ஒவ்வொரு சவாலையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்

செவ்வாய்க்கிழமை 24 மார்ச் 2015

சயாம்ரீப், கம்போடியா



வாழ்க்கையில் குழப்பத்துக்கிடையே அமைதியை காண்பதே சவாலாக இருக்கிறது.பாருங்கள். இந்த இடம் அதிக சத்தமாக உள்ளது. இந்தப் பின்னணியின் சத்தத்தால் உங்களில் எத்தனை பேருக்கு எரிச்சல் வருகிறது? (பார்வையாளர்களில் சிலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) பலருக்கு எரிச்சலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பலருக்கு கைகளை உயர்த்தத் தயக்கமாக இருக்கிறது. இப்போது இங்கு வாழும் கலை துவங்குகிறது. பின்னணியில் சத்தமிருந்தாலும்,ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே வாழும் கலையாகும். நீங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.

·         கோபப்படலாம் அல்லது கிடைத்த இந்த நேரத்தை திட்டமிடுவதிலோ, படிப்பதிலோ அல்லது இசையைக் கேட்பதிலோ செலவழிக்கலாம்.

வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அறிவாளிகள் சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொண்டு புன்முறுவலோடு மேலே செல்வார்கள். உலகின் இந்தப் பகுதியில், நீங்கள் எவ்வளவு வருத்தப்படுத்தும் சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறீர்கள். நடந்த சம்பவங்களை பற்றிக் கேட்கும் போது என் இதயம் நொறுங்குகிறது. கடந்த கால சம்பவங்களை அப்படியே விட்டு விட்டு, மன உறுதியோடு வாழ்க்கையைத் தொடரவேண்டும். அதை நான் வாழும்கலை என்று அழைக்கிறேன்.

மக்களுடைய வாழ்க்கையில் ஆனந்த அலைகளை உருவாக்க வேண்டும். புத்த மதத்தில் “ரக்கந்து சப்ப தேவதா” என்ற ஒரு வேண்டுதல் உள்ளது. அதன் பொருள் பின்வருமாறு. எல்லா தேவ தேவி தேவதைகளும் நம்மை காக்கட்டும். இந்தியாவில் “சர்வே பவந்து சுகினவ” என்று சொல்கிறோம். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பதே இதன் பொருளாகும். நம் அனைவருடைய வாழ்விலும் ஆனந்த அலைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள். இல்லயா?

உங்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் மட்டும் மகிழ்ச்சியில்லாமல் இருந்தால், நீங்கள் முழு மகிழ்ச்சியடைய முடியுமா? முடியாது. எனவே உங்கள் மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியைப் பொறுத்திருக்கிறது. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் மகிழ்ச்சியில்லாமல் வாழும் போது, ஒரு குடும்பத்தவர் மட்டும் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? இதுவும் முடியாது. ஏனென்றால், உங்கள் அக்கம்பக்கத்தில் வாழ்பவரின் மகிழ்ச்சியின்மையால், உங்களுக்குப் பிரச்சினைகள் வரக்கூடும். எனவே எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ சமுதாயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை எப்படிச் செய்யலாம்? நம் மனம் அமைதியாக இருக்கும் போது அப்படிச் செய்ய முடியும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியடைந்த காலத்தில், நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அமைதியின்மை என்ற நோயிலிருந்து, நாமே நம்மை குணப்படுத்தி கொள்ள முடியும். சில மூச்சுப் பயிற்சிகள் செய்வதன் மூலம், நாம் மன அமைதி பெற முடியும். தியானம் மூலமாக, நம் மனம் ஆக்கபூர்வமான சக்தியைப் பரப்ப முடியும். எனவே இந்தப் பயிற்சிகள் விலை மதிக்க முடியாதவை. வாழ்க்கை என்பது பழையனவும், புதியனவும் கலந்தது. நம்முடைய வேர்கள் பழையன. நம்முடைய தளிர்கள் புதியன. எனவே நம் வாழ்க்கை இரண்டும் கலந்ததாக இருக்க வேண்டும். நம்முடைய பண்டைய கலாசாரமும், நவீன வாழ்க்கை வசதிகளும், இரண்டுமே நமக்குத் தேவை. இறைவன் அருளால், கம்போடியாவில் பண்டைய கலாசாரமும், நவீன தொழில் நுட்பமும் இணைந்திருக்கின்றன.

உங்கள் நாட்டின் ஜனத்தொகையில் 60 % இளைஞர்கள். உங்கள் தொழில் நுட்பத்தில், கல்வியில், தனித் திறமைகளில் முன்னேற்றம் அடையும் போது பண்டைய கலாசாரத்தையும் போற்றிக் காப்பது அவசியம். கம்போடியாவில் நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனென்றால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உங்களுடைய பண்டைய சிறப்பான கலாசாரத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். நம் இதயம் எப்போதும் பழையனவற்றை நாடுகிறது. நாம் எதைப் பற்றிப் பெருமைப்படுகிறோம். நம் நீண்ட கால நட்பைப் பற்றி பெருமைப்படுகிறோம். இவர் என் நீண்ட நாள் நண்பர் என்று சொல்கிறோம். ஆனால், நம் மனம் நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்கிறது. புதிய தொழில் நுட்பம், புதிய நாகரீகம் இவற்றை விரும்புகிறது. இவை நமக்குத் தேவை. அதே சமயம் நம் இதயத்தையும் மறக்கக் கூடாது.

