உண்மையான நட்பின் அடையாளம்

செவ்வாய்கிழமை, 31 மார்ச், 2015,

சிங்கப்பூர்



(குறைவாக எதிர்பார்த்து அதிகமாக புரிந்து கொள்ளுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

உலகத் தலைவர்களுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபடும் போது எதைப் பற்றிப் பேசுகின்றீர்கள்? உங்களுடைய பேச்சு வார்த்தைகளில் என்ன நிகழ்கின்றது, உலகத் தலைவர்களிடம் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என்பவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கின்றது.

முதலாவதாக ஒருவரை சந்திக்கும் போது, அவரை மனித பிறவியாக கருதியே சந்திக்கின்றேன். ஒருவர் உலகத் தலைவராக இருந்த போதிலும், அவரும் மனிதர் தான், அவருக்கும் அவரது சொந்தப் பிரச்சினைகள் என்பது இருக்கும். ஆகவே மனிதன் என்னும் நிலையிலேயே ஒருவரை சந்திக்கின்றேன். தலைவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். எடுக்கும் முடிவுகள் தவறானவையாகவே எப்போதும் இருக்கும்.   அவர்கள் முதலில் தங்களுடைய ஆற்றல் மற்றும் மன அழுத்தத்தத்தினை கையாள வேண்டும், அதற்காகவே என்னிடம் வருகின்றனர். தங்களது பிரச்சினைகள் அல்லது அவர்களுடைய நிலைமையை எவ்வாறு மேன்மையாக கையாள்வது ஆகியவற்றுக்கு அவர்களுக்கு  உள்ளுணர்வு தேவைப்படுகின்றது.

இரண்டாவதாக நாங்கள் சந்திக்கும் போது சில பிரச்சினைகள் இருக்கலாம். அவை மோதல்கள் நிகழும் இடங்களை பற்றிய பிரச்சினைகளாகவும் இருக்கலாம். சேர்ந்தமர்ந்து எங்களுடைய தொடர்புத் திறனின் மூலம் எவ்வாறு அத்தகைய மோதல்களைத் தீர்க்க உதவலாம் என்றே பார்ப்போம். இங்கு எவ்வாறு எங்களது தன்னார்வ தொண்டர்கள் அத்தகைய சூழ்நிலையில் மக்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை கையாளும் திறனை பெற்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஓர் உதாரணம் தருகின்றேன்: அர்ஜெண்டினாவிலுள்ள மிகப் பெரிய சிறைச்சாலையினை முற்றிலும் சீரமைத்திருக்கின்றோம். அங்கு மிகக் கொடிய குற்றங்களை புரிந்தவர்கள் அற்ப விஷயங்களுக்குக் கூட ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வன்முறையற்ற சூழலை எடுத்து வர முடிந்ததை பெரிய சாதனையாகவே நான் கருதுகின்றேன். அர்ஜெண்டினாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் ‘நாங்கள் அச்சிறைக்கு வந்து எது மாற்றத்தினைக் கொண்டு வந்தது என்று காண விரும்புகின்றோம்‘ என்று கூறினர். அத்தகைய சமூகநல திட்டங்களும் உதவின.

ஐவரி கோஸ்ட் போன்ற சில பதற்றமான பகுதிகளையும் ஏற்றுக் கொண்டோம். உதாரணமாக ஐவரி கோஸ்டில் சமய சார்புள்ள மோதல்கள் நிறைந்த இரண்டு கிராமங்களில் திட்டப்பணிகளை மேற்கொண்டோம். ஒரு பகுதியில் இஸ்லாமியரும் மற்றொரு பகுதியில்  கிறிஸ்தவர்களும் நிறைந்திருந்தனர். ஒருவரையொருவர் முற்றிலும் தவிர்த்தனர். தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த பிரெஞ்சு மொழி பேசக்கூடிய பெண் அங்கு சென்று அவர்களிடம் பேசி, தனித்தனியாக அவர்களுக்குத் திட்டப்பணிகளைச் செய்து அவர்களை ஒருங்கிணைத்தார். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவப் பகுதியில் கழிப்பறைகளை கட்டினர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் பகுதியில் பள்ளியினை நிர்மாணித்தனர். எங்களது இம்முயற்சிகளை  அங்கீகரித்து ஐவரி கோஸ்ட் அரசு சமூக நல்லிணக்கத்தினை உருவாக்கியதற்காக வாழும் கலைக்கு ஓர் விருதினை அளித்தது.

