வாழ்க்கை ஒரு நிகழ்வு

திங்கள்கிழமை 24 மார்ச், 2015     

பாத் ஆன்டாகாஸ்ட், ஜெர்மனி

ஞானத்தில் குறைந்தவர்கள் மற்றவர்களின் தவறை பெரிதாகவும், தங்கள் தவறை சிறியதாகவும் பார்க்கிறார்கள்.ஞானம் மிகுந்தவர்கள் தங்கள் தவறை பெரியதாகவும், மற்றவர்களின் தவறை சிறியதாகவும் பார்க்கிறார்கள். ஞானிகள் தங்களுடையதாகவோ, மற்றவர்களுடையதாகவோ பார்ப்பதில்லை. தவறுகளை ஒரு நிகழ்வு போல பார்க்கிறார்கள். அதை யாரும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாதென்று அவர்கள் அறிவார்கள்.

இவை மூன்று நிலைகள். அவ்வளவு தான்.

குறைந்த ஞானம் – என் தவறு ஒன்றுமில்லை. மற்றவர் தவறு பெரியது.
ஞானம் பெற்றவர் – என் தவறு பெரியது. மற்றவர் தவறு சிறியது.
ஞானி – தவறு என்னுடையதுமல்ல. மற்றவரதுமல்ல. தவறு என்பது ஒரு நிகழ்வு மட்டுமே.

கேள்வி - பதில்கள்

குருதேவா, என்னை எப்போதும் பார்த்துக் கொள்வதற்காக, எனக்கு அறிவுரை சொல்வதற்காக, நல்வழி காட்டுவதற்காக, எனக்கு உதவி செய்வதற்காக நன்றி. நான் நிறைய நன்மைகளை அடைந்திருக்கிறேன். நான் உங்களுக்கு ஏதாவது செய்யமுடியுமா?

னைவரும் மக்களிடையே ஆனந்த கணக்கெடுப்பு (ஹாப்பினெஸ் சர்வே) எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். வீடு வீடாகச் சென்று மக்களிடம், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் காரணம் என்ன? என்று கேட்டறிய வேண்டும்.

ஆனந்தக் கணக்கெடுப்புக்கான படிவத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு மூன்று பேராக சேர்ந்து அருகாமையில் வசிக்கும் மக்களிடம் வீடு வீடாகச் சென்று, வாழும் கலையிலிருந்து ஒரு சிறு கணக்கெடுப்பு செய்ய வந்திருக்கிறோம். நீங்கள் தற்போது ஆனந்தமாக இருக்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அப்படி இல்லாமலிருந்தால், உங்களுடைய மகிழ்ச்சியின்மைக்கான காரணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.” என்று சொல்லி படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அவர்கள் ஆனந்தமாக இருப்பதாகச் சொன்னால்,“எல்லா நேரத்திலும் ஆனந்தமாக இருக்கிறார்களா ? அல்லது எத்தனை நேரம் (உதாரணமாக 70% அல்லது 80% ) மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். இதே போன்ற ஏழெட்டுக் கேள்விகளுக்கு விடையைக் கேட்டு படிவத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். 

ஆனந்தக் கணக்கெடுப்பை இரண்டு மாதங்களாக நடத்தி வரும்போது, விசேஷ அனுபவங்களை கேட்டறிய முடிந்தது. கணக்கெடுப்பவருக்கு அருமையான அனுபவமாக இருந்தது. அவருக்குப் பேட்டியளித்தவர்களும் நல்லுணர்ச்சியை அனுபவித்தார்கள். இக்கணக்கெடுப்பின் மூலம், நாம் அவர்கள் மேல் அக்கரை காட்டுவதாக உணர்ந்து சந்தோஷமடைந்தார்கள். “முதல் தடவையாக யாரோ வந்து, நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறீர்கள். என் மகிழ்ச்சி குறைவுக்குக் காரணமென்ன என்று என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.

