தியானம் - ஆரோக்கியத்தை அறிவுக்கெட்டாத அளவு மேம்படுத்தும்

23 மே 2013உலன் பேட்டர், மங்கோலியா




ஒரு உலகளாவிய குடும்பத்தை உருவாக்குவதே வாழும் கலையின் நோக்கம். ஒரே குடும்பம் என்ற உணர்வில் இந்த முழு உலகமும் இணைய வேண்டும். இப்போது மங்கோலியாவில் இது நடப்பதை காண்கிறேன். மங்கோலியாவின் பொருளாதார நிலை மேன்மையடைந்திருக்கிறது, வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியினூடே,மனிதப் பண்புகள் மற்றும் மதிப்புகளை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மங்கோலியாவிற்கு நீண்ட ஆன்மீகப் பாரம்பரியம் உள்ளது. இந்த நாட்டில் இதை சரியான முறையில் தொடரவேண்டும்.

நவீன காலப் பிரச்சினைகளான மன அழுத்தம், தீராக் கவலை மற்றும் வன்முறை ஆகியவைகள் தீர்க்கப்பட வேண்டும். உலகின் இப்பகுதியில் நாம் வளர விடக்கூடாது. சமூகத்தில் வலிமையும் பொருளாதார மேம்பாடும் அடையும் போது, சவால்களும் குற்ற விகிதங்களும் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறீர்களா? உலகில் அதிகபட்ச வளர்ச்சியடைந்த நாடான அங்கு பலப்பல வன்முறைச் சம்பவங்கள் நடந்துவருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வன்முறைச் சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளது. வாழும் கலை அஹிம்சைப் பிராச்சாரத்தை ஆரம்பித்துள்ளது, குறிப்பாக அமெரிக்காவில்! அஹிம்சை மற்றும் அருட் கருணைப் பண்புகளை நம் சமூகத்தில், மற்றும் மங்கோலியாவில், நாம் கொணரவேண்டும்.

செய்வதற்கு நிறைய வேலைகள், ஆனால் இருக்கும் நேரம் குறைவு, செய்வதற்கும் சக்தி இல்லை; இது போன்ற நேரத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. இன்றைய உலகில், நம் தேவைகளை குறைத்துக் கொள்ள இயலாது,நம்முடைய சக்தி அளவை அதிகரிக்க வேண்டும். நம் பழக்கங்களை மாற்றும் போது சக்தி அதிகரிக்கிறது. சரியான ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் போது, நன்கு ஓய்வு எடுக்கும் போது மற்றும் நேர்மறையாய் எண்ணும்போது இது நிகழ்கிறது. உட்கார்ந்து ஒரு அரை மணிநேரம், வேண்டாம் பத்து நிமிடம் எதிர்மறையாய் யோசித்தாலே போதும் நீங்கள் களைப்படைந்து விடுவீர்கள்.

எதிர்மறையிலிருந்து நேர் மறை எண்ணங்கள், புகார் செய்யும் மன நிலையிலிருந்து அருட்கருணை கொள்ளும் மனநிலை, மனஅழுத்தம் கொண்ட முகத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து மனச்சாந்தி என இவற்றை செய்வதே வாழும்கலை. மூச்சைக் கொண்டும் தியானத்தைக் கொண்டும் இவற்றை நாம் செய்ய முடியும். கற்பனை செய்ய முடியாத அளவு உடலாரோக்கியத்தைத் தியானமும், சுதர்ஷனக் கிரியாவும் தர வல்லது என்பதை விஞ்ஞானிகள் இன்று நிரூபித்திருக்கிறார்கள்.

சமீபத்தில், நார்வேயில், ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒரு ஆராய்ச்சியை செய்தார். இரண்டு நாட்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் கூட அது DNA வில், மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளார். நம்முடைய உடலில், சுமார் 300 மரபணுக்கள் கேன்சர் போன்ற நோய்களை ஏற்படுத்தக் காரணமாயுள்ளது, இவை தியானம் செய்வதினால் மட்டுப்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார். அது மட்டுமல்லாமல், தினசரி பயிற்சி செய்து வரும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தாம் உடல், மனம், உணர்வு மற்றும் ஆன்மிகத்தில் மேம்பாடு அடைந்திருப்பதை அறிவிக்கிறார்கள். எப்படி தங்களுடைய ஆரோக்கியம் மேம்பட்டது, மற்றவர்களுடனான உறவு எப்படி மேம்பட்டது என பலப் பல நன்மைகளை பட்டியலிடுகிறார்கள்.

