உங்களை உற்றுக் கவனித்து கொள்ளுங்கள்

30 - மே - 2015, 

பெங்களூரு - இந்தியா


குருதேவ், அரசியலில் சேர விரும்பும் இன்றைய இளைஞர்களை நம் நாட்டு நலனுக்காக எவ்வாறு வழி நடத்துவீர்கள் ?

முதலில் உங்கள் சாதனாவை செய்து உங்களுடைய பார்வையினை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, உங்களுக்கு ஏராளமான பொறுமை தேவை. பெரிய பார்வையுடன் நீங்கள் செல்லும் போது அதை நசுக்கிப் பிழிந்துவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். பார்வையினையே நீங்கள் துறந்து விடுமளவிற்கு செல்லலாம், ஆனால் நீங்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது. நூறு முறை நீங்கள் ஏமாற்றங்களை சந்திக்கலாம். ஆனால் நூற்றியோராவது தடவை நீங்கள் வெற்றியடைவீர்கள். அதற்கு உங்களுக்கு பொறுமையும், விடாமுயற்சியும் தேவையாகும். உங்கள் பார்வையையும்  உங்கள் நெறிமுறைகளையும் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, உங்களுடைய ஆன்மீகப் பகுதியினை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணிகள் இருந்தாலும் கண்டிப்பாக ஆண்டுக்கு 4-5 நாட்கள் மௌனப் பயிற்சியினை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் 20 நிமிடங்கள் ஞானச் செய்தியினைக் கேட்டு தியானத்தில் அமருங்கள். அது உங்களது ஆற்றலை மேம்படுத்தும்.  ஓர் அரசியல்வாதி என்னும் முறையில் இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்கள்.
1. பணம்.  2. பாலுறவு.

இந்த இரண்டு விஷயங்களில் மக்கள் உங்களை பற்றி பல வதந்திகளை உருவாக்கலாம். அவதூறுகளுக்கு ஆளாகாமல் கவனமாக இருங்கள். எளிதில் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகி விட்டால், உங்கள் நேரம் முழுவதையும் அவை பொய் என்று நிரூபிப்பதிலேயே வீணாக்க நேரிடும். ஆரம்பத்திலிருந்தே  இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. மற்றொரு விஷயம், அரசியலைத் தொழிலாக்கிக் கொள்ளாதீர்கள். அது நீங்கள் மேற்கொள்ளும் பணியாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏராளமான வலிமை, ஆற்றல்  மற்றும் உற்சாகம் ஏற்படும். அதைத் தொழிலாக்கிக் கொண்டால், நிறையத் தேய்மானம் மற்றும் மதிப்பிறக்கத்தை அனுபவிப்பீர்கள். ஆகவே இந்தக் குறிப்புக்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவரது உண்மையான குணநலன்கள் எவ்வாறு தெரியவரும்?

மற்றவரது உண்மையான இயல்பை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்களுடைய குண இயல்பை அறிந்து கொள்ளுங்கள். அது போதும். பிறரை பற்றி மதிப்பீடு செய்யாதீர்கள்.உங்களுக்குத் தெரியாது, உங்கள் காலம்  நன்றாக இருந்தால் எதிரிகளும் நண்பராவர், உங்கள் காலம் மோசமாக இருந்தால் நெருங்கிய நண்பர் கூட விரோதி போன்று நடந்து கொள்வர். அதனால், உங்கள் மீது கவனம் வையுங்கள், பிறரை மதிப்பீடு செய்ய வேண்டாம்.

குருதேவ், உலகம் முழுவதும் யோகா ஒரு பில்லியன் டாலர் தொழிலாக அமைந்துள்ளது. இந்தியாவில் யோகாவிற்கென்று ஓர் தனி அமைச்சரும் இருக்கின்றார். மறுபடியும் யோகா சிகரமான நகையாக இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் பட்டியலிட முடியுமா?

யோகாவில் தரக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எதையாவது யோகா என்று கூறக்கூடாது. அனைத்து யோகா ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு யோகப் பயிற்சி செய்ய வேண்டும். இப்போதெல்லாம், ஒரு வாரம் யோகா பயின்று உடனேயே யோகா ஆசிரியர் ஆகிவிடுகின்றனர். அவர்கள் உடலையே அசைக்காமல் பிறருக்கு உடலையசைக்க அறிவுறுத்துகின்றனர். அவர்களால் அசையாமல் 10 நிமிடங்கள் கூட இருக்க முடியாது ஆனால் பிறரிடம் தியானம் பற்றிப் பேசுகின்றனர்.

