இறைவா! நீ எங்கே இருக்கிறாய்?

வெள்ளி, 03/06/2015   

பெங்களூரு, இந்தியா


வண்ணங்களின் திருவிழா ஹோலி. அனைத்து வித வகுப்பு, ஜாதி, வயது, தலை முறை சேர்ந்த மக்களை நூற்றாண்டுகளாக ஒன்றிணைப்பது இந்தத் திருவிழா. மனித குலத்தின் ஒற்றுமையை அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள், அதுவே இந்தத் திருவிழாவின் செய்தி. ஏழை, பணக்காரர், புத்திசாலி, அவ்வளவாக புத்தி இல்லாதவர்கள் என்ற பலவித பின்னணி கொண்ட குழந்தைகளை ஒன்றாக ஒரு அறையில் கூட்டிவைத்தால், அவர்கள் எப்படி விளையாடுவார்கள் தெரியுமா? அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் பார்க்க மாட்டார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள்.

பல்வேறு பின்னணி கொண்டவர்களை, தொழில் செய்பவர்களை ஒன்றிணைப்பதுதான் இந்த ஹோலித் திருவிழா. செய்யும் தொழில், அவர்கள் ஆணா அல்லது பெண்ணா, அவர்களின் வயது போன்ற பல காரணங்களை வைத்து இந்தச் சமூகம் மக்களை பிரிக்கிறது. வர்த்தகர்களின் சங்கக் கூட்டம் என்றால் வர்த்தகர்கள் மட்டும் செல்கிறார்கள். அரிமா சங்கக் கூட்டத்திற்கு அரிமா உறுப்பினர்கள் மட்டும்தான் செல்கிறார்கள், ரோட்டரி சங்க உறுபினர்கள் செல்லமாட்டார்கள். இப்படியாக சமூகத்தில் பல பிரிவுகளுள்ளன. ஹோலியின் போது, ஆண், பெண், நாடு, இனம், மதம் என எல்லாப் பிரிவினைகளும் தகர்கிறது; முதியவரிலிருந்து இளைஞர் வரை, எல்லோரையும் தழுவிக்கொண்டு அவர்கள் மீது வண்ணம் பூசுகிறீர்கள். எல்லோரையும் ஒன்றாக்கும் திருவிழா.

கேள்வி பதில்கள்

குருதேவ், ஒவ்வொன்றுக்கும் பகுத்துப் பார்த்து காரண காரியம் பார்ப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத்தாருங்கள்.

பகுத்துப் பார்ப்பதில் என்ன தவறு? நல்லதே. தவறாக காரண காரியம் பார்ப்பது பிரச்சினை. உதாரணமாக, ஒரு கதவு பாதி திறந்திருந்தால் பாதி மூடியிருக்கிறது என்று பொருள், அதனால் முழுதும் திறந்திருந்தால் முழுதும் மூடியிருக்கிறது என்று பொருள் கொள்வது தவறான பகுத்தாய்வு. உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது, வாழ்கையின் இந்தத் தத்துவத்தைத் தான் பல நூற்றாண்டுகளாக இந்தியா வழங்கி வருகிறது. இது ஒரு தொன்மையான மரபான ஞானம்.