60 வயதுக்கும் மேல் உள்ள ஒரு அம்மையார் சொன்னார்.என் வாழ்நாளில் இத்தனை ஆண்டுகளாக யாருமே என் மகிழ்ச்சியின்மைக்கு காரணமென்ன என்று கேட்டதில்லை. இப்போது நம் மேல் அக்கரை கொண்ட பலர் உலகில் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. நீங்களெல்லாம் தியானம் செய்பவர்கள். நீங்கள் யோகா, மூச்சுப்பயிற்சிகள், தியானம் செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது. உங்களுக்குள் ஒரு ஆக்கபூர்வமான சத்தியுள்ளது. எனவே நீங்கள் சென்று மக்களுடன் பேசும் போது, அவர்களுக்கும் அந்த சக்தி பரிமாற்றம் ஏற்பட்டதாக உணர்வார்கள். நாம் ஆனந்தத்தை பல வழிகளில் பரவச் செய்கிறோம். மேலும் மக்களில் பலர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியளிக்க முடியும் என்றும் தெரிந்து கொண்டோம்.

கணக்கெடுப்பின் முடிவில், நம் வாழும்கலை ஆனந்த அனுபவ பயிற்சியை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தைக் கொடுத்து அடுத்த பயிற்சிக்காக பதிவு  செய்யச் சொல்லலாம். இவ்வுலகில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு நன்மை செய்ய ஆனந்தக் கணக்கெடுப்பு ஒரு நல்ல வழியாகும். சிலர் உங்களைப் பார்த்து பேச விரும்பாமல் கதவை அடித்துச் சாத்தக்கூடும். அதைப் பற்றி கவலை வேண்டாம். புன்னகையோடு அடுத்த வீட்டுக்குச் செல்லுங்கள். இது நமக்கு, நம் அகம்பாவத்தை ஒழிக்கும் செயல் முறையாக உதவும்.

பார்! யாருக்கோ உன்னைப் பிடிக்காமல் இருந்தாலும், அது உன்னைத் துன்புறுத்துவதில்லை. அது உனக்கு ஒரு பெரிய விஷயமல்ல. மகிழ்ச்சியான முகத்துடன் அங்கிருந்து செல். அடுத்தவரைப் பார்க்கலாம். பத்து பேரைச் சந்திக்கும் போது, ஓரிருவர் உங்கள் முகத்தில் கதவை அடித்துச் சாத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், உங்களோடு பேசி கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் உங்களை நன்றியோடு நினைவு கூர்வார்கள். அக்கரையோடு அவர்களோடு நீங்கள் பேசியதை விரும்புவார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எத்தனை பேருக்கு இக்கருத்து பிடித்திருக்கிறது?

இந்த பயிற்சி வகுப்பு முடிந்து நாம் திரும்பி போவதற்குள், ஆனந்தக் கணக்கெடுப்பு படிவங்களை (எல்லா மொழிகளிலும் உள்ளன) உங்களுக்குத் தர ஏற்பாடு செய்வோம். நீங்கள் உங்கள் ஊருக்குச் சென்று, மக்களிடையே இந்தக் கணக்கெடுப்பை செய்து எனக்கு பூர்த்தி செய்த படிவங்களை அனுப்பி வையுங்கள். முடிவுகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை பேர் ஆனந்தமாக இருக்கிறார்கள். ஆனந்தமில்லாமல் இருப்பவர்களின் காரணங்களையும் வயது வாரியாக பிரித்து க்ராஃப் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி வெளியிடலாம். இது ஒரு நல்ல யோசனை.

குருதேவா! நம் வருங்கால கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேச முடியுமா? நம் கல்வித் திட்டம் மிகவும் பழையதாகி விட்டது. உலகில் மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கேற்ப, நம் நாட்டை முன்னேற்ற இப்போதைய கல்வித் திட்டம் உபயோகமில்லாதது போலிருக்கிறது. இக்கல்வித் திட்டத்தால் உலக அமைதியைக் காக்கவும் இயலாது என்று எண்ணுகிறேன். இதில் மாற்றம் ஏற்படுமா? எப்படி ?

