உண்மையின் சகவாசம்

வியாழக்கிழமை, 21 மே 2015,

பெங்களூரு, இந்தியா


(நம்மால் மாற்றமுடியாத விஷயங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

த்ரிகால பாதித் தத் சத்யம் (காலத்தின் மூன்று பகுதிகளுக்கும் அப்பாற்பட்டது உண்மை) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளுக்கு நிகழ்காலத்தில் ஓர் விளைவு இருக்கின்றது. நிகழ்காலத்தில் என்ன இல்லையோ அதற்கும் வாழ்வில் விளைவுள்ளது. அப்படியெனில் உண்மை காலத்தின் மூன்று பகுதிகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்தக் கேள்விக்கு பதில் உங்கள் கேள்வியிலேயே மறைந்துள்ளது. நிலைமைகள் எக்காலத்திலும்  மாறிக் கொண்டேயிருக்கும்.காலப்போக்கில் மக்களும் மாறி விடுவர். இந்த மாற்றங்கள் எப்போதும் மற்றொன்றை பாதித்துக் கொண்டேயிருக்கும். உண்மை காலத்தினால் மாறாது. காரணம் மற்றும் நடவடிக்கை அல்லது விளைவு இடையே ஒரு உறவு இருக்கிறது. இப்போது இருக்கும் ஓர் நிலைமை வருங்காலத்தில் வேறொரு நிலைமைக்கு காரணமாகின்றது.அவ்வாறு  ஏற்படும் அந்த நிலைமை அதற்குப் பின்னால் ஏற்படும் நிலைக்குக் காரணமாகின்றது. அதனால் தான் அது காரணமும் விளைவும் என்று அழைக்கப்படுகின்றது. உலகம் முழுமையும் இந்த தத்துவத்திலேயே பிணைந்துள்ளது. இந்த வகையிலேயே நீங்கள் அனைத்தையும் பார்த்தால் அப்போது அது மிகவும் சரியானதே. ஆனால் தனித்தனியாக அவை உண்மை என்று கருதமுடியாது. (ஏனெனில் இடை விடாமல் காரணம் மற்றும் விளைவு என்று மாறிக் கொண்டேயிருப்பதால்)

குருதேவ். ஈசாவாஸ்ய உபநிஷதத்தில் ஒருவர் அவித்யா (அனுபவம் அல்லது நடைமுறை உண்மைகள் மற்றும் கூர்நோக்கு மூலம் அடையும் ஆழ்ந்த அறிவு) மூலமாக அனைத்தையும் கடந்து மரணத்திற்கு அப்பாலும் செல்ல முடியும் என்று கூறியிருக்கின்றீர்கள். இதன் பொருள் என்ன?

ஈசாவாஸ்ய உபநிஷதம் சொற்பொழிவு முழுமையையும் கேளுங்கள். நான் அதில் விபரமாகக் கூறியிருக்கின்றேன். எதையும் நான் விட்டு விடவில்லை. உடல் நலமின்மை ஏற்படும் போது, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் மூலம் நோயிலிருந்து குணம் அடைகிறீர்கள். அதனால்தான் அவித்யா  அறிவியல் மூலம் மரணத்தை கடந்து அதற்கப்பால் செல்கிறீர்கள் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதம், ஜோதிஷம், மற்றும் யோகா ஆகிய அறிவியல்கள் அவித்யாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக கருதப்படுகின்றன.

எனவே, அவித்யாவின் உதவியுடன் மரணத்திற்கப்பால் செல்லமுடியும், பின்னர் வித்யாவை நுண்ணிய ஆழ்நிலை அறிவை குறிப்பிட்டு) அடைந்து நீங்கள் அமரத்துவத்தை அடையலாம். ஆரோக்கியமான நிலையை அடையும் போது ஆழ்ந்த தியானத்திற்கு செல்லமுடியும். நுட்பமான அடிப்படை உண்மையைக் கண்டறிய முடியும்.

அதற்காகத்தான் மக்கள் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடும் பொருட்டு முதலில் யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சி செய்கின்றனர். அவித்யாவின் மூலம் மரணத்தைக் கடக்க முடியும், ஆனால் பலர் ஆரம்பநிலையிலேயே நிறுத்திவிட்டு, முன்னேற்றமின்றி இருக்கின்றனர். அதாவது வித்யாவினைப் பெற்று, ஆத்மஞானம் என்னும் நுண்ணிய ஆழ்நிலை அறிவினை அடையும் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்வதே இல்லை
.
அஷ்டவக்கிரகீதையை கேளுங்கள். சுய ஞானத்திற்கு ஆழ்ந்து செல்லுங்கள். ஆழ்ந்த சுயஞானம் உங்களை அமரத்துவத்திற்கு அழைத்து செல்லும். அதுதான் அர்த்தம். அவித்யா உடலை ஆரோக்கியமாக வைக்கவும், மனதிற்கு மகிழ்ச்சியை கொண்டு வரவும் உதவும், வித்யா உங்களுக்கு "நான் எங்கும் நிறைந்திருக்கின்றேன், நான் சாசுவதமானவன், உடல் அல்ல, இவற்றையெல்லாம் விட மிக பெரியவன்" என்னும் ஆழ்ந்த முடிவான உணர்தலை அளிக்கின்றது. இந்த புரிதல் வித்யா வினால் மட்டுமே வரமுடியும். அது சாதனா (ஆன்மீகப் பயிற்சிகள்) மற்றும் அருள் மூலமே நிகழும்.

நான் இந்தியாவில் தொடர்ந்து பணிபுரிவதா அல்லது டொரொண்டோவில் கிடைத்திருக்கும் வேலையை ஏற்றுக் கொள்வதா என்னும் குழப்பமான நிலையில் இருக்கிறேன். தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.

