நீங்கள் யார்?

திங்கள்கிழமை -30 மார்ச் - 2015

சிங்கப்பூர்



ஒரு புதிய இடத்திற்கு செல்லும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுகின்றீர்கள். நீங்கள் யார், எங்கிருந்து வருகின்றீர்கள் என்பதை பற்றியெல்லாம் பேசுகின்றீர்கள் அல்லவா? இப்போது இதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் காண்போம். நாம் யார், எங்கிருந்து வந்தோம், மற்றும் இந்த சிறிய வாழ்க்கை பயணத்திற்குப் பின்னர் எங்கு செல்வோம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

இந்த அரங்கம் இன்னுமொரு 300 ஆண்டுகளுக்கு இங்கேயே நிலைத்திருக்கலாம். ஆனால் இங்கு அமர்ந்திருக்கும் எந்த உடலும் அத்தனை காலம் இருக்காது. நமது அழிநிலை மிகக் குறைவு. நாம் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகள் கூட அதற்குள் இருக்கும் உடலை விட அதிக நாள் நீடித்திருக்கலாம். நான் கூறுவது புரிகிறதா? ஆகவே "என்னுடைய மூலம் என்ன? நான் எங்கிருந்து வந்தேன்? நான் இங்கு இத்தனை ஆண்டுகளாக இருக்கின்றேன், அதற்கு முன்பு எங்கிருந்தேன் தற்போதைய வயதிற்கு முன்னர் இருந்தேனா?" என்றெல்லாம் சிறிது காலம் சிந்தனை செய்யுங்கள்.
புத்தகங்கள் தத்துவங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்களையே நீங்கள் இந்தக் கேள்வியை கேளுங்கள்," என்னுடைய ஆரம்பம் என்ன? நான் எங்கிருந்து வந்தேன்? " இதை மட்டுமே கேட்டுக் கொள்ளுங்கள், வேறெதுவும் இல்லை. நான் கூறுவதற்காக மட்டுமன்றி, இது உண்மையான கேள்வியாக உங்கள் ஆழ்மனதிலிருந்து வெளிவர வேண்டும். இதன் விடை தூண்டுதல் உள்ளதாக இருக்கலாம், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கலாம். அல்லது முற்றிலும் குழப்பமாகவும் இருக்கலாம். ஆனால் மூன்றுமே நல்லது. இந்த விசாரணை அறிவுத்திறனின் அடையாளமாகும்

நானும் தங்கையும், சிறு குழந்தைகளாக இருக்கும் போது, எங்கள் பெற்றோருடன் பூங்காவிற்கு சென்றதுண்டு. எங்கள் பெற்றோரை, இந்த மேகங்கள் எங்கிருந்து வருகின்றன? என்று கேட்டிருக்கிறோம். அவர்களுக்கு விடை தெரிந்ததில்லை. மேகங்கள் நகர்ந்து சென்று கொண்டே இருப்பதால், இவை எங்கே போகின்றன? என்று கேட்டோம். சாதரணமாக குழந்தைகளின் மனதில் ஏற்படக் கூடிய கேள்விகள்தாம் இவை. மூன்று வயதிலிருந்து நாம் கேள்விகள் கேட்கத் துவங்குகிறோம்.கேள்விகள் அறிவு என்னும் ஓர் அங்கம் நம்முள் இருப்பதற்கு அடையாளம் ஆகும். குழந்தைகள் கேள்விகள் கேட்பதைத் தடுக்கக்கூடாது. அவர்களை மேலும் கேட்க நாம் ஊக்குவிக்க வேண்டும்.

பல சமயங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்பதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றன. நீங்கள் என்ன விடை அளிக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல. குழந்தைகள் தங்களுக்கு ஓர் உடன்பிறப்பு கிடைத்தவுடன், "அம்மா! இந்த குழந்தை எங்கிருந்து வந்தது? "என்று கேட்பார்கள். மேலை நாடுகளில் ஸ்டாக்குகள் குழந்தையை எடுத்து வந்தாகக் கூறுகிறார்கள். வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமான விடைகள் அளிக்கப்படுகிறன. ஆனால் பெற்றோர் என்ன கூறினாலும் குழந்தைகள் திருப்தி அடைந்து விடுகின்றன. உண்மையில் ஒவ்வொரு குழந்தையும் உங்கள் பொது அறிவு, மற்றும் அறிவுத்திறனை சோதிக்கின்றன.எனவே பிறந்ததிலிருந்து தொடர்ந்து வரும் இந்த விசாரணைத் திறனை நாம் வாழ்நாள் முழுவதும் பராமரித்துக் கொள்ள வேண்டும். அதுவே ஆன்மீகம், அதுவே அறிவியலும் ஆகும். அறிவியலில் "இது என்ன? எவ்வாறு இது நிகழ்ந்தது என்று கேட்கிறோம். ஆன்மீகத்தில், நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?”என்று கேட்கிறோம்.

