அன்பு - சக்தி வாய்ந்தது

வெள்ளி,13 மார்ச் 2015,

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ்,அன்பே நமது இயல்பு என்றால், நாம் ஏன் ஒருவரை மட்டுமே அன்புக்கு பொருளாக ஆக்குகிறோம்? அந்த ஒருவர் மீது மட்டுமே நாம் அன்பு செலுத்துவதாக ஏன் எண்ணுகிறோம்?

அன்பு என்பது ஒரு மனிதரிடம் செலுத்தப்படுவதை, நாம் பிறப்பிலிருந்து அறிந்து வருகிறோம். பிறந்ததிலிருந்து அன்பு ஒருவருக்கு தனிப்பட்டதாக இருந்து வருகிறது. ஒரு குழந்தை கண்களை திறந்து தாயைப் பார்த்தவுடன் அன்பை உணர ஆரம்பிக்கிறது.உறவு உங்களுக்குள் அன்பு உணர்வை தூண்டுகிறது. ஆனால் அது முதிர்வடையும் போது அது வெறும் உணர்வு மட்டுமல்ல அதுவெ நமது இருப்பு என்று புரிகிறது.

தனிப்பட்ட ஒருவர் மீது செலுத்தப்படும் அன்பு பிரபஞ்ச அன்பின் ஒரு பரிமாணம்.முதலில் அன்பை தூண்டுகிறார், பிறகு நீங்கள் தியானத்தில் ஆழமாக போகும் போது அன்பிற்கு வெளியிலிருந்து எந்தத் தூண்டுதலும் தேவையில்லை, எல்லாவிடத்திலும் ஏற்கனவே இருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்கிறீர்கள். உண்மையில் நாம் அன்பு பெருங்கடலில் மிதந்து கொண்டிருக்கிறோம். இது எப்படி என்றால் ஒரு குளியல் தொட்டிக்குள் நுழைவதை போன்றது.முதலில் குளியல் தொட்டிக்குள் இறங்கும் போது அதன் தட்பவெப்பத்தை நாம் உணர்கிறோம். ஆனால், சிறிது நேரம் தொட்டிக்குள் இருந்த பின், அது பழகிப்போய் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.அதைபோல வெந்நீர் குளத்தில் இறங்கியவுடன் அதன் சூடு தெரிகிறது. சிறிது நேரம் கழித்து உங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை, அது பழகிப்போய் விடுகிறது.

அதைப் போலவே, தனிப்பட்ட அன்பு ஆரம்பத்தில் அதைத் தூண்டுகிறது. ஒருமுறை வந்தபின், அது பிரபஞ்ச வடிவை நேர்ந்து கொள்கிறது.எனவே நீங்கள் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் அது இருக்கவே செய்கிறது. தனிப்பட்டவர்கள் அன்பு இருப்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்கள், நீங்களே அன்பு.

குருதேவ், படைப்பை பற்றி புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு முரணாக இருக்கிறது. எதை நம்புவது என்பதை பற்றி நீங்கள் பேச முடியுமா?

படைப்பை பற்றிய எந்தக் கொள்கை முரணாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? உண்மையில் இந்த முழு உலகமும் ஒரு தோற்றம் தான். அப்படி இருப்பதாக தோற்றமளிக்கிறது. நீங்கள் யோகவசிஷ்டா படிக்கவேண்டும். அதை பற்றி அதிகம் தெரிந்து கொள்வீர்கள். ஒரு கரண்டியை தண்ணீரில் வைத்தால், அதன் பாதிப்பகுதி வளைந்திருப்பதை போலத் தெரிகிறது. எப்போது அந்தக் கரண்டி வளைந்தது என்று கேட்டால், நான் என்ன சொல்வது. அது வளைந்திருக்கவில்லை, அப்படித் தெரிகிறது. எப்போதிலிருந்து அப்படித் தெரியத் தொடங்கியது? எப்போதும் அப்படித் தெரிகிறது!