என்னிடம் "நான் எங்கு செல்வது?" "என்ன உண்பது?" "எங்கு வேலை செய்வது" என்பது போன்ற இத்தகைய சொந்த விஷயங்களை கேட்டுப் பயனில்லை. தேர்வு உங்களுடையது ஆசி என்னுடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் சொந்த முடிவுகளை என்னால் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் மூளை இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கின்றது. அதைப் பயன்படுத்தி தேர்வுகளை செய்யுங்கள். - நான் ஆசீர்வாதம் அளிக்கின்றேன்.

அத்தகைய தேர்வுகளை செய்வது சிரமமாக இருந்தால், தியானம் செய்யுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கே வந்திருக்கின்றீர்கள். தியானத்திற்குப் பின்னர் உங்கள் மனம் அமைதியடைந்து  மகிழ்ச்சியுடன் இருக்கும். அனைத்துக் குழப்பங்களும் மறைந்து விடும். அதிகத் தெளிவுடன் இருப்பீர்கள். அப்போது என்ன முடிவெடுக்கின்றீர்களோ அதில் முழு மனதுடன் முன்னேறிச் செல்லுங்கள்.

குருதேவ், நான் தினமும் பயிற்சி செய்கின்றேன். சத்சங்கத்தில் பங்கேற்கின்றேன். சேவையும் புரிந்து வருகிறேன். ஆயினும், வாழ்க்கையில் பல தடவைகள் என்னால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது?

ஏன் உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1. விருப்பத்தின் மீது ஜுரவேக பற்றுதல் இருந்தால் அல்லது பேராசை இருந்தால் உங்களால் சரியான முடிவு எடுக்க முடியாது.
2. உங்களுக்குள் ஏதேனும் பயம் இருந்தால் அப்போதும் சரியான முடிவுகளை எடுக்கமுடியாது. மனம் பேராசை பயம் இவற்றுக்கிடையே சிக்கிக் கொண்டு விடும் போது அதனால் குழப்பம் ஏற்படும். எனவே பயம் பேராசை இரண்டையும் விட்டு விடுங்கள். அவ்வளவு தான்.

குருதேவ், ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவற்றில் கூறப்பட்டிருக்கும் பல நிகழ்வுகள் அல்லது கதைகள் நம்புவதற்கு கடினமானதாக உள்ளன. உதாரணமாக, உண்மையிலேயே ஸ்ரீ ஹனுமான் அகன்ற சமுத்திரத்தை தாண்டிக் குதித்தாரா? இவை உண்மைக் கதைகளா அல்லது கவியின் கற்பனைகளா அல்லது ஆழ்ந்த பொருளை குறிப்பிடும் எழுத்தியல் உருவகமா? இதை எவ்வாறு புரிந்து கொள்வது?

இப்போது கூட மக்கள் உலகை சுற்றி நீரில் பயணம் செய்கின்றனர். அல்லவா? அவ்வாறு இப்போது நிகழும்போது பண்டைய காலத்தில் அதையே செய்திருக்க முடியாதா என்ன? அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ளன. மேலும் ஸ்ரீ ஹனுமான் ஆங்காங்கே பாறைகளில் ஒய்வெடுத்ததாகவும் கூறப் பட்டுள்ளது. எனவே அவர் கடலைத் தாண்டியிருக்கலாம். குரங்குகள் குதிப்பதில் தேர்ந்தவையாகும். அவை எங்கே போகும், அடுத்து எங்கே குதிக்கும் என்று அறுதியிட்டுக் கூறவே முடியாது.

குருதேவ், நமது பாரம்பரியத்தில் ருத்ரபூஜை, விஷ்ணு பூஜை உள்ளன. ஏன் பிரம்ம பூஜை என்று நாம் செய்வதில்லை?

ஏனெனில் பிரம்மாவின் வேலையான படைப்பு நிறைவடைந்து விட்டது.(சிரிப்பு) பிரம்மா சிவனிடமும்  விஷ்ணுவிடமும் இருக்கின்றார். அவர் எங்கும் நிறைந்தவர். எனவே நீங்கள் விஷ்ணுவை வழிபடும் போது பிரம்மனையும் சேர்த்து வழிபடுகின்றீர்கள். சாரம் என்னவெனில், ஒரே இறைமையை அனைவரிடமும் அனைத்திலும் காண்பது என்பதாகும். மேலும் அனைவரையும் அனைத்தையும் தெய்வத்தின் ஒரு பகுதியாகக் காண்பது என்பதுவுமாகும்.


பிரம்மவதின் என்றொரு சொல் உண்டு. ஒன்று பிரம்ம பகவான், மற்றொன்று பிரம்மன் (உருவற்ற நிலைபெற்ற, எங்கும் நிறைந்த ஒரே மெய்யுணர்வு அல்லது தெய்வம்) இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. பரமாத்மா அல்லது ஒரே தெய்வமாகிய பிரம்மனுக்கு பூஜைகள், சடங்குகள் கிடையாது. பிரம்மனைச் சிந்தித்து, தியானம் மட்டுமே செய்ய முடியும். பிரம்ம பகவான் மற்றும் பிரம்மம் ஆகிய இரண்டியும் குழப்பிக் கொள்ளக்கூடாது; உருவற்ற தெய்வீகத்தை ஓர் உருவமாக அல்லது வழிபாட்டுக் கடவுளாக கருதக் கூடாது என்பதற்காகவே நமது முன்னோர்கள் பிரம்மா மற்றும் பிரம்மன் என்னும் இரண்டிற்கிடையே இந்த வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.