும் கூட இருந்தார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் படைகளை எதிர்க்கத் தயாராக இருந்தார்கள்.

வீட்டிலிருந்து பயத்துடன் ஓடி ஒளிந்து வாழ்ந்த பெண்களுக்குத் தைரியம் எப்படி வந்தது? அந்த சமயத்தில் அது தேவையாகி விட்டதால் அவர்களுக்கு பேராண்மை (தைரியம்) வந்து விட்டது. எங்கள் பகைவர்களுடன் போராடுவோம் என்று சொல்லி பகைவர்களை ஓடி ஓடி விரட்டி அடித்தார்கள். தங்கள் கிராமங்களைப் பாதுகாத்தார்கள். ஏற்கனவே அங்கிருந்த ஆண்கள் எல்லோரையும் ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள் தலையை துண்டித்துக் கொன்று விட்டார்கள். பெண்கள் தங்கள் பயத்தைப் போக்கிக் கொண்டு அவர்களுக்குள் புதைந்திருந்த பேராண்மையை வெளியே கொண்டு வந்தார்கள். இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. நீ வசிக்கும் இடத்திலேயே இப்படிப்பட்டவர்களை, உன் வாழ்க்கையில் பல முறை பார்த்திருப்பாய்.

எப்போது “நான் இந்த சவாலை ஏற்றுக் கொள்வேன்; அதை சந்திப்பேன்; அதை எதிர்த்துப் போராடுவேன் என்று  சொல்வாயோ, அப்போது உனக்குப் பிரியமான ஒன்றைக் காத்துக் கொள்ளும் சக்தி கிடைக்கும். உனக்குள் புதைந்திருக்கும் மன உறுதி தட்டி எழுப்பப்பட்டு உன் பயம் நீங்கி விடும். நான் மற்றொரு விஷயத்தைச் சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன். “ ஒரு பெரிய சக்தி உள்ளது; என் பரமாத்மா எனக்கு நல்லதையே கொடுப்பார்; என்னைச் சுற்றி எது நடந்தாலும், எனக்கு நன்மை வந்து சேரும்; எனக்கு நல்லதே நடக்கும்“ என்று சொல்லிக் கொள்.

இவ்வுலகில் ஞானம் கண்ணுக்குப் புலப்படாத ஒவ்வொரு அணுத்துகள்களிலும் நிரம்பியுள்ளது. அதை நீ உனக்குள் இறக்கிக் கொள்ள வேண்டும் (டவுன்லோட்) என்று சொல்வீர்கள். அது எந்த ரூபத்தில் உள்ளது? அது ஒரு சக்தியா? ஞானத்தை டவுன்லோட் செய்வது எப்படி என்று தயவு செய்து சொல்வீர்களா?

நீ ஏற்கனவே சொல்லி விட்டாய். அது சக்தியாக இருக்கிறது. அது பல மொழிகளில் அடங்கிய ஒரு சக்தி. ஒரு மொழியில் மட்டும் உள்ளதல்ல. அதை இறக்கிக் கொள்ள நாம் சிந்தனையற்று மனதில் வெற்றிடம்,காலியிடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் போது பல்வேறு கருத்துக்களை தன் மூளையில் திணித்துக் கொள்ளக்கூடாது. எல்லா கருத்துக்களையும் அப்படியே விட்டுவிடும் போது, அவருடைய மனதின் ஆழத்திலிருக்கும் உள்ளுணர்வு வேலை செய்யும். உள்ளுணர்வு ஒரு போதும் தவறாக இருக்காது. அது தவறுமானால் அது உள்ளுணர்வே அல்ல. 

ஒருவருடைய தியானத்தின் தரத்தை மேம்படுத்தவும்,விழிப்புணர்வு மற்றும் ஞானம் பெறுவதை விரைவு படுத்துவதற்காக செய்யப்படும் Brain entrainment and Bio feedback பிரெயின் என்ட்ரெயின்மெண்ட் மற்றும் பயோ ஃபீட் பேக் பற்றி உங்களுடைய சிந்தனைகள் என்ன?

அது சரி தான். எப்போதாவது அப்படி முயற்சி செய்யலாம். ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஒரு பழம் இயற்கையாக பழுப்பது நல்லது. செயற்கையாக பழுக்க வைக்கும் பழம் ருசியாக இருப்பதில்லை. இயற்கையாக இருக்கும் அனைத்துமே சிறப்பாக இருக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாம் கலிஃபோர்னியாவில் இருக்கிறோம். இயற்கை உரத்தால் விளைவிக்கப் பட்ட பொருட்களை மிகவும் விரும்புகிறோம்.

ஒவ்வொரு மகத்தான முடிவும் சரியான பலன் கொடுக்குமா என்பது பற்றி, மனதில் ஒரு நிச்சயமற்ற சிந்தனை (சந்தேகம்) இருக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்க, தற்சமயத்திலும், வரப்போகும் காலங்களிலும் பயனளிப்பதாக இருக்க, அப்படிப் பட்ட சரியான முடிவெடுக்கும் திறனை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் ?

