ஈர்ப்பு விதி

சனிக்கிழமை, 30 மே 2015,

பெங்களூரு இந்தியா



(உங்களை உற்றுக் கவனியுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றேன். ஆனால் எனக்கு ஓர் கவலை உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக என் வருங்கால வாழ்க்கை துணையுடன் நிறைய முறைகள் சண்டை ஏற்பட்டு விட்டது. இந்த உறவைத் தொடர வேண்டுமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை?

அன்பை கோருவதை நிறுத்துங்கள். நீங்கள் அன்பினைக் கோரினாலோ அல்லது அன்பிற்கு ஆதார விளக்கம் கேட்டாலோ நீங்களே அதை  அழிப்பவராகின்றீர்கள்.எவ்வாறு உங்கள் மீது தனது அன்பை ஒருவர் நிரூபிக்க முடியும்? நீங்கள் அத்தகைய சுமையை ஏற்றக்கூடாது. ஒரு வேளை, தினமும் ஒருவர் உங்களிடம் "நீங்கள்  நேர்மையானவரா? நீங்கள் நேர்மையானவரா? என்றே கேட்டுக் கொண்டிருந்தால் எவ்வாறு உணருவீர்கள்? உங்களுக்கு பிடிக்காது அல்லவா? அது போன்றே நீங்கள் ஒருவரிடம் நீங்கள் என்னை உண்மையாக விரும்புகிறீர்களா என்றே கேட்டுக் கொண்டிருந்தால் அந்த நபர் எவ்விதம் உணருவார்? ஒருவர் தன்னுடைய அன்பை நிரூபிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். துணை உங்களிடம் வந்து சேர்வது உங்களுடைய ஆதரவினைத் தேடி,ஆனால் அதைத் தருவதற்கு பதிலாக நீங்கள் அவரை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அன்பை கோருவதை நிறுத்துங்கள். அன்பு என்பது தரப்பட வேண்டும் கேட்டுப் பெறுவதல்ல.

நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டதாக ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அப்புரிதல் வளரும். நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டோ சந்தேகித்துக் கொண்டோ இருந்தால் புரிதல் நொறுங்கி விடத் துவங்கும். அது முட்டாள்தனம்.உங்களது உணர்வுகள் பிறர் கருத்துக்களின் உதைபந்தாக இருக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் உணர்வுகளின் படியே சுதந்திரமாக இருக்க வேண்டும். உங்கள் மீது உங்கள் துணையின்  கவனம் குறைவதாக நீங்கள் உணர்ந்தால், "என்னை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை இந்த அளவு விரும்புகிறீர்கள்?" என்று கேளுங்கள். அப்போது அவரது தொனி முற்றிலும் மாறி, நீங்கள் விரும்பும் படியே ஆகும். இதைத்தான் கேட்க விரும்புகிறீர்கள் அல்லவா? அதற்கு நீங்கள் அடுத்தவரை குறை கூறக்கூடாது.  நீங்கள் குறை கூறினால் அதுவே உங்களை வந்தடையும். நீங்கள் பணிவுடன் பாராட்டுக்களை வழங்கினால் அது பாய்ந்து உங்களையே மீண்டும் வந்தடையும். எப்போதும் பாராட்டுக்களையே வழங்குங்கள். அது பல மடங்கு அதிகமாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால் குறை கூறினால் அதுவே உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். இதுவே ஈர்ப்பின் விதி. என்ன வீசுகின்றீர்களோ அதுவே  பாய்ந்து உங்களைத் திரும்ப வந்தடையும்.

குருதேவ், குருவாக இருப்பதா? சீடனாக இருப்பதா உங்களைப் பொறுத்த வரையில் எது உங்களுக்கு எளிது?

எளிது அல்லது கடினம் என்பது ஒரு கோட்பாடு தான். உங்களுக்கு ஆற்றல் இல்லையெனில் எதுவுமே கடினம் தான். உற்சாகமும் ஆற்றலும் இருந்தால் எதுவுமே எளிது தான். உடல் நலமற்று சோர்ந்திருக்கும் ஒருவரிடம்," ஒரு மைல் தூரம் நடக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டால் நிச்சயம் அவர்" இல்லையில்லை, அது மிகக் கடினம்" என்றுதான் கூறுவார். உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த ஒரு இளைஞரிடம் "ஒரு கிலோமீட்டர் நடக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அவர், நான் 10 கிலோமீட்டர் ஓடுவேன் என்று கூறுவார். நீங்கள் ஆற்றலுடன் துடிப்பான உற்சாகத்துடன் இருக்கும் போது, உங்கள் திறன்கள் மற்றும் வரம்புகளைத் தாண்டி உங்களை நீட்டி கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள்.