ஆம்! சொல்வது முற்றிலும் சரி. மாறவேண்டும். நீங்களும் நானும் தான் அதை மாற்றியமைக்க வேண்டும். நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில், நம் வாழும் கலையமைப்பு நடத்தி வரும் பள்ளிகளின் பாட திட்டத்தில் வளர்ச்சிகள் செய்து வருகிறோம். 70 – 80 பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் கட்டணம் வசூலிக்கிறோம். 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. (ஒரு நாளுக்கு ஒரு டாலர் / ஒரு நாளுக்கு ஒரு யூரோ திட்டங்கள் மூலம் 40000 க்கும் அதிகமான குழந்தைகள் இலவசக் கல்வி பெறுகிறார்கள்.) அக் குழந்தைகளின் நன் மாற்றங்களைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சி பொங்குகிறது.

இப்பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றங்கள் செய்திருக்கிறோம். மாணவர் நிறைய புத்தகங்களை சுமந்து வரவேண்டிய அவசியமில்லை. மாணவ மாணவியரை படைப்பாற்றலில் சிறந்தவர்களாக்குகிறோம். அவர்களுடைய பாடங்களை நன்கு புரிந்து கொள்ள வைக்கிறோம். ஆம். ஐரோப்பாவிலும் இது போன்ற பள்ளிகளைத் துவக்க வேண்டும். என்ன செய்ய முடியுமென்று பார்க்கலாம்.

குருதேவா! இந்த உலகம் ஏன் படைக்கப்பட்ட்து ?

நீ இந்தக் கேள்வியை கேட்பதற்காக இவ்வுலகம் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலகம் படைக்கப் பட்டிராவிட்டால், இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கமுடியும்? நாம் இவ்வுலகம் ஒரு மாயை 
(கானல் நீர் போன்ற தோற்றம்) என்று நினைக்கிறோம் அல்லவா? எப்போது அது உருவாயிற்று?
கானல் நீர் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? வெய்யில் காலத்தில் அதிக உஷ்ணமான தினத்தில் பாலைவனத்தில் செல்லும்போது, தூரத்தில் நீர் தேங்கியிருப்பது போன்ற தோற்றத்தை பார்க்கிறோம். ஆனால் அது நீர் அல்ல. அது தான் கானல் நீர் எனப்படுகிறது.
யாராவது, அந்த நீர் எப்போது உருவாக்கப்பட்டது? என்று கேட்டால் “ அது எப்போதுமே உருவாக்கப் படவில்லை. அது ஒரு தோற்றம் மட்டுமே “ என்று விடை சொல்லலாம்.

அதே போல இவ்வுலகம் எப்போதுமே படைக்கப்படவில்லை. அது ஒரு தோற்றம் மட்டுமே. இது ஒரு உயர்ந்த ஞானம். இந்த ஞானம் யோக வசிஷ்டாவிலிருந்து வந்தது. இது உனக்குப் புரியா விட்டால், கவலைப்படாதே. இதைப் பற்றி சில காலம் சென்ற பின்பு பேசலாம். உண்மை என்னவென்றால் இவ்வுலகம் எப்போதுமே படைக்கப்படவில்லை. இது ஒரு  தோற்றம் மட்டுமே.
இதற்கு மேல் நான் உங்களுக்கு சொல்ல முடியாது. இது மிகவும் பாதுகாக்கப்படும் இரகசியமாகும்.

பார்வையாளர்களில் ஒருவர்; என் வாழ்வில் கிடைத்த எல்லாவற்றிற்காகவும், என் பெற்றோர்கள், எனக்குக் கிடைத்த கல்வி, வேலை, நான் என் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் என்னிடம் அன்போடு, பரிவோடு இருப்பதால், மிகவும் நன்றியோடிருக்கிறேன்.

