மகிழ்ச்சியுடன் இருங்கள்

செவ்வாய், 12/05/2015,

பாத் அன்டகாஸ்ட், ஜெர்மனி


மிக மிகச் சிறப்பானவர் நீங்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும். “ஓ, குருதேவ் கூட்டத்தில் உள்ள எல்லோருக்கும் உரித்தானவர், எனக்காக அல்ல,” என்று நினைக்ககூடாது. இதை சரி செய்ய வேண்டும்.

ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். பாரிசில் சுமார் 200 பேர் கலந்து கொள்ளும் ஒரு பெரிய சத்சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ளும் மற்றொரு நிகழ்ச்சியும் ஏற்பாடாகியது. அந்த நேரம் வந்தபோது,ஒருவர் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கே நான் சென்றேன். 200பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு இரண்டு ஆசிரியர்களை அனுப்பி வைத்தேன். அந்த ஒருவர் யார் தெரியும்? அவர் தான் மார்செல்! (ஒரு தொண்டர்) உண்மையில், நான் இங்கே இருக்கவே திட்டமிட்டேன், ஆனால் ஒருவருடைய திருமணத்திற்கு வருகிறேன் என்று வாக்கு அளித்திருந்தேன். அந்த திருமணம் நாளை காலை நான் வாக்கு அளித்திருப்பதால் ஆசிரமத்தில் நடக்கும் அந்தத் திருமணத்திற்கு போகப் போகிறேன்.மற்றபடி, பெங்களூரு ஆசிரமத்தில் சொன்னபடி நான் பிறந்த நாள் விழாவிற்கு வராமல் ஜெர்மனியிலேயே இருந்திருப்பேன். ஆனால் இப்போது நான் போயாக வேண்டும் ஏனென்றால் நான் என் வாக்கை காப்பாற்ற வேண்டும்.

எனவே இன்று நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? நீங்கள் சிறப்பானவர். ஏதாவது நன்மை செய்வதற்கென்றே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். ஏதோ முக்கியமான வேலை செய்வதற்காக நீங்கள் இந்த பூமியில் இருக்கிறீர்கள்.எனவே அதைச் செய்துவிட்டு பிறகு மறுபக்கம் செல்லலாம்.
இன்னும் ஆழமான ஞானத்திற்கு உங்களை அழைத்து செல்லலாம் என்று எண்ணியுள்ளேன். நாம் ஆழமான ஞானத்திற்குச் செல்வோம்,ஆனால் அதற்கு முதலில் நீங்கள் திருப்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இந்த உலகில் பிரச்சினைகளுக்கு முடிவே இல்லை.பணரீதியாகவோ,உடல் ஆரோக்கியரீதியாகவோ, அல்லது உறவுகள் தொடர்புடையதாகவோ ஏதாவது ஒரு பிரச்சினை வந்தபடி தான் இருக்கும். இவை எதுவும் இல்லையென்றால், யாராவது உங்களை ஏதாவது சொல்லிவிட அதைக் கேட்டு நீங்கள் வருத்தம் கொள்வது நடக்கும்.மனம் பிரச்சினைகளில் சிக்கித் தவித்தவாறு இருக்கிறது இந்த உலகின் இயல்பு அது தான் என்று தெரிந்து, அதைத்தாண்டி மேலே வர வேண்டும். உங்கள் வீடு நெடுஞ்சாலைக்கு பக்கத்தில் இருந்தால் சத்தத்தை பற்றி நீங்கள் எப்படி புகார் செய்யமுடியும் அதை போலவே, ஒரு காட்டில் வீட்டை வைத்துக்கொண்டு மிருகங்களுக்குப் பயந்தால் என்ன சொல்ல முடியும்? கடலுக்குப் பக்கத்தில் வீட்டை வைத்துக்கொண்டு தண்ணீருக்கு பயந்தவர்களிடம் என்ன சொல்வீர்கள்? அதுபோல, இந்த உலகில் இருந்தால், சில மகிழ்ச்சியான அனுபவங்களும், மகிழ்ச்சி அல்லாத அனுபவங்களும் ஏற்படும்.சில குற்றங்குறைகளும், சில புகழ்ச்சிகளும் கிடைக்கும், இவை எல்லாம் நடக்கும், ஆனால் இவை எதுவும் உங்களை தொடக்கூடாது, முன்னேறி சென்றவாறு இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக அமருங்கள், மகிழ்ச்சியாக செல்லுங்கள், எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகச் செய்யுங்கள்.

நேற்று என்னிடம் யாரோ கேட்டார்கள், “உங்கள் வாழ்வில் மிக மகிழ்ச்சியான காலம் எது?” நான் கூறினேன்,“என்ன? மகிழ்ச்சியான காலம்? காலத்தை ஏன் மகிழ்ச்சியோடு முடிச்சுப் போடுகிறீர்கள்? நான் தான் மகிழ்ச்சி.” காலம் மாறுகிறது, சில நேரங்களில் நல்ல காலம், சில நேரங்களில் கெட்ட காலம். மகிழ்ச்சியை காலத்தோடு முடிச்சுப்போட்டால் காலம் மாறும் போது மகிழ்ச்சியும் மாறும். ஆனால் மகிழ்ச்சிக்கும், காலத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் அறிந்திருந்தால், எல்லா நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதுதான் ஞானம்!


நாம் மகிழ்ச்சியை மக்களோடும், இடங்களோடும், சூழலோடும், காலத்தோடும் பிணைக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் இதிலிருந்து நகர்ந்து சென்று,உங்கள் இயல்பே மகிழ்ச்சி தான், அதற்கும் காலத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று உணர்வது தான். இதுதான் உச்சபட்ச ஞானம். இது கடினமாக தோன்றலாம் ஆனால் முடியாததல்ல. நிலைமை சரியில்லாத போது எந்த முட்டாளும் வருத்தப்படலாம். நிலைமை அதலபாதாளத்திற்கு செல்லும் போதும் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும். நீங்கள் அனைவரும் துணிவு மிக்கவர்கள் உறுதியானவர்கள்!