பழமையான போதனைகளின் சாரம்

மே 24 - 2013 – ஹாங்காங் - சைனா .

இன்று பௌர்ணமி, புத்த பௌர்ணமி.புத்தர் பிறந்த நாள். அவர் ஞானமடைந்ததும் இதே நாளில் தான். அனைவரும் வசதியாக உணருகிறீர்களா? சம்பிரதாயங்கள் நம்மை விலகி நிற்க வைக்கும். சத்சங்கம் என்றால் நெருங்கி உணர்வது ஆகும். வசதியாக, சுலபமாக, தளர்ந்து இருங்கள், சம்பிரதாயங்கள் எதுவும் தேவையில்லை.



வாழ்கை என்பது உண்மையான நிகழ்வின்  ஒரு மிகச் சிறிய துளியே ஆகும். இங்குள்ள ஒவ்வொரு உணரக்கூடிய பொருளும், நுண்ணிய பரப்பில் மூடப்பட்டு மொத்தப் பரப்பை விட சக்தியுடையதாக இருக்கின்றது. இன்று விஞ்ஞானிகளும் இதை நிரூபித்து இதே முடிவிற்கு வந்திருக்கிறார்கள். நாம் பார்க்கின்ற உலகில் உணரக்கூடிய ஒவ்வொன்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட ஒலித்தகடு போன்றது. நுண்ணிய உலகில் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தவை, நாம் நுண்ணிய உயிரினங்கள். பிரம்மாண்டமான பரப்பு, நுண்ணிய பரப்பு, இந்நுண்ணிய பரப்பைத் தாண்டி, இடைவரைவான இந்த உடல், மற்றும், நாம் பார்க்கும் நிலையானது என்று எண்ணிக் கொண்டிருக்கும் இவ்வுலகப் பரப்பு.

இயற்பியலில் சிறந்த பேராசிரியர்களுள் ஒருவரான, ஜெர்மனியைச்  சார்ந்த தே ஹூர் என்பவர் பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த போது ஒரு சுவையான செய்தியைக் கூறினார்." குருதேவ்! நான் 45 ஆண்டுகளாக பருப்பொருள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து அப்படி எதுவுமில்லை என்று கண்டுபிடித்தேன். இன்று நான் பேசும்போது, பருப்பொருள் என்று எதுவுமில்லை,அலைகளே உள்ளன என்று கூறுவதால், மக்கள், நான் பௌத்தம் அல்லது கீழைநாடுகளின் வேதாந்தம் பேசுவதாக எண்ணுகிறார்கள்." 

பருப்பொருள் என்று நாம் எண்ணுவது பருப்பொருளே அல்ல.பருப்பொருள் என்பது அலைகள் மற்றும் சக்தி தவிர வேறில்லை. குவாண்டம் வேதியலின் படி இந்தப் பிரபஞ்சம் என்பது அலை இயக்கமன்றி வேறில்லை. ஆக, பேராசிரியர் தே ஹூர் பருப்பொருள் என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார். நாம் காண்பது எதுவும் உண்மையில் இருக்கவில்லை!

உடலை எடுத்துக் கொண்டால்,ஒரு முழ உடலையும் சிறு பெட்டியில் அடக்கிவிடலாம். உடலின் எல்லா பகுதிகளையும் சுருக்கிவிடலாம்.சிறு அளவே திடப் பொருள் இருக்கின்றது, மற்றவை வெற்றிடமே. உங்கள் தோலின் ஒரு பகுதியை மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்தால் ஒரு கொசு வலை போன்று தெரியும். நிறைய காலி இடங்கள் உள்ளன. நமது உடல்  ஏறக்குறைய 60% தண்ணீரால் ஆனது. 15% காற்று நிரம்பியுள்ளது. மீதமுள்ளதில் 90% வெற்றிடம். நமது உடலில் மற்றெல்லாவற்றையும் விட பெரும்பான்மையானது வெற்றிடம்- நமது மனம் ஆகாயத்தைப்  போன்ற வெற்றிடமே ஆகும்.

