நிறைவற்றதே புதிய நிறைவானதாகின்றது.

சனிக்கிழமை - 7 மார்ச் - 2015,

பெங்களூரு - இந்தியா


(நீங்கள் நிறைவானவரா என்னும் இடுகையின் தொடர்ச்சி)

பாருங்கள், உலகில் இன்பமும் உள்ளது, துன்பமும் உள்ளது. இதுதான் உலகின் இயற்கை. எதாவது ஒன்று உங்களைத் துன்புறுத்துவதற்கு இருந்துகொண்டே இருக்கும். சமயங்களில் குடும்பத்தவரின் நடத்தை, அல்லது நண்பரின் நடத்தை என்று இப்படி ஏதேனும் இருக்கும். குடும்பத்தவர் சரியாக இருந்தால், அண்டை வீட்டினரால் தொல்லை ஏற்படும். அவர்களும் சரியாக இருந்தால், தெரு நாய்கள் இரவு முழுவதும் குறைத்து உங்களைத் தூங்கவிடாமல் செய்யும்! இல்லையெனில்,  எவ்விதமான பிரச்சினைகளுமே இல்லையெனில், அந்நிலையும் உங்களை திருப்திப்படுத்தாது. அப்போது நீங்கள் பிரச்சினையுள்ளவர்களின் வாழ்வில் தலையிடத் துவங்கி அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முயலுவீர்கள்.

ஆகவே வாழ்க்கை மிகவும் மர்மமானது. அதனால்தான் அது மாயா என்று அழைக்கப்படுகிறது. எதோ ஓர் வழியில் உங்களைச் சிக்கிக்கொள்ள வைத்து, உங்களுக்கு விரக்தியினை ஏற்படுத்தி, மனதில் எதிர்மறை எண்ணங்களை நிரப்புகின்றது. ஆகையால் தான், இவ்வுலகமே மாயை, அதில் சிக்கக் கொள்ளாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், பல்வேறு நிலைமைகளில் நீங்கள் சிக்கிக்கொண்டு தேவையில்லாமல் உங்கள் மனதில் பல்வேறு வகையான எதிர்மறைகளை நிரப்பிக் கொள்கின்றீர்கள். எவ்வளவு நல்ல இடத்தில் நீங்கள் இருந்தாலும் சரி, எதிர்மறையிலும் விரக்தியிலும் நீங்கள் சிக்கிக்கொண்டால் மகிழ்ச்சியற்றவராகவே இருப்பீர்கள். விரக்தியுடன் இருப்பதே ஓர் பழக்கம் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால் யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நீங்களே சுய முயற்சியில் ஞானத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வரவேண்டும்.

ஒரு சமுதாயத்தில் வாழும்போது, சில சமயங்களில் புகழப்பட்டு, சில சமயங்களில் குறை காணப் படுவது இயல்பு தான். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது,மேலதிகாரி உங்களுக்கு வசதியான விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலதிகாரி குறையே இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு வேளை உங்களை கடிந்து கொள்ளும் மேலதிகாரி மூன்று அல்லது நான்கு தடவைகளுக்கு மேற்பட்டு உங்களை இகழ்ந்தால், அவரை நீங்கள் பிரயோஜனமில்லாதவர் என்று முத்திரை குத்திப் பின்னர் அதன் வழியே நடந்து கொள்ளத் துவங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய கருத்து உங்களை எதிர்வினை புரிபவராகவே ஆக்கி விடும்.

உங்கள் கருத்தை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். உலகில் குறைகளும் இருக்கும் என்பதை  ஏற்றுக் கொள்ளுங்கள். மக்களுக்கு  குறைகளுடன் இருக்கும் உரிமை உண்டு, அதை திருத்துவது உங்கள் வேலையல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்களைச் சரி செய்யுமாறு உங்களைக் கேட்கவில்லை. எனவே இதுதான் உலகம் என்று புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு மக்களை அவரவர் இருக்கிறபடியே ஏற்றுக் கொள்வதால் என்ன ஆகின்றது? ஏற்றுக் கொள்வதன் மூலம் சாட்சி பாவத்தினை அடைகின்றீர்கள். அது உங்களை மையமாக ஆழத்தில் நிலைத்திருக்கச் செய்கின்றது.

இதனால் எந்தத் தவறினையும் சுட்டிக் காட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல.கனகபுரா வழியாகச் சென்று கொண்டிருந்தேன்,சாலையோரத்தில் குப்பைக் குவியலை கண்டேன்.என்னுடைய செயலாளரை உடனடியாகக் கவுன்சிலரை அழைக்கும்படி கூறினேன். அவர்களுக்கு நாம் இரண்டு வண்டிகள் குப்பையள்ளுவதற்காக அளித்திருக்கின்றோம். உடனடியாக குப்பைகள் நீக்கப்பட வேண்டும். எனவே நாம் செயல்பட வேண்டும், ஆனால் கோபமோ விரக்தியோ அடையக்கூடாது. அதுதான் ரகசியம். எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும், எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிக் கைகழுவி மூலையில் அமரக்கூடாது. கோபம் கொள்வதும் புகார் கூறுவதும் மிக எளிது. ஆனால் மிக நல்ல நடுநிலைஎன்னவென்றால், கோபம் கொள்ளாமல் செயல்படுவது ஆகும்.

சினம் என்பது உள்ளே வரத் தயாராக இருக்கும், அதை எப்போதுமே வெளியே நிறுத்தி வைக்க வேண்டும். பல மூலைகளில் அது காத்துக் கொண்டிருக்கும், ஏதேனும் ஓர் வழியில் உள்ளே நுழைந்து விடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். எனவே அனைத்து நுழைவு வாயில்களிலும் காவல் தேவை. சினம் உள்ளே நுழையாமல் காத்துக் கொள்ளுங்கள். பிறர் மீது சினம் கொள்வது என்பது சாதரணமாக நிகழ்வது. ஆனால் சில சமயங்களில் நம் மீதே நமக்கு சினம் ஏற்படும். சிறிய விஷயங்களின் காரணமாக நம்மைப் பற்றியே அதிருப்தி ஏற்படும்.

சாந்தம் ஏற்படுத்துவது யோகா. என்ன வந்தாலும் சரி, சினம் உங்களை ஆட்கொள்ளாமல் காத்துக் கொள்ளுங்கள், அப்போது அறிவு நன்றாகச் செயல்படும். மூளையின் திறன் நன்றாக இருக்கும், பல்வேறு விதமான நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்று யோசனைகள் உருவாகும்.

மக்களையும் உங்களை சுற்றியுள்ள நிலைமைகளையும் சினங்கொண்டு விரக்தியடையாதீர்கள். திரும்பத் திரும்ப ஒரே தவறுகளை செய்வதால் உங்கள் மீதேயும் சினம் கொள்ளாதீர்கள். இரண்டுமே உதாவது. சினம் ஏற்படாமல் தடுத்து, உற்சாகத்தை நிலை நிறுத்திக் கொண்டு, தேவையான விதத்தில் தேவையான இடத்தில் செயல் புரிவது என்பது  ஓர் நுட்பமான  சமநிலை ஆகும்.