எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்: அதிகமாகப் புரிந்து கொள்

செவ்வாய்க்கிழமை 31 மார்ச் 2015                                   

சிங்கப்பூர்

(எலிகளின் ஓட்டப்பந்தயத்தை தாண்டி என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)


கேள்வி பதில்கள்

சற்று நேரத்துக்கு முன்பு, எல்லாமே நாம் பார்க்கும் விதத்தில் உள்ளது என்று கூறினீர்கள். எனவே நாம் பார்த்து அறிந்து கொள்ளும் சக்தியை எப்படி மேம்படுத்த முடியும்?

நாம் பார்த்து அறிந்து கொள்ளும் சக்தியை, சரியான உணவு, தியானம் மற்றும் உடற் பயிற்சிகளால் மேம்படுத்திக் கொள்ள முடியும். நம் உடலின் இரத்த ஓட்டம் மற்றும் ப்ராண சக்தியின் ஓட்டம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. நன்றாக உண்டுவிட்டு ஒரு வேலையும் செய்யாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள். நீ ஒரு உடற்பயிற்சியும் செய்வதில்லை, அகலத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பார்த்து அறிந்து கொள்ளும் சக்தி மேக மூட்டத்தில் மூடியது போலிருக்கும். உடற்பயிற்சியால் இரத்த ஓட்டம் மற்றும் ப்ராண சக்தியின் ஓட்டம் மேம்படும்.சரியான உணவால் நம் பார்வையையும், நம் உள்ளுணர்வையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். சரியான மூச்சும் தியானமும் இதற்கு உதவும். 70 %  வரை இதன் பங்கு உள்ளது என்று நான் சொல்வேன்.

சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில், மக்களிடையே சகிப்புத் தன்மையை எப்படி ஊக்குவிக்க முடியும் ?

நீ இந்தக் கேள்வியைக் கேட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கவலையும் இது தான். இரவு பகலாக, நானும் மக்களை இந்த பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகளிலிருந்து எப்படி விடுவிக்க முடியும் என்ற சிந்தனையில் இருக்கிறேன். வேறுபாடுகளை நீக்கி, மக்களனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்,ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ வேண்டும். கல்வியறிவின் மூலம் இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

இனவெறி / மதவெறி இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இன வெறியர்கள் மற்றும் வன்முறையாளர்கள், நம்மை விமான நிலையங்களில் காலணிகளை / செருப்புகளைக் கழற்றி வைத்து சோதனைக்குள்ளாக்கி விட்டார்கள். வன்முறையாளர்களின் செயல்களால், மாதா கோவில்களிலும் மற்ற வழிபாடு செய்யும் இடங்களிலும் கழற்றி வைக்காத காலணிகளை, பெல்ட்களை, கோட்டுகளை விமான நிலையங்களில் சோதனையின் போது கழற்றி வைக்க வேண்டியிருக்கிறது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலைமையாகும்.

எல்லா நாடுகளிலும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய அறிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை நம் கல்வித் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கப்பூர் ஒரு அருமையான உதாரணமாக இருக்கிறது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் மற்றும் புத்தர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்கிறார்கள். இதற்காக இந்த நாட்டின் முந்தைய பிரதம மந்திரியான திருவாளர் லீ க்வான் யூக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அவர் தான் உறுதியாக நின்று “நாமனைவரும் ஒன்று சேர்ந்து இங்கு வாழ வேண்டும்” என்று சொன்னார். இது ஒரு பெருமைக்குரிய உதாரணமாகும்.

எனக்கு “சகித்துக் கொள்வது” என்ற வார்த்தை பிடிக்காது. ஏன் என்று அறிவீர்களா? சகித்துக் கொள்வது என்றால் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை நீங்கள் சகித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக உங்களுக்கு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும் பிடிக்காது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள். இது சரியல்ல. 

நாம் ஒருவரோடு ஒருவர் அன்போடு, மற்றவர்களின் நல்ல குணங்களைப் பாராட்டி, மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் பல மலர்களால் ஆன ஒரு பூங்கொத்து போன்றது. இந்த பூமியில் பல வகையான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உள்ளன. ஏதாவது ஒரு கலாசாரம் அழிந்தாலும், அது இந்த பூமியின் பாரம்பரியத்துக்கு நஷ்டமாகக் கருதப்படும். உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் ஈராக் நாட்டில் நடந்த யெஸிடிஸ் இனமக்களின் படுகொலை 73வது தடவையாக நடந்தது. அதற்கு முன்பாக 72 தடவைகள் அப்படிப் பட்ட படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களுடைய ஜனத்தொகை 2 கோடி 70 லட்சம் இருந்திருக்கிறது. இன்று அவர்களுடைய ஜனத்தொகை குறைந்து 10 லட்சமாகி விட்டது. அவர்களில் சிலர் என்னிடம் வந்து அவர்களுடைய இனத்தைச் சேர்ந்த 15000 பேர் சிஞ்சார் மலைப் பகுதியில் உணவு மற்றும் நீர் இல்லாமல் மாட்டிக்கொண்டு தவிப்பதாக சொன்னார்கள். யாரும் எங்களுக்கு உதவி செய்ய வில்லை. தயவு செய்து நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

