பயனுள்ள தலைவனாக விளங்க - குறிப்புகள்

 வியாழக்கிழமை 19-03-2015                        

டோக்யோ, ஜப்பான்


தினமும் தியானம் செய்

ஒன்றுமே செய்யாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் சற்று நேரத்தை ஒதுக்கி வை. அப்படிச் செய்தால் அது உனக்கு நிறைய சக்தியைக் கொடுத்து உன் ஆத்மாவை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். இன்றைய சூழ்நிலைக்கு அது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். நம் மூளை பல விஷயங்களால் தாக்கப்படுகிறது. சக்தியை இழக்கிறது. அதை அவ்வப்போது சக்தியால் நிரப்புவது அவசியம். சரியா? எனவே சில நிமிடங்கள் உணர்வோடு ஓய்வெடுப்பது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இரண்டு வகையான ஓய்வு உள்ளன.

ஒன்று உணர்வில்லாமல் ஓய்வெடுப்பது. இது  கண்டிப்பாகத் தேவை. ஒவ்வொரு இரவிலும் நாம் இப்படி ஓய்வெடுக்கிறோம்.(தூக்கம்). சில சமயம் பகலிலும் தூங்குகிறோம். தூக்கத்திலிருந்து வேறுபட்ட ஓய்வு ஒன்று இருக்கிறது. நாம் உணர்வோடு இருக்கும்போதே ஓய்வெடுக்க முடியும். அது தான் தியானம்.சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒருவர் இரண்டு மாதங்கள் (எட்டு வாரங்கள்) தியானம் செய்தால், அவருடைய மூளையின் அமைப்பு மாற்றமடைகிறது. மூளையில் சாம்பல் நிற செல்கள் அதிகரிக்கின்றன.

எனவே தியானம் செய்வதால் பல பலன்கள் உள்ளன.
·         எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கும்.
·         ஆழ்ந்த ஓய்வு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்கலாம்.
·         மன அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க உதவுகிறது.
·         மக்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
·         நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

பல சமயங்களில் நம் மனம் தீர்ப்பு சொல்வதைப் பார். மூச்சுப் பயிற்சி மற்றும் தியானத்தினால் மனதில் இருக்கும் பாரபட்சம் நீங்கும்.  ஊக்குவித்தால் மட்டும் போதாது. முன்னுதாரணமாக இருந்து உற்சாகப்படுத்து.தெரியுமா? உலக வங்கியின் தலைவர் ஒரு முறை என்னிடம் கேட்டார். குருதேவா! “நாங்கள் பல வகையான திட்டங்களை அமல்படுத்துகிறோம்.பல திட்டங்கள் வெற்றியடைவதில்லை. ஆனால் உங்களுடைய திட்டங்கள் மட்டும் எப்போதும் வெற்றியடைகின்றன. ரகசியம் என்ன? என்று கேட்டார்.

நான் சொன்னேன். ‘அதன் ரகசியம் இதுதான். நான் திட்டங்களை மேலாண்மை செய்வதில்லை. என்ன நடந்தாலும் அதை அப்படியே நடக்க விடுகிறேன். இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று மற்றவரை ஊக்குவித்தல்.மற்றொன்று முன்னுதாரணமாக இருந்து ஊக்குவிப்பது. பொதுவாக பெரிய நிறுவனங்களில்,சம்பள உயர்வு,போனஸ், சலுகைகளை கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். மக்கள் சில காலம் அச்சலுகைகளுக்காக உழைப்பார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்காது. ஒரு கால வரையரைக்குட்பட்டது. அதற்கு  ஒரு முடிவுண்டு. சில காலத்துக்குப்  பின் மீண்டும் அச்சலுகைகளை அளிக்க வேண்டியிருக்கும்.ஆனால் முன்னுதாரணமாக இருந்து மக்களை உற்சாகப்படுத்தி வேலை செய்யச் சொல்லும் போது, அவர்கள் செய்யும் காரியங்களிலேயே மகிழ்ச்சியடைவார்கள்.இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். உற்சாகம் குன்றாமல் உழைப்பார்கள்.