புத்தர் இதையே கூறியுள்ளார். 'ஒவ்வொன்றும் எதுவுமே இல்லை'. உங்கள் உடல், மனம் ஒன்றுமில்லை, காண்பது ஒன்றுமில்லை, நான், நீங்கள் ஒன்றுமில்லை. அதிர்வலைகள். இந்த பிரபஞ்சம் முழுமையுமே அலைகள் தாம். தொன்மையான, அஷ்டவக்கிரகீதையில்," தரங்க பெனபுத்புத" பரபஞ்சமே சமுத்திரம் போன்றது, ஒவ்வொருவரும் சமுத்திரத்தின் அலை போன்றவர். அலைகள் எழும், பின்னர் அடங்கும்.அது போன்று இந்த உடல்கள் தோன்றி 80, 9ஆண்டுகளுக்குப் பின்னர் சமுத்திரத்தில் அடங்கி விடுகின்றன. மீண்டும் தோன்றி மறைகின்றன. பிரபஞ்சம் பல கோடிக்காணக்கான ஆண்டுகளுக்கு இருக்கின்றது. 60, 80 அல்லது 100 என்பது கூட ஒன்றுமே இல்லை.அது மாபெரும் சமுத்திரத்தின் ஒரு அலை போன்றது தான். எத்தனையோ ஆண்டுகளாக, இந்த அலை எழுந்து மறைந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் விழித்தெழுந்து, இது ஒன்றுமில்லை,எதிலுமே ஒன்றுமில்லை என்றுணர்ந்து புன்முறுவலுடன் இருக்கும் நிலை தான் நிர்வாண நிலை.

நிர்வாணா என்பது என்ன? எதுவொன்றும் ஒன்றுமில்லை என்பதுதான். இதை நீங்கள் உணரும் போது ஒரு விடுதலை உணர்வு ஏற்படுகின்றது. இது தான் பழமையான  போதனைகளின் சாரம். இதுதான் தாவோ, இது தான் வேதாந்தம், இதுவே புத்தரின் உபதேசம். இன்று புத்த பௌர்ணமி ஆகையால், புத்தரின் வாழ்க்கையைப் பற்றி சிறிது உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

புத்தர் இவ்வுலகில் துயரங்களைக் கண்ட போது, இவ்வுலக வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் முதுமை அடைந்து, இறப்பது என்பதானால்,வாழ்ந்து என்ன பயன்?  அவர் ஒரு முதுமையான மனிதன், ஒரு சடலம், ஒரு துறவி இவர்களைக் கண்ட போது, தன அரண்மனையை விட்டு வெளி வந்து பல ஆண்டுகள் தியானம் செய்தார்.

அவர் ஞானம் பெற்ற பின் ஏழு நாட்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நுண்ணுலகின் கடவுளர்களும் தேவதைகளும் கவலை அடைந்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு புத்தர் தோன்றி உள்ளார். ஏன் எதுவுமே பேசவில்லை? புத்தர் "அறிந்தவர்கள் பேசமாட்டார்கள். பேசுபவர்கள் அறியமாட்டார்கள்! அப்படிப்பட்டவர்கள் பணம் தேடுவதிலும், உறவுகளை நீடித்து வைத்து கொள்ளுவதிலும், சண்டையிடுவதிலும், உண்டு உறங்குவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். நான் எது கூறினாலும் அவர்கள் மனதில் அது பதியாது." ஆகவே ஏழு நாட்கள் அவர் எதுவுமே பேசாமல் இருந்தார். ஆனால் தேவதைகள் புத்தரிடம்" வரம்பு நிலையில் உள்ளார்கள். நீங்கள் எடுத்துக் கூறினால் புரிந்து கொள்ளுவார்கள்.சிலருக்கு சில விஷயங்கள் தெரியும்,மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்காகவும் நீங்கள் பேச வேண்டும்' என்றார்கள். எனவே ஏழாவது நாள் புத்தர் பேச துவங்கினார்.