இறைவன் எங்கோ சொர்கத்தில் இல்லை, படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கிறார், அதுதான் இங்குள்ள தத்துவம். ஆடலையும் ஆடுபவரையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ அப்படியே படைப்பையும் படைத்தவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மரங்களில், ஆறுகளில், மலைகளில், எல்லாவற்றிலும் படைத்தவர் இருக்கிறார். தொன்மையான நாகரீகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் கருத்து ஏதோ ஒரு விதத்தில் இருந்தது. கனடாவின் பழங்குடியினர், அமெரிக்காவின் பழங்குடியினர், மற்றும் நியூஜிலாந்தின் மாவோரி பழங்குடியினர் போன்ற பல பழங்குடியினரிடம் படைப்பு புனிதமானது என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆப்பிரிக்கர்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். மலைகளையும் ஆறுகளையும் புனிதமாகக் கருதுகிறார்கள். அதாவது, படைப்பின் மீதுள்ள மரியாதையால் அவர்கள் படைப்பை அழிப்பதில்லை. இயற்கையை ஆபத்துக்குள்ளாக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. மனிதகுலம் அப்படிப்பட்ட தொய்மையற்ற வளர்ச்சிக்குத் திரும்பவேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது, நாம் இருக்கும் இந்த அழகான பூமியை எவ்வகையிலும் சேதமாக்காத வளர்ச்சி. நீங்கள் அப்படி நினைக்கவில்லை? நாம் அனைவரும் படைப்பை, இயற்கையை மதிக்க வேண்டும்.

தியானத்தில் இருக்கும்போது என் மூச்சின் தாளத்தையும், உடம்பில் ஏற்படும் உணர்சிகளையும், அது எப்படி எண்ணங்களோடும் உணர்வுகளோடும் தொடர்பாயிருக்கிறது என்பதையும் என்னால் அறிய முடிகிறது. ஆனாலும், விழித்தபின் அந்த அறியும் திறன் குறைகிறது. உணர்வுபூர்வமான அனுபவத்தில் தொலைந்துபோகிறேன். எப்படி நிகழ் கணத்தில் அதிகம் இருப்பது?

உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாது. உணர்வுகளின் மூலத்தை நோக்க வேண்டும். ஒரு உணர்வை நெறிபடுத்த அதன் மூலத்தை நாம் கையாள வேண்டும்.இன்று அடைந்த சாந்தத்தை எப்போதும் தக்கவைக்க முயலவேண்டும் என்பதல்ல. அப்படி செய்யக்கூடாது. போக விடுங்கள். அமைதி நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நம் விழைவே மன அழுத்தத்தை உண்டு செய்யும். இயல்பாக தன்னிலையில் இருங்கள்.  நீங்கள் தியானம் பயில ஆரம்பித்தபின், சில நேரங்களில் நீங்கள் உடனடி எதிர்வினையாற்றி இருக்கலாம், ஆனால் அவை வெகு குறைவே என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சில கணங்கள் வந்து பின்னர் மறைந்துவிடும். வெகு எளிதாக உங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். இதை கவனித்திருக்கிறீர்களா?

குருதேவ், வேதங்களைப் பற்றியும் அவை படைப்புகளுக்கு அளிக்கும் பண்புகளைப் பற்றியும் பேச முடியுமா?

வேதத்தைப் பற்றிய கதை சுவாரசியமானது, அது புராணக்கதை. முன்பு ஒரு காலத்தில், ஒரு ரிஷி கடுந்தவம் புரிந்ததனால், பிரம்மதேவர் அவர் முன் தோன்றி, ‘அருமையானவரே, உமக்கு என்ன வேண்டும்?’ என்றார். அதற்கு அந்த ரிஷி கூறினார், ‘எனக்கு ஞானம் அளியுங்கள்.’ எனவே பிரம்ம தேவர் ஒரு பெரிய மலையைக் காட்டி, ‘இதுதான் ஞானம். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துகொள்.’ என்றார். அந்த ரிஷி அந்த மலையருகில் சென்றார், ஆனால் அவரால் நான்கு கைப்பிடிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த நான்கு கைப்பிடி அளவு மலையே வேதம் என்று கூறுகிறார்கள். எனவே வேதங்கள் என்பது முடிவிலி. அனந்தவை வேதம் எனப்படுகிறது. (ஞானம் என்பது முடிவிலி). எனவே ரிஷி வேத வியாசர் சில கைப்பிடி அளவு ஞானத்தை எடுத்து அதை நான்காக வகைபடுத்தித் தொகுத்தார்:
1.        ரிக் வேதம்: தூய ஞானம்
2.        யஜூர் வேதம்: செயலாக்க ஞானம், அதாவது ஞானத்தை செயல்படுத்துவது. (சடங்குகள்)
3.        சாம வேதம்: அன்பு, பக்தி, இசை மற்றும் பாடல் ஆகியவை
4.        அதர்வ வேதம்: பொருட்களைப் பற்றிய ஞானம். அதாவது ஆயுர்வேதம், வானவியல், போன்ற அறிவு. 
முதலாவது தூய ஆன்மீக ஞானம், இரண்டாவது செயலாக்க ஞானம், மூன்றாவது இசையும் அன்பும் மற்றும் நான்காவது பொருட்கள் பற்றிய விஞ்ஞானம்.