இவை நான் ஏற்றுக் கொள்ளும் பணித்திட்டங்கள். சாதாரணமாக நான் எந்த நிகழ்ச்சி நிரலுடனும் எந்த உலகத் தலைவரையும் சந்திப்பதில்லை. அவர்களிடம் நான் எந்தச் சலுகையும் கேட்பதில்லை. பங்களிக்கவே நான் இங்கிருக்கின்றேன். அப்படியே அவர்களிடம் நானே செல்வதாயினும், எவ்வாறு அவர்களது சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பதைக் கண்டறியவே செல்கின்றேன். அவர்கள் என்னிடம் வரும் போது, பிரச்சினைகளுடன் வருகின்றனர், மிகுந்த மகிழ்ச்சியுடனும் லேசாகவும் உணர்ந்து திரும்பிச் செல்வதையும் அறிகின்றேன்.

நல்ல நண்பனின் அடையாளம் என்ன தெரியுமா? ஒருவர் நல்ல நண்பரா இல்லையா என்பதைக் கண்டறியச் சில கட்டளை விதிகள் உள்ளன. தெரியுமா? ஒரு நண்பனிடம் பிரச்சினையுடன் சென்று, லேசாக உணர்ந்து திரும்பினால் அவர் நல்ல நண்பர். ஆனால் ஒரு நண்பரிடம் பிரச்சினையுடன் சென்று," கடவுளே! இது சிறிய பிரச்சினை என்று எண்ணினேனே? இவ்வளவு பெரிதானதா? என்று கனத்த மனதுடன் திரும்பினால் அவர். நல்ல நண்பன் அல்ல.

இது உங்களுக்கும் பொருந்தும். யாரேனும் ஒருவர் உங்களிடம் பிரச்சினையுடன் வந்தால், அதை மேலும் பெரிதாக்கி " பிரச்சினை ஜெயிக்க முடியாத ஒன்று, அவ்வளவு தான், நீ அழிக்கப்பட்டு விடுவாய்" என்று கூறி அவர்களை மேலும் துன்புறுத்துவீர்களா அல்லது நம்பிக்கையுடனும் லேசாகவும் உணரவைத்து புன்முறுவலுடன் திரும்பச் செல்ல உதவுவீர்களா? இதுவே ஓர் நல்ல நண்பனுக்கான கட்டளை விதி. இதை பற்றி முன்னர் உங்களில் யாரேனும் சிந்தித்திருக்கின்றீர்களா? இல்லையெனில், இன்று புதிதாக ஒன்றினை பற்றி சிந்திக்க கற்றுக் கொண்டீர்கள். இதை பரீட்சித்து ஓர் சோதனையோட்டம் செய்து பாருங்கள்.

நாங்கள் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கூறுவதைக் கேட்க  மகிழ்ச்சியாயுள்ளது. எனினும், நான் ஒரு நேர்மையான குழப்பத்தில் உள்ளேன். பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் நோக்கி நகர்த்த சமூகத்தில் மிக வலிமையான நெம்புகோல்களில் ஒன்று அரசியல். அண்மை காலத்தில், தாங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் விருப்பங்களுடன் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். எவ்வாறு  அவர்கள் பன்முகத்தன்மை, பன்மைத்துவம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் இலக்கினை அடைவார்கள் என்றறிய விரும்புகிறேன்.

முதலாவதாக எனக்கு அரசியல் விருப்பத் தேர்வுகள் எதுவும் கிடையாது. நல்ல நெறிமுறையான செய்தித்தாள் ஒன்றிடம் எந்த அரசியல் கட்சியுடன் இணைந்துள்ளீர்கள் என்று கேட்டால் எதுவுமே இல்லை என்றே பதில் கூறுவார்கள்.

