வாழைப்பழம் முதல் பேரின்பம் வரை

16 மே 2013 - பெங்களூரு 



கே: குருதேவ்! நாங்கள் திரும்ப வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்குத் தாங்கள் கூறும் செய்தி என்ன?

குருதேவ்: இது எப்படி இருக்கின்றது என்றால், சிறப்பு அங்காடிக்குச் சென்று இங்கிருந்து நான் வீட்டிற்கு என்ன எடுத்துச் செல்வது என்று கேட்பது போன்று உள்ளது (சிரிப்பு) அங்குள்ள பணியாளர்கள் என்ன கூறுவார்கள்? என்ன முடியுமோ, எடுத்து செல்லுங்கள் என்று தான் கூறுவார்கள். இங்கு (ஆஸ்ரமத்தில்) எல்லாமே உள்ளன, பேரின்பத்திலிருந்து, வாழைப்பழம் வரை. (சிரிப்பு) சிலர் இங்கு குறைவான ஈடுபாட்டுடன் வந்து இனிப்பாக இருக்கிறது என்று வாழைப்பழத்தை எடுத்துச் செல்கிறார்கள்.சிலர் முழு ஈடுபாட்டுடன் வந்து பேரின்பத்தை எடுத்துச் செல்கிறார்கள். உங்களுக்கு எது வேண்டுமோ கேட்கலாம், எதை விரும்புகிறீர்களோ  அதை எடுத்துச் செல்லலாம்.அது அளிக்கப்படும். உங்கள் பிரச்சினைகளையும், கவலைகளையும் விட்டுச் செல்லுங்கள்.

கே: அஷ்டவக்கிர கீதையில் கர்மங்களுக்கு ஒருவன் பொறுப்பில்லை, ஏனெனில் நீ கர்த்தா அல்ல என்று கூறப்பட்டிருக்கிறது, ஆனால் பகவத் கீதையில், உன்னுள்ளே உன்னை நிலைப்படுத்தி கொண்டால், உனக்கு விருப்பத் தேர்வு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தா இல்லையென்றால் எவ்வாறு விருப்பத் தேர்வு அடைய முடியும்?

குருதேவ்: ஞானம் பல நிலைகளில் உள்ளது. நீங்கள் கர்த்தா இல்லையென்றால் உங்கள் கர்மங்களின் பலன்களை அனுபவிக்கமாட்டீர்கள். கர்மங்களின் பலன்களை அனுபவிக்க வில்லை என்றால் விருப்பத் தேர்வு எனும் கேள்விக்கு இடமேது? உங்களுக்குப் புரிகிறதா? குவாண்டம் பௌதீக இயலில், ஒவ்வொன்றும் அணுத்திரள் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஒரு நிலக்கரித் துண்டு  ஒரு வைரத்துண்டு இரண்டுமே அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நிலக்கரித்துண்டு, வைரத்துண்டு இரண்டுக்குமே வித்தியாசமில்லை ஏனென்றால் இரண்டுமே அணுக்களால் ஆக்கப்பட்டவை. ஆனால் நடைமுறையில் வைரத்தை நிலக்கரிக்குப் பதிலாக உபயோகிக்க முடியாது, அது போல நிலக்கரியை காதணியாக அணிய முடியாது!

நடைமுறை உண்மைக்கும், ஆன்மீக உண்மைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டையும் ஒன்றாக நீங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டால், உங்கள் அனுபவம் முழுமை பெறும். நீங்கள் "நான் கர்த்தா இல்லை ஆனால் கர்மாக்களின் பலனை அனுபவிக்கிறேன்'' என்று உங்களுக்குள்ளேயே திரும்ப திரும்பக் கூறிக் கொண்டால் அது தவறு. எப்போதெல்லாம், உங்கள் கர்மாக்களின் பலனை அனுபவிக்கிறீர்களோ அப்போதே கர்த்தா ஆகி விடுகிறீர்கள். அதனால் தான் கிருஷ்ணபரமாத்மா "கிம் கர்மா கிம கர்மேதி கவையோ ப்யர்தமோஹிதா "(4.16)