குருதேவ், வாழும் கலை பயிற்சியானது ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சியும் கூட என்று சொல்லப்படுகிறது. ஆனால் மனித வாழ்வின் உண்மையான நோக்கம் ஆளுமை மற்றும் தனித்துவத்தைத் தாண்டியது அல்லவா?

உங்களுக்கு இரண்டுமே தேவை. உங்கள் ஆளுமையைவிட வாழ்கை மிகப் பெரியது என்ற பின்னணி உங்களுக்குத் தெரிய வேண்டும். அதே நேரத்தில், வாழ்க்கையைப் பற்றிய உங்களது இந்த அறிதல், உங்கள் ஆளுமையை கவனிக்கத் தக்கதாகவும் தனித்தன்மை உடையதாகவும் ஆக்கிவிடுகிறது. இந்த உலகில், ஒவ்வொரும் தனித்தன்மை உடையவர்களே, நாம் அனைவரும் தனித்தன்மை உடையவர்கள். நம்முள் இருக்கும் இந்தத் தனித்தன்மை வெளிப்பட வேண்டும், அவ்வளவே. ஆளுமையை வளர்ப்பது, வாழ்கை தன்னைவிட விஞ்சியது என்று உணரத் தடையாக இருப்பதில்லை.

குருதேவ், சாத்வீக மற்றும் ஆயுர்வேத உணவை உட்கொள்வதின் முக்கியத்துவம் என்ன? பொதுவாக எனக்கு சாத்வீக உணவை விட இராஜச உணவு பிடிக்கிறது.

இராஜச உணவினால் உங்கள் மன நிலையும் இராஜசத்திலேயே இருக்கும். இராஜச மன நிலை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு ‘யோ – யோ’ மன நிலை. துள்ளிக் குதிப்பதோ அல்லது கீழே இறங்கிவிடுவதோ. அதீத மகிழ்ச்சி அல்லது அதீத மன வருத்தம், இதுவே இராஜச உணவின் விளைவு. எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம், பிரச்சினையில்லை.
எல்லோரும் எப்போதும் தட்டையாக சமானமாக இருந்தால், அதில் சுவாரசியமில்லை, எதுவுமே நடக்காது. அவ்வப்போது சிறிது இராஜசமும் தேவை. அது வாழ்வை வண்ணமயமாக்கும். ஆனால், உங்களால் சமாளிக்க முடியாதபோது சாத்வீக உணவிற்குத் திரும்பிவிடுங்கள்.

கலிபோர்னியா சிறையில் செய்த ஒரு ஆராய்ச்சியைப் பற்றி சமீபத்தில் படித்தேன். இரண்டு மாதங்களுக்கு கைதிகளுக்கு வீகன் உணவு, அதாவது இறைச்சியும் பால் பொருட்களும் இல்லாத உணவை மட்டுமே அளித்தார்கள். விலங்கு இறைச்சியோ அல்லது விலங்குகள் தரும் பால் போன்றவையோ இல்லாத உணவு. அப்படிப்பட்ட முழுமையான வீகன் உணவை மட்டுமே இரண்டு மாதங்களுக்கு சற்று மேல் கொடுத்து வந்தார்கள். பிறகு, கைதிகளிடையே எப்போதும் நடக்கும் குற்றங்கள் 97% குறைந்ததை கவனித்திருக்கிறார்கள். குற்ற மன நிலை வெகுவாக குறைந்து விட்டதாம். மிக சுவாரசியமான ஆராய்ச்சி.