எனவே வாழும் கலையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் சேர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வதற்காக நாலே வாரத்தில் 120 டன் எடையுள்ள தானியங்களையும் மற்ற உணவுப்பொருட்களையும் சேகரித்து விமானம் மூலம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார்கள். அப் பொருட்களை விமானத்தில் ஏற்றக் கூட யாரும் முன் வர வில்லை. எனவே நான் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு அரசுத் துறையில் பேசினேன். அவர்கள் ஈராக் அரசோடு பேசி அவர்களை குர்டிஸ்தான் அரசோடு பேசச் செய்து நிவாரணப் பொருட்களை யெஸிடி இன மக்களுக்கு அனுப்பி வைக்கச் செய்தோம். 15000 பேர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும்.

இந்த சிறுபான்மையான யெஸிடி இன மக்களிடம் தங்கள் கலாசாரத்தை, பாரம்பரியப் பழக்க வழக்கங்களைக் காத்து வளர்க்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர்களுடைய கலாசாரம் 5000 வருடங்களாக காக்கப்பட்டிருக்கிறது. இது உலகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி மதமாற்றம் செய்வதில் ஒரு அர்த்தமும் கிடையாது. இன்று உலகை வன்முறையால் துன்புறுத்தும் மக்களுக்கு இதை உறுதியாகச் சொல்ல வேண்டும்.நாமனைவரும் ஒன்று சேர்ந்து, இப்படிப்பட்ட மாற்றத்தை எப்படிக் கொண்டு வரலாம் என்று சிந்திப்பது அவசியம். நீங்களனைவரும் என்ன சொல்கிறீர்கள் ? மத சம்பந்தமான கல்வியறிவு அவசியம். ஆனால் அது வெறியாக மாறக் கூடாது. மத வெறியர்களிடமிருந்து மக்கள் ஒதுங்க வேண்டும்.

என்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றலாம்? என் பிரியமானவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் ?

நீ 100 % உன்னால் முடிந்ததைச் செய். அவர்கள் அதற்கு மேலே எதிர்பார்த்தால்“ என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னால் முடியாது “ என்று சொல். நீ ஒரு டாக்டராக இல்லாத போது, யாராவது அவர்களுடைய நோயை குணப்படுத்த சொன்னால், நீ என்ன செய்வாய்?அவர்களுடைய திருப்திக்காக அவர்களுக்கு ஊசி போடுவாயா? இல்லை! “அன்புக்குரியவரே ! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் “ என்று நேர்மையாக அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்களுக்குப் புரிந்துவிடும். நீ 100% முடிந்ததை செய். அப்படி தான் மற்றவர்களுடைய தேவையை நிறைவேற்ற வேண்டும். இப்போது நீ மற்றவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய். அப்படி அவர்கள் செய்யாவிட்டால் வருந்த வேண்டாம். அவர்கள் மீது கருணை காட்டு. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்வார்கள் என்று நம்பு. எப்படி எடுத்துச் சொல்வது என்று அவர்கள் அறிய வில்லை. எல்லோரும் “நன்றி” என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு வேளை அவர்கள் உனக்கு நன்றி சொல்லா விட்டால், அவர்களுக்கு அத்தகைய பண்பாடுகளை யாரும் சொல்லிக் கிடைக்க வில்லை என்று உணர்ந்து அவர்களிடம் கருணையோடு நடந்து கொள். 

நீ அந்த நிகழ்ச்சிக்கப்பால் பார்க்கவேண்டும்.அதை ஒரு பெரிய அளவில் எடுத்துக் கொள். இவ்வுலகில் ஒருவருடைய பழக்க வழக்கங்கள், அவர்களுடைய வளர்ப்பைப் பொறுத்திருக்கிறது. அவர்களுடைய கல்வியையும், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளையும் பொறுத்திருக்கும். அவர்களிடம், இந்த மூன்று விஷயங்களில் ஏதாவது குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் வெளிப்படும். எனவே அவர்களைப் பழி சொல்வதை கைவிட்டு அவர்களைப் பார்த்து, அவர்களுக்கு உனக்கு கிடைத்ததை போன்ற கல்வி கிடைக்கவில்லை என்றுணர்ந்து மன்னித்துவிடு. உனக்கிருக்கும் உணர்திறன் அவர்களிடம் வளரவில்லை. நீ மற்றவர்களுடைய தேவைகளை உணர்கிறாய். 

