சிறந்த தலைவர்களாக இருத்தல்

வியாழக்கிழமை 19 மார்ச் 2015

டோக்கியோ ஜப்பான்



(சிறந்த தலைவர்களாவதற்குக் குறிப்புகள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

நான் பல தொழில்கள் நடத்தி வருகின்றேன். பெரும்பாலும் நலன் தொடர்பானவை, கல்வி, மற்றும் ஆலோசனை தொழில்கள். துரதிர்ஷ்டவசமாக இத்தொழில்கள் அனைத்திலும், மக்களை முக்கியமாகப் பண விஷயத்தில் எமாற்றுக்காரர்களாக காண்கின்றேன். முதலில் இதைப் பற்றி வருந்தக்கூடாது, இவ்வாறு நிகழ்வது இயல்பு தான், அவற்றை ஒதுக்கி விட்டு நான் நேர்மறையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் பணம் என்பது குடும்பம் மற்றும் என் பிற தொழில்களை பாதிக்கின்றது. நான் இவ்வாறே வருவதை எதிர்கொண்டு தொடருவதா அல்லது அனைத்தையும் விட்டு விடுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

முதலில் யாரிடம் கருணை காட்டுகின்றோம் என்பதை பார்க்க வேண்டும். தகுதியற்றவர்களிடம் கருணை காட்ட முடியாது. அது உங்களை மேலும் ஏமாற்ற வழிவகுக்கும். நீங்கள் கருணை காட்ட விரும்புபவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள் தாமா என்று கவனியுங்கள். இரண்டாவதாக, நன்னெறிகள் மற்றும் நேர்மை இவற்றில் பயிற்சி கொடுங்கள். ஏன் சிலர் ஏமாற்றுகின்றனர்? ஏனெனில் அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய பரந்த கண்ணோட்டம் இல்லை. அவர்களது கல்வித் திட்டத்தில் அது இல்லை. மதிப்பமைப்பின்மையால் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. எனவே மதிப்பு விழுமங்கள் பற்றிய சிறிய அளவு கல்வி அவர்களது மனநிலையினை மாற்றும். அதனால் அவர்கள் பிறருடன் தொடர்புள்ளவர்களாகி,நேர்மையுடன் இருக்கக் கூடும். மூன்றாவதாக, நாம் நம்முடைய மனதையே உற்றுப் பார்க்க வேண்டும். மூன்று பேரிடம் நமக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டால், நான்காவது மனிதனும், தவறேதும் இன்றி அதே முத்திரையைப் பெறுவான். அடுத்தடுத்து ஏற்படும் மோசமான அனுபவங்கள் நம்மை அவ்வாறு  காணச் செய்யும். கடந்த காலம் நிகழ்காலத்தைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

என்  பெயர் சோபியா, நான் ரஷ்யாவிலிருந்து வருகிறேன். நிறுவனங்களில் நாம் எவ்வகை தண்டனைகள் மேற்கொள்ள வேண்டும்?

அது நிறுவனத்தில் எந்த விதமான சூழல் நிலவுகிறது என்பதைப் பொறுத்தது. சுமுகமான, கொண்டாட்டமான சந்தோஷமான சூழல் இருந்தால் தவறு செய்பவரிடம் சிறிது அலட்சியமாக இருப்பதே போதும். அத்தகைய சூழல் இல்லையெனில் தேவையான அளவு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மூன்று வாய்ப்புக்கள் அளியுங்கள், அப்படியும் ஒருவர் திருந்தவில்லையெனில் வெளியேற்றி விடுங்கள். ஒரு தொழில் நிறுவனத்தை தொண்டு நிறுவனத்தை போன்று நடத்த முடியாது, தொண்டு நிறுவனத்தை தொழில் நிறுவனத்தைப் போன்று நடத்தமுடியாது.

என்னுடைய நிறுவனத்தில் நிறையப் பேர் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பல தடவைகள் விளம்பரம் செய்த பின்னரும், மக்கள் வரவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? இது நலன் அளித்தல் தொடர்பானது.

ஒரு வேளை, நீங்கள் மக்கள் எங்கெல்லாம் விளம்பரங்களை பார்ப்பதில்லையோ அங்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்து அவர்களுடன் பேச வேண்டும். விளம்பரம் செய்வது என்பது பணியமர்த்துதலில் ஒரு விதமானது. மற்றொன்று சற்றுப் பயணம் செய்து தொடர்பு கொள்ளுதல் ஆகும். ஒருவருக்கொருவர் நேரிடையான தொடர்பு இருந்தால் அது மக்களை ஊக்குவிக்கலாம்.

நான் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனம் ஜப்பானிலும் இந்தியாவிலும் நடத்தி வருகிறேன். ஜப்பானில் 15 பேரும், இந்தியாவில் 30 பேரும் பணிபுரிகின்றனர். இந்த இரு தரப்பினருக் குமிடையே தொடர்பு தான் என்னுடைய பிரச்சினையே. இந்திய பணியாளர்களுக்கு ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுக்க முயல்கின்றேன், ஆனால் இந்த காலகட்டத்தில் பயனளிக்க வில்லை. எவ்வாறு ஜப்பானியர்கள் சர்வதேச கல்வியினைப் பெரும் வகையில், சிறு வயதிலிருந்தே அவர்கள் ஆங்கிலம் கற்க உதவ முடியும்?