ஒரு நீதிபதி, ஒரு ஆன்மீகத் தலைவர், ஒரு மருத்துவர், ஒரு பத்திரிகையாளர், அல்லது ஓர் ஆசிரியர் ஆகியோர் எந்த கட்சி அல்லது சித்தாந்தத்தையும் சார்ந்திருக்க முடியாது. அவர்கள் மக்கள் அனைவரும் பயன் பெறக்கூடிய விதத்திலேயே இருக்க வேண்டும் இல்லையெனில், அவர்கள் தாங்கள் வகிக்கும் பங்கினைச் சரியாக செய்ய முடியாது. ஒரு ஆன்மீகத் தலைவர் அல்லது சமூகத்தொண்டர்,எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தம் இவற்றினை சார்ந்திருக்க முடியாது என்பதே எனது நம்பிக்கை. இப்பொழுது நீங்கள்," ஏன் இந்தியாவில் ஊழலை நீங்கள் எதிர்த்து நின்றீர்கள்" என்று கேட்கலாம். 

நல்லது, சற்றேனும் பொது அறிவுடைய எந்தத் தனி மனிதனும் ஊழல் வதந்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். கடந்த காலத்தின் ஆளும் கட்சியியினை நான் எதிர்க்கவில்லை,கடந்த கால ஊழலுக்கே நான் எதிரானவர். ஊழல் இறுதி நிலையினை அடைந்து விட்டது. வெட்கமேயில்லாத அளவு ஊழல். ஆகவே நான் அதனை எதிர்த்து நின்று ஊழலுக்கும் குற்றத்திற்கும் எதிராகப் பேசினேன். நான் இதனை செய்திருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றீர்கள் அல்லவா? அதைத்தான் செய்தேன். மக்களிடம் சோம்பலும் செயலற்ற நிறைவும் காணப்பட்டன. அவர்கள் அனைவருமே ஒரே மாதிரி ஊழல் நிறைந்தவர்தாம் என்று கருதி வாக்களிக்க விருப்பமின்றி இருந்தனர். அப்போது நான்," நிலையான ஆட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாற்றம் தேவை" என்று கூறினேன். எந்தக் கட்சியாயினும் இதையே தான் கூறுவேன். மக்களை வாக்களிக்க தூண்டுதலில் என்ன தவறு? இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் விருது எங்களுக்கு கிடைத்தது. பாரபட்சமாக இருந்திருந்தால் அவ்விருதினை தந்திருக்க மாட்டார்கள்.

மக்கள் என்னிடம் சில சமயங்களில்,"தாங்கள் சுற்றுப் பயணம் செய்கையிலும், விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் ஏன் ஊழல் மிகுந்தவர்கள் உங்களிடம் மேடையில் வருகின்றனர்? அவர்களை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறுகின்றனர்."அது ஓர் மருத்துவமனையினைத் திறந்து வைத்து, அதற்குள் நோயாளிகள் வரக் கூடாது என்று கூறுவது போன்றதாகும்" என்றே நான் பதிலளிக்கின்றேன். ஊழல் நிறைந்தவர்கள் என்னிடம் வராமல் வேறெங்கு செல்வார்கள்? ஆகவே அனைத்து ஊழல் மக்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்,நான் அவர்களிடம் பேசுகின்றேன்.  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றியடைகின்றேனா என்று பார்க்கலாம்.கடந்த காலத்தில் எப்போதும் என்றில்லை, பலமுறைகள் நல்ல முறையில் நடந்திருக்கின்றது.(சிரிப்பு). அதில் மேலும் உழைக்க விரும்புகிறேன் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளும் என்னிடம் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இறுதியாக ஒன்று கூற விரும்புகிறேன். நாம் அரசியலை ஆன்மீகமயமாக்க வேண்டும். இன்று அரசியல் வணிகமாகி விட்டது, அதில் சேவை என்பதே இல்லை. மக்களை பற்றிய கவலையே இல்லாது ஒரு தொழிலாகி விட்டது. ஏதேனும் ஒன்று உங்கள் தொழிலாகி விட்டால் அதுவே முக்கியமாகி விடும், மக்கள் மற்றும் சமுதாயம் என்பவற்றினை பற்றிய முக்கியத்துவம் குறைந்து விடும். ஆகவே கருணை, அக்கறை, மக்களைப்  பற்றிய விசாரம் ஆகியவற்றுடன் அரசியல் இருக்க வேண்டுமெனில், அரசியல்வாதிகள்  மகாத்மா காந்தி மற்றும் அவரது தலைமுறையினரைப் போன்று ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்.

