நகைச்சுவை உணர்வு

திங்கள்கிழமை 30 மார்ச், 2015,

சிங்கப்பூர்



(ஏற்றுக் கொண்டு முன்னேறுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)  

என் உடன் பணிபுரிபவர் முன், என்னுடைய மேலதிகாரி என்னைக் குத்திக் காட்டியும் இரக்கம் காட்டும் தொனியுடனும், என்னை எள்ளி நகையாடுகிறார்.அவரது தொனி மற்றும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள், நான் முட்டாள் போன்று புரிந்து கொள்ள வைக்கிறது. இந்த சூழ்நிலையை நான் எப்படி கையாள்வது?

நகைச்சுவை உணர்வுடன் கையாளுங்கள். உங்களைக் கேலி செய்தால் நீங்கள் புன்முறுவலுடன் இருங்கள். அவருக்கு நன்றி கூறி, அவருடனேயே நீங்களும் சிரியுங்கள். உங்களை ஒரு வேடிக்கை பொருளாக வைத்தால், அதைப் பற்றி மகிழ்வடையுங்கள். அவரிடம், “என் மூலம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்" என்று கூறுங்கள். உங்களுடைய தொனியிலுள்ள நட்பு அந்தச் சூழலையே மாற்றி விடும். உங்களைக் கேலி செய்யும்போது அவரிடம்," சார், இப்போதெல்லாம் வேடிக்கையாகப் பேசுகிறீர்கள் "என்று கூறுங்கள். உங்களைக் கேலி செய்பவரைப் புகழ்ந்து பேசுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். மனவேதனையுடன், சிவந்த முகத்துடன் நீங்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து செல்லத் தேவையில்லை. நகைச்சுவை என்பது எந்த இடத்திலும் வழுவழுப்பை உருவாக்கும்.இதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் மேலாளராக அல்லது  உதவியாளராக இருந்தாலும், ஊழியர் அல்லது முதலாளியாக இருந்தாலும் சிக்கலான நிலைமைகளை எப்படி நகைச்சுவையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

திரு லீ குஆன் யெவ் அண்மையில் இறந்து விட்டார். ஏன் மனிதர்கள் இறக்கிறார்கள்? நல்லதே செய்பவர்கள் நீண்டகாலம் உயிருடன் இருக்கும் நிலையிலிருந்தால் இவ்வுலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஒரு ஆடை நன்றாக இருப்பதால், அதையே எப்போதும் அணிந்து கொண்டிருக்கிறீர்களா? அதை மாற்ற வேண்டும் அல்லவா? அவர் இருப்பின் மறுபக்கத்திற்கு செல்ல வேண்டும்.அவர் நாட்டுக்கும் மிகுந்த நன்மைகளை  செய்துள்ளார். அவற்றுக்கு நன்றியுடன் இருங்கள். இங்கு அவருக்கிடப்பட்ட பணி முடிந்து விட்டது. இப்போது அவருடைய பயணம் மறுபக்கத்தில் தான். நீங்கள் ஒருவரை விரும்பும்போது அவர் மறைவதை விரும்பமாட்டீர்கள். ஆனால் இயற்கைக்கென்று தனி வழிகள் உள்ளன.அதற்கென்று சொந்த காலமும் உள்ளது. அவர் முழு வாழ்க்கையை வாழ்ந்து விட்டார். இப்போது நாம் அவருக்கு பிரியாவிடை அளிக்க வேண்டும்.

என் கணவர் இறந்த நிலையில்,வெளிநாட்டில் இரு சிறு குழந்தைகளை வளர்க்கும் வலிமையை எவ்வாறு அடைவது?

இறைவன் உங்களுடனேயே இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணம் முழுவதும், ஒரு பெரிய சக்தி உங்கள் கையைப் பிடித்து அழைத்து செல்லும். இந்த நெருக்கடியைத் தாண்டி வெற்றிகரமாக வெளிவருவீர்கள். 1.5மில்லியன் அகதிகளுள்ள இராக்கிலுள்ள குர்டிஸ்தானுக்குச் சென்றிருந்தேன். அவர்களுடையது மிகப் பரிதாபமான நிலையாகும். ISISயால் அவர்கள் சின்ஜார் மலைகளுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்கு உணவு தண்ணீர் எதுவும் கிடையாது. வாழும் கலைத் தொண்டர்கள் 120 டன் உணவை விமானம் மூலம் அவர்களுக்களித்தனர். இல்லையெனில் 15000 மக்கள் மறைந்திருப்பர். அத்தகைய ஆற்றொணா நிலையிலும் எப்படி உதவி கிடைக்கிறது பாருங்கள்.