நம்முடைய வேர்களை ஆழமாக்கி பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மற்றும் நாம் உலகில் இருக்கப் போகும் இந்தக் குறுகிய காலத்தில், நாம் அதிகம் புன்னகைத்து சந்தோஷத்தை பரப்ப வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் நான் வந்தபோது இந்த நாட்டின் மொத்த உற்பத்திக் குறியீடு நிச்சயம் அதிகரிக்கும் என்று கூறினேன். அது உண்மையில் அதிகமாகியிருப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைகிறேன். இன்று, ஐக்கிய நாடுகள் சபையால், பயன்படுத்தப்பட்டு வருவது மொத்த மகிழ்ச்சியின் குறியீடு, இந்நாட்டில் அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் படித்தவர்கள் அதிகமாயிருப்பதால், ஆன்மீக மதிப்புகளைப் பற்றி கற்பிக்க முடியும். பூட்டான் தான் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு. மங்கோலியாவும் பூட்டானுடன் இவ்விஷயத்தில் போட்டி போட வேண்டும் என்று விரும்புகிறேன். நிச்சயமாக போட்டியிட்டு மேன்மையடைய முடியும். இதை நமது குறிக்கோளாகக் கொள்வோம். கூடியிருக்கும் அனைவரையும் ஒரு விஷயத்தில் உறுதியெடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டிலுள்ள சிறைகளும் மருத்துவமனைகளும் காலியாகுமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை இலக்காகக் கொண்டு நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டும். இதை சாதிக்க, நாம் அனைவரும் சமூக சேவை செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு ஆனால் அதே சமயம் பேராசை இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களுக்கு பேராசை வரும்போது ஊழல் அதிகமாகிறது.

எங்கு நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு முடிகிறதோ அங்கு ஊழல் ஆரம்பிக்கிறது. எந்த சட்டமும் ஊழலைத் தடுக்க முடியாது. ஊழலைத் தடுக்கக் கூடிய ஒன்று ஆன்மிகம் மட்டுமே. மக்களுக்கு நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு இருக்கும் போது ஊழல் முடிந்து போகும். குற்றங்களுக்கும் ஊழலுக்கும் காரணமான ஒரு நிஜ குற்றவாளி மது மற்றும் போதைக்கு அடிமையாவது தான். மனித வாழ்வை அழிக்கக் கூடிய புகை, மது,போதைப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் நமது இளைஞர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். போதையின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் போவதால் குற்றம் செய்கிறார்கள். எனவே, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மன நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல் தாய்மார்களாக, சகோதரிகளாக, அறிவார்ந்தவர்களாக நாம் நம் இளைஞர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நம் கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் மாசு. உலகெங்கிலும் பல பகுதிகளில் மாசு அதிகரித்துக் கொண்டு வருகிறது. மங்கோலியாவில், நிலம், நீர் என எல்லாம் மாசற்று பரிசுத்தமாக இருந்து வருகிறது. காற்று, நீர், நிலம் மற்றும் ஆகாயத்தின் தூய்மை கெடாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தை ஒரு சூழலியல் சொர்கமாக வைத்துக் கொள்வோம். உணவுப் பயிர் வளர்ப்பதற்காக கேடான வேதிப் பொருட்களை இந்த நிலத்தில் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வோம். பூச்சி மருந்துகள், வேதிப் பொருட்களால் ஆன உரங்கள் இல்லாமல், இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பயிர்களை இயற்கையாய் வளர்ப்போம்.

இயற்கை விவசாய அறிவை, இந்த நுட்பத்தை, மங்கோலியாவிற்கு அளிக்க வாழும் கலை ஆவன செய்யும். இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். இதில் ஏராளமான ஆராய்சிகள் செய்திருக்கிறோம், இதை மங்கோலியாவின் விவசாயிகளிடம் கிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். இருநூறுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை வாழும் கலை இந்தியாவில் நடத்தி வருகிறது. ஒரு பல்கலைக்கழகமும், தொழில் மேலாண்மைக்கான முதுகலை பட்டம் (MBA) அளிக்கும் இரண்டு கல்லூரிகளையும் நடத்தி வருகிறோம். மங்கோலியாவிலிருந்து இந்தியா வந்து கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கென பத்து இடங்களை (அதிக இடங்கள் இல்லை, மொத்தம் 180 இடங்களே இந்தக் கல்லூரியில் உள்ளன) ஒதுக்கச் சொல்லி இதன் துணைத் தலைவரிடம் கேட்டுக் கொள்வேன். உங்கள் நண்பர்களிடமும், மாணவர்களிடமும் இந்தத் தகவலைச் சொல்லுங்கள். அவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