இன்று நான் இங்குள்ள அரண்மனையைப் பார்க்கச் சென்றேன். அங்குள்ள புராதனப் பொருள்களை எனக்குக் காட்டினார்கள் பழைய பொருள்களைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். எனவே இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை பற்றிப் பெருமைப்பட வேண்டும். பழைய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதே சமயத்தில், தொழில் நுட்ப முன்னேற்றம், விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வியாபார முன்னேற்றம் இவற்றிலும் ஈடுபட வேண்டும். எனவே இங்குள்ள வியாபாரிகளின் சங்கங்கள் இளைஞர்களை உற்சாகப் படுத்தி, நெறிமுறைகளைக் கைவிடாமல் தொழில் துவங்க இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

சில இளைஞர்கள் நெறிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், வியாபாரத்தில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நேர்மையில்லாமல், குறுகிய காலத்தில் மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதித்த பலர் குறுகிய காலத்திலேயே பெரிய வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள். வியாபாரத்தில் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், வீழ்ச்சி வேகமாகவும், கடுமையாகவும் இருக்கும். எனவே, வியாபாரிகளுக்கு, அதிலும் முக்கியமாக இளைஞர்களுக்கு இந்த உண்மையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கண்டிப்பாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். (சி.எஸ்.ஆர். கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி) இல்லாவிட்டால், நிங்கள் அனைவரும் சமுதாய வளர்ச்சிக்காக பொறுப்பேற்று சி.எஸ்.ஆர் செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளைத் துவக்கி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய வேண்டும். நாமனைவரும் சேர்ந்து அப்படிச் செய்ய வேண்டும். மக்களனைவருக்கும் கல்வி அறிவு தேவை.

கல்வி என்பது வெறும் தகவல் கொடுப்பது மட்டுமல்ல. நற்பண்புகளை வளர்ப்பது கல்வியின் நோக்கமாகும். கல்வி ஒரு மனிதனின் ஆளுமையை உயர்த்த வல்லது. மதிப்பிற்குரிய பல துறவிகள் இங்கு இருக்கிறார்கள். நான் சொல்வதை அவர்கள் ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் ஒன்று சேர்ந்து, சமுதாய மதிப்புகள், நெறி முறைகள் மற்றும் நற்பண்புகளை மக்களிடையே உருவாக்க வேண்டும். தினந்தோறும் மனதை அமைதியாக்க, சில நிமிடம் மூச்சுப் பயிற்சிகள் செய்து, இரு முறை தியானம் செய்தால், நம் வாழ்க்கை பூரண மகிழ்ச்சி, கருணை, அன்பு மற்றும் தெய்வீக அருள் நிறைந்ததாக அமையும்.

மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

·         தெளிவான மனம்
·         தூய்மையான இதயம்
·         நேர்மையான செயல்

இவை தர்மத்தின் சாரமாகும்.இதை தான் புத்த பிரான் மக்களுக்குப் போதித்தார். புத்தர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் மக்கள் மிகவும் அறிவாற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் கடவுள் பற்றி அறிந்திருந்தார்கள். எல்லாவற்றையும் அறிந்திருந்தார்கள். ஆனால் அறிவுபூர்வமாக மட்டுமே அறிந்திருந்தார்கள். எனவே புத்த பிரான் அவர்களைப் பார்த்து,“ உங்களுக்கு ஒரு எளிய செயல் முறையை சொல்கிறேன். அமர்ந்து உங்கள் மூச்சைக் கவனியுங்கள். உடலைக் கவனியுங்கள். உடலில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களைக் கவனியுங்கள். உங்கள் இயல்பான நிலையை அடையுங்கள் ” என்று சொன்னார்.தியானத்தின் சாரமான இந்த பாடத்தைத் தான் புத்த பிரான் மக்களுக்குக் கற்பித்தார். தியானம் வேதாந்தத்தின் சாரம்.

வேதாந்தப் புத்தகங்கள் அனைத்தும் “உனக்குள் இருக்கும் இறைத் தன்மையைக் கண்டுபிடி. அது தான் வேதாந்தம்“ என்ற ஒன்றையே எடுத்துரைக்கின்றன. உண்மையில் அத்வைதம், வேதாந்தம் மற்றும் புத்த மதக் கொள்கைகள் எல்லாமே ஒன்று தான். ஆனால் வேறு வேறு பார்வையில் காணப்படுகின்றன. இந்த நாட்டின் குழந்தைகள் இவற்றை அறிய தகுதி பெற்றிருக்கிறார்கள். எதை அடையத் தகுதி பெற்றிருக்கிறார்கள்? வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம், தடையற்ற அறிவாற்றல்,அதிர்ச்சியற்ற நினைவாற்றல், வருத்தமற்ற ஆன்மா. நாமனைவரும் நம் சந்ததியினருக்கு இதை அளிக்க உழைப்போம். வாழும்கலை இதைச் செயல்படுத்த தன்னை அர்ப்பணித்திருக்கிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.


இந்த சில வார்த்தைகளுடன், உங்களனைவருக்கும் ஒரு வளமான, மகிழ்ச்சியான, அறிவொளியுடன் கூடிய வாழ்வு அமைய வாழ்த்துகிறேன். நீங்கள் ஆரோக்கியமாக, தூய்மையான இதயத்துடன் மேலும் மக்கள் நலத்துக்கான சேவையில் ஈடுபட இறைவனுடைய ஆசி பெற வாழ்த்துகிறேன்.