இந்தியா அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகையும் ஆனால் மூன்றில் ஓரு பங்கு மட்டுமே பரப்பளவு கொண்டது. இந்தியாவில் மட்டும் சாத்வீக மன நிலை இல்லையென்றால், இந்தியா தான் குற்றங்களின் சிகரமாக இருந்திருக்கும். நம் தொன்மையான காலாசாரம் நம் மக்களின் மனதை சாத்வீகத்தில் நிலைப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு பழமொழி உள்ளது, ‘ஜய்சா அன் வைசா மன்’. அதாவது உணவு எப்படியோ அப்படியே மனமும். அதனால் தான் நான் சாத்வீக உணவை ஆதரிக்கிறேன். இந்த அறிவு நம்மிடம் தொன்றுதொட்டு உண்டு. இப்போது சற்று குறைந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு நம் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது. ஆனாலும் ஏதோ ஒன்று நம் நாட்டில் ஒற்றுமையை கட்டிக் காத்து வருகிறது. இதற்குக் காரணம் நம் வாழ்கை முறை தான்.

குருதேவ், நமக்கு நெருங்கியவர்களிடம் ‘நான் உங்களைச் சேர்ந்தவர்’ என்று சொல்வது கடினமாக உள்ளது. ஆனால் முன் பின் அறியாதவர்களிடம் அப்படிச் சொல்வது எளிதாக இருக்கிறது. இது ஏன்?

உங்களுக்கு நெருங்கியவர்கள் எப்படியும் உங்களை சேர்ந்தவர்கள் தான். அவர்களிடம் நீங்கள் ஏன் ‘நான் உங்களைச் சேர்ந்தவர்’ என்று சொல்ல வேண்டும்? பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணுவார்கள். காலையில் எழுந்து உங்கள் அம்மாவிடம் சென்று, ‘அம்மா, நான் உங்களைச் சேர்ந்தவன்.’ என்று சொல்ல முடியாது. ‘என் குழந்தைக்கு என்ன ஆனது?’ என்று யோசிப்பார்கள். ‘குச் மான் கே சலோ, குச் ஜான் கே சலோ, சப்கோ கலே லகதே சலோ.’ என்று அதனால் தான் சொல்கிறார்கள்.

உலகில் உள்ள எல்லாவற்றை பற்றியும் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது. இது முடியவே முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தைப் பற்றியும் ஒருவரால் அறிந்துகொள்ள முடியாது. எல்லாவற்றையும் நம்பிக்கை மட்டுமே கொண்டு விட்டுவிடவும் முடியாது, அது இயலாது. அறிவாளியான ஒருவரால் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை மட்டுமே வைத்து அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது, சிலவற்றை அவை என்ன அராய்ந்து அறிந்துகொள்வார். ஆனால் சிலவற்றை நம்பிக்கையை மட்டுமே கொண்டு ஏற்றுக்கொண்டாக வேண்டும். ‘இது விஷம், இதைச் சாப்பிடாதே, சாப்பிட்டால் இறந்து விடுவாய்’ என்று யாராவது கூறினால், ‘இல்லை, நான் சாப்பிட்டுப் பார்த்துதான் அறிவேன்.’ என்று நீங்கள் பதில் கூறினால், பின்னர் அந்த அனுபவத்தைக் கூற நீங்களே இருக்க மாட்டீர்கள். அந்த சூழ்நிலைகளிலாவது நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். சமுதாயத்தில் பல வித மனிதர்கள் இருக்கிறார்கள் பல வித கொள்கைகள் உள்ளன. முழு பிரபஞ்சமும் பலப்பல வித்தியாசங்கள் அடங்கியது தான். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொண்டு சென்றாக வேண்டும்.