இங்கும் லீ கோன் ஏவ் போன்று பல சிறந்த தலைவர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே தலைவர்கள் தங்கள் முழு மனதையும் கவனத்தையும் தங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அதனால் தான் சிங்கப்பூர் நன்கு வளர்ச்சியடைய முடிந்தது. சிங்கப்பூர் வீழ்ந்து விடும், மீண்டும் மலேசியாவையே வந்தைடையும் என்று மலேசியா எதிர்பார்த்து கொண்டிருந்தது. ஆனால் அவ்வாறு இல்லை, அரசியல் தலைவர்களின் அர்ப்பணிப்பால் சிங்கப்பூர் நன்கு வேரூன்றி வளர்ந்தது. அதனால் தான் அரசியல் ஆன்மீகமயமாக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். அரசியல் ஒரு வியாபாரம் அல்லது தொழில் போன்றிருக்கக் கூடாது. ஓர் சமுதாயத் தொண்டாக இருக்க வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? 

இரண்டாவதாக சமயத்தினை மதச் சார்பற்றதாக ஆக்குவது. ஒவ்வொரு சமயத் தலைவரும்  தங்கள் சமயத்தவர் அல்லது ஹிந்துக்கள் அல்லது புத்த மதத்தினர் அல்லது கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர் என்றில்லாமல் உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். நான் மட்டுமே சுவர்க்கத்திற்கு செல்வேன், மற்றவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறும் மனிதர் மக்களுக்கு ஆபத்தானவர். அத்தகையவர் அனைவருக்கும் நரகத்தை உருவாக்குபவர்கள். எனவே சமயத்தை மதச் சார்பற்றதாக்க வேண்டும்.

மூன்றாவதாக வணிகத்தினை சமுதாயமயமாக்க வேண்டும். இதன் சாரம் என்னவென்றால், ஒவ்வொரு வியாபாரியும் பெரு நிறுவன சமூகப்பணி செய்ய வேண்டும். கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். என்ன நினைக்கின்றீர்கள்? அவர்கள் தங்கள் வருவாயில் 5 முதல் 10 சதவீதம் சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும். உண்மையில் அது ஓர் முதலீடு போன்றது. மக்களுக்குப் பொருள் வாங்கும் திறன் இல்லையெனில் வியாபாரமும் கீழிறங்கி விடும். நெறியற்ற முறை வணிகத்தால் சமூகத்தினை வறுமையாக்கினால் வெகு விரைவில் வணிகம் வீழ்ந்து விடும்.ஆகவே சிறந்த உலகையும் சிறந்த வருங்காலத்தையும் உருவாக்க சமயத்தை மதச் சார்பற்றதாக்கி, அரசியலை ஆன்மீகமாக்கி,வணிகத்தினை சமூக மயமாக வேண்டும். வாழ்த்துக்கள் !

அறிவியலும் ஆன்மீகமும் என்று எடுத்துக் கொண்டால், இன்றிருக்கும் அறிவியலில் மற்றும் அறிவியல் கல்வியில் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?

பாரபட்சம். அறிவியலை பொல்லாங்கு தடை செய்தால் விரைவில் அது அழிந்து விடும். சாத்தியங்களுக்கு திறந்த மனதுடன் இருப்பதே அறிவியலின் அடிப்படை. பிற ஆராய்ச்சியாளர் களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமலோ அவற்றைக் காணாமலோ பாரபட்சமாக இருந்த விஞ்ஞானிகளின் தோல்விகளைப் பற்றி வரலாறு கூறுகின்றது. அத்தகைய விஞ்ஞானிகளின் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர். இது வரலாற்றில்  இருக்கிறதல்லவா? ஆம்! பொல்லாங்கு நீக்கப்பட வேண்டும். அனைத்து சாத்தியங்களுக்கும் திறந்த மனதுடன் இருப்பதே அறிவியல் திறன் கொண்ட மனம்.

