ஒரு உண்மையான மற்றும், எளிமையான நிஜம்

14 மே 2013  -  பெங்களூரு, இந்தியா - மூன்றாம் பகுதி

அடுத்த ஸ்லோகம், ‘நமாம் துஷ்க்ருதினோ மூடாஹ் ப்ரபத்யந்தே நராதமாஹ். மாயயாபஹ்ருத-ஜ்ஞானா ஆசூரம் பாவம் அஸ்ரிதாஹ்.’ (7.15)



இங்கு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தீய செயல்களைச் செய்யும் துஷ்டர்களைப் பற்றி கூறுகிறார். யார் துஷ்டன்? தன்னை எப்படியெல்லாம் பிறர் நடத்தினால் விரும்பமாட்டாரோ ஆனாலும் பிறரை அப்படி நடத்துபவரே துஷ்டன். பிறர் உங்களை அப்படி நடத்துவதை விரும்பாதவர், பிறரை அப்படி நடத்தினால் உங்களை துஷ்டன் என்பார்கள். மனதில் துவேஷம் இருந்தால் துஷ்டத்தனத்திற்கு உந்தப்படுவீர்கள். இதன் காரணமாக துஷ்டத்தனம் உங்கள் குணாதிசயத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிடும். இது தீய செயல்களில் முடிகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்முட்டாள்களும்,அறியாமையில் இருப்பவர்களும், தீய செயல்களை செய்பவரும் என்னிடம் சரணடைவதேயில்லை. அவர்களுடைய செயல்கள் மிகக் கீழ்த்தரமானவர்களின் செயல்களை ஒத்திருக்கும். என்னுடைய இயல்பை அவர்களால் அறியவே முடியாது; அடைக்கலம் பெறவே முடியாது. அப்படிப்பட்டவர்களால் என்னை நினைக்கவும் முடியாது, நம்பிக்கை வைக்கவும் முடியாது. பேய்க் குணங்கள் கொண்டவர்கள்; மாயையில் மூழ்கி தன் ஞானத்தை இழந்து தங்கள் புலன்களின் மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்தவர்கள் என்னிடம் கவனம் வைக்க முடியாது.

தீய செயல்களில் ஈடுபடுபவர்களால் தங்கள் சுயத்தை அடையவே முடியாது. வெளிப்புற உலகில் உள்ள புற விஷயங்களிலேயே அவர்கள் எண்ணம் இடைவிடாமல் குவிந்திருக்கும். இது ஏன் இப்படி இருக்கிறது? ஏனென்றால் தனக்குள்ளே ஒருமுறை சென்றால் போதும் அங்கே அவ்வளவு அமைதியையும் ஆனந்ததையும் காண்கிறார். மகிழ்ச்சியாக உள்ள ஒருவரால் எந்த தீய செயல்களையும் செய்யவே முடியாது. இது ஒரு உண்மையான எளிமையான நிஜம்.

ஒருமுறை ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவித்த ஒருவரால், அவர் எவ்வளவு துஷ்டனாக இருந்திருந்தாலும் அவரால் எந்த தீய செயலையும் செய்ய முடியாது. துஷ்டர்கள் என்று யாரும் இல்லை, தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தீய செயல்கள் செய்வதின் காரணம் அவர்கள் தங்களுடனேயே தொடர்பிலில்லை (மையத்திலில்லை). அவர்கள் தங்கள் சுயத்தோடோ அல்லது எந்த ஒரு குருவுடனோ தொடர்பில்லாமல் இருக்கிறார்கள்; கடவுள் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை. அவர்கள் மட்டுமே தீய செயல்கள் செய்கிறார்கள்.

10 – 15 வருடங்களாக இந்திய திரைப் படங்களில் பக்தர்களை தீய செயல்களை செய்பவர்களாகவும் குற்றவாளிகளாகவும் காண்பிக்கிறார்கள், எதிர் நாயகன்களை (வில்லன்) புனித ஆடை அணிந்தவாறு அல்லது திலகத்தோடு (நெற்றியில் சந்தனம், விபூதி அல்லது சிந்தூரம்) இருக்குமாறு காண்பிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். பொதுவாக நெற்றியில் திலகமிடுபவர்கள் பக்தர்களாக இருப்பார்கள். ஆனால் திரைப் படங்களில் அவர்களைத் தீய செயல்களைச் செய்யும் துஷ்டர்களாக காண்பிக்கிறார்கள். எனவே கடவுள் பக்தர்களை எதிர் நாயகன்களாக காண்பிப்பவர்கள் அதைவிட பெரிய எதிர் நாயகன்கள்! கடவுளின் பக்தரை எதிர் நாயகனாகக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். 

