பொறுமையும் விடாமுயற்சியும்

சனிக்கிழமை,28 மார்ச் 2015,

கோலாலம்பூர், மலேசியா


ஓம் சாந்தி சாந்தி சாந்தி! ஆ! என்னவொரு மனஎழுச்சி! அனைவரும் உற்சாகமாக உள்ளனர். நீங்கள் மிக மன அமைதியுடன் இருப்பீர்கள் என்று எண்ணினேன். இது சாந்தமும் உற்சாகமும் கலந்த  ஒரு விசித்திரமான கலவை. இவ்வுலகில் ஒரு புதிய நம்பிக்கை எழுந்துள்ளதை பார்த்து, நாம் அனைவரும் எழுச்சியில் உள்ளோம். மிகுந்த உற்சாகத்துடன் கூடிய இளைஞர்களை காணும்போது நல்ல காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். வாழ்க்கையே கொண்டாட்டமாக இருக்க வேண்டும். வேற்றுமைகளின் கொண்டாட்டம், வெவ்வேறு பின்புலங்கள், வயதுகள், இனங்கள், சமயங்கள் உள்ள மக்களின் கொண்டாட்டம். இங்கு நாம் அனைவரும் கூடியிருப்பதே வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்னும் செய்தியினை உலகிற்குத் தருவதற்காகத்தான். மன அமைதியின்றி கொண்டாட்டங்கள் நிகழாது. அவ்வாறின்றி இருந்தாதால் அது மேலோட்டமானது. கொண்டாட்டம் எப்போதுமே ஆழமான உள் அமைதியுடன் தான் இணைந்திருக்க வேண்டும்.

மிகுந்த அன்பும் உற்சாகமும் இங்கு நிறைந்துள்ளன.மிக அழகானது. பார்க்க மிக நன்றாக உள்ளது. உலகத்தில், மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியற்று இருக்கும் அனைவரையும் விழித்து எழுந்து பாருங்கள் "சந்தோஷமாக இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒருவரையொருவர் நேசிக்க ஒரு வழி இருக்கிறது, வெற்றிகரமாக வாழ மற்றும் உள் அமைதி காண ஒரு வழி இருக்கிறது," என்று கூறுவோம். மக்கள் இது போன்ற படைப்பாற்றல் மிகுந்த திட்டங்களுடன் முன்வர வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வாறு குழந்தைகளும், இளைஞர்களும் வீணான கண்ணாடிபுட்டிகளை கொண்டு மரத்தினை வடிவமைத்திருக்கிறார்கள்.நீங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறீர்கள், இன்னும் பலர் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நிற்கிறீர்கள், ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாது நீங்கள் அனைவரும் உற்சாகம் மிகுந்து இருக்கின்றீர்கள். எவ்வாறு, நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் எவ்வாறு உற்சாகத்தை நமது சூழலில் ஏற்படுத்தலாம் என்பது நமக்குத் தெரியும் என்பதையே காட்டுகின்றது.

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய சிலவற்றை நினைவில் வையுங்கள்.