மொழி, தற்காலத்தில் பிரச்சினையே அல்ல. உலகெங்கும் மக்கள் ஒரே மொழியினை பேசுவதே இல்லை. ஆங்கிலம் சர்வதேச மொழி என்று நீங்கள் கூறினாலும் கூட, தென் அமெரிக்காவிற்கு சென்றால், அங்கு மக்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. ஐரோப்பாவில் பலர் ஆங்கிலம் பேசுவதில்லை. ரஷ்யாவிற்குச் சென்றால் அங்கு யார் ஆங்கிலம் பேசுகிறார்கள்? இந்தியாவிலும் கூட, சில இடங்களை தவிர, மீதியிடங்களில் மக்கள் ஆங்கிலம் பரவலாகப் பேசுவதில்லை. எனவே முதலில், மொழி ஒரு தடை அல்ல. ஆனால், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள சற்றுக் கூட நேரம் எடுத்துக் கொள்ளலாம், அந்த சூழலை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இங்கு நமது பெங்களூரு ஆஸ்ரமத்தில், மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசுபவர்கள் உள்ளனர். இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் கன்னடம் மட்டுமே பேசுவார்கள். ஆனால் மேலாண்மையினர் கன்னடம் பேசுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் ஹிந்தியே பேசுகின்றனர். ஆங்கிலமே தெரியாதவர்களும் இருக்கின்றனர். எனவே இங்கு வந்து 3-4 தினங்கள் தங்கியிருந்து பாருங்கள். அனைவரிடமும் ஒரே நிலை அர்ப்பணிப்பு இருக்கும் போது எவ்வாறுஅனைத்தும் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைக் காண்பீர்கள்.

எனக்குப் பல தொழில்கள் உள்ளன. நான்கு பள்ளிகளுக்கு தலைவராக இருக்கின்றேன். மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த மன அழுத்தத்திலிருப்பதைக் காண்கின்றேன். இதிலிருந்து அவர்கள் வெளிவர நாம் எவ்வாறு உதவ முடியும்?

பள்ளிகளுக்கான சிறப்புப் பயிற்சி வாழும்கலையில் உள்ளது. அது அதிசயங்களை நிகழ்த்துகின்றது. அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் ஒரு நிகழ்ச்சியைக் கூற விரும்புகின்றேன். ஒரு மாவட்டப் பள்ளியில் ஆண்டுக்கும் 260 வன்முறைகள் நடந்து கொண்டிருந்தன.இந்தப் பயிற்சியினைப் பெற்ற ஆண்டில், அது 62 ஆகக் குறைந்து விட்டது. இரண்டாவது பயிற்சியாண்டில் 20 ஆகக் குறைந்து விட்டது. ஆகவே குழந்தைகள் வன்முறையின்மை, ஆக்கிரமிப்பின்மை நட்பு, ஒத்துழைப்பு, ஆகியவற்றை கற்க வேண்டும். இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் நம்மிடம் உள்ளன. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். பயிற்சிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஏனெனில் எவ்வாறு எதிர்மறையைக் கையாளுவது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

பள்ளியிலோ வீட்டிலோ யாருமே எவ்வாறு எதிர்மறைகளைக் கையாள்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே இல்லை. கோபம்,பொறாமை, விரக்தி இவற்றினை அடைவது இயல்பு ஆகும். இந்த இயல்பான எதிர்மறை உணர்வுகள் ஏற்படும்போது, அவற்றை மனம் எவ்வாறு கையாள வேண்டும் என்று யார் கற்றுத் தருகின்றார்கள்? நாம் இவற்றை கையாளும் விதத்தினை அறியாமல் இருக்கும் போது,அழுத்தம் மேலும் மேலும் அதிகமாகி, வன்முறையாக வெளிப்படுகின்றது. சில நேரங்களில் மக்கள் மனப்பாதிப்பு அதிகரித்து சீர்குலைகின்றனர். 

புத்திசாலிக் குழந்தைகள் 17 அல்லது 18 வயதிற்குள் இருமனக் குழப்பம் (bipolar) முரண் மூளைக்  கோளாறு (schizophrenia) ஆகிய மன நோய்களை அடைகின்றனர். எவ்வாறு எதிர்மறை உணர்ச்சிகளை கையாள்வது, எவ்வாறு தங்களுடைய மனதைக் கையாண்டு அனைவருடனும் நட்புடன் இருப்பது என்பவற்றை நாம் அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும். ஒரு வகுப்பறையில் ஒரு குழந்தையை உனக்கு எத்தனை நண்பர்கள் என்று கேட்டால், மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து என்றே கூறுகின்றது. ஐயாயிரம் பேர் படிக்கும் பள்ளியில் 50 பேராவது நண்பர்கள் இல்லையெனில் எவ்வாறு இவ்வுலகிலுள்ள 7 பில்லியன் மக்களுடன் நட்புடன் இருக்க முடியும் என்று நான் கேட்கின்றேன். எனவே, நாம் நட்பின் மதிப்பு எவ்வாறு சுற்றியுள்ள அனைவருடனும் நட்பாக இருப்பது ஆகியவற்றை குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதில்லை. சில பயிற்சிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.