அவர்களை விட மோசமான நிலையில் நீங்கள் இல்லை. குர்டிஸ்தான் முகாம்களில் வாழும்  மக்களைப் பார்க்க வேண்டும். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட கடந்த டிசம்பர் மாதம் நான் அங்கு சென்றிருந்தேன். இவ்வுலகில் மிக அதிகமான அன்பும் கருணையும் உள்ளன. குறைந்த அளவே கொடுமை உள்ளது. கைவிடப்பட்ட உலகில் நீங்கள் இல்லை. நீங்கள் அதிக அன்பும், சார்புணர்வும் மிக்க உலகிலேயே வாழ்கிறீர்கள். சமுதாயத்தின் மக்களின் நல்லுணர்வின் மீது நம்பிக்கை வையுங்கள். என்னுடைய பார்வையில் பார்த்தால், எங்கும் நல்லனவற்றையே காண்பீர்கள்.

குருதேவ், அன்பு என்னும் கருத்தினை எவ்வாறு என்னுடைய இளம் குழந்தைகளுக்கு விவரிப்பது? கடவுளுடன் இணைத்துக் கூறுவது எனக்கு எளிதாக இருக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு அது சரிப்பட வில்லை.

உபநிஷதங்களில் ஒரு கதை உண்டு. எட்டு வயது சிறுவன் தன் தகப்பனிடம் " அப்பா, கடவுள் எப்படியிருப்பார்? " என்று கேட்டான். தந்தை, அந்தக் குழந்தையை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார். அங்கு அவனிடம், இந்த வீடு கட்டப்படுவதற்கு முன்னர் இங்கு என்ன இருந்தது?" என்று கேட்டார்.

குழந்தை"வெற்றிடம் "என்று கூறியது.
தந்தை,"இந்த வீடு இப்போது எங்கிருக்கிறது?"
குழந்தை," அந்த இடத்தில்"
தந்தை," இப்போது இந்த வீடு இல்லையெனில் என்ன இருக்கும்?"
குழந்தை," வெற்றிடம்"
தந்தை," அதுதான் கடவுள் "
சிறு குழந்தைகளால் அனைத்தும் ஒன்றாலேயே (வெற்றிடத்தைக் குறிப்பிட்டு)ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.எனவே உங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்தி, அவர்களை நம்ப வையுங்கள், அல்லது அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை நம்புங்கள்.

ஜீசஸ் ஞானம் அடைந்தவரென்றால், அவர் ஏன் கர்மா மறு பிறவி ஆகியவற்றை பற்றிப் பேசவில்லை?

அக்காலத்தில்,ஒளிப்பதிவு காமராக்கள், ஒலிப்பதிவு கருவி ஆகியவை இல்லை.அவர் கூறியவை அனைத்தும் அவர் மறைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னரே எழுதப்பட்டன (பைபிள்) தன்னைச் சுற்றியிருந்தவர்களுடன் அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இப்போது கூட சில காகிதச் சுருள்கள் வெவ்வேறானவற்றை கூறுகின்றன. ஜீசஸ் மறைந்து  எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் பைபிள் எழுதப்பட்டது. பின்னர் பல முறைகள் திரும்ப எழுதப்பட்டது.72 விதமான பைபிள் களும் 72 விதமான கிறிஸ்தவ சமயமும் இன்று உள்ளன. அவரவர் கூறுவதே சரி, மற்றவர் சரியன்று என்றே அனைத்துப் பிரிவுகளும் கூறுகின்றன. வைதீகமான கிறிஸ்தவர் கத்தோலிக்க தேவாலயத்திற்குச் செல்லமாட்டார். கத்தோலிக்கர் ப்ரோடேச்டான்ட் தேவாலயத்திற்கு செல்ல மாட்டார். அது போன்றே ப்ரோடேச்டான்ட் கிறிஸ்தவர் ‘மீண்டும் பிறந்தவர் சபை’க்குச் செல்ல மாட்டார். இவையனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.