அவர்களிடம் அந்தத் திறமை இல்லை. யாராவது உனக்கு ஏதாவது காரியம் செய்வதாக வைத்துக் கொள். நீ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறாய். நீ செய்யும் உதவிக்கு யாரோ திருப்பி நன்றி சொல்லாவிட்டால், அவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லை. பண்பாடு இல்லை என்று விட்டு விடு. அவர்களைப் பழிக்க வேண்டாம். இதைத் தான் நான் உனக்குச் சொல்வேன். நீ அவர்களைப் பழிக்கும் போது உனக்கு கசப்புணர்வு ஏற்படுகிறது.அவர்களுக்குப்  போதிய கல்வியறிவு இல்லாததால் தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று நீ விட்டுவிட்டால் உன் மனம் அமைதியடையும். நீ என்ன சொல்கிறாய்?

விஞ்ஞானத்துக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்க விரும்புகிறோம்.

இது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். கீழைநாடுகளில் விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்து செல்கின்றன. நீ பகவத் கீதையையோ, உபநிஷத்துக்களையோ படித்தால், அவை ஞான விஞ்ஞானம் என்று சொல்வதை நீ அறிய முடியும். அதன்படி விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்து செல்வதைப் பார்க்கலாம். உண்மையில், ஆறு வகையான தத்துவ சாத்திரங்களில்,முதல் மூன்றும் பதார்த்தங்களை பற்றிய விஞ்ஞானமாகும். அதன்படி நீ ஒரு அணுவை முழுமையாக அறிந்து கொண்டால், நீ முக்தியடையலாம். பதார்த்த ஞானம் மோட்சமாகும். நீ ஒரு அணுவை முழுமையாகப் புரிந்து கொள்ளும் போது மோட்சமடைவாய். கடவுளைப் பற்றிய கருத்துக்களை தத்துவ சாத்திரங்கள் பேசவே இல்லை. வைசேஷிகம், நியாயம் மற்றும் சாங்க்யம் என்பவை மூன்று தர்ஷணங்கள் என்று சொல்லப் படுகின்றன. நம் உடல் எட்டு பதார்த்தங்களால் ஆனது. – நீர், பூமி, காற்று, நெருப்பு, வெட்டவெளி (ஆகாயம்), மனம், அறிவு மற்றும் நினைவாற்றல் இவைகளால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இவையனைத்தும் ஆத்மாவால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் மூன்று கண்களுக்குத் தெரியாதவை. திடப்  பொருள்களாக இல்லை. அவை மனம், அறிவு மற்றும் நினைவாற்றல் எனப்படும். மற்ற ஐந்தும் நம்மால் பார்த்து உணரமுடிந்த பொருள்களாகும். அவை பூமி, காற்று, நீர், நெருப்பு மற்றும் வெட்டவெளி எனப்படும்.

இந்த எட்டு பதார்த்தங்களையும் நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போது நீ அந்த நிலையான ஒன்றை அறிய முடியும். அது தான் உன் ஆத்மா. உலகில் எல்லாமே ஆத்மாவால் உருவானவை. (இந்த எட்டு பதார்த்தங்களும் ஆத்மாவால் நிறைந்திருக்கின்றன. இந்த ஒன்றை நீ புரிந்து கொள்வது, சமாதி அல்லது தியானம் என்றழைக்கப் படுகிறது. நீங்கள் ப்ரொஃபஸர் துர் என்பவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் உலகில் ஒரு தலை சிறந்த அணு விஞ்ஞானியாவார். ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார். “குருதேவா! நான் இப்போதெல்லாம் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும் போது, மக்கள் நான் தத்துவ ஞானத்தைப் பற்றிப் பேசுவதாக நினைக்கிறார்கள்.” (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்) அவர் சொன்னார். “ நான் 40 ஆண்டுகளாக பதார்த்தங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கடைசியில் தெரிந்து கொண்டது இது தான். பதார்த்தம் என்று ஒன்றுமே கிடையாது. எல்லாமே ஒரு அலைத் தன்மை தான். எல்லாமே அலைகளால் ஆக்கப்பட்டவை தான்.