உங்களால் சில நிமிஷ நேரம் கூட அசைவின்றி அமர்ந்திருக்க முடியாத பட்சத்தில் நீங்கள் எவ்வாறு தியானம் கற்பிக்க முடியும்? பேசிக்கொண்டே நடப்பதும் நடந்து கொண்டே பேசுவதும் ஓர் யோகா ஆசிரியரின் மந்திரமாக இருக்க வேண்டும். யோகப் பயிற்சியினை முழுமையாகக் கற்றிருத்தல் வேண்டும். இந்திய அரசாங்கம் யோகாவில் தரக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது நல்லதேயாகும். யோகா ஆசிரியர்களுக்கு  சான்றளிக்க தர முறைகளை வடிவமைத்து கொண்டிருப்பது மிகவும் அவசியமானதாகும்.

இது ஆயுர்வேதத்திற்கும் பொருந்தும். ஆயுர்வேத வைத்தியர்கள் மத்தியில் ஒரு வேடிக்கைப் பேச்சு உண்டு. யஸ்ய கஸ்ய தரோ முலம் ஏன கேன அபி கர்ஷிதம். யஸ்மை கஸ்மை பிரததவ்யம் யத் வ தத் வ பவிஷ்யதி.(ஏதோ ஒரு மரத்தின் வேர்களை ஏதோ ஒன்றுடன் கலந்து யாரேனும் ஒருவருக்கு அளித்தால் ஏதேனும் ஏற்படும்) இது ஆயுர்வேதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது அரசு இந்தப் பயிற்சி முறை, மருந்துகள் மற்றும் மருத்துவர்களை வரையறைப்படுத்தியுள்ளது. ஆயுர்வேதக் கல்வி முறை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறமாட்டேன். அது மேலும் மேம்பட வேண்டும். ஆயுர்வேதக் கல்வியினை முடித்த சில மருத்துவர்களுக்கு நாடி பரீட்சை கூடச் செய்யத் தெரிவதில்லை. அது மேம்பட வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் ஒரு நிலைக்கு  வந்துவிட்டது. அதே போன்று யோகா கற்பிக்கும் ஒருவருக்கு மனதின் இயல்பு, மூச்சின் வகைகள், இருப்பின் ஏழு அடுக்குகள், ஆகியவை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போது  அவர்கள் சிறந்த யோகா ஆசிரியர்களாக விளங்க முடியும்.

சஞ்சயன் திருதிராஷ்டிரருக்கு மகாபாரதப் போரின் நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைத்தார். வீட்டிலிருந்தபடியே உலகில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அது போன்ற சித்திகளை நாம் மீண்டும் அடைய முடியுமா? நான் ஓர் நிருபர் என்பதால் என் வாழ்க்கை சுலபமாக ஆகும்.

மூளை  செல்போன் என்னும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல் போன் வழியாக அனைத்துச் செய்திகளையும் திரட்டலாம். அதைச் சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் போதும். அது போன்றே உங்கள் மனநிலையையும் சார்ஜ் செய்து கொண்டால், உங்களுக்கு உள்ளுணர்வு ஆற்றல் மேம்பட்டு சரியான நேரத்தில் சரியான உள்ளுணர்வினை அடைவீர்கள். இதை நீங்கள் கவனிக்க வேண்டும். யோகாவும் தியானமும் ஒரு நிருபருக்கு மிகத் தேவையான விஷயங்களாகும். ஏனெனில்,

1. உங்களது கருத்துக்கவனம் கூர்மையாக இருக்க வேண்டும்.
2. உங்களது வெளிப்பாடு தெளிவாகவும் நலம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்.
யோகாவும் தியானமும் இவையிரண்டையும் உங்களுக்கு  அளிக்கும்.

குருதேவ், ஒருவர் கடவுளை தன்னுடைய புலன்களின் மூலம் அறிய முடியாது ஏனெனில் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் எவ்வாறு கடவுளை உணர்வது? அவர் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா? அறியமுடியாதவராயின் எவ்வாறு கடவுளைத் தெரிந்து கொள்வது?


அசைவின்றி இருந்து கடவுளுடன் ஒன்றிவிட முடியும். அதுவே தியானம் என்னும் திறன். நீங்கள் அஷ்டவக்கிரகீதையைக் கேளுங்கள்.