அது போன்றே புத்த சமயமும் ஆகும். ஒரே புத்தர் ஆனால் 32 விதமான பிரிவுகள். அது போன்றே இஸ்லாம். ஒரே முகம்மது நபி, ஆனால் பல்வேறு விதமான பிரிவுகள். ஒருவரோடொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கின்றனர். குறுகிய மனப்போக்குடன் வேத நூல்களை பொருள் விளக்கம் செய்து சண்டையில் ஈடுபடாதீர்கள் என்றே கூறுகிறேன். மக்கள் சொர்க்கத்தின் சாவி தங்களிடமே உள்ளதாகவும், பிறர் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள் என்றும் எண்ணுகின்றனர். 

உண்மையில் அவர்களே பிறருக்கு நரக வேதனையை ஏற்படுத்துகின்றனர். அனேகமாக எல்லா சமயங்களுமே மத வெறி உள்ளது. புத்தர் அஹிம்சையை போதித்தார். ஆனால் இன்று என்ன நடக்கிறது பாருங்கள். அது போன்று உபநிஷதங்கள் பேரின்பத்தை போதித்தன. இன்று எத்தனை பிரிவுகள், என்று எண்ணவே முடியாது.பல முனிவர்கள், பல தத்துவங்கள், பல்வேறு பிரிவினைகள்.
நாம் அனைவரையும் மதிக்க வேண்டும். உலகை பூங்கொத்தாக காண வேண்டும். வேற்றுமைகளை கொண்டாட வேண்டும். மத வெறி கூடாது. ஒரு பாதையைப் பின்பற்றுங்கள், ஆனால் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்று தாறுமாறாக எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அது சரியல்ல. ஒரு பாதையையிலேயே செல்லுங்கள். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள்.

ஏன் கடவுள் எனக்கெதிரே தோன்றக் கூடாது?

கண் விழித்துப் பாருங்கள். கடவுள் எங்கும் இருக்கிறார். அனைத்து உருவங்களிலும் இருக்கிறார்: பறவைகள், பூக்கள், மற்றும் மனிதர்கள் எங்கிலும் உள்ளார். எந்த உருவத்தில் அவர் வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அனைத்து உருவங்களிலும் காணுங்கள். உருவங்களுமே கடவுள் என்று நீங்கள் அழைக்கும் உருவமில்லாதது தான்.

அன்புள்ள குருதேவ், திருமண முறிவு வேதனையை, இனிமேல் என் மகளைக் காணும் சாத்தியம் இல்லை என்னும் துக்கத்தை எவ்வாறு கடப்பது?

தியானம் உங்களுக்குத் தேவையான வலிமையைத் தரும். இனி நடப்பது அனைத்துமே நல்லவை என்னும் நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். சுதர்சனக் க்ரியா பெரிதும் உங்களுக்கு உதவும்.

ஆன்மீகப் பயணத்தில் மைல்கற்கள் எவை? அவை அனைவருக்கும் பொதுவானவையா?

ஆன்மீகப் பயணத்தில் 'அனைவரும்' என்பதே கிடையாது. நீங்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். உங்களுடைய மைல் கற்களைப் பற்றி மட்டும் காணுங்கள். முன்னை விட நம்பிக்கை மற்றும் சாந்தமாக இருக்கிறீர்களா? நம்பிக்கையுடன் இருந்தால், உங்களுக்குக் கோபம் வராது. கோபம் என்பது பலவீனத்தின் அறிகுறி. நிலைமை உங்களை வேட்டையாடி உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் நிலையிலேயே கோபம் வருகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்களால் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைக் கவனித்து, விழித்துணர முடியும். கோபம் வராது. அப்படி ஏற்பட்டாலும் பரவாயில்லை, அது வந்து போய்விடுகிறது என்பதை விழித்து உணருங்கள். உங்களை ஒரு நாளும் மதிப்பீடு செய்து கொள்ளாதீர்கள்.அதை என்னிடம் விட்டு விடுங்கள், அல்லது உங்கள் குடும்பத்தினர் செய்வர்!