எனவே குவாண்டம் பௌதீகத்தைப் பற்றிச் சொல்லும் போது வேதாந்தம் படிப்பதைப் போலிருக்கிறது. வேதாந்தம் படிக்கும் போது “ ஓ! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதைப் பற்றித் தான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவாய். காண்பதெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் தோற்றம் தான். ஒரு கனவு போன்றது. உண்மையல்ல. வெகு காலத்துக்கு முன்பே அவர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள். சூரியன் உதிப்பதும், மறைவதும் ஒரு தோற்றம் தான் என்று சொல்லியிருக்கிறார்கள். சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் இந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒன்பது கிரகங்களைப் பிரதிஷ்டை செய்திருப்பதை காணலாம். சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றியும் இருப்பதைப் பார்க்கலாம். கலீலியோ தான் பூமி உருண்டை என்பதை கண்டு பிடிக்கவில்லை. வேத காலத்தில் பூமியைப் பூகோளம் என்றழைத்தார்கள். உருண்டை வடிவானது என்பது இதன் பொருள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருண்டை வடிவம் கொண்டது என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.

கம்போடியாவில் ஒரு பழைய கோவில் உள்ளது. கி.பி. 200 ல் கட்டப்பட்டது. அங்கு நீங்கள் விஷ்ணு அவர் கையில் உருண்டை வடிவமான பூமியைத் தூக்கிக் கொண்டிருப்பது போன்ற சிலையைக் காணலாம். எனவே பூமியின் வடிவத்தை மக்கள் பல காலமாக அறிந்திருந்தார்கள். விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று முரண்பாடானவை அல்ல. விஞ்ஞானம் என்றால் இது என்ன? என்று தெரிந்து கொள்வது. பதார்த்த அறிவைப் பெறுவது. ஆன்மீகம் என்றால் நம்மை பற்றி அறிவது. நான் யார்? என்ற கேள்விக்கு விடை தேடுவது. காண்பதெல்லாம் எந்தப் பொருளால் ஆனது என்பதை அறிவது. இது தான் ஆன்மீகம். எனவே விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவையாகும். கீழைநாடுகளில் எந்த விஞ்ஞானியும் கொலை செய்யப்படவில்லை. அப்படி நடந்ததே கிடையாது. விஞ்ஞானிகள் சமூகத்தினரால் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

குருதேவா ! இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்பதைப் பற்றி பல விதமான மனிதர்கள் பல விதமான கருத்துக்களைச் சொல்கிறார்கள். இப் பிறவியில் நடந்தவைகளை நாம் இறப்புக்குப் பின் நினைவு வைத்திருப்போமா? அப்படி இல்லையென்றால் இப்பிறவியின் செயல்களால் என்ன பயன் ?

சொல். 2014 மே மாதம் 29ம் தேதி காலை என்ன சிற்றுண்டி எடுத்துக் கொண்டாய் ? உனக்கு நினைவு இல்லை. இல்லையா ? (குறும்பாக) அப்போது காலை சிற்றுண்டி எடுத்துக் கொண்டதால் என்ன நன்மை கிடைத்தது ? (பார்வையாளர்கள் பெரிதாகச் சிரிக்கிறார்கள்). பார். வாழ்க்கையில் நாம் பல செயல்களைச் செய்கிறோம். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. 

ஒவ்வொரு நாளும் பல் துலக்குகிறோம். இல்லையா? 5 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் 30 ம் தேதி என்ன பற்பசை உபயோகித்தாய்?எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. சில செயல்களைக் கண்டிப்பாக நினைவில் வைக்க வேண்டும். நல்லது! இறப்பு என்பது இவ்வுலகை விட்டு ஒரு மறைந்திருக்கும் உலகுக்குச் செல்வது. நமக்குத் தெரியாத இவ்வுலகின் உண்மைகளைத் தொடுவது. இப்போது அதைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை. நாம் இவ்வுடலை விடும்போது, இரண்டு கேள்விகள் நம் முன் வரும். நாம் எவ்வளவு ஞானமடைந்திருக்கிறோம்? நாம் எவ்வளவு அன்பு செலுத்தியிருக்கிறோம்? ஒரு நிமிட நேரத்தில், உன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும், உன் மனதில் ஒரு திரைப்படம் போல வந்து செல்லும். நீ செய்த எல்லாமே வரும் – வருத்தத்தோடு அல்ல. அதில் நீ கற்றுக் கொண்டவைகளும் வரும். நீ எடுத்துப் போவது கற்றுக் கொண்ட பாடங்கள் மட்டுமே.