மக்களை உற்சாகப்படுத்த மகாத்மா காந்தி என்ன செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா?  என் ஆசிரியர் மகாத்மா காந்தியுடன் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். எங்களுடைய குழந்தைப் பருவத்தில், அவர் எங்களுக்கு மகாத்மாவை பற்றிய கதைகளை கூறுவது வழக்கமாக இருந்தது. அக்கதைகளை கேட்டாலே நாம் ஊக்குவிக்கப்படுவோம். நம் உத்வேகம் அதிகரிக்கும். சம்பவத்தை சொல்வேன். நீங்கள் கேட்கத் தயாரா?

நேரத்தை விரயம் செய்யாமலிருப்பது.

ஒரு முறை மகாத்மா காந்தி டார்ஜிலிங் மலைப்பாதையில் ரயில் பயணத்தில்  இருந்தார். டார்ஜிலிங் இந்தியாவிலிருக்கும் ஒரு மலை வாசஸ்தலம்.ஒரு குறுகிய ரயில் பாதையில் செல்லும் சிறிய ரயில்வண்டி உள்ளது. மலை ஏறி செல்லும்போது ரயில் இஞ்சினுக்கும் , பெட்டிகளுக்குமிடையே  இருந்த  இரும்பு வளையம் உடைந்து ரயில் பெட்டிகள் கீழ்நோக்கி பின்புறமாக ஓட ஆரம்பித்தன. ரயில் பெட்டிகள் கட்டுக்கடங்காமல் மலையின் கீழ்நோக்கி ஓடினால் என்ன ஆகுமென்று கற்பனையில் பாருங்கள். மக்கள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே  பெரிய பீதியிலிருந்தார்கள். எந்த நேரத்திலும் ரயில் பெட்டிகள் பள்ளத் தாக்கில் விழ நேரிடலாம். ஒரு எலும்பைக் கூடக் காண முடியாது. இந்த மலை இமய மலையைச் சேர்ந்தது. எங்கும் பெரிய பீதி நிலவும் போது, மகாத்மா காந்தி கடிதங்களை எழுத உதவியாளருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதவியாளர் என்னுடைய ஆசிரியர். மகாத்மா காந்தி அவரை பெங்களூரி என்று அழைப்பாராம். பெங்களூரி, நான் சொல்லச் சொல்ல நீ கடிதங்களை எழுது என்று சொன்னாராம்.

என் ஆசிரியர் மகாத்மாவிடம், “பாபுஜி, இப்போது என்ன நடக்கிறது என்று அறிவீர்களா? நாம் உயிரோடு இருப்போமா என்பதே சந்தேகமாக உள்ளது. நாம் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் இருக்கிறோம்.ரயில் பெட்டிகள் (கட்டுக்கடங்காமல்) பின்னோக்கி ஓடுகின்றன.அதை நிறுத்தவும் வழி கிடையாது. பெட்டிகளின் வேகமும் கூடுகிறது.“என்று சொன்னாராம். அப்போது அவரிடம் மகாத்மா காந்தி என்ன சொன்னார். தெரியுமா?“ஒரு வேளை நாம் உயிர் பிழைத்தோமேயானால் இந்த நேரத்தை விரயமாக்கி விடுவோம். உயிர் போனால் போகட்டும். உயிர் பிழைத்தோமேயானால்,   நேரத்தை வீணாக்கியிருப்போம். இல்லையா?  எனவே நான் சொல்லச் சொல்ல கடிதங்களை எழுது“ என்று மகாத்மா சொன்னாராம். நடுங்கும் கரங்களோடு என் ஆசிரியர் மகாத்மா சொல்லச் சொல்ல கடிதம் எழுதினாராம். “நீ இந்தப் பெரிய மனிதரைப் பார். வாழ்க்கையில் க்ஷண நேரத்தைக் கூட அவர் வீணடித்தது கிடையாது“ என்று அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார்.

இந்த நிகழ்ச்சி நமக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்து ஊக்குவிக்கிறது. வாழ்க்கையின் அபாயகரமான நிலையிலும், சாவு நம் வாசல் கதவில் வந்து தட்டிவிட்டது என்று தெரிந்த நிலையிலும், மகாத்மா காந்தி தன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஏதாவது காரியத்தில்  ஈடுபட்ட வண்ணமிருந்தார். மற்றவரையும் வேலையில் ஈடுபடுத்தினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் (அரை மணி நேரமிருக்கலாம்) வேகமாக ஓடிய ரயில்  பெட்டிகள் தானாகவே வேகம் குறைந்து நின்றன.