பொருள் மற்றும் வினை இன்றி எந்த ஞானமும் பூரணமாகாது. ஒரு வேளை நீங்கள் மஞ்சள் கண்ணாடி அணிந்திருந்தால், நீங்கள் பார்க்கும் எல்லாமே மஞ்சளாக தெரியும். அதனால், அனைத்தும் மஞ்சள் என்று கூற முடியாது. என்ன நிறக் கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள் என்று நன்றாகக் கவனியுங்கள். இதுதான் பொருள் சார்ந்த ஞானம். பொருளுக்கும் வினைக்கும் இடையே உள்ள உறவு தீவிரமானது. நெருக்கமானது, ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. இதுவே ஞானத்தின் பரப்பு ஆகும். ஆன்மீக தேடலற்ற அறிவியல் முற்றுப் பெறாதது, அது போன்றே அறிவியல் மனோபாவமற்ற ஆன்மீகத் தேடல் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது.  அறிவியல் மனப்பான்மை தான் ஆன்மீகத் தேடலின் அடிப்படையாகும். ஆகவே ஆன்மீகம் மற்றும் அறிவியலை புரிந்து கொள்வதே ஞானம். இப்போது நமது கேள்விக்குத் திரும்புவோம்? நாம் எங்கிருந்து வந்தோம்? இதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? இங்கு வருவதற்கு முன்னர் நீங்கள் எங்கிருந்தீர்கள்? இது ஒரு மர்மமான எல்லைக்குள் செல்லும் பயணம், ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருப்பது போன்று நிஜமானதும் கூட.

கவனியுங்கள், நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை கண்டுபிடிக்காமல் இந்த உலகை விட்டு செல்லக் கூடாது. இது மிக முக்கியமானது. இந்த விசாரணையுணர்வு நம்மை சோர்வு, கவலை மற்றும் மனக்குறைகளற்ற வேறொரு பரிமாணத்திற்கு அழைத்து செல்கிறது. இந்த ஆன்மீக விசாரணையின் பக்க விளைவுகள் ஆனந்தம், நம்பிக்கை மற்றும் உள்ளுணர்வு. யாருக்கு இவையெல்லாம் வேண்டாம்? இவையெல்லாம் வேண்டாம் என்று எண்ணுபவர்கள் இந்த ஆன்மீக விசாரணையிலிருந்தும் ஆன்மீகப் பயிற்சிகளிருந்தும் விலகிச் செல்லலாம். வாழ்க்கையை ஒரு பெரிய கோணத்திலிருந்து காண்பதே தவம், மற்றும் ஆன்மீகம். தவம் என்பது ஏதோ நெருப்பில் நிற்பது அல்லது ஒரு காலில் நிற்பது என்பதல்ல.அவையெல்லாம் தேவையில்லை, தவம் என்பது ஆத்மாவின் மூலத்தை அறியும் விசாரணையே ஆகும்.

ஒருவர், எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்டார். "எண்ணங்கள் எழுகின்றனவா? என்று நான் கேட்டதற்கு ஆம் என்றார். நான், சரி! நீங்களே கண்டுபிடியுங்கள், அது உங்களுக்கு எட்டும் தூரத்திலேயே உள்ளது" என்று கூறினேன். "என்னுடைய மூலம் என்ன? இந்தக் கேள்வி உங்களை துன்புறுத்த வேண்டும். அதுவே அறிவின் அடையாளம். ஞானத்தின் முதல் அறிகுறி தன்னுடைய மூலத்தினை விசாரணை செய்வதே ஆகும் என்று கூறப்படுகிறது. இரண்டாவது அறிகுறி கேள்வி கேட்கப்படும் வரையில் எதுவும் கூறாமல் இருப்பதே ஆகும். பிரச்சினையில் இருக்கும் போது பேசுவதை விட மௌனமாக இருப்பதே நல்லது. நாம் வீணான கேள்விகளையே பெரும்பாலும்  கேட்டுக் கொண்டிருக்கிறோம். மருத்துவமனையில் இருக்கும் ஒருவரிடம்," எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர்கள்  "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பதில் கூறுகிறார்கள். நன்றாக இருந்தால் ஏன் மருத்துவமனையில் இருக்க வேண்டும்?

இது ஒரு துளைக் கருவியைப் போன்றது. துளைக்குள் நாணயத்தைப் போட்டவுடன் ஏதோ ஒன்று வெளி வருகின்றது.அது போன்றே நமது கேள்விகளும் பதில்களும் உள்ளன. இவற்றுக்கு அர்த்தமே இல்லை. உண்மையான கேள்வி "என்னுடைய ஆரம்பம்  என்ன? "இது நம்மை இருப்பின் வேறொரு பரிமாணத்திற்கு செல்கின்றது. உடனேயே சோர்விலிருந்து அகன்று விடுகிறோம். வாழ்க்கை மிகப் பரந்தது. நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பங்குடன் உங்களைச் சுற்றியிருக்கும் சிலருடன் முடிந்து விடுவதில்லை. ஆகவே அன்பானவர்களே! நீங்கள் அதையெல்லாம் விட மிக பெரிதானவர்கள் !