நீங்கள் முழுநிறைவானவரா?

சனிக்கிழமை - 7 மார்ச் - 2015,

பெங்களூரு, இந்தியா

சமுதாயத்தில், அன்றாட நிகழ்வுகளில் சினங்கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு நிகழும்போது நீங்கள் செய்வதற்கெதுவுமில்லை. ஏதேனும் ஒன்று நிகழ்ந்து உங்களை விரக்தியடைய வைக்கின்றது. நான் கூறுவதைக் கவனிக்கின்றீர்களா? நீங்கள் முற்றிலும் சரியாக அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் அது கிடைப்பதில்லை. அதனால் நீங்கள் விரக்தியடைகின்றீர்கள். சரியான நேரத்தில் ஒருவர் காரியங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்கள், அவர்கள் அவ்வாறு செய்ய வில்லையெனில் வெறுப்படைகின்றீர்கள். விரும்பும் வகையில் செயல்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள், ல்லையெனில் சினங் கொள்கின்றீர்கள். அல்லவா? உங்கள் சொந்த வாழ்க்கையையே சற்றுத் திரும்பிப் பாருங்கள். இவ்வாறு நீங்கள் விரக்தியடைந்த எத்தனை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன? அவைகளை எண்ண முடியுமா? உங்களில் எத்தனை பேர் அவற்றை எண்ணக் கூட முடியாது என்று உணர்கின்றீர்கள்? (அவையோரில் பலர் கையுயர்த்துகின்றனர்).


சில சமயங்களில் அது உங்கள் கையில் இல்லை, அல்லது உங்கள் திறனுக்குள் இல்லை என்பதையும் உணர்வீர்கள். சிறு விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரையில் இதே நிலை தான். உதாரணமாக, உலகிலேயே இன்று பெரிய பிரச்சினை ISIS தான். நமது இந்தியப் பிரதமருடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்," இந்த ISIS ஐ  என்ன  செய்வது? உலகில் இன்று இது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறினார். அனைத்துப் பெரிய அரசுகளும் மிகவும் சினங்  கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் பல நாடுகள் வெறுப்படைந்திருக்கின்றன.இராக், இரான் மற்றும் பல நாட்டு மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். இது மிகப் பெரிய பிரச்சினை, ஆனால் எதுவும் செய்ய முடியாது.
சரி, இன்று இவையெல்லாம் எங்கோ தொலை தூரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு கனகபுராவில் உள்ள பிரச்சினைகள் என்ன? இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு, இங்குள்ள பஞ்சாயத்திற்கு இரண்டு குப்பை அள்ளும் வண்டிகளை அளித்திருக்கின்றோம். ஆனால் தினமும் இந்த வழியாகச் செல்லும் போது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான குப்பைகள் இறைந்து கிடப்பதைக் காணலாம். நமது தன்னார்வத் தொண்டர்கள் சாலைகளில் குப்பை போடக் கூடாதென்று மக்களுக்குக் கற்பித்தபோதிலும் அவர்கள் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்து, பின்னர் அவர்களிடம் கேட்ட போது, நாங்கள் குப்பை போடவில்லை, நகரத்திலிருந்து யாரோ வந்து இங்கு கொட்டுகின்றார்கள் என்று கூறினர். ஆட்டோவில் வந்து குப்பைகளைக் கொட்டுகின்றனர், அவற்றைப் பசுக்கள் உண்கின்றன, அதைக் காணும்போது மிகவும் வருத்தமும் விரக்தியும் ஏற்படுகின்றது.