 நீ பணிபுரியும் நிறுவனம் உனக்குச் சொந்தமானது என்ற உணர்வோடு இரு.

ஒருவர் ஒரு நிறுவனத்தில் 20 – 30 ஆண்டுகள், அவர் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வில்லாமலேயே பணி செய்யக் கூடும். இரண்டு  விஷயங்கள் இருக்கின்றன.

·         நிறுவனத்தைச் சேர்ந்தவன் என்ற உணர்வோடு பணி புரிவது. நிறுவனத்தோடு உணர்வு பூர்வமான இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது.
·         நிறுவனத்தை  ஒரு பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் போல் உபயோகித்துக்  கொள்வது. ஒரு காசைப் போட்டு உனக்கு வேண்டியதைப் பெறும் இயந்திரம் போல் நினைப்பது.

நிறுவனத்தை ஒரு இயந்திரம் போல் நினைத்தால் அது நல்ல முடிவைக் கொடுக்காது. நிறுவனம் உனக்கு சொந்தமானது என்று நினைத்துப் பணி செய்யும் போது, நிறுவனத்தோடு உணர்வு பூர்வமான இணைப்பு இருந்தால், நீ எப்போதும் சக்தி வாய்ந்தவனாக, உற்சாகமுள்ளவனாக இருப்பாய். எந்தப் படுகுழியானாலும், உன்னால் அதில் விழாமல் தாண்ட முடியும். நீ பணி செய்யும் நிறுவனத்துடன் உணர்வு பூர்வமான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நான்கு “C” க்கள். கமிட்மெண்ட், கனெக்டிவிடி, கம்பாஷன், க்ரியேடிவிடி.

நாமிருக்குமிடத்தில் இந்த நான்கு  “C” க்களையும் எப்படிக் கொண்டு வர முடியுமென்று பார்ப்பது அவசியம்.

கமிட்மெண்ட் – வாக்குறுதி

மக்கள் தங்கள் உழைப்பை தர உறுதியாக இருக்கிறார்கள் என்று நம்பு. யாரிடமாவது “நீ உன் வாக்குறுதிப்படி நடக்க மாட்டாய் “ என்று சொன்னால், அது அவர்களுடைய வாக்குறுதியை  நிறைவேற்ற உதவாது.“நீ உண்மையிலேயே உன் வாக்குறுதியை நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது“ என்று அவர்களிடம் சொன்னால் அவர்களுடைய  வாக்குறுதி மேலும் வலுப்படும். மக்கள் ஏல்லோருமே வாக்குறுதியை  நிறைவேற்ற விரும்புவார்கள். சில சமயம் அது மன அழுத்தம், தவறாகப் புரிந்து கொள்ளுதல் மற்றும் பல சொந்த விஷயங்களால் மூடப் பட்டிருக்கிறது.

கனெக்டிவிடி – இணைப்பு (தொடர்பு)

மக்களை ஒருவரோடு  ஒருவர் இணைப்பது  அவசியம்.மனம் விட்டுப் பேச வாய்ப்பளிக்க வேண்டும். மனம் விட்டுப் பேசுவதால் இணைவது சாத்தியமாகும். பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். மனம் விட்டுப் பேசுவது, பகிர்ந்து கொள்வது மற்றும் காது கொடுத்துக் கேட்பது இவைகளால் மக்களிடையே இணைப்பு ஏற்படும். மற்றவர்களின் கருத்தை நீ ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா என்பது வேறு விஷயம். குறைந்தது அவர்களுடைய கருத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களுடைய கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். சிலர் முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளியிடலாம்.சில சமயம் அவர்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக நீ நினைக்கக் கூடும். இருந்தாலும், அவர்களுடைய கருத்தை நீ மரியாதையோடு (பொறுமையாக) கேட்க வேண்டும்.