'மிக உயர்ந்த ஞானிகளும் மிக்க அறிவுக்கூர்மையுள்ளவர்களும் கூட என்ன செயலைச் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதில் குழப்பம் அடைந்து விடுகிறார்கள். என்ன செயல் என்பதை நான் கூறுகிறேன், அதற்கு முன் நீங்கள் யோகி ஆகவேண்டும்' (யோக நிலையில் நிலையுற்றவராக வேண்டும்). நீங்கள் யோகியாகும் போது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும், இயல்பாக, முயற்சியின்றி எல்லா விதங்களிலும் சரியானதாக அமையும்.

கே: குருதேவ்! அன்பு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் பரப்பும் என்றால் அது ஏன் வலியை ஏற்படுத்துகிறது?

குருதேவ்: இந்த பூமிக்கு வரும்போது வலியைத் தான் முதன் முதலாக உணருகிறோம். தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வருவது  வலியை  உண்டாக்குகிறது. தாய் சேய் இருவருக்குமே வலி தான். ஒன்பது மாதங்கள் எந்த வேலையுமின்றி தாயின் கர்ப்பப்பையில் ஆனந்தமாக சிசு மிதந்து கொண்டிருக்கிறது. உணவு நேராக அதன் வயிற்றுக்கு அனுப்பபடுகிறது, எதையும் கடித்துச் சுவைக்கக் கூட வேண்டியதில்லை. ஒன்பது மாதங்கள் பேரின்பத்திலிருந்து விட்டு திடீரென்று நீர் மறைந்து, சுகானுபாவ நிலையிலிருந்து வெளி வர வேண்டியிருக்கிறது.அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இந்த பூமிக்கு வந்தவுடன் ஏற்படும் முதல் அனுபவம் அது. பிறந்ததும், வலியினால் அழுகிறீர்கள். நீங்கள் அழவில்லையென்றால், உங்கள் பெற்றோர்  அழ வேண்டியிருக்கும். நீங்கள் அழும் போது அவர்கள் மகிழ்ச்சியினால் சிரிக்கிறார்கள்! கற்பனை செய்து பாருங்கள் பிறந்ததும் நீங்கள் அழுகிறீர்கள் மற்றவர்கள் சிரித்து மகிழ்கிறார்கள்!

உங்களது இரண்டாவது அனுபவம் அன்பு. பிறந்த உங்களை உங்கள் தாயார் தனது கைகளில் ஏந்திக் கொள்கிறாள். அன்பையும் அரவணைப்பையும் அடைகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரின் அன்பையும் அடைகிறீர்கள்- உங்கள் பாட்டி, தாத்தா, மாமாக்கள், அத்தைகள் ஒவ்வொருவரும்.எல்லோரும் உங்களிடம் அன்பு செலுத்தி உங்கள் மீதே கவனமாக இருக்கிறார்கள்.ஆனால் இவை அனைத்தும் சிறிது வலியை அனுபவத்த பின்னரே கிடைக்கிறது அல்லவா? ஆகவே வலி என்பது அன்பின் ஒரு பகுதி.கசப்பான அந்த மாத்திரையை நீங்கள் விழுங்கித் தான் ஆக வேண்டும்.அது உங்களுக்கு நல்லது. அந்த வலியிலிருந்து தப்பிவிட  நினைக்காதீர்கள். அவ்வாறு வலியிலிருந்து தப்பி ஓட நினைத்தால் அன்பிலிருந்தும் தப்பி ஓடுவீர்கள்