அவர்கள் செய்யும் அந்தக் செயல் தவறான ஒன்று. இறைவனிடம் பக்தியுள்ள ஒருவர், வெகு நிச்சயமாகத் தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் காண்பவர், அப்படிப்பட்ட ஒருவர் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடவே முடியாது. ஏதும் அறியாமலும் இருக்க மாட்டார், துஷ்டத்தனமான காரியத்தையும் செய்யமாட்டார். உண்மையிலேயே துஷ்டத்தனமான காரியங்கள் செய்பவர் புத்திசாலியாக இருக்கவே முடியாது. அவர்களை புத்திசாலி என்று அழைக்க முடியுமா?

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்,இது முடியவே முடியாது. அவர் புத்திசாலியாக இருக்க முடியாது, அவர் அறியாதவர். அவர் பிறருக்கு செய்த தீங்கைவிட அதனால் ஏற்படும் விளைவுகளால் அதை விட அதிகம் கஷ்டப்பட போகிறார் என்பதை அவரால் காண இயலவில்லை. அவருக்கு இந்த எளிமையான உண்மை தெரியாததாலேயே இப்படிப்பட்ட தவறான காரியங்களைச் செய்கிறார். பொதுவாக, ஒருவர் ஏதாவது தவறு செய்யும்போது, உள்ளேயிருந்து ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் தன்னுடைய அறியாமையினாலும், முட்டாள்தனத்தினாலும் தன் தவறுகளால் ஏற்படும் உறுத்தலைக் கூட அறிய முடியவதில்லை. தன் வாயில் குத்திக் கொண்ட கூர்மையான முள்ளைப் போலிருந்தாலும், அவர் அதை மேலும் மென்றுகொண்டே இருக்கிறார். அந்த முள்ளை துப்பிவிடாமல் மேலும் மென்று கொண்டேயிருக்கிறார் (அதன் மூலம் தன்னைத் தானே மேலும் காயப் படுத்திக் கொள்கிறார்). இதுதான் அறியாமை.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘இப்படி அறியாமையில் இருப்பவர்கள் உயிர்களில் மிகவும் தாழ்ந்த வகை. மாயையில் மூழ்கிய மனம் கொண்டவர்கள், விழிப்புணர்சியை இழந்தவர்கள், எதிர் மறை உணர்வுகளால் எதிர்மறை குணங்களால் உந்தப்படுபவர்கள், இவர்களால் என்னை அடையவே முடியாது.’ இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு விஷயங்களை கூறியிருக்கிறார்: முதலாவது, அவர் அருளால் மட்டுமே நம்மால் மாயையை வெல்ல முடியும் என்பது. இரண்டாவது, தன்னிடம் சரணடைந்து அடைக்கலம் பெறாதவர்களைப் பற்றி கூறுகிறார். ‘நான் எல்லோர் மீதும் அருளைப் பொழிகிறேன், ஆனாலும் என்னிடம் அடைக்கலாமாவதில்லை. காரணம் அவர்களுடைய அறியாமை மற்றும் முட்டாள்தனம். பின் ஏன் என்னிடம் அடைக்கலாமாவதை மறுக்க வேண்டும்?

புத்திசாலிகளால் மட்டுமே ஆன்மீகப் பாதையில் நடக்க முடியும் என்பதை நான் அடிக்கடி கூறுவது இதனால் தான். அறியாமையில் இருப்பவர்கள் தான் ஒரு பெரிய அரசனைப் போல என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர் ஒரு பிச்சைக்காரர். அவர் என்ன செய்திருந்தாலும் சரி, தன்னை அரசன் என்று நினைத்து கொண்டிருந்தாலும் அவர் பிசைக்காரராகவே இருக்கிறார். சில வார்த்தைகளைக் கூட புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தன்னை ஒரு பேராசிரியராக நினைத்துக் கொள்பவரை என்ன வென்று அழைப்பீர்கள்? அவரை அறியாதவர் என்றே அழைப்பீர்கள்.