ஏழாவது நாள்,பௌர்ணமி முடிந்தபின் புத்தர் பேசத் துவங்கினார். இவையெல்லாமே ஒன்றுமில்லை, ஆதி சங்கரரும் இதையே கூறினார் "நீங்கள் காண்பதெல்லாம் பொய்த் தோற்றம். இவை மாயை" மாயை என்பது அளக்கக் கூடியது, மாற்றக் கூடியது. மாறிக் கொண்டே இருப்பது மாயை.உங்களை சுற்றி ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே இருக்கின்றது அல்லவா? புத்தர் ஒவ்வொன்றும் ஒன்றுமில்லை என்றார். ஆதி சங்கரர் கூறியது சற்றே வேறுபட்டது. இந்த எல்லாமே பிரம்மம், எல்லாமே ஒன்று தான். ஒவ்வொன்றும் சக்தியை அடிப்படையாக கொண்டது.ஒரே தெய்வீகத்தால் ஆனது. நாம் காண்பதெல்லாம் கனவு போன்றது.

நீங்கள் அனைவரும் ஒன்றை உணரவேண்டும். விழித்தெழுந்து பாருங்கள்! இந்த நொடி வரை, இங்கு வரும் வரை, உங்கள் வாழ்வில், 30, 50 ஆண்டுகள் நிகழ்ந்தெதெல்லாம் எண்ணிப் பாருங்கள்! அவை எல்லாம் கனவு போல அல்லவா? உங்கள் மனதை முன்னும் பின்னுமாக இழுத்துச் செல்லுங்கள். இதுவே விரைவாக முன்னேறிப் பின்நோக்கி செல்லும் மனநிலை.

உங்கள் இயந்திரத்தை இயக்கக் கற்றுக்கொள்ளுங்கள், முன்னோக்கிச் செலுத்துங்கள். நீங்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். வீட்டிற்குத் சென்று உணவருந்தி விட்டு உறங்கச் செல்வீர்கள். நாளை நீங்கள் விழித்தெழுந்து பல் துலக்கி குளித்து உங்கள் வேலையை கவனிக்கச் செல்வீர்கள். அடுத்த நாள், மூன்றாவது நாள்,அதற்கும் அடுத்த நாள் என்று நாட்கள் உருண்டு போகும். ஜூன் மாதம் வரும். பிறகு ஜூலை,ஆகஸ்ட், செப்டம்பர் புத்தாண்டு என்று தொடர்ந்து வரும்.எல்லாம் கடந்து போகும்.அனைத்து நாட்களும் கடந்து போகும். எல்லாம் ஒரு கனவு போல் தோன்றவில்லையா? நான் உங்களுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதும் ஒரு கனவாக இருக்கக் கூடுமா? இது நிஜமென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கனவாக இருக்கக் கூடும். 

நிகழ்காலம் ஒரு கனவாக இருக்கக் கூடும். நிகழ்காலத்தை ஆராயுங்கள். எதிர்காலமும் கனவு போன்றது. நீங்கள் உங்கள் கவனத்தை சிறிது மாற்றி இந்த உண்மையைக் காண முடியுமானால், இதற்கு மேலான ஒன்றை நீங்கள் அறிய முடியும். இதற்கு மேலான, இதனைத் தாண்டிய, மிக அற்புதமான, நிரந்தரமான ஒன்று அதுவே உண்மையானது. அதிலிருந்து அற்புதமான பலம், நம்ப முடியாத சக்தி, அன்பு, அழகு போன்றவற்றை நீங்கள் பெறலாம். வேறெதுவும் அதனை அசைக்க முடியாது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? விழித்தெழுங்கள். பொத்தானை அழுத்தி துவக்குங்கள். ஒன்றை நிறுத்தி விட்டு மற்றொன்றைத் துவக்குங்கள். 