நீங்கள் உற்சாகத்துடன் இருக்கும் போது, தானாகவே சீடனாகி விடுகிறீர்கள் ஏனெனில், அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கும் போது தானாகவே குருவாகி விடுகிறீர்கள் ஏனெனில் நீங்கள் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவும் பிறர் மீது அக்கறை செலுத்தவும் விரும்புகிறீர்கள். நீங்கள் அனைவர் மீதும் களைப்புடன் சோர்வுற்று உணர்ந்தால் பிறர் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தால் எவ்வாறு குருவாக முடியும்? எனவே உங்கள் ஆற்றல் நிலையை பொறுத்தே உள்ளது. இது உங்கள் உடல் ஆற்றலை பற்றியது அல்ல. "ஒ எனக்கு 70 வயதாகி விட்டது,  எனக்கு ஆற்றல் இல்லை" என்று கூறமுடியாது.

உடல் ஆற்றல் உங்கள் உற்சாகத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. உடல் பலவீனமாக இருந்தாலும் மன ஆற்றல் அதிகமிருக்கலாம். இந்த நிலையில்  நீங்கள் சீடனாகவும் குருவாகவும் இருக்க முடியும். இரண்டுமே எளிதாக அமையும். 80-90 வயதானவர்கள் கூட என்னிடம் உற்சாகத்துடன், நான் என்ன  சேவை செய்யட்டும்? என்று கேட்கின்றனர். நான் அவர்களிடம்," நீங்கள் அமர்ந்து மக்களை ஆசீர்வதியுங்கள் போதும்” என்றே கூறுகின்றேன்.

இளைஞர்கள் நான் என்ன செய்யட்டும் என்று கேட்பதில்லை, வயதானவர்களே நான் சேவையில் ஈடுபட விரும்புகின்றேன் என்று கேட்கின்றனர். அவர்களால் உடலளவில் அதிகம் செய்ய முடியாது அவர்களது நோக்கம் அவர்கள் இளமையாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. ஆத்மாவின் இளமை தான் எது ஒன்றையும் கடினமா அல்லது எளிதா என்று தீர்மானிக்கின்றது. உங்களுடைய ஆத்மா இளைமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சாசுவதமான சீடனும் சாசுவதமான ஆசிரியருமாக இருக்கின்றீர்கள்.

குருதேவ், விடுதலைக்கு ஒரு கூரான கவனம் தேவை என்று தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். தீவிரவாதிகளுக்கும் கூட கூரான கவனம் இருக்கின்றது. அவர்கள் முக்தியடைய முடியுமா?

தீவிரவாதிகள் என்று பொதுவாக மதிப்பிடக் கூடாது. அதிலும் பல வகைகளும் அணுகுமுறைகளும் உள்ளன. சிலர் பணத்திற்காகச் செய்கின்றனர், சிலர் அது கடவுளின் கட்டளை என்ற தவறான புரிதலுடன் செய்கின்றனர். எனவே அனைத்துத்  தீவிரவாதிகளையும் பொதுவாக மதிப்பிடாதீர்கள். தீவிரவாதம் போன்றவற்றில் நீங்கள் ஓர் தீவிரவாதி விடுதலை அடையமுடியும் என்று கூற முடியாது. அதே சமயம் அதை மறுக்கவும் முடியாது. அப்படி ஒரு வாய்ப்பும் இருக்கலாம்.ராவணன் முக்தியடைந்தான். சதாம் ஹுசைன் கூட முக்தியடைந்திருக்கலாம். விடுதலைப் புலிகளின் பிரபாகரன் கூட முக்தியடைந்திருக்கலாம். நமக்குத் தெரியாது. பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவர் ஓர் சிறந்த மனிதர் முக்தியடைந்தார் என்றே எண்ணுகின்றனர்.

சிறந்த தலைவர்களாகக் கருதப்படும் லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் செயல்களால்  பலர் இறந்தனர், ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் புரட்சியின் காரணமாக 10 மில்லியன் மக்கள் இறந்தனர். இவற்றையெல்லாம் பார்த்தால், அவர்களை தலைவர்கள் என்றே கூற மாட்டீர்கள். கேரளாவில் அவர்கள் தலைவர்கள் என்று கருதப்படலாம், ஆனால் ரஷ்யாவின் பல பகுதிகளில் அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். அதனால் தான் லெனின்கிராட் என்னும் நகரின் பெயரை புனித பீட்டர்ஸ்பர்க் என்று மாற்றியுள்ளனர். பொதுப்படையாக எதையும் கேட்காதீர்கள். வரலாற்றாசிரியர்களுக்கும் மனதத்துவ நிபுணர்களுக்கும் மனித மனங்களை பார்க்கும் பணியினை விட்டு விடுகின்றேன்.