இதய சூத்திரம்

வியாழக்கிழமை, 5 மார்ச், 2015,

பெங்களூரு, இந்தியா


(வாழ்வின் வண்ணங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், எவ்வாறு பொருளறிவு ஞானத்திற்கு வழி வகுக்கும்? அனைத்து இயற்பியலரும் ஞானிகளா?

ஓர் விஞ்ஞானி என்னிடம், “பொருளியல் இல்லை என்பதை புரிந்துகொள்ளவே 40 ஆண்டுகளாக நான்  அதைப் படித்திருக்கிறேன்" என்று கூறினார். இவ்வுலகில் பொருள் போன்று தோற்றத்தில், இருப்பவை, அலைகளே. நீங்கள் குவாண்டம் இயற்பியல் படித்தவரானால், இந்த உண்மையை அறிந்து கொள்வீர்கள். மேலும் அவர்,"நான் பேசும் போது மக்கள் நான் புத்த மதத்தை பிரசாரம் செய்வதாகவோ அல்லது வேதாந்தம் பேசுவதாகவோ எண்ணிக் கொள்கின்றனர் என்று கூறினார். அதற்கு நான்,"ஆம்,ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் முழுமையும் ஒன்றாலேயே ஆக்கப்பட்டுள்ளது என்று வேதாந்தம் கூறுகிறது. அதையே தான் புத்த மதமும் அனைத்தும் ஒன்றுமேயில்லை என்று கூறுகிறது"  என்றேன். இது தான் இதய சூத்திரம் என்றழைக்கப்படுகின்றது. அதாவது அனைத்தும் ஒன்றுமேயில்லை.அதையே தான் ஒரு இயற்பியல் நிபுணரும் கூறுகின்றார். இத்தகைய தத்துவ விஷயங்களை வேறொரு நாள் பாப்போம். அவை அறிவுக்கு மிகுந்த தூண்டுதலான அற்புதமான சுவாரஸ்யமான விஷயங்கள். இப்போதைக்கு எளிமையாக ஒரு விஷயத்தை மனதில் கொள்வோம். வாழும் கலையின் குறிக்கோள் என்னவென்றால், வாழ்க்கை ஓர் கொண்டாட்டம், இந்த உலகம் முழுமையும் ஒரே குடும்பம். இந்தக் கொண்டாட்டம் நிகழ முடியுமா? ஆம் ஞானத்துடன்! ஞானமின்றி இது சாத்தியமில்லை.

நைமிஷாரண்யா என்பதன் பொருள் என்ன? நீங்கள் அங்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன்.

ஆரண்யா என்றால் காடு. ஏன் காடு? அங்கு சண்டைகளோ வன்முறைகளோ இல்லை. மோதல்கள் இன்றி, நல்லிணக்கத்துடன் கூடிய இடம் என்ற  பெயரில் காடு இருப்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால் அவ்வாறு தான் உள்ளது. காட்டில், விலங்குகள் இரை  தேடுகின்றன. அவை பசியாறியவுடன்,வேறெந்த விலங்கையும் கொல்லாது. உண்மையில் ஆண் சிங்கம் எதையுமே கொல்லாது. பெண் சிங்கமே இரை தேடிவரும், ஆண் சிங்கம் அதை உண்ணும். விலங்குகளிலேயே மிகுந்த சோம்பேறி ஆண் சிங்கம் ஆகும். விளையாட்டுக்காக விலங்குகள் கொல்வதில்லை. ரண என்றால் சண்டை அல்லது போர். போரில்லாத நல்லிணக்கமுள்ள  இடம் என்பதாகும். 

பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் கூடி, அங்கு இயற்கையோடு இயைந்து தவம்/ தியானம் செய்வர். பின்னர் அனைத்து அறிவுச் செய்திகளையும் வெளிப்படுத்துவர். ஆயுர்வேதம் பிறந்தது. நைமிஷாரண்யா என்னுமிடத்தில் ஆயுர்வேதம் பிறந்தது. பாகிஸ்தானிலுள்ள தட்சசீலா என்னுமிடத்தில் சில ஆயுர்வேத திருமறை நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் மூல ஆயுர்வேதம் நைமிஷாரண்யா வில் 88000 முனிவர்கள் குழுமிய போது பதிவிறக்கம் செய்யப்பட்டது. 18 புராணங்களும் இங்கே எழுதப்பட்டன.