ஹாலோகிராமின் முப்பரிமான வடிவங்கள் ஒவ்வொரு கோணத்தில் வெவ்வேறு வடிவங்களை பார்க்கலாம். அது போன்ற படங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,ஒரு கோணத்திலிருந்து வேறுபாடுகளும் சிக்கல்களும் நிறைந்த உலகத்தைக் காணுங்கள். மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும் உலகத்திலிருந்து மாறுபட்ட வேறொரு உலகத்தைக் காணுங்கள். ஒன்றை துவக்கவும் மற்றொன்றை நிறுத்தவும் அல்லது இரண்டையுமே காணவும் தேவையான திறமை உங்களிடம் இருக்க வேண்டும். அதுவே ஆன்மிகம் ஆகும்.அதுவே அமைதி ஆகும். 

ஒரு நிமிடம் விழித்தெழுந்து பாருங்கள் இவை அனைத்துமே கனவென்று ஒதுக்கித் தள்ளுங்கள். உடனடியாக நீங்கள் உலகளாவிய பிரம்மன் அதாவது நீங்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளீர்களோ அந்த ஓங்காரத்துடன் தொடர்பு கொள்வீர்கள். நாம் வாழும் வாழ்வில் பல்வேறு கோணங்கள் உள்ளன. நீங்கள் மக்களுடன் இருக்கும் போது எல்லாம் ஒன்றுமில்லை என்ற தத்துவத்தை உபயோகிக்க வேண்டாம்.அப்படி நினைத்தால் நீங்கள் தொழில் செய்ய முடியாது. இதனை மனதில் வைத்திருங்கள். 'எல்லாம் எதுவுமில்லை' என்ற எண்ணம் உங்களுக்கு ஆன்மபலம், ஆனந்தம், உள்ளுணர்வுத் திறன், மன நிறைவு, அன்பு, கருணை ஆகிய அனைத்தையும் அளிக்கும். இது மற்றொரு வழிமுறை. வழிமுறைகளை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள். அன்றாட வாழ்க்கைக்கு வரும்போது அதற்கேற்ப செயல்படுங்கள். 

கே: குருதேவ், நான் உங்களுக்கென என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள். நான் செய்கின்றேன். 

குருதேவ்: மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். நீங்கள் ஞானத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். கொடுப்பவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும். மகிழ்ச்சி, அறிவு, ஞானம் போன்றவற்றை பரப்பும் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும். இவற்றை நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். இந்த கிரகத்திலுள்ள பல கோடி மக்களில் ஒரு சிலர் அன்பு, ஆனந்தம், ஞானம் ஆகியவற்றை பரப்பினால் இந்த கிரகத்தை குணப்படுத்தி விடலாம். இந்த சிகிச்சை இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரம் நீங்கள் இக்கிரகத்தின் விலை மதிப்பற்றவர். சேவை செய்யும் குழுவில் சேர்ந்து தொண்டு செய்யுங்கள். 

கே: ஒருவர் மனதை கட்டுப்படுத்துவது எப்படி? 

குருதேவ்: நீங்கள் மனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏன் விரும்புகின்றீர்கள்? மனம் எப்போதும் எங்கே அதிக மகிழ்ச்சி உள்ளதோ அங்கேயே செல்லும். அது செல்லட்டும். உண்மையான மகிழ்ச்சி வெளியே இல்லை உள்ளே தான் இருக்கின்றது என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மனம் வெளியில் சென்று அங்கே மகிழ்ச்சியைக் காணமுடியாத போது இறுதியாக தானாகவே இயல்பாக உள்ளே செல்லும். அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே நீங்கள் மனதை அடக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் எங்கே இருக்கின்றதோ அங்கே மனதை அடக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குழந்தையிடம் அன்பு செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமா? குழந்தைகளிடமான அன்பு மிகவும் இயல்பானது; மிகவும் இயற்கையானது. 

கே: மனமும் இதயமும் ஒரே மாதிரி நினைக்கச் செய்வது எப்படி?

குருதேவ்: இதயம் நினைப்பதில்லை. அது உணரக்கூடியது. மனம் மட்டுமே நினைக்கக் கூடியது. ஆனால் அது உணர்வதில்லை. இரண்டுமே அவசியமானவை. அதனதன் இடத்தில் வையுங்கள். உங்கள் மனதின்படி தொழில் செய்யுங்கள். இதயம்  சொல்கின்ற படி உங்கள்  வாழ்க்கையை வாழுங்கள். 