கே: குருதேவ், பல்வேறு துறைகளிலும் திறமையாளனாக வருவதற்கென நம் சக்தியை பல்வேறு துறைகளிலும் செலவழிக்க வேண்டி இருப்பதனால் இறுதியில் தோல்வியில் முடிகின்றது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: இளைஞர்களாகிய நீங்கள் இவ்வாறு எண்ணக் கூடாது. பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள இதுவே சரியான நேரம். வளர் இளம் பருவத்தினை நீங்கள் கடந்த பிறகு ஏதேனும் ஒன்று உங்களிடம் நிலைத்து நின்று விடும். அதற்கு முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய அந்த ஒன்று என்னவென்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டேன். இந்த நேரம் நீங்கள் எல்லா கலைகளையும் கற்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை செய்யுங்கள். உங்களால் எத்தனை மொழிகள் கற்க முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள். இதுவே கற்பதற்கான நேரம். இசை, சமையல், விளையாட்டு. ஓவியம் என்று அனைத்தையும் சிறப்பாக கற்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்றது எது என்று பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

கே: குருதேவ், குற்ற உணர்விலிருந்து ஒருவர் விடுபடுவது எப்படி?

குருதேவ்: குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டுமென்று ஏன் விரும்புகின்றீர்கள்? சிறிதளவு குற்ற உணர்வு இருப்பது உங்களுக்கு நல்லதே. குற்ற உணர்வினால் உண்டாகும் சிறு உறுத்தல் உங்களை அதே தவறை நீங்கள் மீண்டும் செய்யாமல் தடுக்கும். எனவே சிறிதளவு குற்ற உணர்வு இருக்க வேண்டும், ஆனால் அதுவே பெரிதாக மாறினால் நாம் அதை கவனிக்க வேண்டும்.

கே: குருதேவ், பஞ்சாரா நதிக்கரையில் கும்ப மேளாவிற்கு (இந்துக்களின் மிகப்பெரிய புனித யாத்திரை) நீங்கள் வந்திருந்த போது அங்கே சில நாக சுவாமிகள் (நாகா பள்ளியின் ஆன்மீகப் பயிற்சிகளைப் பின்பற்றும் துறவிகளின் இனம்) சிலர் அச்சம் தரும் வகையில் இருந்தனர். அவர்கள் ஏன் அப்படி இருக்கின்றனர்?

குருதேவ்: அவர்கள் ஏன் அப்படி இருக்கின்றனர் என்று எனக்கும் வியப்பாக இருக்கின்றது. பகவத் கீதையை அவர்கள் ஒருபோதும் படித்திருக்க மாட்டார்கள் போலும். பகவான் கிருஷ்ணன் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார். இதனால் தான் கிருஷ்ணன் கீதையில்‘ இவர்கள் என்னை அறியாதவர்கள் ' என்று சொல்கின்றார். இது போன்றவர்கள் தங்களுக்கென்று ஒரு உலகத்தில் தங்களையே தொலைத்து விட்டு தங்களை வதைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள்ளும் நீங்கள் சில நல்லவர்களை காணலாம். வெளித் தோற்றத்தை கொண்டு ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முத்திரை குத்த வேண்டாம். நம் நாட்டில் பல விதமான சிந்தனைகளும் பல்வேறு வகையான ஆன்மீகப் பழக்க வழக்கங்களும் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கே: குருதேவ், ஒருவர் பாவங்களை சேர்த்து வைத்திருக்கும் போது அவர் சாதனா செய்யவோ சத்சங்கத்திற்கு செல்லவோ விரும்பமாட்டார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இவையனைத்தும் ஏதோ ஒரு கர்மவினைப் பயனால் நிகழ்பவை என்று நாம் உணரும் போது நம் முயற்சியினால் இதனை வெல்ல முடியுமா?


குருதேவ்: நிச்சயமாக. அதுவே புத்திசாலித்தனமான செயலும் கூட. அப்படி செய்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகள். அவர்களை அறியாதவர்கள் என்றோ முட்டாள்கள் என்றோ நீங்கள் சொல்ல முடியாது. நாம் செய்தது தவறான செயல் என்று நாம் உணரும் போது சாதனா, சத்சங்கம் போன்றவை அத்தகைய எதிர்மறை கர்மாவிலிருந்து நாம் விடுபட நமக்கு உதவி புரியும்.