பார் !பொதுவாக ஒருவரின் கருத்து நல்லதாக இருந்தால், நாம் அவருக்கு மரியாதை அளிக்கிறோம். ஆனால் ஒருவரின் கருத்து மிகவும் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால், அவரை நாம் மதிப்பதில்லை. அவர்கள் புத்திசாலியாக  இருந்தாலும் சரி, முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் சரி, திறமை மிக்கவரோ, திறமை இல்லாதவரோ, எப்படி இருந்தாலும் மக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்று நான் சொல்வேன். நீ அப்படி நினைக்க வில்லையா?  இது ஒரு புதிய வழியாகத்  தெரியவில்லையா ?

மக்களை மதி. அவர்கள் கருத்து முட்டாள் தனமாக இருக்கலாம். அவர்களுக்கு ஒரு கருத்தும் இல்லாமலிருக்கலாம். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் போது இணைப்பு உருவாகும். மக்கள் நம்முடன் தொடர்புடையவராகும் போது பாதுகாப்பாக உணர்வார்கள். பாதுகாப்பாக உணரும் போது, அவர்களுடைய நேர்மை அதிகரிக்கும். மக்கள் நேர்மையாக இருக்க வேண்டுமென்று நாமனைவரும் விரும்புகிறோம். இல்லையா ? ஆம் !

கம்பாஷன் – கருணை

பார்! நாம் இயந்திரங்கள் அல்ல. நாம் இதயமுள்ள உயிருள்ள மனிதர்கள். வேலை செய்யுமிடத்தில் சூழ்நிலை செம்மையாக  இருக்க கருணை மிக மிக அவசியம். எல்லா நேரத்திலும் நீ கருணை காட்டத் தேவையில்லை. மக்கள் உன்னைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம்  உள்ளது. கட்டுப்பாடு நிலைகுலையும். ஆனால் அவ்வப்போது, நீ கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்வது அவசியம். ஒரு குழுவை உருவாக்கி, செயலில்  ஈடுபடுத்து. குழுவிடம் கருணை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு  சேவைத் திட்டத்தைத் துவங்கலாம். (சி.எஸ்.ஆர் – கார்ப்பரேட் சோஷியல்  ரெஸ்பான்சிபிலிடி)

குழுவாக நிவாரணப் பணியாற்றலாம். ஒரு லாப நோக்கமில்லாத சேவை செய்யலாம். அது தான் சி.எஸ்.ஆர். அப்படிப் பட்ட செயல்கள் குழுவினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். ஜப்பானியர்கள் குழுவாக செயல்படுவதில் சிறந்து விளங்குகிறார்கள். எனக்குத் தெரிந்த வரை அவர்கள் இதற்கு  உதாரணமாகத் திகழ்கிறார்கள். நான் எங்கு சென்றாலும், அடிக்கடி இதைப்  பற்றிச் சொல்கிறேன்.

க்ரியேட்டிவிடி – படைக்கும் திறமை

உங்களுக்குத் தெரியுமா? பல சமயங்களில் தொழிலாளிகள், தங்களின் கைகால்கள் கட்டுப்பட்டது போல் உணர்கிறார்கள். அவர்களுடைய படைப்பாற்றலை நிறுவனம் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை என்று நம்புகிறார்கள். அவர்களுடைய படைக்கும் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டுமென்று நான் சொல்வேன். உங்களுக்குத் தெரியுமா? பெங்களூர் ஆசிரமத்தில் அவ்வப்போது நாம் இப்படிச் செய்கிறோம். சமையல்  செய்பவர்கள், தங்கும் அறை வசதிகளை கவனிப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், சுத்திகரிப்புப் பணி செய்பவர்கள் எல்லோரையும், அவர்கள் பொதுவாகச் செய்யும் செயலை விடுத்து, வேறு செயல்களில் ஈடு படுத்துகிறோம். இதனால் அவர்கள் புத்துணர்வு பெற்று, தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் நாம் எதிர்பார்க்காத வகையில், பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது போன்ற திறமைகளை வெளிப் படுத்துகிறார்கள். ஏனென்றால், அத்திறமைகள் வெளிப்பட நாம் வாய்ப்பளிக்கிறோம். இது ஒரு புத்தம் புது அழகான சக்தியை உருவாக்கி, ஆசிரமத்தில் அருமையான சூழ்நிலை நிலவ உதவுகிறது.