1.     வாழ்க்கையை ஒரு பெரிய கோணத்தில் காணுங்கள்: எனக்கு என்ன வேண்டும்? என்னும் கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்ளுங்கள். இந்த ஒரு கேள்வியே உங்கள் மனதிலுள்ள குழப்பங்களை அகற்றி மனதைத் தெளிவாக்கும். எனவே வாழ்க்கைக்கு ஒரு பெரிய நோக்கம் மற்றும் அமைப்பு முக்கியமானது. என்ன நோக்கம் என்பதை நான் கூற மாட்டேன். நீங்களே கண்டு பிடியுங்கள். ஆனால் நீங்கள் வாழ்க்கையை ஒரு பெரிய கண்ணோட்டத்தில் காணவேண்டும் என்று விரும்புகிறேன்.வாழும் காலம் மிகச் சிறியது. 70 முதல் 80 ஆண்டுகள் விரைவில் சென்று விடும். நாம் நம் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறோம் என்று விழித்தெழுந்து பார்க்க வேண்டும். இது ஒரு தத்துவம் போன்று தோன்றினாலும் யதார்த்தமானது. இந்த சுய பரிசோதனை நம்மை மன சோர்விலிருந்து வெளி வர வைக்கும்.
2.   எவ்வாறு பிறருக்கு பயனுள்ளவராக இருக்க முடியும் என்று பாருங்கள் : நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்னும் உங்களுடைய தனிப்பட்ட இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அடுத்து, உலகிற்கு என்று ஒரு இலக்கை நிர்ணயிங்கள் உலகம் மற்றும் சமுதாயம் எவ்வாறு முன்னேற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று நிர்ணயிங்கள். இத்தகைய ஒரு பார்வை இல்லையெனில் வரும் தலைமுறையினருக்கு நம்மால் நல்ல சமுதாயத்தினை அளிக்க முடியாது. நாம் ஒன்றினை அடையும் போது பெரும் மகிழ்ச்சி ஒரு விதமானது. மற்றொரு விதம் கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி. குழந்தைகளாக இருந்தபோது பெறுவதில், அடைவதில்  மகிழ்ச்சி கண்டோம். இத்தகைய மகிழ்ச்சியுடன் இறக்கக் கூடாது. வீட்டில் நமது தாத்தா பாட்டி போன்று பகிர்ந்து கொள்ளும்போது, கொடுக்கும்போது,மகிழ்ச்சியடைய வேண்டும். இந்த நிலைக்கு நாம் நகர்ந்து செல்ல வேண்டும்.
இந்த ஆனந்தத் திருநாள் கொண்டாட்டத்தில், சமுதாயத்திற்கு நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகம் மற்றும் சமுதாயம் உங்களுடைய பங்களிப்பினை எதிர்நோக்குகின்றன. மகிழ்ச்சியின் இயல்பே பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைத் தனியாக விடுங்கள் என்று கூறமாட்டீர்கள். மகிழ்ச்சியற்று இருக்கும் போது "என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள், நான் தனியாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறுவீர்கள். நீங்கள் உற்சாகமாக ஆற்றலுடன் இருக்கும் போது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடனேயே இருப்பீர்கள். பகிர்ந்து கொள்தல் மனித இயல்பு. அது மறைந்தவுடன் தான் வன்முறை அழுத்தம், நம்பிக்கையின்மை போன்ற அனைத்து எதிர்மறைகளும் பூமியினை நிறைத்துக் கொள்கின்றன.

இன்று காலையில்   ஆயிரக்கணக்கானோர் யோகா செய்தீர்கள். யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆத்மாவினை இணைப்பதாகும். உண்மையில், எல்லாமே இணைந்துதான் இருக்கின்றன. அந்த மெய்யுணர்வின் ஒருமையினை  அறிந்துணருவதே யோகா ஆகும்.

உங்கள் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு நீங்கள் ஐந்து நாட்கள் இந்த ஐந்து அனுபவங்களைப் பெற்று உங்கள் வாழ்வில் மலருங்கள்.