மிகவும் நல்லது. வாழ்க்கையை துவங்குவதற்கு இது ஒரு நல்ல வழி. ஒரு தாமரைப் பூ போல மலர்வதற்கான வழி நன்றியோடு வாழ்வது தான். உனக்குக் கிடைத்த அனைத்திற்காகவும் நன்றியோடு இரு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு நன்றியோடிருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை நடத்துவது எளிதாக இருக்கும்.அதிகமாக முனகுவதால் (குறை சொல்வதால்) வாழ்க்கை நடத்துவது ஒரு கல் போல் கடினமாக இருக்கும்.

குருதேவா! இந்த அழகான ஞானத்தை நாம் எப்படி உலக மக்களிடையே பரப்ப முடியும்? பயிற்சி எடுத்த பின்பும், பயிற்சியைத் தொடராத மக்களை எப்படி பயிற்சியைத் தொடரச் செய்யலாம்?

ஆனந்தக் கணக்கெடுப்பு ஒருவழி. மற்றொன்று (ஐரோப்பிய நகரங்களில்) வாழும் கலை மையங்களை ஏற்படுத்துவது. ஒரு குறிப்பிட்ட இட்த்துக்கு வாரத்தில் ஒருநாள் வர ஏற்பாடு செய்தால் மக்கள் இப்பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள். பாரீஸ் நகரத்தில் பல ஆண்டுகளாக இப்பிரச்சினை இருந்தது. இப்போது பாரீஸ் நகரில் உள்ள வாழும் கலை மையத்துக்கு பல மக்கள் வருவதாகச் சொன்னார்கள். அப்படி ஒரு குறிப்பிட்ட மையத்தை அமைத்தால், தேவையான மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

மேலும் ஆசிரியர் அந்த மையத்தின் செயல்பாடுகளை ருசிகரமாக்க வேண்டும். சுதர்சன கிரியா முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல், மக்களை ஒன்று சேர்த்து சேவைத் திட்டங்களில் பங்கு பெறச் செய்ய வேண்டும். பிக்னிக் செல்லலாம். உறுப்பினர்களின் பிறந்த நாளைக் கொண்டாடலாம். பழைய மாணவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் கிரியா செய்கிறார்களா? சத்சங்கத்தில் பங்கு பெறுகிறார்களா? என்று, விசாரிக்க வேண்டும். அவர்களை அழைத்து, அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடலாம். இப்படிச் செய்யும் போது நான் வரமாட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அல்லது அவர்களைத் தொடர்பு கொண்டு, “உங்கள் வீட்டுக்கு பிறந்த நாள் கேக் கொண்டு வருகிறோம். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, கொண்டாட விரும்புகிறோம்“ என்று சொல்லுங்கள். இப்படிச் செய்தால், நாம் அவர்களை திரும்ப தொடர் வகுப்புக்கு (சுதர்சன கிரியா செய்ய) வரும்படிச் செய்ய முடியும். மற்ற உறுப்பினர்களும் தாங்களே முன் வந்து உங்களோடு சேர்ந்து மற்றவர்களை அழைத்து வர விரும்புவார்கள். இந்த வழியையும் பின் பற்றலாமென்று நினைக்கிறேன்.

நம் அகம்பாவம், நாம் வெற்றியடைய உதவுமா ?

ஆம். ஆரம்ப காலத்தில். பின்பு அதுவே ஒரு தூக்குக் கயிறு போல் உன் கழுத்தை சுற்றி இறுக்கும். ஆரம்ப காலத்தில் எதையாவது அடைய சிறிது அகம்பாவம் இருக்கலாம். சரியான சமயத்தில் அதை விட்டு எப்படி விலக முடியுமென்று நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் ஏன் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள்?

அது அவர்களுடைய இயல்பான பண்பாகும். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதாரம் சீரழிந்து போன இருண்ட காலத்தில் கூட அலங்காரப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நிறைய உற்பத்தி நடக்கும். மற்ற தொழில்கள் நன்றாக நடக்காத போது கூட அலங்காரப் பொருள்களுக்கான தொழில்கள் தடை படுவதில்லை. நலிந்த பொருளாதாரத்தை இது ஈடுகட்டும்.