மங்கோலியாவின் மேதகு பிரதமமந்திரியை இன்று காலை சந்தித்தேன்; இங்கு தேவையான பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கத் தயாராக இருப்பதையும் கூறியிருக்கிறேன். மங்கோலியாவில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இதில் ஒரு அங்கமாக இருக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். கிழக்கு மேற்கின் சிறந்தவைகளை, வடக்கு தெற்கின் சிறந்தவைகளை அளிக்கும் ஒரு சில கல்விக் கூடங்களை மங்கோலியாவின் சில மாநிலங்களில் தொடங்கி, ஒரு உலகக் கல்வி மையத்தை உருவாக்க ஒரு குழுவை அமைப்போம்.

வாழ்கை ஒரு மரம் போல. அதன் வேர்கள் எப்படி பழமையாகவும் அதன் கிளைகள் புதிதாகவும் இருக்கிறதோ அப்படியே நம் வாழ்க்கையில் பண்டைய ஞானமும் நவீன அறிவியல் அறிவும் தேவைப்படுகிறது. மக்கள் விரும்பும் ஒரு சிறப்பான தலை மாலிஷ் நுட்பம் இங்கு இருப்பதாக கண்டறிந்தேன். இது உலகளவில் அறியப்படாமல் இருக்கிறது. இதை இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுதும் மக்களிடையே எடுத்துச் சென்று பிரபலப்படுத்த விரும்புகிறேன். ஆயுர்வேதா, அக்குபன்க்சர் மற்றும் ஆஸ்ட்டியோபதியில் நாங்கள் செய்ததைப் போல இதிலும் செய்ய விரும்புகிறேன். மங்கோலிய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவ தொழில் நுட்பங்களையும் உலகெங்கிலும் பிரபலப்படுத்த வேண்டும். எனவே மருத்துவர்களையும் நான் இந்தியாவிற்கு அழைக்க விரும்புகிறேன். வாழும் கலை மூலம் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன்.

கே: நம்முடைய அகத்தில் நடக்கும் உள்நோக்கிய பயணத்தையும் லௌகீக நிகழ்வுகளையும் எப்படி கலப்பது?

குருதேவ்: உள்நோக்கிய பயணமும் லௌகீக நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. உள்ளே ஆனந்தம் நிறைந்திருந்தால் உங்களால் வெளியே சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். எவ்வளவுக்கெவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்களோ அவ்வளவு ஆழாமாகவும் நன்றாகவும் உங்களால் ஓய்வு எடுக்கவும் தியானம் செய்யவும் முடியும். தியானம் செய்யும் போது மகிழ்ச்சி அதிகரிக்கிறது. சோம்பேறியாய் இருப்பவர்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. அதே போல பரபரப்பபாய் வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்றும் கூறமுடியாது. சுறுசுறுப்பு இயல்பு உள்மன அமைதியோடு சேர வேண்டும். அவ்வபோது சில நாட்கள் விடுப்பு எடுத்து உள்ளே ஆழமாய்ச் சென்று தியானம் செய்ய வேண்டும்.

கே: நாம் ஒரு பொம்மை போல இருப்பதாகத் தெரிகிறது. இதைப் பற்றி ஏதேனும் கூறமுடியுமா?


குருதேவ்: ஆம், ஒரு தத்துவார்த்தமான கேள்வி. மிக நல்ல வேலை செய்த ஒருவரையோ அல்லது பெருங்குற்றம் இழைத்த ஒருவரையோ கேட்டால், அதைத் தாங்கள் செய்தது போலவே இல்லை, தங்கள் மூலம் நடந்தது போலவே இருக்கிறது என்றே கூறுவார்கள். இதுதான் பலருடைய அனுபவம். உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று உங்களைச் சுற்றி நடப்பதற்கு சாட்சியாக இருக்கிறது. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் அஷ்டவக்கிர கீதை அல்லது யோக வசிஷ்டா புத்தகங்களைப் படிக்கவும். இவை உங்களுக்கு மிக ஆழமான புரிதலை அளிக்கும்.