இரண்டாவதாக உற்சாகம் மற்றும் உள்ளுணர்வு. எதையும் செய்வதற்கு உற்சாகமின்றி இருந்தால் அனைத்துக் கல்விக்கும் என்ன பயன்? உயர் கல்வியுடன் எதையும் செய்யாமல் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டு தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? கல்வியும் அதைப் பயன்படுத்தும் உற்சாகமும் இருக்க வேண்டும். உள்ளுணர்வு,கண்டுபிடிப்பு, உற்சாகம் இவை தாம் ஓர் விஞ்ஞானி மற்றும் கலைஞரின் முக்கியப் பண்புகள்.

ஹிந்து சமயத்தில் ஏன் பல கடவுள்களை வழிபடுகிறோம்? அதற்குப் பின்புலத்தில் ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா?

உங்கள் உடலில் மொத்தம் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஓர் செல் எவ்வாறு பல பாகங்களை கொண்ட உடலாக வளர்ந்தது என்று ஆச்சரியப் பட்டிருக்கின்றீர்களா? ஏனெனில் ஒரே செல் அவ்வாறு உருவாகுமாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.

ஒரு கேக் கடைக்கு சென்றால் எத்தனை வகையான கேக்குகள் விற்கப்படுகின்றன? ஒரே ஒரு கேக் தான் இருக்கிறதா என்ன? ஏன்? ஏனெனில் பன்முகத் தன்மையை விரும்புவது ஆத்மாவின் இயல்பு. இறைமை நீங்கள் ஒரே வகை பழத்தையே விரும்ப வேண்டும் என்று எண்ணியிருந்தால், வாழைப் பழத்தை மட்டும் படைத்து அனைவரும் அதை மட்டுமே உண்ண வேண்டும் என்று நிர்ணயம் செய்திருக்கும். இல்லை. கடவுள் விரும்புவது பன்முகத் தன்மையினையே. மெய்யுணர்வும் அதையே விரும்புகிறது. ஒரே கோதுமையிலிருந்து பல வகை இனிப்புக்களைச் செய்கிறோம். அரிசியிலிருந்து இட்லி, புலாவ் போன்ற பல வகை உணவுகளை செய்கின்றோம். ஏன்? ஏனெனில் இயற்கை பன்முகத் தன்மையினை விரும்புகின்றது ! பன்முகத் தன்மையினை விரும்பும் கடவுள் தான் மட்டும் தினமும் ஒரே வடிவில் வருவாரா என்ன? கடவுளும் தன்னைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ளவே விரும்புவார். பன்முகத் தன்மையினை விரும்பும் கடவுள் தன்னைப் பல உருவங்களில் வெளிப்படுத்திக் கொண்டார் என்றே வேத காலத்தில் வாழ்ந்த பழமையான ஹிந்துக்கள் கருதினர். எனவே 108 பெயர்கள், 108 வடிவங்கள் அல்லது 1008 பெயர்கள் 1008 வடிவங்கள் என்று வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் ஒரே தெய்வம் தான்.