உள்ளுணர்வு, உள்ளுணர்வு, உள்ளுணர்வு. நம் உள்ளுணர்வை எப்படி தட்டி எழுப்பலாம்? அது தியானத்தின் மூலம் நிகழும். நான் இதைப் பற்றி ட்வீட் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நீ வருத்தமாக இருந்தால் அதன் காரணம் என்ன? ஆசை என்னும் முள் உன் இதயத்தில் தைத்திருப்பதே உன் வருத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது. நீ அதைக் கவனிக்காவிட்டால், அது வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தும். மற்றவர்களை கிண்டல் செய்யும் பழக்கம் ஏற்படும். அதுவே ஏமாற்றமாகவும், கோபமாகவும் மாறி விடும். அதை கவனித்து ஆசை என்ற அந்த முள்ளை எடுத்து விட்டால், மகிழ்ச்சி, உற்சாகம், திருப்தி மற்றும் கருணையால் உன் இதயம் நிரம்பி விடும்.

“இந்த ஆசை என் இதயத்தில் உள்ளது“ என்று முதலில் நீ அதை கவனிக்க வேண்டும்.
இரண்டாவதாக “ சரி. எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. அது நடந்தால் நடக்கட்டும். அது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நடக்க வேண்டாம். என்னால் அதைக் கடந்து மேலே செல்ல முடியும்“ என்று நினைத்துக் கொள்.

எனக்கு 21 வயதாகிறது. என்னுடைய போதை மருந்துப் பழக்கத்தை எப்படி நிறுத்த முடியும் ? போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறேன். எனக்கு போதை மருந்து பிடிக்க வில்லை. ஆனால் மனதைக் கட்டுப் படுத்த முடிய வில்லை. ஒவ்வொரு முறையும் போதை மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாலும், அதை எடுக்க வேண்டியிருக்கிறது.

நடைமுறைப்படுத்த முடியாத ஒருவருக்கு ஆலோசனை சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. போதை மருந்துப் பழக்கத்தை நிறுத்துவதற்காக விசேஷ பயிற்சி மையங்கள் உள்ளன. நீ அங்கு செல்வது நல்லது. அங்கேயே சில காலம் தங்கி விடு. சில பயிற்சி மையங்களில் சுதர்சன கிரியா மற்றும் தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகள், போதை மருந்து பழக்கத்திலிருந்து விடுபட உதவுகின்றன. நூற்றுக் கணக்கானவர்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு இப்பயிற்சிகள் உதவியிருக்கின்றன. சுதர்சன கிரியா செய். அது கண்டிப்பாக உனக்கு உதவும்.

இப்பூமியில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் அல்லது மிருகங்களுக்கும், ஞானிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? நாம் உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் நடுநிலையில் இருக்க வேண்டும். தற்சமயத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் பார்த்த வரை, மிருகங்கள் அந்த நிலையில் உள்ளதாக தோன்றுகிறது. யோகிகளுக்கும், உயிரினங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தோன்றுகிறது. நாங்கள் மட்டும் தான் வித்தியாசமாக தென்படுகிறோம்.

மற்ற உயிரினங்கள் நாம் முன்பு பேசிய மூன்று பரிமாணங்களில் மிகக் குறுகிய எல்லையில் வாழ்கின்றன. அவைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஞானம் மிகக் குறைவாக உள்ளன. அன்பை வெளிப்படுத்தும் திறனும் ஒரு குறுகிய எல்லைக்குள் உள்ளது. மனித உடலமைப்பில் மட்டுமே, அவனுடைய / அவளுடைய சூழ்நிலையைத் தாண்டிய ஞானத்தைப் புரிந்து கொள்ளும் திறமை உள்ளது. மிகத் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களில் என்ன நிகழ்கிறது என்பதை மனிதனால் புரிந்து கொள்ள முடியும். கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வரப் போகும் காலத்தில் என்ன நிகழப் போகிறது என்பதையும் மனிதனால் அறிய முடியும். மிருகங்களிடம் இல்லாத காலத்தை கடந்த அறிவு நம்மிடம் இருக்கிறது. ஞானத்தை நாம் அணுக முடியும். நம் அன்பை நம்மால் வெளிப்படுத்த முடியும். நம்மால் பூரண விழிப்புணர்வு பெற்று வாழ்க்கையில் மலர்ச்சி பெற முடியும். இது மனித உடல் பெற்ற ஒருவரால் மட்டுமே முடியும். நல்லது. நமக்கு திமிங்கலம் மற்றும் டால்ஃபின் பற்றி போதிய அறிவு இல்லை. அவற்றிற்கு நம்மை விட பெரிய மூளை இருக்கிறது. ஆனால் நம்மை அந்த உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க அவசியமில்லை.

ஒரு மனிதன் பூரண முதிர்ச்சியடைந்து விட்டான் என்று எப்போது சொல்லலாம் ?

முகத்தில் என்றும் அழியாத புன்முறுவல்; அசைக்க முடியாத நம்பிக்கை; எப்போதும் வற்றாத கருணை; என்றும் நிலைத்திருக்கும் இளமை ததும்பும் ஆத்மா இவையெல்லாம் பூரண முதிர்ச்சி பெற்ற மனிதருக்கான அடையாளமாகும்.