நைமிஷாரண்யா அனைத்து திருமறை நூல்களிலும் பிரபலமாக உள்ள ஓர் இடம். மக்களுக்கு இப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாது. அது சுற்றுலா தலம் அல்ல.தேவையான அளவு வசதிகளும் அங்கு கிடையாது. அதுதான் இந்தியாவில் பெரும் பிரச்சினை. சுற்றுலா தலங்கள் மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன.முக்கியமாக புனித யாத்திரை தலங்களில் சரியான சுகாதாரம் மற்றும் வசதிகள் இருப்பதில்லை. அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. நான் இதை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

யமுனை நதி கூட மிக மாசுள்ள நதியாக ஆகிவிட்டது..அரசு அதற்கு எதுவும் செய்யவில்லை. பல நிறுவனங்கள் பெரிய அளவில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொண்டு வருகின்றனர். புனிதமாகக் கருதப்படும் இந்த ஆறுகளில் வேதியல் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வந்து சேருகின்றன. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நதியிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருட்களால்,8 முதல் 15 வயது வரையிலுள்ள குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த வாரம் நாம் சில செயல் முறைத் திட்டங்களை நடத்தப் போகின்றோம்.

நான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். இந்தியரின் பக்தி மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கிறது. அது மிகவும் எழுச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கிறது. இத்தகைய பக்தியை எவ்வாறு மேற்கத்தைய நாட்டு மக்கள் அடைவது என்பது பற்றிக் கூற முடியுமா?

உள்ளத்தில் என்ன ஒருவர் உணர்கின்றார் என்பது வெளிப்படையாக காட்டும் பக்தியிலிருந்து வித்தியாசமானது. மேல்நாட்டவருக்கு அது இல்லையென்று எண்ணாதீர்கள், மேல்நாட்டவருக்கும் இருக்கின்றது. எல்லா மக்களும் மனிதர்கள் தாம்.  கிழக்கு மேற்கு வடக்கு அல்லது தெற்கு எந்தப் பகுதியினராயினும் நாம் அனைவரும் ஒரே மாதிரிதான். உள்ளம் என்று பார்த்தால் அனைவரும் ஒன்றே. வெளிப்படுத்தும் விதம் வெவ்வேறாயினும் நமது உணர்ச்சிகள் ஒத்தவையே. 

இந்தியாவிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி என்று எண்ணாதீர்கள்.இங்கு மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். உள்ளத்தினுள் சுதந்திரம் இருக்கும் போது, அன்பு பக்தி, தொடர்பு அதிக அளவு வெளிப்படும்.அவர்கள் வெளியே செல்லும் போது இதே மாதிரி இருக்காது. இன்று உலகிலுள்ள அனைத்து பெருநகரங்களும் அல்லது நகர்ப்புரங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கின்றன. மேற்கு நாடுகளின் கிராமப் பகுதிகளுக்கு சென்றால், அவர்களுக்கும் பேராவல், தொடர்புணர்வு, அன்பு நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறாக இருக்கிறது. இந்தியாவில் காண்பதைப் போன்றே தென் அமெரிக்காவிலும் அன்பு மற்றும் பக்தியைக் காண்கின்றேன்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய இடங்களில் மக்கள் இசை, நடனம் மூலம் அன்பினை வெளிப் படுத்துகின்றனர். அதே போன்று ஆப்பிரிக்கா, மங்கோலியா மற்றும் சீனாவில் காண்கின்றேன். சில சமயங்களில் தைவானுக்கு செல்லும் போது இரவு நேரத்தில் விமானம் தரையிறங்கும் போது, நிறைய மக்கள் விமான நிலையத்திற்கே வந்து விடுகிறார்கள்.விமான நிலைய அதிகாரிகளுக்கு மக்களின் மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் எவ்வாறு கையாள்வது என்றே தெரிவதில்லை.
அனைவருமே ஒரே விதம் தான் என்றே நான் கருதுகிறேன். நமது வெளிப்பாடும், வளர்க்கப்பட்ட விதமும் தான் வெவ்வேறாக இருக்கிறது. உள்ளத்திலிருந்து விடுதலையாக உணர வேண்டும்.அந்த சுதந்திர உணர்விருந்தால் பிறருடன் தொடர்புணர்வை அடைவீர்கள். பயம், சந்தேகம், அல்லது ஒரு விதமான தயக்கம் மனதில் இருந்தால், அது குருவாகினும் யாராயினும் சற்றே பின் வாங்குவீர்கள்.