சரி, அதை விட உள்ளேயிருக்கும் பிரச்சினையைக்  காண்போம். மக்களுக்கு சாதனா, தியானம் கற்றுக் கொடுக்கின்றோம். அவர்கள் அவற்றை செய்வதில்லை. பின்னர் மனச் சோர்வுடன் இருக்கின்றார்கள். ஒருவர், வலி இருப்பதாக கூறினால் அவருக்கு மருந்து கொடுக்கிறீர்கள். அதை எடுத்துக் கொள்வதில்லை. டாக்டர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கின்றது. நோயாளிகளுக்கு மருந்துகள் தரப்படுகின்றன. ஆனால் அவர்கள் அதை உட்கொள்ளாமல், தலையணைக்கடியிலோ வேறெங்கோ  போட்டு விட்டு, மருந்தினால் பயன் ஒன்றும் இல்லை என்று கூறினால் என்ன செய்வது? மருந்து வேலை செய்யாமல் இல்லை, மருந்து எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது தான் நிகழ்வு. அப்போது மருத்துவர்களின் விரக்தியை எண்ணிப் பாருங்கள். விரக்தியடைய இது போன்று நூற்றுக்கணக்கான காரணங்கள் உள்ளன.

நம்மிடையே திறமை வாய்ந்த பலர் இருக்கின்றனர். அவர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன. குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் திறமைகள் போய் விடும். அனைவரையுமே குறையற்ற முழுமையானவராக காண வேண்டும் என்றால், அப்படி ஒருவரைக் காணவே முடியாது. உங்களைச் சுற்றிலும் குறையற்ற முழுமையானவற்றையே தேடினால், நீங்கள் உங்களிடமுள்ள குறைகளை மறந்து விடுகின்றீர்கள் என்பது பொருள். அனைத்தும் குறையற்று முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்,நீங்கள் முழுமையானவரா? அதைத் தேடுங்கள். நீங்கள் குறையில்லா முழுமையானவராக இருந்தால், பிறரிடமுள்ள குறைகளை, சுட்டிக்காட்டி விரக்தியடைவதை நிறுத்தி விடுவீர்கள். அதற்குப் பதிலாக அவர்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் முழுமையடையவும் உதவுவீர்கள். இதுதான் சிக்கலான நிலை. 

நாம் பிற மக்கள், நிறுவனங்கள் நாடுகள்,அனைத்தும் குறையின்றி முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம், இந்த நோக்கத்தில், நாம் நம்முடைய குறைகளைக் காணவும், நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் மறந்து விடுகின்றோம், நம்மை உள்நோக்கிக் காணத் துவங்கும் போது, ஒரு புதிய பரிமாணம் நமக்கெதிரில் திறக்கின்றது. அப்போது தான், நாம் பிறர் விரக்தியடையாமல்  கற்பிக்க முடிகின்றது. இந்த சமயத்தில் தான் நாம் ஒரு நல்ல ஆசிரியராகவும், தலைவராகவும் ஆகின்றோம். தலைவர்கள் விரக்தியடைந்தால் எவ்வாறு அவர்களால் மக்களுக்குத் தலைமை ஏற்க முடியும்? ஒருவரை நான் சந்தித்தேன். அவர் என்னிடம், ஒ! யாரும் என்னை பின்பற்றுவதில்லை, என்னுடைய ஆணைகளை யாரும் ஏற்பதில்லை, யாரும் நான் கூறுவதைக் கவனிப்பதில்லை, யாரும் எனக்கு உதவுவதில்லை நான் மிகவும் விரக்தியடைந்திருக்கின்றேன்" என்று கூறினார். நான், "நீங்கள் ஒரு தலைவர். நீங்கள் தாம் பிறருடைய தவறுகளை திருத்த வேண்டும். உங்களிடம் என்ன வளங்கள் உள்ளனவோ அவற்றை வைத்துக் கொண்டு நீங்கள் சமாளிக்க வேண்டும். உங்களுடைய குழுவினரிடம் என்னன்ன திறமைகள் உள்ளனவோ அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினேன்.  ஒவ்வொருவரிடமும் சில குறைகள் இருக்கும். சில நல்ல அம்சங்களும் இருக்கும். ஆனால் குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களது நல்ல அம்சங்களைக் காணத் தவறி விடுவீர்கள். யாருமே ஒரே இரவில் முழுமையாக குறையற்றவராக ஆக முடியாது. மெதுவாக மக்கள் முழுமை பெறுவார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதுதான் மேலாண்மை அறிவியல். 