1. முதலாவதாக ஒரு பள்ளி ஆசிரியராக இருங்கள். படிக்க விரும்பாத குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பொறுமை அவசியம். நர்சரி வகுப்பில் ஆசிரியராக ஒரு நாள் இருந்தாலும் எவ்வளவு பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவீர்கள்.
2. தோட்ட வேலை செய்யுங்கள் அல்லது ஒரு விவசாயியுடன் ஒரு நாளைச் செலவழியுங்கள். விதைகளை விதைக்கும் போது, செடிகளுக்கு நீர் ஊற்றும் போது, நீங்கள் நீரின் மண்ணின் மற்றும் சூழலின் அருமையைத் தெரிந்து கொள்வீர்கள். உணவினை மதிப்பீர்கள். வீணாக்க மாட்டீர்கள்.நாம் அதிக உணவினை எடுத்து, அதை குளிர் பெட்டியில் வைத்து, சில நாட்களுக்குப் பிறகு அவற்றைக் குப்பையில் போடுகிறோம். எத்தனை பேர் இவ்வாறு செய்வதுண்டு? கை உயர்த்துங்கள். நாம் மில்லியன் டன் கணக்கில் உணவினை ஒவ்வொரு நாளும் வீணாக்குகிறோம். நாம் உணவை வீணாக்கக் கூடாது.ஒரு நாள் தோட்ட வேலை அல்லது விவசாயியுடன் ஒரு நாள் செலவழித்தால், இதை அறிந்து கொள்வோம்.
3. மனநோய் மருத்துவ மனையில் ஒரு நாள் செலவிடுங்கள். அங்குள்ளவர்கள் உங்களை திட்டினாலும், சபித்தாலும் குறை கூறினாலும் நீங்கள் கண்டு கொள்ளமாட்டீர்கள் ஏனெனில் அவர்கள் மன நோயாளிகள். பலர் மன நோய் மருத்துவமனைக்கு வெளியே இருப்பார்கள், ஆனால் அவர்கள் மனநலம் பெற்றவர்கள் என்று பொருள் அல்ல. எனவே வாழ்க்கையில் காரணமின்றி உங்களைக் குறை கூறுபவர்கள், பொறாமை, கோபம், இவற்றுடன் பேசுபவர்களின் வார்த்தைகள் பொருளற்றவை.அப்போது பொறுமையுடனும் புன்முறுவலுடனும் அவர்களைக் கையாள வேண்டும். குப்பையை உள்ளே எடுத்துச் சென்று உங்கள் மனதைக் கெடுத்துக் கொள்ள  மாட்டீர்கள். ஆகவே, ஒரு நாள் மனநோய் மருத்துவ மனையில் கழித்து, உங்கள் மனதை எவ்வாறு காத்துக் கொள்வது  என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிறரது கருத்துக்களுக்கு உதைபந்தாக இருப்பதை நிறுத்தி விடுவீர்கள்.
4. ஒரு நாள் சிறைச் சாலைக்குச் செல்லுங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். தவறு செய்து விட்டு சிறைக்கு செல்ல வேண்டாம். ஒரு சிறைக்கு வருகை தந்து, அங்குள்ள கைதிகளுடன் சற்று நேரம் செலவழியுங்கள். கருணை என்பது என்ன என்று அறிந்து கொள்வீர்கள். உதவியற்ற நிலை என்பது என்ன என்று தெரிந்து கொள்வீர்கள். விழிப்புணர்வு இன்றி தவறு செய்து விட்டார்கள். எனவே உங்கள் உணர்ச்சிகளின் மீது ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வீர்கள்.
5. இறுதிக்கட்ட நோயுடன் பலர் மருத்துவமனையில் இருக்கின்றனர். அவர்களுடன் ஒரு நாள் செலவழியுங்கள். வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்வீர்கள். நல்ல உணவினை ஏற்று உடற்பயிற்சி  செய்வீர்கள். வாழ்க்கையில் துடிப்பாக இருக்க என்னன்ன தேவையோ அவற்றைச் செய்வீர்கள்.

இந்த ஐந்து நாட்களின் விளைவு என்ன? ஐந்து நாட்களுக்குப் பிறகு நீங்கள் மேலும் துடிப்புடன், அதிக அன்புடன், கருணையுடன் சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்  என்று எண்ணுகிறேன். நம்மால் சிலருக்கு அதிகம் சிந்திக்கும் இயல்பு உண்டு. சிந்தனை, சிந்தனை அது மட்டுமே தான். செயலே கிடையாது. வேறு சிலர் செயலில் மட்டுமே இருப்பார், சிந்திப்பதே கிடையாது. இரண்டிற்குமே சமநிலை தேவை. சிந்தித்து செயல்பட வேண்டும். எண்ணங்கள் உணர்ச்சிகள் செயல்கள் இவையனைத்தும் ஒருங்கிணைய வேண்டும்.உணர்வுத்திறன்   நுண்ணுணர்வு இரண்டுமே  முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். சேவைத் திட்டங்களில் இணையாதவர்கள் அவற்றில் இணைய வேண்டும்.

சேவை நம்மை மகிழ்ச்சியானவர்களாக்கும். உள்ளிருந்து ஒரு நிறைவினைத் தரும். சேவையும் தியானமும் போன்று உள்மன நிறைவினை வேறெதுவும் தராது. தொண்டு ஆற்றும்போது உயர்வினைப் பெறுகிறீர்கள், அது உங்களை ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்துச் செல்லும். தியானத்தின் ஆழத்தில் செல்லும்போது உங்களால் அனைவருடனும் ஒன்றி பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அரங்கத்தின் கடைசியில் அமர்ந்திருப்பவர் உட்பட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் என் ஆசீர்வாதம். இந்த அரங்கத்திற்குள் வருவதற்கு உங்களில் பெரும்பாலானோர் வெகு நேரம் பொறுமையாகக் காத்திருந்தீர்கள்.  அதுவே ஒரு தவம்.