இந்தியாவில் நான் அடிக்கடி இதைக் கூறுவதுண்டு. உங்கள் வீட்டில் எந்த விதமான விருந்தினரை நீங்கள் விரும்புவீர்கள்? நெருங்கிய உணர்வுடன், எந்த சம்பிரதாயத்தையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தில் ஒருவராக பழகும் ஒருவரையா அல்லது முறையான வரவேற்பை எதிர்பார்த்து,நீங்கள் செய்யும் அல்லது செய்யாத எது ஒன்றையும் குறை கூறும் ஒருவரையா? நெருங்கிய உணர்வுடன் இருக்கும் ஒருவரையே நீங்கள் விரும்புவீர்கள். அவர்களுக்கு பசித்தால் அதைக் கூறவேண்டும் என்றே எண்ணுவீர்கள். அவர்கள் எண்ணுவதை எல்லாம் நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவதை நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்.

நாம் ஒருவர் வீட்டிற்கு செல்லும் போது நாம் விரும்புவதையெல்லாம் அவர் செய்யவேண்டும் என்னும் உபசாரத்தை எதிர்பார்க்கிறோம்,நாம் முறையான வரவேற்பை எதிர்பார்த்து, நமது விருந்தினர் சம்பிரதாயத்தை எதிர்பார்க்காதவராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இது நியாயமல்ல. உங்களது விருந்தினர் குடும்பத்துடன் இணைந்து இருந்தால் உங்களுக்கு அவர்களைக் கவனிக்கும் பாரம் குறையும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களில் ஓர் பகுதியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இந்த அழுத்தம் இருக்காது. அதே போன்று நீங்களும் ஓர் விருந்தினர் போன்று நடந்து கொள்ளாமல் இருக்கிறீர்களா? அல்லது சம்பிரதாயமாக  உங்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

இன்று BBC யால் நிர்பயாவை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம்  வெளியிடப்பட்டது . இந்திய அரசாங்கம் அதைத் தடை செய்ய முயன்றாலும், பல்வேறு வழிகளில் அது வெளிவந்து விட்டது. அப்படத்தில் பெண்களை பொறுத்த வரையில் இந்திய கலாசாரம் பிற்பட்ட ஒன்று என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் யாவை?

இத்தகைய படங்களுக்கு நான் அதிக மதிப்புத் தருவதில்லை. ஏனெனில், இவற்றில் பல படங்கள்,  தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது திரைக்கதை எழுதுபவர் ஆகியோரின் கற்பனையாக இருக்கின்றன.ஒருவர் ஒரு கருத்தும் வேறொருவர் மற்றொரு பார்வையும் கொண்டிருப்பர். உலகில்  அவரவர் தங்களுடைய கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பெற்றவர். தங்கள் கருத்துக்களை வெளியிடும் கலைஞர்களை நாம் கட்டுப்படுத்தக் கூடாது.அது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக கூட இருக்கலாம்.இதைப் புரிந்து கொண்டு கலையை கலையாகவே காண வேண்டும். அவ்வாறு தான் நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.நேற்று இந்தியப் பாராளுமன்றத்தில், சில கலைஞர்கள் கத்திக் கொண்டிருந்தனர். பல திரைப்பட நடிகர்கள் பாராளுமன்றத்திற்குள் இருப்பதால் அதுவும் ஓர் திரைப்படக்காட்சி போன்றே இருக்கிறது.


இப்படம் உண்மைக் கதை என்று எண்ணினால், அது கலைஞரின் கற்பனை என்றே நினைவில் கொள்ளவேண்டும்.ஆவணப்படங்கள் கூட பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும்  இருக்க வேண்டும் என்பதற்காக சற்று ஜனரஞ்சகமாகவே தயாரிக்கப்படுகின்றன.