கே: ஒருவரை அல்லது வாழ்க்கைத் துணைவரை அப்படியே ஏற்றுக்கொள்வது எப்படி?

குருதேவ்: எனக்கு அனுபவம் இல்லை.உங்களைச் சுற்றிப் பார்த்தால், நிறைய அறிவுரைகள் வழங்கக் கூடியவர்கள் பலரைப் பார்க்கலாம். அவர்களைக் கேட்டு உங்களுக்கு ஏற்றது எது என்று பாருங்கள். இங்கு தான் வேதாந்தம் நடைமுறை வாழ்க்கைக்கு துணை புரிகின்றது. கடந்த காலம் முழுமையாக கடந்து போய்விட்டது.  ஒரு கனவு போல் முடிந்துவிட்டது என்பதை பாருங்கள். எனவே இப்பொழுதாவது உற்சாகம் கொள்ளுங்கள். இந்த நிமிடமே உங்கள் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் உற்சாகத்தை உண்டாக்குவது உங்கள் கைகளில் உள்ளது. உங்களால் எப்படி செய்ய முடியும்? கடந்த காலத்தை விட்டுவிடாமல் பற்றி கொண்டிருந்தால் உங்களால் அது முடியாது. நேற்று அவர்கள் தவறு செய்துவிட்டனர். பரவாயில்லை கண்டுகொள்ள வேண்டாம். இனிமையானவை, இனிமையல்லாதவையும் நிகழும். அனைத்தையும் தூர எறியுங்கள். இப்பொழுது உங்கள் வேலை எல்லாம் நேர்மறை சக்தியை உருவாக்குவதும் சுற்றுப்புறத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துவதும் தான். குடும்பத்தில் அன்பு பெருகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் இதைச் செய்யலாமா? இதுவே ஞானம் என்பது.

புகார் செய்ய வேண்டுமென்று விரும்பினால், ஆறு மாதமோ, ஒரு வருடத்திற்கு ஓர் முறையோ ஓரிடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் புகார் செய்யுங்கள். பிறகு அதை மறந்துவிட்டு மேற்கொண்டு செல்லுங்கள். தினமும் செய்ய வேண்டாம். நான் உங்களை எல்லா நேரமும் இனிமையானவராகவும், நல்லவராகவும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சண்டை சச்சரவுகள் கோபம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை பல நிறங்கள் உடையதாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்கை எல்லா நிறங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஒரே விதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மனதின் சிறு சிறு சலனங்களை தூக்கி எறியக் கூடியவராக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு இந்த ஞானம் உங்களுக்கு உதவி செய்யும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், 'சிவோகம், நான் தூய்மையான அழகான உணர்வானவன்' என்று சொல்லிக் கொள்ளுங்கள். இன்று புத்த பூர்ணிமா செய்தியாக 'எல்லாம் எதுவுமில்லை 'என்னும் ஞானத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒளி! உங்களுக்கு நீங்களே ஒளியாய் இருங்கள். எனவே மகிழ்ச்சியோடு உங்கள் வீட்டிற்குத் செல்லுங்கள். உறங்க செல்வதற்கு முன் இந்த ஞானத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இரண்டு முறை உங்கள் நினைவிற்குக் கொண்டு வருவது மிகவும் நல்லது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே ஞானத்தை திரும்பவும் நினைவு படுத்திக்கொண்டால் அது உங்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

‘ஷ்ரவண‘ என்றால் கவனித்தல். ‘மனன’ என்றால் அந்த ஞானத்தை நம் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருதல்.இந்த இரண்டுமே மிகவும் முக்கியம். இரண்டும் நிறைய பலன் தரும். நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் அனைத்துமே ஒன்றும் இல்லை. எல்லாம் ஒரு கனவு. கடந்த காலம் ஒரு கனவு. எதிர் காலமும் ஒரு கனவு. நிகழ் காலமும் ஒரு கனவு. உலகமே கனவு போன்றது. நீங்களே ஒளிமயமானவர்.