அது போன்றே சூரியனின் கதிர்கள் ஒன்றா பலவா? ஒரே சூரியன் தான் ஆயினும் அதன் கதிர்கள் ஒரு முப்பட்டைக் கண்ணாடியின் வழியே செல்லும் போது ஏழு வண்ணங்கள் (VIBGYOR) தெரிகின்றன. அது போன்று ஒரே பரமாத்மா அல்லது பரப்ரம்மன் - ஒரே தெய்வம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்கின்றது. ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்றால், கருணை அல்லது சிகிச்சைக்கான பீடம் உள்ளது. அல்லவா? ஒரே புனித மேரி ஒரே ஏசு கிறிஸ்து ஆனால் பல பீடங்கள் உள்ளன. இதைப் பழமையான தேவாலயங்களில் காணலாம். ஏன்? பல பயன்களுக்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அது போன்று இந்த அரங்கில் பல நாற்காலிகள் மேஜைகள் கதவுகள் மற்றும் மேடை அனைத்தும் ஒரே மரத்தால் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் மேடையை தரையாகவோ, கதவை நாற்காலியாகவோ பயன்படுத்த முடியாது. ஆகவே நடைமுறைப் பயன்பாட்டிற்கு அவை வேறு வேறாக இருக்கின்றது. அது போன்று ஹிந்து பாரம்பரியத்தில் "ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி " - அதாவது ஒரே கடவுள் ஆனால் வெவ்வேறு  நோக்கங்களுக்காக பல்வேறு வடிவில்  உணரப்படுகின்றது. தடைகள் ஏற்பட்டால் யானை முக கணேசரை வணங்குகிறீர்கள். ஏனெனில் யானை தடைகள் எத்தனை இருந்தாலும் தன் பாதையை மாற்றிக் கொள்ளாது. வலிமையுடன் நடந்து செல்லும். தடைகள் இருந்தால் கணேசரை வணங்குவது ஏனெனில் அந்த ஆற்றல் உங்களுக்கேற்படும் தடைகளைத் தாண்டிச் செல்ல உதவும். 

இந்த பூமியிலுள்ள அனைத்து மரபணு குறியீடுகளையும் ஒரே ஒரு மனித டி என் ஏ  இழை தன்னில் உள்ளடக்கியுள்ளது. மனித டி  என் ஏ  இழையிலிருந்து பூமியிலுள்ள எந்த விலங்கையும் உருவாக்கலாம், ஆனால் மாறாக செய்ய முடியாது.(சிரிப்பு) இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்குள் இந்த அனைத்து அதிர்வலைகளும் உள்ளன என்பதேயாகும். நமது முன்னோர் மிக புத்திசாலிகள். கடவுள்களின் மற்றும் பெண் தெய்வங்களின் சின்னங்களை பற்றி ஒரு சிறிய கையேடு எழுதியுள்ளேன்.அதைப் படியுங்கள். பிரமாதமாகவும் வசீகரமாகவும் உள்ளது. 

ஓர் சிறிய குழந்தை கூட இந்தக் கேள்வியை கேட்கும். சுண்டெலி எதைக் குறிப்பிடுகிறது? தர்க்கம் என்பதைக் குறிக்கின்றது. சுண்டெலி வலையைக் கடிக்கும். அதுவே தர்க்கம். தர்க்கத்தின் மீது ஞானம் சவாரி செய்கின்றது- அதுவே யானை கணேச பகவான். அது போன்று தெய்வத் தாய் புலியின் மீது சவாரி செய்கின்றாள். புலி கொடிய மிருகம்.கொடூரம் ஒரு புறமும், தெய்வத்தாயின் மென்மை மற்றொரு புறமும் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. எதிரெதிர் பண்புகள் ஒன்றுக்கொன்று நிறை செய்கின்றன. கொடுமையினை கருணை வெற்றி காணும் போது, - கொடிய குணத்தினை  கருணை முற்றிலும் கட்டுப்படுத்தும் நிலையில் - வெல்வது தாய்மை. கொடூரத்தை இன்னொரு கடுமையால் வெல்ல முடியாது. தாய்மை, பொறுமை அன்பு ஆகியவையே வெற்றி கொள்ளும். அதுதான் தெய்வத்தாய் புலி அல்லது சிங்கத்தின் மீது சவாரி செய்வதன் குறியீடு.

சிங்கம் மிக சக்தியுள்ளது. எப்போதெல்லாம் சமுதாயத்தில் கொடுமையான சக்தி பரவுகிறதோ அப்போதெல்லாம் கருணை என்னும் மிகச் சிறந்த தனிமம் கொடுமையை வெற்றி கொண்டு அதன் மீது சவாரி செய்கிறது. இதைத்தான் புலி அல்லது சிங்கம் பெண் தெய்வத்தினை சுமந்து செல்வது குறிக்கின்றது. இதில் நீங்கள் ஆழ்ந்து சென்றால் ஒவ்வொரு சின்னமும் திடுக்கிட வைப்பதையும் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதையும் காண்பீர்கள்.