அதைப் போல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்று படைக்கப்பட்டது என்ற கருத்தே தவறானது, ஏனென்றால் முழுப் பிரபஞ்சமே பேருணர்வில் ஒரு தோற்றம். எப்போது கானல் நீர் படைக்கப் பட்டது? என்ன சொல்வது? படைக்கப்படவேயில்லை, அப்படி தோற்றமளிக்கிறது! உதாரணமாக ஒரு டென்னிஸ் பந்தைப் போல. டென்னிஸ் பந்து எங்கே தொடங்குகிறது? முதலில் அது எங்கும் தொடங்குவதில்லை. ஒரு பந்து எங்கேயாவது தொடங்கி எங்கேயாவது முடியக்கூடுமா? எல்லா புள்ளிகளும் தொடக்கம் எல்லா புள்ளிகளும் முடிவு. அதனால் தான் இந்தப் பிரபஞ்சம் அனாதி (தொடக்கமற்றது) என்றும் அனந்தம் (முடிவில்லாதது) என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக நமது எண்ணம் நேர்வரிசைக்கிரமமானது – எல்லாம் எங்காவது தொடங்க வேண்டும் எங்காவது முடிய வேண்டும். ஆனால் நீங்கள் மேல் நிலை ஞானத்திற்கு சென்றால், ஆரம்பம் முடிவு இவைகளை தாண்டி தோற்றத்தை பற்றியதாக ஆகிறது. இதுதான் வேதாந்தக் கொள்கையின் அழகு. உலகைப் பற்றி நாம் அறியும் எல்லா கொள்கைகளையும் தாண்டி இப்படித்தான் அது வித்தியாசமாக இருக்கிறது.

பசிபிக் பெருங்கடலின் மையத்திலிருக்கும் ஹவாய் தீவுக்கு நீங்கள் சென்றால், அதைச்சுற்றி பலப்பல மைல்களுக்கு எதுவுமில்லை. அங்கு எப்படி தென்னை மரம் வந்தது என்று யாராவது ஆராய்ந்தால் என்ன ஆகும்? யாராவது சொல்வார்கள், ‘மலேசியாவில் ஒரு தேங்காய் தண்ணீரில் விழுந்தது. அங்கிருந்து அது மிதந்தவாறே ஹாவாய்த்தீவு வரை சேர்ந்து மரமாக முளைத்தது.’ இதற்கு எந்த நிரூபணமும் இல்லை. ஆனால் ஹவாய்த் தீவில் எல்லாவித தாவர மற்றும் ஜந்துக்களும் இருக்கின்றன. பல மரங்கள் இருக்கின்றன மற்றும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
எனவே, ஆப்பிரிக்காவில் முதல் மனிதன் பிறந்தான், பிறகு கான்ஸ்டான்டினோபிலுக்கு பயணித்து வந்து சேர்ந்தான், பிறகு ஆரியர்கள் அங்கிருந்து இந்தியா வந்து அதை வென்றார்கள், என்று இப்படி பல கருத்துக்களை கேட்டால் எனக்கு முட்டாள்தனமாக படுகிறது. இந்தக் கொள்கைகள் எல்லாம் பிதற்றல்கலாக தெரிகின்றன. ஏனென்றால் நாம் டென்னிஸ் பந்தின் தொடக்கபுள்ளியை பார்க்க விரும்புகிறோம்.