உங்கள் மனதை எவ்வாறு மேலாண்மை செய்வது, உங்கள் சூழலை எவ்வாறு மேலாண்மை செய்வது, உங்களுள்ளே எவ்வாறு விரக்தி உட்புகாமல் உறுதிப்படுத்திக் கொள்வது. ஏதேனும் ஒரு காரணத்தினால் விரக்தி உங்களுக்குள் புகுந்து கொள்வதற்குக் காத்திருக்கும். அது உங்களைக் கையகப்படுத்திக் கொண்டால் நிச்சயம் நீங்கள் பயனற்றவராக ஆகி விடுவீர்கள். பல சமயங்களில் மக்கள் குறைகூறிப் புகார் செய்யும்போது, அவர்களிடம் நிறைய விரக்தி இருப்பதைக் காணலாம். அதைக் குறைக்க அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. குறை கூறுபவர்கள் எந்த வேலையையும் செய்வதும் இல்லை.கடினமாக வேலை செய்பவர்களுக்குக் குறை கூற எதுவும் இல்லை ஏனெனில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைத்துமே அது அப்படித்தான் இருக்கும் என்று ஏற்றுக் கொண்டவர்கள். இதை எத்தனை பேர் கவனித்திருக்கின்றீர்கள்? எந்த வேலையையுமே செய்யாதவர்கள், பிறரைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களிடமிருக்கும் நல்லனவற்றைக் காண முடியாதவர்களாகின்றனர். எனவே நம்மிடம் விரக்தி உட்புகாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விரக்தியால்,ஆஸ்ரமத்திற்கு சென்று தங்குகிறேன்" என்று கூறுகின்றார்கள். ஆஸ்ரமவாசியாகவும் ஆகின்றார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் "நான் நிறைய சாதனா செய்து விட்டேன், சற்று இளைப்பாருகின்றேன் என்று எண்ணி, தன்னைச் சுற்றி இருப்பவர்களுடன் சண்டையிடுதல், இவன் இதைச் செய்தான்,அதை செய்தான் என்று சச்சரவினைத் துவங்குகின்றனர். இத்தகைய மோதல்களினால் பிறரை குறை கூறுகின்றனர். இவ்வாறு செய்யும் போது உங்கள் மைய நிலையினை இழக்கின்றீர்கள். அவன் முன்னால் உட்காருகின்றான், நான் பின்னால் அமர வேண்டியிருக்கின்றது என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவன் குருதேவுடன் பயணிக்கின்றான்,ஆனால் எனக்கு அது அமையவில்லை போன்ற முக்கியமற்ற விஷயங்கள் மனதைத் தொந்தரவு செய்கின்றன. முள்ளைப் போன்று மனதைக் குத்துகின்றன. இது ஏன் நிகழ்கின்றது? ஏனெனில் நாம் நம்மைப் பற்றி மறந்து விட்டு பிறரிடம் அதிகம் எதிர்பார்க்கின்றோம். நமது கவனத்தை நாம் நம்மிடம் செலுத்தவேண்டும். இவ்வுலகிற்கு என் பங்களிப்பு என்ன? பிறருக்கு என்ன செய்திருக்கின்றேன்? என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எந்த அளவு பயனுள்ளவனாக இருக்கின்றேன்? இந்த திசையில் எண்ணங்கள் சென்றால், நாம் பிறரைக் குறைகூறவோ காயப்படுத்தவோ மாட்டோம். இல்லையெனில் எப்போதும் பிறரைக் குறை கூறிகொண்டே இருப்போம்.


பல தடவைகள், மக்கள் என்னிடம் வந்து, இவன் சரியில்லை, ஏதேனும் செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றார்கள். என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையும் கூறியிருக்கின்றார்கள். நான், "முதலில் நீங்கள் சரியாகுங்கள். உங்களுக்குள் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் " என்றே கூறியிருக்கின்றேன்.