குவாண்டம் விஞ்ஞானிகள் அல்லது உண்மையான பகுத்தறிவான விஞ்ஞானத்தின் பார்வையில் நீங்கள் பார்த்தால், இந்த முழு படைப்பும் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்தது என்பதை காண்பீர்கள். தென்னை மரத்தை ஒரே நேரத்தில் கேரளாவிலும், ஹவாய்த் தீவிலும் வளர வைக்க இயற்கையால் முடியும்! தேங்காயை கேரளாவிலிருந்து ஹாவாய்க்கோ அல்லது ஹாவாயிலிருந்து கேரளாவிற்கோ ஏற்றுமதி செய்ய அதற்குத் தேவையில்லை! நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதாக இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சந்திரன் பூமியின் ஒரு பகுதியாய் ஒரு காலத்தில் இருந்தது அது பூமியிலிருந்து பிரிந்த போது இங்கிருந்து தண்ணீர் அங்கு சென்றதாக யாராவது ஒரு புதிய கொள்கையை விவரிப்பார்கள். ஏனென்றால் நாம் நேர்வரிசைக்கிரமமாக எண்ணுகிறோம். நமது எண்ணத்தை நேர் வரிசைக்கிரமமாக அல்லாமல் கோளமாக அல்லது உருண்டைக்கிரமமாக ஆக்கவேண்டும். அப்போது தான் விஷயங்கள் தெளிவாகும்.

குருதேவ், ஒரு மனிதருடைய அகங்காரத்தை காயப்படுத்த வேண்டாம் என்று கூறினீர்கள். அவர் தன்னுடைய மனைவியின் அகங்காரத்தை காயப்படுத்தினால் கூடவா? அவருடைய அகங்காரமான சுபாவத்தை எப்படி மாற்றுவது?

அவர்களுடைய இயல்பை ஏன் மாற்ற விரும்புகிறீர்கள். நீங்கள் மாறிவிடுங்கள். நீங்கள் மாறினால் அவரும் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம்! வாழ்கையை ஒரு விசாலமான பார்வையில் பார்க்க நாம் கற்றுக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. பிறகு நமக்கு விஷயங்கள் மேலும் தெளிவாகும். நாம் ஏன் பிறரை மாற்ற முயல்கிறோம்? அவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்பதால். நம்மைக் காயபடுத்துகிறார்கள் என்பதால் ஒருவரை நாம் அவரை மாற்ற அதிகம் முயன்றால் அவர்கள் மாறாமல் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

ஒருவரை உண்மையில் நீங்கள் மாற்ற விரும்பினால், அவருடைய நன்னலத்தை நீங்கள் நாட வேண்டும், ஏனென்றால் அவர்கள் செய்வது அவர்களுக்கு நல்லதல்ல. இப்போது அதுதான் உங்கள் நோக்கம் என்றால் அவர்கள் மாறுவார்கள். உங்கள் ஒவ்வொரு பிரார்த்தனையும் அவர்கள் விஷயங்களை பார்க்கும் பார்வை மாறும் அவர்களுடைய நடத்தையும் மாறும். எனவே அது தான் உங்கள் நோக்கத்தின் சக்தி.

குருதேவ், அத்வைத தத்துவத்தை கருத்துரீதியாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதை எப்படி அனுபவரீதியாகக் கொண்டுவருவது?

இல்லை, இது சுத்தமான அறிவியல். சுத்தமான அறிவியலை நீங்கள் அனுபவமாக கொண்டு வரத் தேவையில்லை. அத்வைதம் என்பது எல்லாவற்றையும் ஒன்றாக பார்ப்பது. இது நீங்கள் நிலையாக இருக்க உதவும். ஆனால் நீங்கள் உலகத்தை அணுகும் போது அதை நீங்கள் துவைதமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். புரிந்ததா?


மேசை,கதவு மற்றும் நாற்காலி ஆகிய எல்லாம் மரம் தான் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இதை எப்படி தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவீர்கள்? இதை செயல்படுத்தத் தேவையில்லை! தெரிந்து கொண்டலே போதும். அதற்குத்தக்கவாறு பயன்படுத்தினால் போதும். மேசையை மேசையாகப் பயன்படுத்த வேண்டும், அதை நாற்காலியாக நினைத்து அதன் மீது உட்கார்ந்தால் அது உடைந்து போகும். தகுந்தவாறு அதை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், இவை எல்லாம் மரம் தான் என்பதை அறிந்திருக்க வேண்டும்.